தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இறுதி வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை வந்ததாக கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.100 தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுத் தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. பின் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதை மறுத்தார், அரசு தான் அறிவிக்க வேண்டும் அரசைத் தவிர வேறு யாரும் இது குறித்து அறிவிக்க முடியாது. நாங்கள் அவ்வாறு அறிவிக்கவில்லை. எனவே, இந்த ஆண்டு தேர்வு கிடையாது என்றார். இது தெளிவுக்குப் பதிலாக குழப்பத்தையே தந்தது. இந்த ஆண்டு கிடையாது என்றால் அடுத்த கல்வியாண்டிலிருந்து தேர்வுகள் நடத்தப்படுமா? அல்லது எப்போதுமே கிடையாதா?
ஆனால், எந்த ஊடகத்தாலும் கேட்கப்படாத, விவாதிக்கபடாத ஒரு கேள்வி இதில் இருக்கிறது. பள்ளிக் கல்வி என்பது மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒரு துறை. மாநிலத்திலிருந்து எந்த குறிப்பும் அனுப்பப்படாத போது (அமைச்சர் செங்கோட்டையன் அப்படித்தான் சொல்கிறார்), பள்ளிக் கல்வித்துறையின் சுற்றறிக்கை எப்படி வந்தது? பள்ளிக் கல்வித்துறை எப்போது மத்திய பொறுப்புக்கு மாற்றப்பட்டது? அல்லது மாநில அரசுக்குத் தெரியாமலேயே சுற்றறிக்கை அனுப்பியது யார்? அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்காது. ஏனென்றால் மோடி அரசின் அத்தனை பாசிச நடவடிக்கையையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் – கேட்க முடியாமல் – அடிபணிவது ஒன்றே எடப்பாடி அரசின் பணியாக இருக்கிறது. இந்த 5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு விசயத்திலும் முயற்சி எடுக்கப்பட்டு பின் அதில் ஏதோ சமரசம் ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அதேநேரம் இந்த பொதுத்தேர்வு குறித்து சமூக வலை தளங்களில் விவாதங்கள் தொடங்கி விட்டன. அவை அனைத்தும் கல்வியின் தரம் குறித்தே கவனிப்பை வெளிப்படுத்தின. மாறாக, கல்வி என்பது என்ன? எனும் புரிதலில் இருந்து இதை தொடங்குவதே பொருத்தமாக இருக்கும். அப்போது தான் காவி பாசிசமும், கார்ப்பரேட் பாசிசமும் ஏன் மக்களுக்கு கல்வி கற்பிப்பதை தடுக்க முற்படுகின்றன என்பது தெளிவாகும்.
பொதுவாக கல்வி என்பது, இப்போது வழங்கப்படும் பொருளில் எப்போதிலிருந்து தொடங்கியது என்றால் தோராயமாக முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான். தெளிவாகச் சொன்னால் முதலாளித்துவ உற்பத்தி முறை தொடங்கியதற்குப் பின்னிருந்து தான். அதற்கு முன்பெல்லாம் அனுபவமே கல்வி. எழுத்தறிவு, சான்றிதழ் கல்வி என்பதெல்லாம் அப்போதைய உற்பத்தி முறையில் (நிலவுடமை உற்பத்திமுறை) தேவையற்ற ஒன்றாக இருந்தது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் தொழில்புரட்சி ஏற்பட்டு பல்வேறு இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அந்த இயந்திரங்களை இயக்குவதற்கு குறிப்பிட்ட திறமை சார்ர்ந்த தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அதனால் தான் உலகம் முழுவதிலும் எழுத்தறிவுக் கல்விக்கு, சான்றிதழ் கல்விக்கு முதனமைத்தனம் கொடுக்கப்பட்டது. முதலாளிகளுக்கு தேவையான திறமைசார் தொழிலாளர்களுக்காக உலகெங்குமுள்ள அரசுகள் மக்களின் வரிப்பணத்தில் கல்விக் கூடங்களை ஏற்படுத்தின. மக்கள் தங்கள் உழைப்பை செலவு செய்து கல்விகற்று சான்றிதழ் பெற்றார்கள் அதைக் காட்டி வேலை பெற்றார்கள்.
அதேநிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து செயற்கை அறிவு வரை சென்றிருக்கிறது. இதனால் முன்பு போல அதிகம் தொழிலாளர்கள் தேவைப்படாத நிலை ஏற்பட்டது. இயந்திரங்களும் அவற்றை இயக்க செயற்கை அறிவு தொழில்நுட்பமும், இன்னும் மக்களின் அனைத்து தரவுகளும் சேமிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு மக்களின் விருப்பங்களும் தேவைகளும் ஏகாதிபத்தியங்கள் தீர்மானித்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றிருக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து தொழிலாளர்களின் தேவையை மிக மிகக் குறைத்து விட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்பட்ட உற்பத்தியைச் செய்வதற்கு இன்று ஓரிரு தொழிலாளர்களே போதும் எனும் நிலை. மறுபக்கம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையில்லாமல் குவிந்து கிடக்கின்றனர். எனவே, புதிதாக திறன்சார் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுக்க வேண்டிய, குறைக்க வேண்டிய உடனடித் தேவை ஏகாதிபத்தியத்துக்கு இருக்கிறது.
பார்ப்பனியம் குறித்து தனித்துக் கூற வேண்டிய தேவையின்றி அனைவருக்கும் தெரிந்ததே. பார்ப்பனியத்தைப் பொருத்தவரை கல்வி என்பது என்னவென்றால், சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என சிந்தித்து எழுதி வைக்கப்பட்டதே வேதம். அந்த வேதத்தைக் கற்றுக் கொள்வதே கல்வி. இந்தக் கல்வியை பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் கற்கக் கூடாது. கேட்க நேர்ந்தால் கூட அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது விதி. வில்வித்தை கற்றுக் கொண்டான் என்பதற்காக நயவஞ்சகமாக கட்டை விரல் வெட்டப்பட்டான் ஏகலைவன். இன்னும் நந்தன் வள்ளலார் என தண்டிக்கப்பட்ட வரலாறுகள் கொட்டிக் கிடக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இது தான் நடைமுறையாக, சட்டமாக, பண்பாடாக, பழக்க வழக்கமாக மிகுந்த கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையில் தான் முதலாளித்துவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் காலனியாக இந்தியப் பகுதி இருந்தபோது தங்களுடைய தேவைகளுக்காக தனிநபர்களுக்கான பார்ப்பனியக் கல்வி அனைவருக்குமான சான்றிதழ் கல்வியாக மாற்றியமைக்கப்பட்டது. பார்ப்பனியத்திற்கும் தங்களை உருமாற்றிக் கொண்டு இந்து மதமாக அறியப்பட வேண்டிய தேவை இருந்தது. இரண்டும் ஒன்றிணைந்தது தான் இந்தியாவின் அனைவருக்குமான கல்வி. அன்றிலிருந்து இன்றுவரை முடிந்த வடிவங்களில் இதை தடுத்து வந்திருக்கிறது பார்ப்பனியம். ஒருவகையில், இந்து மதமாக இருக்க வேண்டிய தேவை, பார்ப்பனியமாக இருந்தாக வேண்டிய தனித்தன்மை இரண்டுக்கும் இடைப்பட்ட போராட்டம் தான் இந்தியப் பகுதியின் சமூக வரலாறு என்று கூட சொல்லலாம்.
ஆக, பார்ப்பனியத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் அனைவருக்கும் கல்வி என்பதை தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை முதல் இன்று சொல்லப்படும் 5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு வரை அனைத்துக்கும் அடியுரமாக இருப்பது இது தான். இந்த அடிப்படையிலிருந்து தான் கல்வி தொடர்பான அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை ஆதரிக்கும் அனைவரும் அதற்கு காரணமாகக் கூறுவது கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான். கல்வியின் தரத்தை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எது தரம் என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. கூடவே எது கல்வி என்பதிலும் சிக்கல் இருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்களை, கண்டுபிடிக்கப்படும் இயந்திரங்களை பொருட்களை எவ்வாறு இயக்குவது என்பதை மட்டுமே இன்றைய கல்வி அதாவது முதலாளித்துவக் கல்விமுறை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இயக்குவதற்காக கற்கும் கல்வி தனிநபருக்கா? சமூகத்துக்கா? எதற்குப் பயன்படுத்துவது சரியானது? எனும் அடிப்படையில் அமைவதே சரியான கல்விமுறை. ஆனால் முதலாளித்துவ உற்பத்தி நீடிக்கும் வரை அது தனிநபருக்கான கல்விமுறையாக இருக்குமேயன்றி சமூகத்துக்கான கல்வி முறையாக இருக்க வாய்ப்பில்லை.
