பட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. இந்த நாட்களில் இயல்புக்கு மாறான இரண்டு விசயங்கள் காணக் கிடைக்கின்றன. இதை, இருவேறு இடங்களிலிருந்து வெளிப்படும் ஒரே மாதிரியான வெளிப்பாடு என்று கூறினால் அது மிகத் துல்லியமானதாக இருக்கும்.

முதலில், பாஜக பக்கத்திலிருந்து இந்த நிதிநிலை அறிக்கை குறித்த இறும்பூறெய்தல்களை அடக்கி வாசிக்கிறார்கள். நிர்மலா சீதாராமனை நிதிநிலை அறிக்கையை வெளியிடப் போகும் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் என்றார்கள். இந்திரா காந்தி இருந்திருக்கிறார் என்றதும் தனிப் பொறுப்பில் முதல் பெண் நிதியமைச்சர் என்று மாற்றினார்கள். ஆங்கிலேய மரபான சூட்கேசுக்கு பதிலாக இந்திய கலாச்சாரத்தின் படி துணிப்பை என்றார்கள். ஆனால் ஏனோ இதையும் அம்போவென விட்டு விட்டார்கள். பாஜகவின், சங்கிகளின் இயல்புக்கு இது போன்ற கவைக்குதவாத விசயங்களைத் தான் பெரிதுபடுத்தி வீச்சாக கூச்சலிடுவார்கள். ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை. மொத்தத்தில் குழந்தை ஆய் போனதை துடைத்துப் போட்டு போவதைப் போல இந்த நிதிநிலை அறிக்கையை பாஜகவும் சங்கிகளும் கடந்து போனார்கள். ஏன்?

அடுத்து, அச்சு ஊடகங்களும் சரி, காட்சி ஊடகங்களும் சரி இந்த நிதிநிலை அறிக்கைக்கு பெரிய முக்கியத்துவம் எதையும் அளித்து விடவில்லை. வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது அது குறித்த கட்டுரைகள் வெளியாகும். காட்சி ஊடகங்களில் பல வாரங்களுக்கு பொருளாதார நிபுணர் என்ற பெயரில் அடையாளம் தெரியாதவர்களெல்லாம் மணிக்கணக்காக அமர்ந்து பொருளாதாரத்தை அலசி துவைத்து காயப் போடுவார்கள். இந்த முறை வெகுசில ஊடகங்களைத் தவிர அப்படி எதுவும் நடந்து விடவில்லை. ஏன்?

இந்த ஏன்? என்பதற்கு விடை காணுவதற்கு முன்னால் நிதி நிலை அறிக்கை எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை மேலோட்டமாக பார்த்து விடுவது பொருத்தமாக இருக்கும். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் போது நாட்டின் பெருன்பான்மையான மக்கள் ஈடுபடும், பெரும்பான்மை மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விவசாயிகளோடு, விவசாய சங்கங்களோடு, விவசாய அறிஞர்களோடு கலந்து ஆலோசிப்பதில்லை என்பதும், கார்ப்பரேட் முதலாளிகளின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி தான் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது என்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும். நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் ஒரு நிதியமைச்சரின் பங்கு என்ன? ஒன்றுமில்லை என்றால் சிலருக்கு அசூயை ஏற்படக் கூடும். எனவே, சற்று மாற்றிக் கேட்கலாம். கார்ப்பரேட்களுக்கு இத்தனை சதவீதம் வரி விதிக்கலாம், இதற்கு மேல் போகக்கூடாது, இவ்வளவு வரிச் சலுகைகள் வழங்கலாம் என்பதை ஒரு நிதியமைச்சர் முடிவு செய்துவிட முடியுமா? அப்படி முடிவு செய்வதற்கு நாட்டின் நிதிநிலை அறிக்கை ஊறுகாய் கணக்கல்ல. அது கார்ப்பரேட்களின் நலன் நாடும் முக்கியமான விசயம் என்பதால் நிதியமைச்சர் அந்த வரம்பில் குறுக்கிடக் கூடாது. அசோசம் (முதலாளிகளின் கூட்டமைப்பு) போன்ற அவர்களிடம் தரவுகளை பெற்றுக் கொண்டு அறிக்கை தயாரிப்பதற்கெனவே இருக்கும் அதிகாரிகளின் வழிகாட்டல்களுடன் தயாரிக்கப்படும் அறிக்கையில் கையொப்பம் இடுவது தான் நிதியமைச்சரின் பணி. தெளிவாகச் சொன்னால் தன்னுடைய பெயரில் உருவாகும் அறிக்கையை நாடாளுமன்றத்தின் மேசை தட்டல்களுக்கிடையே வாசித்து அறிவிப்பது தான் நிதியமைச்சரின் பணி.

