
கடந்த வாரத்திலிருந்து காஷ்மீர் ஒரு செயற்கையான கொதிப்பு நிலைக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டிருந்தது. இதற்கு ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டிருந்தார்கள். அமர்நாத் யாத்திரைப் பாதையில் பாகிஸ்தான் புதை குண்டுகளை புதைத்து வைத்திருந்தது என்றார்கள். ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றார்கள். ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டோம் வெள்ளைக் கொடிகளுடன் வந்து பொறுக்கிக் கொண்டு செல்லுங்கள் என்றார்கள். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது யார் காதிலும் கேட்கவே இல்லை.
ஏற்கனவே காஷ்மீரில் ஐந்து லட்சம் துருப்புகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. முதலில் செல்பேசிகளும், பின்னர் தொலைபேசிகளும் முடக்கப்பட்டன. மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களும் துணை இராணுவப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். உள்நாட்டு, பன்னாட்டு செய்தியாளர்கள் வெளியேற்றப் பட்டார்கள். சுற்றுலாப் பயணிகள், அமர்நாத் யாத்திரை வந்திருந்தவர்கள், வெளிமாநில மாணவர்கள் அனைவரும் விரைந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இவை அனைத்தையும் கண்ட மக்களுக்கு, என்ன நடக்கிறது காஷ்மீரில்? என்ற பதைபதைப்பு ஏற்பட்டது.
இறுதியில் அந்த அறிவிப்பு வந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த அறிவிப்பை வெளியிட்டார், “காஷ்மீருக்கு சிறப்பு மதிப்பை அளித்துக் கொண்டிருந்த அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு நீக்கப்படுகிறது” அந்த அறிவிப்பின் பின்னரான தற்காலையில் அந்த நீக்கத்தை ஏற்றும் மறுத்தும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், அதற்கு முன்னதாக, 370 வது பிரிவு நீக்கப்படுவதற்காகத் தான் இந்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன என்றால், அமர்நாத் யாத்திரை பாதையில் பாகிஸ்தான் புதை குண்டுகள் புதைத்து வைத்திருக்கிறது என்று வதந்தி பரப்பப்பட்டது ஏன்? பாகிஸ்தான் அனுப்பிய ஊடுருவல்காரர்களை சுட்டுக் கொன்று விட்டோம் வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறப்பட்டது எதற்காக? சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மெய்யாகவே ஊடுருவல்காரர்கள் தானா? புல்வாமா தாக்குதலில் அந்த 350 கிலோ ஆர்.டி.எக்ஸ் இராணுவத்துக்குத் தெரியாமல் எப்படி கொண்டு வர முடிந்தது? எனும் கேள்வி யாரும் பதிலளிக்காமலேயே மரித்துப் போனது போல், இந்தக் கேள்விகளும் மரித்துப் போக வேண்டியது தான்.
ஆனால், 370 நீக்கம் என்பது அப்படி எளிதில் கடந்து போகக் கூடிய ஒன்று அல்லவே, ஏன் நீக்கினார்கள்? இப்போது நீக்குவதற்கான தேவை என்ன? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? போன்றவைகளை அலசுமுன் எப்படி அதை நீக்கி இருக்கிறார்கள் என்பதை நுணுகிப் பார்க்க வேண்டும்.
370 வது பிரிவு என்பது காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு மதிப்பு. அதன் முதன்மையான அம்சமே இராணுவம், பொருளாதாரம், வெளியுறவு தவிரத்த ஏனைய அனைத்தும் காஷ்மீர் சட்டமன்றத்தின் அனுமதிக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரும் என்பது தான். தற்போது காஷ்மீர் சட்டமன்றத்தின் நிலை என்ன? ஆறு மாதங்களுக்கு மேல் குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் நீடிக்கக் கூடாது. அதற்குள் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மரபு. இந்த மரபு மீறப்பட்டு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. காஷ்மீரின் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். (இதில் பொய் வேறு, காஷ்மீர் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்தே வேளையில் பரூக் அப்துல்லா ஏன் அவையில் இல்லை. அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறாரா? என்ற கேள்விக்கு இல்லை என பாராளுமன்றத்தில் கூறினார் உள்துறை அமைச்சர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு நான் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன் என பேட்டியளிக்கிறார் பரூக் அப்துல்லா) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. காஷ்மீர் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் உள்துறை அமைச்சரான அமித்ஷா பாராளுமன்றத்தில் அறிவிக்கிறார் 370 ரத்து செய்யப்படுகிறது என்று.
