ஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு

கடந்த வாரம் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு எனும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அடுத்து வரும் ஓர் ஆண்டுக்குள் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். பாஜக வுக்கு தற்போது இருக்கும் மிருக பலத்தில் எளிதாக இதை நடைமுறைப் படுத்தி விட முடியும். ஆனால், இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அவ்வளவு எளிதில் தீர்த்து விட முடியாது என்பதால் சற்றே அமைதி அடையலாம். இது அறிவிக்கப்பட்டத்தில் இருந்து எல்லா வித சங்கிகளும் குகைகளுக்குள்ளிருந்து வெளியே வந்து இடும் கூச்சல்கள் இதற்கான எதிர்ப்பை மூழ்கடிக்கின்றன.

பலவித குரல்கள் எழுந்தாலும் அதிகாரபூர்வமாக முன்வைக்கப் பட்டிருக்கும் காரணங்கள் இரண்டு மட்டுமே. 1. எந்த இடத்திலும் சென்று ரேசன் பொருட்களை வாங்கிக் கொள்ளத் தடையிருக்காது. 2. ரேசன் கார்டுகளிலும், பொருட்கள் வினியோகத்திலும் இருக்கும் முறைகேடுகளைக் களைவது. இவற்றில் முதல் காரணம் சில மாநிலங்களில் இப்போதே நடைமுறையில் இருக்கிறது. இரண்டாவது காரணமான முறைகேடுகளைக் களைவது என்பதை இதில் எப்படி செயல்படுத்துவார்கள்? பண மதிப்பிழப்பின் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்தார்களே அதேபோல் ஒழிப்பார்கள் என்று நம்பலாம். ஆதரவு வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும், இத் திட்டத்தினால் ஏற்படும் தீமைகள் என்ன? அதை பார்க்கு முன் ரேசன் கடைகள் கொண்டு வரப்பட்டதன் நோக்கம், காரணம் என்ன என்பதை அறிந்தால் தான் இந்த ஒரே கார்டின் பின்னால் இருக்கும் சதித் திட்டம் தெளிவாகப் புரியும்.

1917 ரஷ்யப் புரட்சிக்கும் பின் (இப்படித் தொடங்கியதும் சிலர், எதை எடுத்தாலும் ரஷ்யப் புரட்சி என்று தான் தொடங்க வேண்டுமா? என எண்ணலாம். ஆனால் அவர்கள், என்ன சொல்கிறோம் என்பதையும், அதில் உண்மை இருக்கிறதா? என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும். மட்டுமல்லாது, நாடு முழுவதும் காற்றைப் போல் கோயல்பல்சுகள் புழங்கிக் கொண்டிருக்கும் போது உண்மையை மீண்டும் மீண்டும் உரக்கக் கூற வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்) ரேசன் கடைகள் மக்கள் நலனுக்காக உலகில் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்களுக்கு குறைந்த விலையில் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்க வேண்டும். கூட்டுப் பண்ணை திட்டத்துக்கு எதிராக பெரிய விவசாயிகள் தங்கள் வயல்களை தீ வைத்து எரித்தும், விளைந்த தானியங்களைப் பதுக்கியும் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்த முனைந்த போது அதற்கு எதிரான நடவடிக்கையாகவும் ரேசன் கடை திட்டம் பயன்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் நாட்டில் விளையும் உணவு தானியங்கள் மக்களுக்கு எதிரானவர்களிடம் சிக்காமல் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பது தான் ரேசன் கடை திட்டம் கொண்டு வரப்பட்டதன் முதன்மையான நோக்கம்.

