அத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா

இன்றைய தேதியில் அத்தி வரதரைப் பற்றி தெரியாமல் யாருமே இருக்க முடியாது. அப்படி யாரேனும் இருந்து விடக் கூடாது என்று தான் ஊடகங்களும் அரசும் நடந்து கொள்கின்றன. இன்று எத்தனை லட்சம் பேர் பார்க்க வந்தார்கள் என்பது தொடங்கி, என்ன நிறத்தில் பட்டு உடுத்தினார் என்பது வரை (அத்தி வரதர் ஆணா பெண்ணா? ஆணென்றால் ஏன் பட்டுச் சேலை உடுத்துகிறார்?) அனைத்தும் செய்திகளாக மக்களின் மண்டைக்குள் திணிக்கப்படுகின்றன. உயிருள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது பார்த்து ஆறுதல் கூற, நிவாரணம் செய்ய வராத அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உயிரற்ற பொம்மையை பார்த்து பதிவு செய்து விட்டுப் போகிறார்கள். இதனால் யாருக்கு என்ன பயன் எனும் கேள்வி அறிவியலுக்குள் அடங்காது என்று ஆத்திகர்கள் கூறக் கூடும். ஆனால் எதார்த்தம் வேறுமாதிரி இருக்கிறது.

காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தீக்குளித்து இறந்த ஆட்டோ ஓட்டுனரான குமாரின் மனைவி, “நாற்பது ஆண்டுகளாக தண்ணீருக்குள் இருந்த குளிரை போக்க என் கணவரை எரித்து குளிர் காய்ந்து கொண்டாரா அத்தி வரதர்” என்று கேட்கிறார். சாமி கண்ணைக் குத்தி விடும் என்பதெல்லாம் எங்களுக்கு பொருட்டே அல்ல என்று கூறும் காவல்துறை, தன்னால் லத்தியால் அடித்துக் கொல்லப்பட்ட ஆந்திர இளைஞரை மாரடைப்பால் இறந்தார் என்று கூசாமல் சொல்கிறது. சிறு நகரான காஞ்சீவரம் (காஞ்சிபுரம்) திடீரென லட்சக் கணக்கான மக்களால் முற்றுகையிடப்பட்டு குடிநீர், கழிப்பிட வசதி, அடிப்படை வசதிகள் போதாமல் தடுமாறுகிறது. ஊர் மக்கள் இயல்பாக ஊருக்குள் நடமாட முடியாமல் திணறுகிறார்கள். ஆட்டோ, வாடகைக் கார்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினர் தங்கள் அன்றாட வேலைகளுக்காக அல்லாடுகிறார்கள். இத்தனையும் ஒரு சாமி பொம்மைக்காக சகித்துக் கொள்ளப்படுகிறது. ஒரு போராட்டம் நடந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது என தலைப்பிடும் நாளிதழ்கள், இப்போது நீலப் பட்டு உடுத்திய வரதரைக் காண லட்சக்கணக்கானோர் திரண்டனர் என புளகமடைகின்றன.

இவைகளுக்கு அப்பாற்பட்டு, ஐநூறு ரூபாய் என போடப்படும் கட்டணச் சீட்டை முதல் நாளே மொத்தமாக பதிவு செய்து வைத்துக் கொண்டு இருபத்தைந்து ஆயிரம் தொடங்கி (ஐந்து நிமிடம் நின்று பார்க்கலாம்) பல லட்சங்கள் வரை (புடவை சாத்தி தொட்டு வணங்கலாம்) கறந்து விடுகிறார்கள் அர்ச்சகர்கள். இதனால் தானோ என்னவோ சேலத்தில் புதிதாய் ஒரு அத்தி வரதர் பூத்திருக்கிறார்.