இப்படி தயாரித்து அளிக்கப்படும் நிதிநிலை அறிக்கையைத் தான் தங்களின் நிதி நிலை அறிக்கை என கொண்டாடிக் கொள்கின்றன கட்சிகள். ஆனால் தற்போது அந்த அலட்டல் கூட இல்லையே ஏன்? ஏனென்றால் பெரிய ஓட்டை இந்த நிதிநிலை அறிக்கையில் விழுந்திருக்கிறது. வானத்தில் விழுந்த ஓசோன் படலத்தின் ஓட்டையைப் போல் இந்த அறிக்கையில் விழுந்த நிதி ஓட்டை என ஒப்பிடுகிறார்கள் நிதிநிலை தொடர்பாளர்கள்.

நிதிநிலை அறிக்கையில் உத்தேச இலக்கங்கள் தான் இடம்பெற்றிருக்கும். அதாவது இந்த ஆண்டில் இந்த திட்டத்துக்கு இவ்வளவு செலவு செய்யப்படும். இந்த இனத்திலிருந்து இவ்வளவு வரி வசூலாகும் என்று எல்லாம் உத்தேசமாகத்தான் இருக்கும். ஆனால் உத்தேசித்த இதே அளவு வரி வரவு வந்ததா? திட்டச் செலவு செய்து முடிக்கப்பட்டதா? அதிகமானதா? என்பது ஆண்டின் முடிவில் ஒரு அறிக்கையாக வெளியிடப்படும். அதன் பெயர் பொருளாதார அறிக்கை. பொருளாதார அறிக்கை நிதிநிலை அறிக்கைக்கு முந்திய நாள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும். பொருளாதார அறிக்கை என்றதும் செலவு ஏன் கூடுதலாகியது, வரவு ஏன் குறைந்தது என விளக்கங்கள் இடம்பெற்றிருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். இவ்வளவு இலக்கு இவ்வளவு குறைவு அல்லது கூடுதல் என்ற புள்ளி விபரங்கள் மட்டுமே இருக்கும். இந்த ஆண்டும் அந்த பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் பொருளாதார அறிக்கைக்கும், நிதிநிலை அறிக்கைக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்களில் தான் அந்த ஏன் எனும் கேள்விக்கான விடை இருக்கிறது.

கடந்த ஆண்டில் அரசின் மொத்த வருவாய் பதினைந்து லட்சத்து அறுபதாயிரம் கோடி என பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிதிநிலை அறிக்கையில் இது பதினேழு லட்சத்து முப்பதாயிரம் கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமாக இருக்கும் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி எங்கிருந்து வந்தது? இதே போன்று கடந்த ஆண்டின் மொத்த செலவினம் பொருளாதார அறிக்கையில் இருபத்து மூன்று லட்சத்து பத்தாயிரம் கோடியாக இருப்பது நிதிநிலை அறிக்கையில் இருபத்து நான்கு லட்சத்து அறுபதாயிரம் கோடியாக இருக்கிறது. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வித்தியாசம் எப்படி வந்தது? இதுமட்டுமன்றி பொருளாதார அறிக்கையில் பதிமூன்று லட்சத்து இருபதாயிரம் கோடியாக இருக்கும் வரி வருவாய் நிதிநிலை அறிக்கையில் பதிநான்கு லட்சத்து எண்பதாயிரம் கோடியாக இருக்கிறது. இந்த வித்தியாசம் ஏன்? எப்படி வந்தது?