இது அங்கு மிகச் சிறப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டதன் விளைவு தான் உலகமெங்கும் இது நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டது. அதைவிட இன்றியமையாத இன்னொரு காரணம், ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு தான் ஓர் அரசு தன் நாட்டு மக்களுக்கு இந்த அளவுக்கு வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தர இயலுமா எனும் தன்மையே மக்களுக்கு புரிந்தது. இதன் பிறகு ரேசன் கடை மட்டுமல்லாது சோவியத் யூனியன் செயல்படுத்திய பல திட்டங்கள் உலகெங்கும் பல குற்றம் குறைகளுடன் செயல்படுத்தப்பட்டன. ஏனென்றால், அன்றிருந்த காலனியக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக மக்கள் கொத்தித்து எழுந்து அரசுகளுக்கு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நாம் துடைத்து அழிக்கப்படுவோம் எனும் நிலை இருந்ததால் விருப்பமில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அப்போதைய ஏகாதிபத்திய அரசுகள் மக்கள் நல அரசுகளாக மாறின. இந்த அடிப்படையில் தான் அன்றைய ஆங்கில அரசு இந்தியாவில் தேர்தல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்களைச் செய்தது. அதன் வழியே தான் ரேசன் கடைகளும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தப் பின்னணியில் இருந்து ரேசன் கடைகளில் கொண்டு வரப்படும் மாற்றங்களை பார்க்க வேண்டும். ரேசன் கடைகளும் உணவு தானிய வினியோகமும் மாநிலப் பட்டியலில் இருப்பவை. இந்த மாற்றத்தின் மூலம் அவை மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படுகின்றன என்பது தான் இதில் மறைந்திருக்கும் பொருள். மாநிலப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொன்றும் பிடுங்கப்பட்டு மத்தியப் பட்டியிலில் இணைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் இந்தியா ஒரு தேசமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டுள்ள ஒரு நாடு. இந்த நாட்டில் அந்தந்த தேசிய இனங்களுக்கு என்று தனித்தனியே மொழி, பண்பாடு, வாழ்முறைகள், பொருளாதார விசயங்கள் உள்ளன. இவைகளை ஒன்றாக இணைத்து தான் இந்தியா எனும் நாடு உருவானது. அதனால் தான் அரசியல் சாசனத்திலேயே இந்தியாவின் அடையாளமாக வேற்றுமையில் ஒற்றுமை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக, பாஜக தன் அரசியல் நோக்கங்களில் இரண்டாவது இலக்காக ஒரே தேசம் எனும் அகண்ட பாரதம் என்பதை கொண்டிருக்கிறது. இதனால் தான் அவர்கள் ஒரே என்பதை அதிகம் வலியுறுத்துகிறார்கள். ஒரே அடையாள அட்டை, ஒரே ஜி.எஸ்.டி வரி, ஒரே நேரத்தில் மத்திய, மாநில தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே ரேசன் கார்டு என்று.

மட்டுமல்லாது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளில் தன்னை ஒரு பொம்மையாக ஒப்புக் கொடுத்துவிட்ட நாடாக இந்தியாவை பாஜக நடத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியா இதுவரை தன் கச்சா எண்ணெய்க்காக ஈரானை சார்ந்து இருந்தது. ஈரானை அமெரிக்கா முடக்க நினைப்பதால் அதற்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதனால் இந்தியா ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா உத்தரவு போட்டது, அதற்கு இந்தியா கீழ்ப்படிந்து தற்போது அமெரிக்காவிலிருந்தும், சௌதி அரேபியாவிலிருந்தும் கச்சா எண்ணெயை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஈரானிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயை விட அமெரிக்காவிலிருந்து வாங்கும் கச்சா எண்ணையின் விலை அதிகம். ரூபாயிலேயே வணிகம் நடத்திக் கொள்வதை பரிசீலிப்பதாக ஈரான் அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு சாதகமான அம்சங்களையும் மீறித்தான் அமெரிக்க எண்ணெய் இங்கு இறக்குமதியாகப் போகிறது. இப்படி அமெரிக்க அடிமையாக இந்தியா இருப்பதற்கும் ஒரே தேசமாக இந்தியா இருப்பது தான் அமெரிக்காவுக்கு ஏற்றதாக இருக்கும். பல மாநிலங்கள் தங்களுக்கென தனித்தனி கொள்கைகளைக் கொண்டிருந்தால் இந்தியாவை ஏலம் போடுவது சிரமமாகத் தானே இருக்கும்.

பாஜக இன்று கொண்டுவரத் துடிக்கும் பல ஒரே திட்டங்களுக்கு இந்த இரண்டு காரணங்கள் தான் முதன்மையானவை. இந்த முதன்மையான காரணங்களை விவாதத்தில் கொண்டு வராமல் மறைப்பதற்காகத் தான் வேறு காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன.