மற்றொரு புறம் லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தைக் காட்டி, பார்த்தீர்களா? இது பெரியார் பூமியல்ல ஆன்மீக பூமி என்கிறார்கள் சங்கிகள். ஜவுளிக்கடை திறக்க வந்த நயன்தாராவுக்கு (நயன்தாரா தானா அல்லது வேறு ஏதேனும் நடிகையா) இதைவிட அதிக கூட்டம் கூடியது என்று பதிலடி கொடுக்கிறார்கள் சமூக தளங்களில். பக்தியையும் பெரியாரையும் எதிரெதிரே நிறுத்தும் சங்கிகளின் உத்தி இது. இந்துவும் இந்துத்துவாவும் ஒன்று என்று, இந்துக்களும் சங்கிகளும் ஒன்று என்று கட்டமைக்க விரும்புவோரின் உத்தி இது. இராஜ கோபாலர் கடைசி வரை பெரியாரின் நண்பராக இருந்தார். பிள்ளையரை உடைத்த பெரியார், அதை விலைக்கு வாங்கித்தான் உடைத்தாரே தவிர வழிபடும் பிள்ளையாரை உடைக்கவில்லை. தமிழை வளர்த்ததில் பக்தி இலக்கியங்களுக்கு குறிப்பிடத் தக்க பங்கு உண்டு. இவைகளெல்லாம் இந்த தமிழ் மண்ணில் நடந்தவைகள் தான். ஆனால் வட மாநிலங்களில் ஒரு ராமர் பொம்மையை வைத்து கலவரம் நடத்தி, ஆயிரக்காணக்கான மக்களை கொன்று ஆட்சியை பிடித்தது போல் இங்கே நடக்காது. அதனால் தான் இது பெரியார் பூமி. பக்தி வேறு, மத வெறி வேறு. பக்தி என ஏமாந்து போய் லட்சக் கணக்கில் கூடுகிறார்கள் என்பது வேறு. அதனைக் காட்டி இது பெரியார் பூமியல்ல எனக் கதறுவது வேறு.

எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஏன் லட்சக் கணக்கில் மக்கள் கூடுகிறார்கள்? முதலில் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை. நடப்பு ஏகதிபத்திய சுரண்டல்மய உலகில் வாழ முடியாமல் தவிக்கும் போது அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் எதிலும் நம்பிக்கை வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். வரதராஜ பெருமாள் தான் நமக்கு அருள்பாலிக்க வில்லை. அத்தி வரதராவது எதையாவது செய்துவிட மாட்டாரா எனும் ஏக்கம் தான் இந்தக் கூட்டம். ஒருவிதத்தில் அத்தி வரதருக்கு கூடும்கூட்டம் பக்தி என்றால், மறுவிதத்தில் அத்தி வரதருக்கு கூடும் கூட்டம் வரதராஜ பெருமாளுக்கு எதிரானது என்பது தானே உண்மை. நயன்தாராவை அன்றாடம் பார்க்கும் ஒரு திரைப்படத் தொழிலாளி ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு அதே நயன்தாரா வரும் போது காத்திருந்து பார்க்க மாட்டார் தானே. வரராஜ பெருமாளிடம் இல்லாத ஏதோ ஒன்று அத்தி வரதரிடம் இருக்கிறது என்பது தானே இந்தக் கூட்டத்தின் பொருள். வரதராஜ பெருமாளோ அத்தி வரதரோ அல்லது வேறு ஏதோ சாமியோ எவரிடமிருந்தும் என் எதிர்காலத்திற்கு எதுவும் தேவையில்லை, எல்லாம் எனக்கு கிடைத்திருக்கிறது எனும் நிலை வரும் போது, நிச்சயம் இப்படியான கூட்டம் கூடாது என்பதில் ஐயமில்லை.