இன்றைய முதலாளித்துவ ஜனநயகத்தின் படி சுதந்திரம், சமாதானம், சகோதரத்துவம் என்பது தான் ஜனநாயகத்துக்கான விளக்கமாக கூறப்படுகிறது. இதனோடு கல்விக்குக் கூறப்படும் தரம் என்பதை பொருத்திப் பார்த்தால் கிடைக்கும் விளைவு என்ன?
அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அது ஒரே தரமானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி அவ்வாறு இருக்கிறதா? அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்வி எனும் பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது தனியார் பள்ளிகளிலோ மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்சி என்று கொடுக்கும் காசுக்குத் தக்கவாறு பாடத்திட்டங்கள் இருக்கின்றன. இதுவல்லாமல் மத்திய தொகுப்பிலிருந்து நவோதயா என்றொரு திட்டமும் அதற்கென தனி பாடத்திட்டமும் இருக்கிறது.
இத்தனை பாடத்திட்டங்களில் எது தரமானது எனும் கேள்வி தரம் குறித்து பேசும் எவராலும் எழுப்பப்படவில்லை. (இந்த அத்தனை பாடத்திட்டங்களுமே தரமானவை தானா? என்பது வேறு விசயம்) தரமான கல்வி வேண்டும் என்றால், எது தரமான பாடத்திட்டங்கள் கொண்ட கல்வி முறையோ அதை அனைவருக்கும் கொடு என்று கோரிக்கை வைப்பது தான் கல்வியில் தரம் வேண்டும் எனக் கோருவோரின் முதல் கோரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஆதரிக்கும் அனைவரும் மேற்கண்ட அத்தனை கல்விப் பிரிவுகளும் அப்படியே தொடர வேண்டும் என விரும்புகிறார்கள். அப்படியென்றால் அவர்கள் தரம் குறித்து கூறவில்லை, தராதரம் குறித்தே கூறுகிறார்கள். (தராதரம் என்பது அந்தந்த ஜாதி முறைகளுக்கு ஏற்ப பின்பற்றப்படும் ஒழுங்கு)
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அது எளிதாக கிடைக்கும்படி செய்திருக்க வேண்டும். டாஸ்மாக்கில் தனியார் விற்பனையை ஒழித்து அரசே விற்பனை செய்ய ஆரம்பித்த பிறகு குடிகாரர்களின் எண்ணிக்கை வியப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. காரணம் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்தது. அதாவது எளிதாக கிடைக்கும்படி செய்தது. (கல்வியை சாராயத்துடனா ஒப்பிடுவது) அப்படியானால் பல பள்ளிகள் திறக்கப்பட்டு அது கட்டணமில்லாமல் அளிக்கப்பட்டால் மட்டுமே அனைவருக்கும் கல்வி என்பதற்காகன வாய்ப்பு உருவாகும். ஆனால் தரம் குறித்து பேசுவோர் அனைவரும் அருகாமைப் பள்ளி என்பது குறித்தோ அரசு பள்ளிகள் அதிகம் திற்க்கப்பட வேண்டும் என்பது குறித்தோ இன்னும் அரசுப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்படுவதை எதிர்த்தோ வாய் திறப்பதில்லை. தெளிவாகச் சொன்னால் தங்கள் பிள்ளைகள் படிக்கும் உயர்தரப்(!) பள்ளிகளில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த யாரும் சேர்ந்து விட்டால் எரிச்சல் கொண்டு தங்கள் பிள்ளைகளின் தரம் கெட்டுப் போவதாக கூப்பாடு போடுவோராக இருக்கிறார்கள். அப்படி என்றால் இவர்கள் கூறுவது தரமா? தராதரமா?
இராஜாஜி என்றொருவர் இருந்தார், அவர் குலக்கல்வி என்றொரு முறையைக் கொண்டு வந்தார். காலையில் ஏட்டுக் கல்வி பயிலவது, மதியத்திற்கு மேல் அவரவர் தந்தைi செய்யும் தொழிலில் அவருக்கு உதவி செய்வது. இந்தக் கல்வி முறையை அன்று ஆதரித்தவர்களின் வாரிசுகள் தாம் இன்று 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை தரம் என்ற பெயரில் ஆதரிக்கிறார்கள்.