தற்போதுள்ள தமிழகத்திலுள்ள ரேசன் பொருட்கள் வினியோகம் என்பது கடைகளோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் ஒரு கடையில் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். வேறு கடையை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு நிர்வாக ரீதியாக முறையான மாற்றம் செய்த பின்னரே வாங்க முடியும். இதை மாற்றி சாதாரணமாக எந்தக் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என்று கொண்டுவரப் போகிறார்கள். இது இடம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள். இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் யார்? அவர்கள் ஒட்டு மொத்த மக்களில் எத்தனை சதவீதம்? அப்படி இடம் பெயர்பவர்கள் கூட ஒருமுறை மாறிய பின் அந்த இடத்திலுள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்குவார்களா? அல்லது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கடையில் பொருட்கள் வாங்குவார்களா? ஒரு சதவீதம் கூட இல்லாத மக்களுக்காக ஒட்டுமொத்தமாக ரேசன் கார்டு முறையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

சரி இது புலம் பெயர்ந்து வருகிறவர்களுக்கு பொருத்தமாக இருக்குமா? வெளி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வேலைக்காக புலம் பெயர்ந்து வருகிறவர்கள் பெரும்பாலும் தனி ஆட்களாகவே வருகின்றனர், குடும்பத்தினரோடு வருவோர்கள் அல்லர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு ரேசன் கார்டும், தங்கள் சொந்த மாநிலத்தில் ஒரு ரேசன் கார்டும் வழங்கப்படுமா? மட்டுமல்லாது இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. தமிழகத்தில் அரிசி பிரதான உணவு. ரேசன் கடைகளில் அரிசியைத் தான் முதன்மையாக வழங்குகிறார்கள். உபி, பீகார் போன்ற வட மாநிலங்களில் கோதுமை தான் பிரதான உணவு. இதற்காக அவர்கள் அரிசி உணவுக்கு மாறி விடுவார்களா? அல்லது ரேசன் கடைகள் கோதுமையை பிரதான வழங்கல் பொருளாக மாற்றிக் கொள்ளுமா? அல்லது அரிசி வாங்குவோருக்கு அரிசியும் கோதுமை வாங்குவோருக்கு கோதுமையும் என்றால் வாங்குவோர்கள் ஒரு கடையோடு தொடர்பில் இருந்தால் மட்டும் தானே எவ்வளவு அரிசி, எவ்வளவு கோதுமை என்று கணக்கெடுக்க முடியும்?

தற்போது மாநில அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எடுத்துக் காட்டாக இலவச அரிசி திட்டம். தமிழ்நாடு இதற்காக சிறப்பு மானியம் ஒதுக்கி அரிசியை இலவசமாக வழங்குகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கோதுமையை விலை கொடுத்தும் அரசியை விலை இல்லாமல்லும் வாங்க வேண்டும் என்ற நிலையில் இலவச அரிசியை வாங்கி வெளியில் விற்று அதைக் கொண்டு கோதுமை வாங்குவார்கள். இப்போதும் இப்படி விற்பது நடக்கிறது என்றாலும், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இது இன்னும் அதிகரிக்கும். இது ஒருபுறமென்றால், மற்றொரு புறம் முறையாக கணக்கெடுப்புக்கு வராமல் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதமும் ஏற்றத்தாழ்வான முறையில் பொருட்கள் வழங்கப்பட்டால் அது முறைகேட்டுக்குத் தானே வழிவகுக்கும்? எடுத்துக்காட்டாக ஒரு கடையில் மாதந்தோறும் ஒரு டன் அரிசியும் அரை டன் கோதுமையும் வினியோகிக்கப்படுகிறது என்ற கணக்கு இருந்தால், அனுப்பியது என்ன? வினியோகித்தது என்ன? இருப்பு என்ன? என்ற ஆய்வுக்கு வரமுடியும். இதிலேயே நிறைய குழறுபடிகள் நடக்கின்றன என்பது வேறு விசயம். நிலையான கணக்கு இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கணக்கு வந்தால் அது முறைகேடு செய்ய நினைப்பவர்களுக்கே சாதகமாக இருக்கும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. எனவே, எந்த கடையிலும் பொருட்களை வாங்கலாம் எனும் மக்களுக்கான சலுகையாக இத் திட்டம் கொண்டு வரப்படுகிறது என்பது மோசடியானது.