370, 35A ஆகிய பிரிவுகள் நீக்கபட்டிருப்பது, இரண்டு அவைகளிலும் ஓட்டெடுப்புக்கு விட்டு நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்று நினைப்பது பாமரத்தனமானது. அவைகளின் ஒப்புதலுடன் ஒரு நடவடிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது என்பதன் பொருள் என்னவென்றால், முதலில் இந்த பிரிவுகள் நீக்கப்படுவது குறித்து அவைகளின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும், பின் அதன் மீது விவாதம் நடத்த வேண்டும், நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரினால் (எண்ணிக்கையோ, பெரும்பான்மையோ பொருட்டல்ல) நிலைக்குழுவுக்கு அனுப்பி கருத்து கேட்க வேண்டும். அதன் பிறகு ஓட்டெடுப்புக்கு விட வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை. மாறாக அமித்ஷா பாராளுமன்றத்தில் அறிவிக்கும் கடைசி நொடி வரை பாஜக எம்பிக்களுக்கு சூட தெரியாது என்று சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துகள் எதுவுமே பரிசீலிக்கப்படாமல் மிருக பலம் இருக்கும் தெம்பில் உடனடியாக ஓட்டெடுப்புக்கு விடப்பட்டிருக்கிறது. இதை அவை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஏற்கப்பட்டிருக்கிறது என்று கூறுவதை விட, எங்களுக்கு எண்ணிக்கையில் மிருக பலம் இருக்கிறது எனவே எது குறித்தும் எங்களுக்கு கவலை இல்லை எனும் திமிர்த்தனம் தான் வெளிப்பட்டிருக்கிறது என்று கூறுவதே பொருத்தமானது.
அடுத்து, மாநிலம் முழுவதும் இராணுவத்தைக் கொண்டு நிரப்பி, இணையம் தொலைபேசி உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் வீட்டுக் காவலில் வைத்து விட்டு இப்படியான சிறப்பு மதிப்பு பிரிவை நீக்கி இருக்கிறார்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது. எமர்ஜென்சி என்றா? அதை விட கொடூரமானது என்று தான் புரிந்து கொள்ள முடியும். எவ்வாறென்றால், மக்களுக்கு வரம்புக்கு உட்பட்ட உரிமைகளைத் தவிர ஏனைய அனைத்தும் பறிக்கப்படுகின்றன என அறிவித்து விட்டு செய்யப்படுவது தான் எமர்ஜென்சி. ஆனால் அவ்வாறின்றி எல்லா உரிமைகளும் உங்களுக்கு இருக்கின்றன என்று கூறிக் கொண்டே, அவர்களின் உரிமையை நசுக்கி இருப்பதை, பாசிசம் எனும் சொல்லாலன்றி வேறு எப்படி புரிந்து கொள்வது?