மெட்ரிக்குகளில், சிபிஎஸ்சிக்களில் படிப்பது தான் தரமானது அரசு பள்ளியில் படித்தால் அது மட்டமானது எனும் எண்ணம் இங்கே வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. அங்கும் கூட படிக்கும் அத்தனை மாணவர்களும் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால் அதை தரமானது என்று இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக ஒருவனோ இருவனோ முதல் மதிப்பெண் எடுத்து ஏனையோர்கள் படிப்படியாக மதிப்பெண் குறைந்திருந்தால் அதைத்தான் இவர்கள் தரம் என்று பார்க்கிறார்கள். ஆக இவர்கள் தரம் என்று கூறுவது மற்றவர்களிடம் இருந்து நான் எந்த அளவுக்கு தனிப்பட்டு நிற்கிறேன் என்பதைத் தான். இது தான் மொத்த வேலையில்லாப் பட்டாளத்தில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து ஏனையோரைத் தள்ளுவதற்கு முதலாளித்துவத்திற்கு ஏதுவாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இவர்கள் தரம், திறமை என்று கூறுவதெல்லாம் தங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதைப் பற்றியது அல்ல. மாறாக, முதலாளிகள் எதைக் காரணமாக் கூறி உங்களை வெளியேற்ற வேண்டும் எனும் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக் கொள்வதை பற்றியது தான்.
இவர்கள் கூறும் தரமான கல்வி வந்தபிறகே மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதை மேம்போக்காக எடுத்துக் கொள்ள முடியாது. தற்கொலை செய்வது என்பதன் பொருள் சூழலை எதிர்கொள்ளும் திறன் தனக்கு இல்லை என்பதை வெளிக் காட்டும் வடிவமே. முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்பிருந்த கல்வி முறையின் அடிப்படை சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தான். இதை மாற்றி தனக்குத் தேவையான தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு வேலை செய்வது என்று மாற்றியது முதலாளித்துவம். இதன் அடுத்தகட்டமாக உங்களை எப்படி கழித்துக்கட்டுவது என்பதை உங்கள் செலவில் நீங்களே அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலாளித்துவம் போட்ட உத்தரவை இவர்கள் தரம் என்று கூறிக் கொண்டு திரிகிறார்கள்.
எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி எனும் நடைமுறையைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் தான் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தொடக்கக் கல்வியில் இடைநிற்பது குறைந்திருக்கிறது. தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தென்னகம் தலைசிறந்து இருப்பதன் முதல் காரணமும் இது தான். இதை குலைப்பதற்காகத் தான் நீட் முதல் பொதுத்தேர்வு வரை அனைத்தையும் செய்கிறார்கள். விடலாமா?
பொதுத் தோ்வுகள் நடத்த அவசியம் இல்லை.ஆனால் 10 மற்றும் 12 வகுப்பு ஆசிரியா்கள் தனிவகுப்புகள் எடுத்து கூடுதலக உழைக்கும் போது 6-9 ஆசிரியா்கள் ?????? இதற்கு ஒரு தீர்வு காண வேண்டாமா ?
ஐயா,
பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள், ஆறாம் வகுப்பு ஆசிரியர்கள் என்று பிரிக்க வேண்டாம். இப்படி பொதுதேர்வுகளை அதிகரித்துக் கொண்டே செல்வதன் நோக்கம் என்ன? இதனால் மாணவர்களின் கல்வித்தரம் உயருமா? போன்ற கேள்விகள் தான் முதன்மையானதாக இருக்கிறது.
பத்தாம் வகுப்புக்கு மேலுள்ள ஆசிரியர்கள் ஒரு விதத்தில் அதிக உழைப்பைத் தருகிறார்கள் என்றால் கீழ் வகுப்புகளில் உள்ள ஆசிரியர்கள் வேறு சில விதங்களில் உழைப்பைத் தருகிறார்கள். இதையும் பிரித்துப்பார்ப்பது நோக்கத்துக்கு இழப்பையே கொண்டு வரும்.
நன்றி. (தாமதத்துக்கு வருந்துகிறேன்)