இத்திட்டம் ரேசன் வினியோகத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்குமா?

இத் திட்டம் குறித்த விரிவான செயல்முறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களைக் கொண்டு பார்த்தால் ரேசன் வினியோகத் திட்டம் மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டால் மட்டுமே இது சாத்தியப்படும். எவ்வாறெனில் பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி ஒருமுறை பீகாரிலும் அடுத்த முறை தமிழகத்திலும் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் நாடு முழுவதிலும் ஒட்டுமொத்தமாக கணிணி முறைக்கு மாறியிருக்க வேண்டும். ஸ்மார்ட் ரேசன் கார்டு திட்டத்தை ஓரளவு சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் இன்னும் அட்டை ரேசன் கார்டுகளையே சிறப்பாக செயல்படுத்தாத மாநிலங்களும் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் மின்சாரமே சென்று சேராத கிராமங்களும் இருக்கின்றன. இது போன்ற இடங்களிலெல்லாம் ரேசன் கார்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா? எனவே, மத்தியப்பட்டியலில் இருந்தால் மட்டுமே நாடுமுழுவதும் ஒரே சீரான நிலையை கொண்டு வர முடியும். மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்வதை தமிழ்நாடு போல அடிமையாய் இருக்கும் மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் ஏனையவை எதிர்க்கவே செய்யும். எனவே, குளறுபடிகள் இங்கேயே தொடங்குகின்றன.

கணிணி மயமாக்கப்பட்டால் முறைகேடுகள் குறைந்து விடும் என்பது பாமரத்தனமான நம்பிக்கை. கணிணி மயமாக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி என ஏற்பாடுகள் இருக்கும் இங்கு, அரிசி வாங்காமலேயே வாங்கியதாய் குருஞ்செய்தி வருகிறது என்று ஆங்காங்கே மக்களுக்கும் ரேசன் கடை ஊழியர்களுக்கும் இடையே பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. கேரளாவுக்கு கடத்தப்படும் அரிசி என்று செய்தி வராத நாள் இல்லை என்று கூறும் அளவுக்கு அரிசி கடத்தல் இங்கு கணிணி மயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, முறைகேடுகளைத் தடுப்பதற்குத் தான் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்பது ஏமாற்று.

என்றால் இத்திட்டம் கொண்டு வரப் படுவதற்கான காரணம் தான் என்ன? ரேசன் திட்டத்தை ஒழிப்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. ஏற்கனவே பர்த்தது போல் சோவியத் யூனியனின் திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் நல அரசுகள் தோன்றின. அதாவது முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளில் மக்கள் போராட்டம் புரட்சிகர மாற்றத்தை அடைந்து விடக் கூடாது, கம்யூனிச கட்சிகள் தோன்றி புரட்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, சோவியத் யூனியனில் கிடைத்த உரிமைகளும் வாய்ப்புகளும் எல்லா நாட்டு மக்களுக்கும் கிடைக்கும் எனும் மயக்கத்தை ஏற்படுத்துவதற்காக சோவியத்திலுள்ள திட்டங்களைப் போலவே தங்கள் நாடுகளிலும் திட்டங்களை கொண்டு வந்தது என்பது தான் மக்கள் நல அரசு என்பதன் பொருள். 90 களில் பெயரளவுக்கு இருந்த சோவியத் யூனியன் சிதறிய பிறகு அந்த மக்கள் நலத் திட்டங்களின் தேவை குறைந்து விட்டது. அதனால் அத் திட்டங்களெல்லாம் ஒன்று சீர்குலைக்கப்படுகின்றன. அல்லது நீக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் தொழிலாளர் நலச் சட்டங்கள் நீர்த்துப் போக வைக்கப்பட்டு தொழிலாளர்கள் எந்த உரிமையும் இல்லாத கூலி அடிமைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகள் படிப்படியாக வெட்டிக் குறைக்கப்பட்டு அரசின் கைகளிலிருந்து கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்குள் சென்று விட்டன.