அடுத்து ஊடகங்களின் விளம்பரம். இன்றைக்கு என்ன நிறத்தில் பட்டு உடுத்தினார் என்பது தொடங்கி யார் யாரெல்லாம் வந்தார்காள் என்பதுவரை, அங்கு நடந்த அனைத்தையும் அத்தி வரதருக்கான வருகையாக மாற்றும் வண்ணம் செய்திகள் திட்டமிட்டு வடிவமைக்கப் படுகின்றன. ஒரு நாள் விஜயகாந்து வருகிறார். இன்னொரு நாள் குடியரசுத் தலைவர் வருகிறார். மற்றுமொரு நாள் வரிச்சூர் செல்வம் (தெரியலையா? பிரபல ரவுடிங்க) வருகிறார். ஏன் நாளை நயன்தாராவும் வரக்கூடும். இப்படி ஊடகப் பரபரப்பு எதுவுமே இல்லாமல் குட்டையில் விழுந்த மொட்டைத் தாதனை பத்து பேர் தூக்கி விட்டார்கள் என்பது போல் ஒரு பெட்டிச் செய்தியோடு இத கடந்து போயிருந்தால் இத்தனை கூட்டம் கூடியிருக்குமா? ஆக இவை அனைத்தும் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருக்கும் கூட்டம் என்பதைத் தாண்டி இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

இப்படியான கூட்டங்கள் ஏன் உருவாக்கப் படுகின்றன? அண்மையில் நெல்லை தாமிரவருணி ஆற்றில் எந்தவித வரலாற்று ஆதாரங்களும் இல்லாதிருந்தும் கூட புஷ்கர விழா என்று ஒன்று கொண்டாடப்பட்டது. இப்போது அத்தி வரதர், நாளை வேறு ஏதோ ஒன்றை முன்வைத்தும் கூட இப்படியான ஒரு பக்திக் கூட்டம் உருவாக்கப்படும். இதில் பல சங்கதிகள் இருந்தாலும்  அனைத்தையும் விட அழுத்தமாய் பார்ப்பனிய அரசியலே தொழிற்படுகிறது. மக்கள் மதவாத பிடியில் இருக்கும் வரை தன்னனுடைய மேலாதிக்கத்துக்கு பாதிப்பு ஒன்றுமில்லை என்பதை தெளிவாக உணர்ந்து திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது பார்ப்பனியம். வட மாநிலங்களைப் பொருத்தவரை மிக எளிதாக அந்த இலக்கு நிறைவேறி இருக்கிறது. தமிழ்நாடு மட்டும் தான் அவர்களுக்கு எதிராக நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தை பல வழிகளிலும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதி தான் பக்தியை அதிகரிப்பதன் மூலம் அதை படிப்படியாக வெறியாக மாற்றி மக்களை கருத்தியல் ரீதியாக RSS சங்கிளாக உருவாக்குவது. ஆவணக் கொலைகளை திட்டமிட்டு அதிகரிப்பது, சாதிவெறியை கொம்பு சீவி விடுவது, நிர்வாக ரீதியாக அவர்களை கண்டும் காணமல் இருப்பது போன்றவை RSS கருத்தியலை உள்வாங்கிக் கொண்டவர்களுக்கான திட்டங்கள். சிறிய நாட்டார் தெய்வ கோவில் திருவிழாக்களில் கூட RSS கொடியை ஏற்றி வைப்பது, தாராளமாய் நன்கொடை வழங்குவது, அத்தி வரதர், புஷ்கரம் போன்ற சாதாரண பக்தி செயல்களை பெரும் அளவில் கொண்டாட்டமாய் புனிதமாய் மடைமாற்றி பழக்க வழக்கங்களுக்குள் திணிப்பது, பொருளாதார, வேலை வாய்ப்புகளில் உதவுவது போன்றவை RSS கருத்தியலை இன்னும் உள்வாங்காமல் இருக்கும் சாதாரண மக்களுக்கான திட்டங்கள். இப்படி நுணுக்கமாக திட்டம் போட்டுக் கொண்டு செயலாற்றி வருகிறது RSS பார்ப்பனியக் கூடாரம். இது தான் அத்தி வரதர் எழுந்தருளலுக்கும், புனிதத்துக்குமான காரணம்.

இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அத்தி வரதரை வரலாற்று ரீதியாக அணுக வேண்டும். கிழக்கிந்திய கம்பனியின் இராபர்ட் கிளைவ் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு மரகத கண்டி ஒன்றை பரிசளித்தார் (இது பரிசளிப்பில் சேருமா? ஆர்க்காட்டை கொள்ளையடித்து அங்கிருந்த ஆபரணங்களில் ஒன்றை கோவிலுக்கு கொடுப்பது பரிசளிப்பா?) எனும் ஒற்றை தகவலை வைத்துக் கொண்டு கோவிலுக்கு அத்து மீறி நுழைந்ததால் இராபர்ட் கிளைவுக்கு கடுமையான காய்ச்சல் வந்ததாகவும் தவறை உணர்ந்து வேண்டிக் கொண்டதால் குணமானதாகவும், வரதராஜரின் அருளாலேயே ஆர்க்காட்டு வெற்றி கிட்டியதாகவும், அதில் மகிழ்ந்து போய் மரகத கண்டியை பரிசளித்ததாகவும் வெற்றிகரமாக கதை உண்டாக்கினார் சாண்டில்யன். (இராஜபேரிகை எனும் நாவல்) இப்படித்தான் புராணங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தி வரதரைச் சுற்றியும் ஒரு புராணக் கதை உலவுகிறது.

அத்தியா வனத்திற்கு தன் மனைவி சரஸ்வதியை அழைக்காமல் தனியாக தவம் செய்யப் போனாராம் பிரம்மா, இதனால் கோபமுற்ற சரஸ்வதி, காட்டாறாக பிரவாகமெடுத்து அத்தியா வனத்தை அழிக்கப் பார்த்ததாம். பயந்து போன பிரம்மா, திருமாலிடம் உதவி கோரினாராம், அவர் அத்தி வரதர் எனும் நெருப்பு உரு எடுத்து நதியைச் சுட்டெறித்தாராம். வெம்மை தாளாத சரஸ்வதி பாதையை மாற்றி கடலில் கலந்தாராம். பின்பு என் உருவத்தை மரத்தில் வடித்து குளத்தில் போட்டு வையுங்கள். 40 ஆண்டுகட்கு ஒருமுறை உங்களுக்கு அருள் பாலிப்பேன் என்றாராம். இது தான் காஞ்சிபுரம் அத்தி வரதர் வரலாறு எனும் பெயரில் உலவும் புராணக் கதை. ஆனால் நிஜக் கதை வேறாக இருக்கிறது.

நிஜக் கதைக்கு போகும் முன் முதன்மையான ஒரு கேள்விக்கு பதில் தேவைப்படுகிறது. மூலசாமிக்கு குடமுழுக்கு புனரமைப்பு பணிகளின் போது மூலவரின் சக்தியை வேறொரு சிலைக்கு மாற்றி வைத்து குடமுழுக்கு முடியும் வரை மாற்றப்பட்ட வேறொரு சிலையை மூலவராக கருதி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் வரதராஜப் பெருமாளின் மாற்றப்பட்ட மூலவராகத் தான் அத்தி வரதர் உருவாக்கப்பட்டார். தற்போது மூலவராக வரதராஜப் பெருமாள் இருக்கும் போது அத்தி வரதர் யார்? மூலவராக சக்தி மாற்றம் செய்யப்பட்டு அத்தி வரதருக்குள் இறக்கினால் தான் அத்தி வரதர் மூலவராக கருதப்படுவர். அப்படி மாற்றப்படாத போது – அதாவது வரதராஜப் பெருமாள் ‘ஆக்டிவாக’(!) – இருக்கும் போது அத்தி வரதருக்கு என்ன மதிப்பு? எளிதாக கூறினால் வரதராஜப் பெருமாளின் ஸ்டெப்னி தானே அத்தி வரதர். வரதராஜப் பெருமாள் இருக்கும் போது ஸ்டெப்னிக்கு என்ன அவசியம்? இந்தக் கேள்விக்கு ஆத்திகர்கள் பதில் கூறும் இடைவெளியில் நிஜக் கதையை பார்க்கலாம்.

