
பாஜக அரசு செயல்பாட்டுக்குக் கொண்டுவர விரும்பும் புதிய கல்விக் கொள்கை வரைவு 2019 ன் மையமான நோக்கம் என்னவென்றால் பார்ப்பனிய வர்ணாசிரம தர்மத்தை பள்ளிக் கல்வியிலிருந்தே குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈராயிரம் ஆண்டுகள் பின்னுக்கு இழுத்து பார்ப்பனிய மேலாதிக்கத்தை முற்றுமுழுதாக நிறுவுவது தான். இதை அனுமதிக்கக் முடியாது என்பதால் தான் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அரசின் குள்ளநரி செயல்பாடுகளை முறியடித்து இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் இந்திய மாணவர் சங்கம், மூட்டா இணைந்து கொண்டுவந்திருக்கும் 12 கல்வியாளர்களின் கட்டுரைத் தொகுப்புதான் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் இந்த சிறு வெளியீடு. படியுங்கள், நீங்கள் புரிந்து கொண்டதை அவ்வாறு புரியாதவர்களுக்கு பரப்புங்கள்.
தொகுப்புரையிலிருந்து,
.. .. .. இந்த பின்ன்ணியில் இருந்து இந்தியாவின் கல்விக் கொள்கைகளை அணுகும் போது மேற்படி இரண்டு பரிணாமங்களில் இருந்தும் சமநிலையில் அணுகிய இந்தியக் கல்வி பயணிக்க வேண்டிய வழியைக் காட்டியது கோத்தாரி கல்விக் குழு. எனவே தான் அது பொதுப்பள்ளி முறைமை, அருகாமைப் பள்ளி முறைமை பற்றிப் பேசியது. 80களின் மத்தியில் இந்திய முதலாளித்துவ நலன்களைக் காட்டிலும் உலக முதலாளித்துவ/ பன்னாட்டு நிறுவனங்கள் நலன் மேலோங்கியது. இதன் விளைவாக இந்திய கல்வியில் பல மாற்றங்கள் வந்தது. கல்வியில் நடந்த இந்த மாற்றங்கள், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. சமூக பொருளாதார இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நெருக்கடிகளின் ஊடாக இந்திய அரசியலில் மீண்டும் இந்திய மண்ணில் ஒரு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வகுப்புவாத பலம் அதிகரித்தது. இந்த நிலையில் இந்துத்துவ வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து இந்திய முதலாளித்துவ பயணத்தைத் தொடங்கியது பாஜக. இந்துதுவத்திற்கு அதன் இலக்குகளை அடைய உலக கார்ப்பரேட் முதலாளித்துவத்தோடு கை கோர்த்துச் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் உலக முதலாளித்துவ நலன்களும், இந்துத்துவ ஆதிக்க நலன்களும் இணையும் புள்ளியாக உலகமயமாக்கல், தனியார்மயம், தாராளமயமாக்கல் அமைந்தது. .. .. ..