இதன் தொடர்ச்சியாகத் தான் ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கும் திட்டமும் படிப்படியாக அழிக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது என்பதிலிருந்து மாறி குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் என்றானது. பின்னர் ரேசன் அட்டைகளுக்கு நிறம் கொடுக்கப்பட்டு மக்களில் பாதிப் பேரை ரேசன் பொருட்கள் வாங்குவதிலிருந்து அப்புறப்படுத்தினார்கள். இனி இது மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட பின்னர், மாநிலங்கள் கொடுக்கும் மானியங்கள் நிறுத்தப்பட்டு விலை உயர்த்தப்படும். ஏதேதோ காரணங்களை கண்டுபிடித்து பொருட்களின் அளவு தொடர்ந்து குறைக்கப்படுவதும், பயனாளர்களின் எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்க்கப்படுவதும் நடக்கும். பின்னர் அரசு பள்ளிகளுக்கு நேர்ந்தது போலவே எந்த வித உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படாது. இறுதியாக பயனாளர்கள் குறைந்து விட்டார்கள் என்று காரணம் கூறி ரேஷன் கடை திட்டம் கைவிடப்படும்.

இதில் இன்னொரு முதன்மையான காரணமும் இருக்கிறது. ரேசன் கடைகள் என்பவை வெறும் பொருட்களை வினியோகிப்பதற்கு மட்டுமல்ல கலாச்சார மாற்றம் ஏற்படுத்துவதிலும் பெரும் பங்கை வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரை இங்கு புழக்கத்தில் இல்லை. மக்களுக்கும் தெரியாது. இதை மக்களிடம் அறிமுகப்படுத்தி பரப்பியதில் ரேசன் கடைகளுக்கு முதன்மையான பங்கு உண்டு. இதன் விளைவாக பனை ஒழிக்கப்பட்டதும் கரும்பு உற்பத்தி பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டதும் நடந்தது. தேனிர் குடிக்கும் பழக்கம் மக்களிடம் ஏற்பட்டதற்கும் இது ஒரு முதன்மையான காரணியாக இருந்துள்ளது. எனவே, ரேசன் கடைகளை வெறுமனே பொருட்களை வினியோகிக்கும் கடை என சுருக்கி புரிந்து கொள்ள முடியாது. அரசின் கைகளில் அது ஒரு கருவியாக செயல்பட முடியும் என்பதே உண்மை.

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் உண்மை என்ன? எந்தக் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் எனும் ஏமாற்றின் பின்னே அரங்கேற இருக்கும் சதி இது தான், சோவியத் யூனியனின் அழிவுக்குப் பின் தேவையற்ற சுமையாக இருக்கும் ரேசன் வினியோக முறையை அழிப்பது. அல்லது தன் இந்துத்துவ நோக்கங்களின் இலக்கை நிறைவேற்றுவதற்காக ஒற்றை கலாச்சாரத்தை நிறுவுவதற்கான கருவியாக ரேசன் வினியோகத் திட்டத்தை மாற்றியமைப்பது. இந்த நோக்கத்தை முன்வைத்தே ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. எனவே, ஒரே நாடு ஒரே கார்டு திட்டம் மக்களுக்காக முறைகேடுகளை களையும் நோக்கில் கொண்டுவரப்படுவதில்லை. மாறாக, மக்களை ஒரே போடாக போட்டு வீழ்த்தி விட முனையும் திட்டம் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.

ஆனால், கெடுவாய்ப்பாக, இதை தடுக்கும் முனைப்புடன் எதுவும் இங்கே நடைபெறவில்லை. இங்குள்ள எந்த ஓட்டுக் கட்சியும் ஏகாதிபத்தியங்களின் திட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கும் நிலையில் இல்லை. ஏல்லாக் கட்சிகளுமே ஏகாதிபத்தியங்களை மேலும் வளர்க்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதே வளர்ச்சி எனும் வறையறையில் இருந்து மாறி நிற்பவை அல்ல. எனவே, ஓட்டுக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஒன்றிணைவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற சதிகளை முறியடிக்க முடியும். உனாசலோ, விவாசாயிகளின் தில்லி நோக்கிய போராட்டம், பெங்களூர் ஆயத்தை ஆடை தொழிலாளர்கள் போராட்டம், மெரீனா எழுச்சி, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் என இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே, பாசிச பாஜகவின் திட்டம் அவ்வளவு எளிதில் வெற்றிபெற்று விடாது என்பதை கவனப்படுத்தி மேலும் கூர்மையடைவோம்.

மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s