வரலாற்றுக் குறிப்புகளின் படி, முகலாயப் பேரரசின் வசமிருந்த காஞ்சியை 1692 ல் மராட்டியர்கள் கைப்பற்றுகிறார்கள். இதனால் முகலாய்ப் பேரரசு பெரும்படையுடன் வந்தால் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வரதராஜரை திருச்சியிலுள்ள உடையார் பாளையத்துக்கு மாற்றுகிறார்கள். பின்னர் 1710 ல் ஆர்க்காடு நவாபின் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்த இஸ்லாமியரான ராஜ தோடர்மால் என்பவரின் உதவியுடன் காஞ்சிக்கு கொண்டுவரப்படுகிறார் வரதராஜர். அப்போது செய்யப்பட்ட குட முழுக்கு மராமத்து பணிகளுக்காத் தான் அத்தி வரதர் உருவாக்கப் படுகிறார். பணிகள் முடிந்து சக்தி மாற்றத்தின் பிறகு குளத்தில் மூழ்கடிக்கப்பட்ட அத்தி வரதர், முதன் முதலாக 1781 ல் தான் வெளியே எடுக்கப்படுகிறார் என்பது தான் அத்தி வரதர் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் வரலாற்றுப் பதிவு. இதன் பிறகு நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பது என்ன கணக்கு என்பதற்கு எந்த குறிப்புகளும் இல்லை. ஆனால் 1939, 1989 ஆண்டுகளில் அத்தி வரதர் குளத்திலிருந்து எடுத்து வழிபட்டது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 2019 நாற்பதாண்டு கணக்கு சரியாக வருகிறது. ஆனால் 1710 லிருந்து  1781 வரை 71 ஆண்டுகள் குழத்திலேயே மூழ்கடிக்கப்பட்டிருந்தது ஏன்? 1781 க்கு பிறகு நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்படுகிறார் என்று வைத்துக் கொண்டால் 1941, 1991, 2021 ல் தானே நாற்பதாண்டு கணக்கு வரும். அவ்வாறில்லாமல் இரண்டு ஆண்டுகள் வித்தியாசம் ஏற்பட்டது ஏன்? எப்படி? எதனால்? இவைகளுக்கு யார் பதில் கூறுவது?

பழைய காலங்களில் மன்னர்கள் படையெடுப்பு நடக்கும் போது கோவிலை தாக்கி கொள்ளையடித்தார்கள் என்பது வரலாறு. காரணம் அன்றைய காலங்களில் கோவில்கள் என்பவை வங்கிகளைப் போல் செயல்பட்டவை. தானியங்கள், பட்டயங்கள், தங்க நகைகள் அனைத்தும் கோவில்களில் தான் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததன. அதனால் தான் மத வேறுபாடு காட்டாமல் இஸ்லாமிய மன்னர்களானாலும், இந்து மன்னர்களானலும், கிருஸ்தவ ஆட்சியாளர்களானாலும் (பிற்காலத்திய டச்சு, பிரெஞ்சு, வெள்ளைக்காரர்கள்) போர்களின் போது கோவில்கள் சூறையாடப்படுவது முதல் இலக்காக இருந்தது. இதற்கு பொருளாதாரம் தான் காரணமே தவிர மதங்களோ, கடவுளர்களோ காரணமல்ல. என்றால் சாமி சிலைகளை ஏன் குளத்தில் மறைத்து வைத்து பாதுகாக்க வேண்டும்?

அன்றைய காலகட்டம் அதாவது 1700களில் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் இந்திய மன்னர்களுக்கும் இடையே போர்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் சிலைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்ற ஆங்கிலேயர்கள் உதவி செய்திருக்கிறார்கள். 1785 ம் ஆண்டு சென்னை ஆளுனர் சந்திரகிரி ஆளுனருக்கு எழுதிய கடிதத்தில் திருப்பதியிலிருந்து காஞ்சி வரதராஜர் கோவிலுக்கு வரும் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோருகிறார். இவ்வாறு பாதுகாப்பு வழங்குவது தாம் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருப்பதை வெளிக்காட்ட தமக்கு கிடைத்த வாய்ப்பாக வெள்ளையர் கருதினர் என்று குறிப்புகள் கூறுகின்றன.