அடுத்து, இதை காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்காகவே செய்திருக்கிறோம் என்பது. இது போன்ற வெற்றுச் சவடால்களுக்கு மோடி ஒன்றும் வெட்கப்படுபவரல்லர். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்றார், இருந்த வேலைவாய்ப்புகளும் பறி போனது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்க்காகவே பண மதிப்பிழப்பு என்றார், வெள்ளைப் பணம் கூட மதிப்பிழந்து போனது. பன்முக வரிகளை ஒழித்து வணிகர்களை வாழ வைக்கவே ஜி.எஸ்.டி என்றார், சிறுகுறுந் தொழில்கள் வீழ்ந்து போயின. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், அந்த வரிசையில் இப்போது காஷ்மீர் மக்களின் முன்னேற்றம் என்கிறார். எந்த வகையில் இது காஷ்மீர் மக்களை முன்னேற்றும்? பல பத்தாண்டுகளாக எங்களை வாழ விடுங்கள் என்று அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருபது பேருக்கு ஒரு இராணுவ வீரர் எனும் விகிதத்தில் இயந்திர துப்பாக்கிகள் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதற்கு நடுவில், 70,000க்கும் அதிகமான காஷ்மீரிகள் கொல்லப்பட்டிருப்பதற்கு இடையில், 8,000 பேர் எந்த தடயமும் இன்றி காணாமல் போயிப்பதற்கு மத்தியில், கணக்கில் அடங்காத பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதற்கு ஊடே, அவர்களை இன்னும் இழுத்துப் பிடித்து இந்திய இராணுவத்துக்கு எதிராக கல்லெறிய வைத்துக் கொண்டிருப்பது கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பு மதிப்பு தான். அதைப் பறித்து விட்டு இது தான் உங்கள் முன்னேற்றம் என்றால், அது எவ்வளவு குரூரமானது, கொடுமையானது.
இந்தியாவோடு இணைவதற்கு காஷ்மீரிகள் விதித்த நிபந்தனையை இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பதன் அடையாளம் தான் சிறப்பு மதிப்பு கொடுக்கப்பட்டிருப்பது. அதை அந்த மக்களின் அனுமதியின்றி நீக்குவது என்பது, அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பது என்பதையே விலக்கி விடுகிறது. அடிப்படை இப்படி இருக்கும் போது சிறப்பு மதிப்பை நீக்குவதன் மூலம் காஷ்மீரை இந்திய நீரோட்டத்தில் இணைத்து விட்டோம் என்று சொல்வது எவ்வளவு கேலிக் கூத்தானது.
இது தற்காலிகமாக கொடுக்கப்பட்ட உரிமை தானே, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதே நீக்கக் கூடாதா? என்கிறார்கள். ஆம் தற்காலிகமானது தான். ஆனால் தற்காலிகம் என்பதன் காலவரையறை என்ன? எதன் பொருட்டு அந்த தற்காலிக சிறப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த நிலமை மாறியிருக்க வேண்டும் என்பது தானே வரையறையாக இருக்க முடியும். இன்னும் அங்கே இந்தியாவை எங்கள் நாடு என உளப்பூர்வமாக ஏற்க முடியாதோர் அங்கு ஏராளம். தவிரவும், கடந்த 70 ஆண்டுகளாக அங்கு இந்திய அரசு செய்து வந்திருக்கும் கொடூரங்கள் அதை அதிகரிக்கச் செய்திருக்கிறது, அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது. மட்டுமல்ல, இது தற்காலிக உரிமை என்று குறுகிய நோக்கில் புரிந்து கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது.
காஷ்மீருக்கு மட்டும் என்ன தனிச் சிறப்பு என்கிறீர்கள். அல்ல சங்கிகளே, வடகிழக்கு மாநிலங்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு தனிச் சிறப்பு வழங்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் நாகலாந்து மாநிலத்திற்கு மேலதிகமாக சில உரிமைகள் வழங்கப்பட்டது. ஏன் என அடுத்த முறை உங்கள் மூளையை சலவை செய்ய வரும் போது கேட்டுப் பாருங்கள். இந்தியாவுடன் இணைந்திருப்பதா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம் என இந்தியா ஏற்றுக் கொண்ட ஒரு வாக்கெடுப்பை இன்று வரை செயல்படுத்தவில்லை என்பது தெரியுமா உங்களுக்கு?
ஒரே இந்தியா தானே அதில் என்ன தனிச்சிறப்பு எல்லா மாநிலங்களும் ஒன்று தானே என்கிறீர்கள். 47 ல் இந்தியா சுதந்திரமடைந்ததாக சொல்லிக் கொண்ட போது இந்தியாவுடன் சிக்கிம் இல்லை, மணிப்பூர் இல்லை. இப்போது அது இந்தியா. சில பத்தாண்டுகளுக்கு முன் கச்சத்தீவு இந்தியாவாக இருந்தது, இப்போது அது இந்தியா இல்லை. இந்தியா என்பது வரலாற்றில் மொகலாயர்களுக்கு முன் எப்போதும் இருந்ததில்லை. இனிமேல் அது இந்தியாவாக இருக்க வேண்டாம் எனக் கருதுகிறீர்களா? இந்தியா ஒரு பல்தேசிய நாடு. காஷ்மீர் எனும் தேசிய இனத்தை மூன்று நாடுகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா பாகிஸ்தான் சீனா ஆகிய மூன்றும் இது எங்கள் நாடு என்று சொல்லும் போது, நாங்கள் காஷ்மீரி என்று அவர்கள் சொல்லக் கூடாதா?