இதை கணக்கிட்டில் நடந்த பிழை என்றோ, எங்கேயோ இலக்கத் தவறு நிகழ்ந்திருக்கிறது சரி செய்து விடலாம் என்றோ கருதி விட முடியுமா? முடியாது ஏனென்றால் இவை தவறுகளல்ல. பட்ஜெட் அல்லது நிதிநிலை அறிக்கை என்பது ஒரு அறிக்கை அவ்வளவு தான். அதற்கு மேல் அதற்கு எந்த முதன்மைத்தனமும் இல்லை. நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடுவது போலவே திட்டங்கள் நடைபெறுகின்றன, செலவுகள் செய்யப்படுகின்றன என்று எந்தப் பாமரனும் நினைப்பதில்லை. நிதிநிலை அறிக்கை என்பது ஒரு திட்ட மதிப்பீடு, ஆண்டு முழுவதும் அதற்கு எதிராகவும், மாறானதாகவும் செலவுகள் செய்யப்படுவதும், திட்டங்கள் முன்வைக்கப்படுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. என்றாலும் இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒப்புக்குச் சப்பாணியாக வைக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் கூட இவர்களின் குளறுபடிகளை, ஓட்டாண்டித் தனங்களை மறைக்க முடியவில்லை என்பது தான்.

மறைக்க முடியவில்லை என்பதையும் ஒருவித கையறு நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று எளிதாக புரிந்து கொள்வது பிழை, அதையும் தரவுகளின் அடிப்படையிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி முன்வைத்த வாராக் கடன் சிக்கலுக்கான தீர்வை முற்றாக நிராகரித்தது பாஜக அரசாங்கம். அதற்காகவே ரகுராம் ராஜனை நீக்கிவிட்டு உர்ஜித் படேலை கொண்டு வந்தது. பாஜகவின் ஆளான, ரிலையன்ஸ் குழுமத்திற்கு வேண்டப்பட்டவரான உர்ஜித் படேல் கூட ஒரு கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் அளவுக்கு மீறி அரசாங்கம் மூக்கை நுழைப்பதாக தன்னுடைய செயலரைக் கொண்டு கூற வைத்தார். தற்போதைய நிதிநிலை அறிக்கையில் தொன்னூறாயிரம் கோடி ரிசர்வ் வங்கியில் கையிருப்பிலிருந்து உருவப்பட்டிருக்கிறது. இவைகளோடு நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் எண்பத்து இரண்டு லட்சம் கோடி எனும் மீப்பெரும் எண்ணிக்கையையும் இணைத்துப் பார்த்தால் தான் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்பது புரியும். இந்த நிலையில் தான் மேற்கண்ட குளறுபடிகள் நிதிநிலை அறிக்கையில் வெளிப்பட்டிருக்கிறது. தெளிவாகச் சொன்னால் தவிர்க்கவே இயலாமல் வெளிவந்திருக்கிறது என்பது தான் சரியானதாக இருக்கும்.

இதை இன்னும் தெளிவாக, எளிமையாக புரியும் விதத்தில் மக்களுக்கு உரைக்க மக்களை நேசிக்கும் பொருளாதார அறிஞர்கள் முன்வர வேண்டும் (ஊடகங்களில் விவாதிக்கும் பொருளாதார நிபுணர்களைக் கூறவில்லை) நாட்டின் பொருளாதாரத்தில் நிலவி வந்த பெரும் பள்ளத்தை தவிர்க்கவே முடியாமல் – நிதியமைச்சர் கூறியது போல – புறநாநூற்று யானை மிதித்து வெளியே கொண்டு வந்திருக்கிறது. இந்த நிதி ஓட்டையும், ஒட்டாண்டித் தனமும் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஊடகங்களும் பாஜக சங்கிகளும் அடக்கி வாசிக்கிறார்கள். இவ்வளவு நாட்கள் கடந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதமும் முடிவடைந்து கொண்டிருக்கும் நிலையிலும் இந்த நிதி ஓட்டை குறித்து எதுவும் விளக்கம் கூற முடியாமல் இருக்கிறார்கள் என்பது இந்த நிதி ஓட்டை என்பது பனிமலையில் நுனி தான் உள்ளே பெரும் மலையே மறைந்திருக்கிறது என்பதற்கான கட்டியம்.

இதற்கு என்ன விதத்தில் நாம் எதிர்வினை செய்யப் போகிறோம்? சக மனிதர்களுக்கு இதை எங்கணம் புரிய வைக்கப் போகிறோம் என்பதே நம் முன்னுள்ள கேள்வி. ஏனென்றால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு காசும் நம்முடைய உழைப்பிலிருந்து எடுக்கப்பட்டது. கடந்து போனால் கரைந்து போவோம்.

மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s