இந்த இடத்தில் தான் ஒரு கேள்வி எழுகிறது. கிழக்கிந்தியக் கம்பனி இந்திய மன்னர்களை வஞ்சகமாகவும், இராணுவ வலிமை மூலமாகவும் வென்று ஒவ்வொரு நாடாக பிடித்து தங்களின் ஆளுமைக்குக் கீழே கொண்டு வந்து கொண்டிருந்த காலகட்டம் அது. கோவில்களை பாதுகாக்க வேண்டும் என கருதும் மக்கள் இந்திய மன்னர்களிடம் உதவி கேட்பார்களா? வெள்ளைக்காரர்களிடம் உதவி கேட்பார்களா? வெள்ளைக்காரர்களிடம் உதவி கேட்கிறார்கள் அவர்களும் படை அனுப்பி உதவுகிறார்கள் என்றால் அவர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இருந்த உறவு என்ன? போர் நெருக்கடிகளைப் பயன்படுத்தி உள்ளூர் மக்கள் கோவில்களை தாக்கினார்களா?

அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் மைசூர் தனியே வெள்ளையர்களை எதிர்த்துக் கொண்டிருந்தது. 1782 ல் ஆட்சியேறிய திப்பு சுல்தான் பாளையக்காரர்களையும், குறுநில மன்னர்களையும் இணைத்துக் கொண்டு விரிந்த பார்வையில் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போரிட்டார். சீரங்கத்துக் கோவிலுக்கு திப்பு உதவி செய்தது கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்றால் மக்களுக்கும் கோவிலுக்கும் நெருக்கமாக இருந்தது யார்? ஏன் வெள்ளைக்காரர்களிடம் உதவி கேட்க வேண்டும்? மேலும் மைசூர் வெற்றியடைந்து விடக்கூடாது என்பதற்காக பல உத்திகளை கையாண்டனர் வெள்ளையர்கள். அதில் ஒன்று உணவு தானியங்களை பதுக்கி வைப்பது. உணவு தானியங்களை பதுக்கி வைத்து கிடைக்கவிடாமல் செய்வதன் மூலம் மைசூரை பணிய வைக்க வேண்டும் என்பதால். இதனால் உணவு பஞ்சம் ஏற்படும் அளவுக்குச் சென்றது நிலமை. விவசாயிகளிடம் வரியாக வாங்கிய உணவு தானியங்களையும், தங்க நகைகளும், குத்தகை பட்டயங்களும் கோவில்களில் தான் வைக்கப்பட்டிருக்கும் என்பதால் தான் கோவில்கள் தாக்குதல் இலக்காக இருந்திருக்கின்றன. இதே காலகட்டத்தில் தான் அத்தி வரதர் குளத்திற்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததும் நடைபெற்றிருக்கிறது. என்றால், மரப் பொம்மையை குளத்தில் பதுக்குவதும், சில காலம் கழித்து அதை வெளியில் எடுப்பதும் ஏதோ ஒன்றின் குறியீடல்லவா? இதன் வழியே பார்த்தால் அத்தி வரதர் உழைக்கும் மக்களின் பட்டினிக்கும் துன்பத்த்துக்கும் காரணமாக குளத்துக்குள் மூழுகிறார். பார்ப்பனர்களுக்கு தேவை வரும் போது அதை தீர்த்து வைக்க மேலே எழுந்து வருகிறார். என்றால் அதன் பொருள் என்ன? அவர் மூழ்குவதும், பின் எழுவதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது அல்லவா? இதை உழைக்கும் மக்கள் ஆதரிக்க முடியுமா? லட்சக் கணக்கில் கூடத்தான் முடியுமா? உழைக்கும் மக்களை உழைக்கும் மக்களைக் கொண்டே அடிப்பது தான் RSSன் உத்தி. அதன் பெயர் தன் அத்தி வரதர்.

மின்னூலாக (PDF) பதிவிறக்க

தரவுகள்:

  1. காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு
  2. அத்திவரதர் வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s