ஆக, பிரச்சனை காஷ்மீரில் இல்லை, காஷ்மீர் இந்தியாவால் எவ்வாறு கையாளப் பட்டிருக்கிறது என்பதில் தான் பிரச்சனை இருக்கிறது. காங்கிரசோ, பாஜகவோ காஷ்மீரை உதை பந்தாக எண்ணி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அதிலும் பாஜக செய்து கொண்டிருப்பது இந்திய மக்களை மத ரீதியாக பிரிக்கும் உத்தி. பார்ப்பனர்களை தலைமை பீடமாகக் கொண்டு ஏனைய இந்துக்களை அவர்களுக்கு படிநிலை அடிமைகளாக்கும் மனுநீதியை பொது நீதியாய் கொண்டு வரும் ஒரே திசையில் தான் அது இம்மியும் விலகாமல் பயணிக்கிறது. இப்போதும் அமித்ஷா பாராளுமன்றத்தில் பேசும் போது, “POK கேலியே ஜான் தூங்கா” என வெடிக்கிறார். அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்க உயிரைக் கொடுக்கவும் தயார் என்கிறார். அப்படியென்றால் சீனா தன் வசம் வைத்துள்ள காஷ்மீருக்கு எந்த உயிரைக் கொடுப்பார்? அது குறித்து பின் வாயால் கூட மூச்சு விடுவதில்லையே ஏன்? ஏனென்றால், பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு இந்தியா இந்து நாடு, இதைக் கொண்டு இங்குள்ள சிறுபான்மையினரை மேலும் அன்னியப்படுத்தவும், ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்து கொண்டிருப்பவர்களை இந்து எனும் பட்டிக்குள் அடைக்கவும் உதவும் என்பதால் தான்.
அப்படியானால் இந்து மக்களுக்காகத் தான் பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா? பணமதிப்பிழப்பு நீக்கத்தால் இந்துக்கள் பாதிக்கப்படவில்லையா? அதனால் மாண்டு போன 150க்கும் மேற்பட்டோர் இந்துக்கள் இல்லையா? இது குறித்து பாஜக வின் நிலை என்ன? ஜி.எஸ்.டி யால் வாழ்விழந்து போன சிறுகுறு வணிகர்கள் இந்துக்கள் இல்லையா? இது குறித்து பாஜக வின் நிலை என்ன? பாஜகவின் பசுக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்து விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் இல்லையா? இது குறித்து பாஜக வின் நிலை என்ன? இந்தியாவின் விவசாயக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலை செய்து மாண்டு போனவர்கள் இந்துக்கள் இல்லையா? இது குறித்து பாஜக வின் நிலை என்ன? தொழிலாளர் நல சட்டத்திருத்தல்களால், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களால் பாதிக்கப்படுவோர்கள் இந்துக்கள் இல்லையா? இது குறித்து பாஜக வின் நிலை என்ன? இந்துக்கள் செத்தழிந்து போனாலும் கார்ப்பரேட்டுகள் வாழ வேண்டும் என்பது தானே. கார்ப்பரேட்டுகள் நலனைப் பாதிக்கும் ஒற்றை ஒரு நடவடிக்கையேனும் பாஜக எடுத்திருக்கிறது என்று கூற முடியுமா?
காஷ்மீரிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. வளம் மிக்க அந்தப் பகுதி கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு இடையூறாக அரசியல் சாசனத்தின் சிறப்புப் பிரிவுகள் இருக்கின்றன. எனவே அதை நீக்கியிருக்கிறர்கள். ஜம்முகாஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரித்திருப்பது கூட இதற்கு எழும் எதிர்ப்புகளை எப்படி சஆலிப்பது எனும் அடிப்படையிலான நிர்வாகப் பிரிவு தான். இதோ மோடி அறிவித்து விட்டார் முதலீட்டாளர்கள் மாநாடு காஷ்மீரில் நடைபெறப் போகிறது என்று. இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் 370, 35A நீக்கத்தின் பின்னால் இல்லை.
இதை ஏன் இப்போது செய்திருக்கிறார்கள்? இப்போது தான் பாஜகவுக்கு பாராளுமன்றங்களில் மிருக பலம் இருக்கிறது. மட்டுமல்லாமல், காஷ்மீருக்கு மத்தியத்துவம் செய்யத் தயார் என்று பல காலமாக அமெரிக்கா சொல்லிக் கொண்டிருப்பது தான். ஆனால் இப்போது தான் அதற்கான வேளை வந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. எண்ணெய் விவகாரத்தில் ஈரானை தனிமைப்படுத்த இயலவில்லை. மட்டுமல்லாமல் OPEC (Organization Of Petroleum Exporting Countries) நாடுகள் விலையை தீர்மானிப்பது தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்க தொடங்கியிருக்கின்றன. சீனப் பொருட்கள் உலகச் சந்தையை ஆக்கிரமிப்பதை தடுக்க முடியவில்லை. சீனா மீப்பெரும் பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் சீனாவை தட்டி வைக்க காஷ்மீர் பயன்படும் எனும் அடிப்படையில் தான், காஷ்மீரில் தற்போது அந்த நோக்கத்துக்கு எதிராக இருக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகளை முடித்து வைத்தது போல் காஷ்மீர் விடுதலைப் போராட்டமும் இரத்தத்தால் முடித்து வைக்கப்படும். இதனூடாக கார்பரேட்டுகளுக்கு காஷ்மீரை திறந்து விடுவதன் மூலம் இமயமலை கேந்திர முக்கியத்துவம் கொண்ட இராணுவ தளமாக மாற்றப்படும். இதற்காக இந்தியாவை வல்லரசு நாடாகக் கூட ஐ.நா. அறிவிக்கலாம். இந்த வல்லரசு மிட்டாய், தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்பதைக் காட்டி, ஏற்கனவே பாஜக இங்கு செய்து வைத்திருக்கும் காவிமயமாக்கல் உதவியுடன் பிற அரசியல் கட்சிகளை இல்லாமல் ஆக்கி விட்டு பாஜக தனியொரு கட்சியாக இங்கு அதிகாரம் செலுத்தும்.
இந்த இலக்கை முன்வைத்துத் தான் அமித்ஷா உயிரைக் கொடுக்கவும் தயார் என்கிறார். அதன் பொருள் லட்சக்கணக்கான உயிர்களை எடுத்தேனும் எங்கள் இலக்கை அடைவோம் என்பது தான். ஆனால் காஷ்மீரில் மக்கள் போராடுகிறார்கள் குழுக்கள் அல்ல என்பதையும், இந்தியா முழுவதும் சோற்றால் அடித்த பிண்டங்கள் மட்டுமல்ல, சுயமரியாதை மிக்கவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மோடி அமித்ஷா கும்பலுக்கு புரிய வைக்க வேண்டும்.
காஷ்மீர் தொடர்பாக படிக்க வேண்டிய முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகள்
இராணுவத்தை வழிபடுவது தேசபக்தியல்ல என்பதை விளக்கும் கட்டுரை தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்
370 சிறப்பு மதிப்பு ஏன் வழங்கப்பட்டது அதை எப்படி பார்க்கவேண்டும் என்பதை விளக்கும் கட்டுரை காஷ்மீர்: இந்தியா, பாகிஸ்தான், சீனா – 370க்கும் அப்பால்
கல்லெறியும் போராட்டம் குறித்த கட்டுரை காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?
காஷ்மீர் குறித்த இந்திய அரசின் பார்வையை விளக்கும் கட்டுரை இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்?