இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?

அண்மையில் நண்பர் சாதிக் சமத் முகநூலில் பதிவொன்றை இட்டிருந்தார். அதன் உள்ளடக்கத்தை அவரின் சொற்களாலேயே குறிப்பிடுவதென்றால்,

சிந்தாந்த அடிப்படியில் ஹிந்துவமும் இஸ்லாமும் வேறு வேறு அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் இந்துதுவ பாஸிசத்திற்கு எதிராக முஸ்லிம் மௌலவிகளுடன் கை கோர்த்து போராடலாம் என்று எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை இரண்டு இஸங்களும் நம்மை போன்ற சாதி கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரானதே என்பதை பலர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் கோவை குண்டு வெடிப்பு, இலங்கை தேவலாய குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்ட பாமர மக்களை சற்று நினைத்து பார்க்கட்டும் காவி பயங்கரவாதத்தை மட்டுமே எதிர்ப்போம் இஸ்லாமிய பயங்கர வாதத்தை எங்கள் தோளில் ஏற்றி கொண்டாடுவோம் என்று கருதினால் எதிர் காலம் அவர்களுக்கு விடை சொல்லும் சமரசம் இல்லாமல் ஹிந்துதுவம் இஸ்லாமிஸம் இரண்டு எதிரிகளையும் எதிர் கொள்வோம் அப்படியில்லாமல் ஒன்றை ம்ட்டுமே எதிர்ப்பவர்கள் கொள்கைவாதிகளாக இருக்கமாட்டார்கள் கூலிவாதிகளாகவே எதிர்கால சமூகம் கை காட்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

முழுமையாக படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்

இது மிகவும் தீங்கான, சமூகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கருத்து என்று கருதுகிறேன். நண்பர் சாதிக் சமத் மட்டுமல்ல, இஸ்லாத்திலிருந்து வெளியேறி நாத்திகர்களாக தங்களை அடையாளம் கட்டிக் கொண்டிருக்கும் பலரும் இதே கருத்தைக் கொண்டிருக்கின்றனர். எனவே, இதை தவறு என விளக்கும் தேவை எழுந்திருக்கிறது. மட்டுமல்லாமல், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இதற்கு மாறான கருத்தை முன் வைத்தவன் எனும் அடிப்படையிலும்; தமிழ் இணையப் பரப்பில் இஸ்லாம் எனும் மதத்திற்கு எதிராக முதன்முதலில் தொடர் கட்டுரைகள் எழுதியவன் எனும் அடிப்படையிலும் மேற்கண்ட கருத்தை மறுப்பது என்னுடைய கடமையாகிறது.

முதலில், நாத்திகம் என்றால் என்ன? ஆத்திக இயக்கம் நாத்திக இயக்கம் என எதிருக்கு எதிராக நின்று களமாடிய வரலாறு தமிழுக்கு உண்டு. என்றாலும், நாத்திகம் என்பது கொள்கையா? முழுமையடைந்த ஒன்றா? என்றால் இல்லை என்பதே சரியான விடை. உலக அளவில் கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம் என தத்துவங்கள் இயங்கிக் கொண்டிருந்தாலும் அவை அதனதன் கண்ணோட்டத்தை குறிக்கிறதேயன்றி வெறுமனே கடவுள் ஏற்பு மறுப்பு என்பதாக சுருங்கி விடவில்லை. சமூகம், இயற்கை, அண்டவெளி உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கி தத்துவங்களாக விரிந்திருக்கின்றன. நாத்திகம் ஆத்திகம் என்பவைகளை இன்றைய சமூக, அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் அது தனித்த, குறிப்பிட்ட ஒரு பிரச்சனையின் மீதான பார்வையாக மட்டுமே இருக்கிறது. அனைத்தும் தழுவியதாக இல்லை. ஒருவன் ஆத்திகன் என்பதைக் கொண்டோ, நாத்திகன் என்பதைக் கொண்டோ அவனைப் பற்றிய முடிவுக்கு நம்மால் வர இயலாது. உலகின் பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஒரு கடவுள் நம்பிக்கையில் இருந்திருக்கும் போதும் அது தன்னுடைய போதாமையை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

இன்றைய நிலையில் கடவுள் நம்பிக்கை என்பது, மதப்பற்று என்பது அரசியலின் ஒரு வடிவமாகத்தான் இருக்கிறது. எனவே, அரசியலை விலக்கி விட்டு இதை பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக நாத்திகத்தை, ஆத்திகத்தை நாம் பார்த்தால் நாம் தவறான இடத்தில் இருக்கிறோம் என்பதே அதன் பொருளாக இருக்கும். ஆனால் ஆத்திக, நாத்திக சிக்கல்களை கவனத்தில் எடுப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டே அதை பார்க்கிறார்கள். அதனால் தான் அவை முழுமையற்றவை என்றாகிறது. நாத்திகம் குறித்து பேச விரும்புகிறவர்கள் சமூகம் ஏன் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கிறது என்பது குறித்தோ, அந்த ஏற்றத் தாழ்வுகள் பெரும் இடைவெளிகளுடன் விரிந்து செல்வது குறித்தோ அக்கரையற்று இருக்கிறார்கள். ஒருபக்கம் கடவுள் நம்பிக்கை இருப்பது சரியா தவறா? என்று அறிவியலின் துணையுடன் ஆராய்கிறார்கள். மறுபக்கம், கடவுள் நம்பிக்கையால் மதப்பற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனிதாபிமானத்துடன் அல்லது காழ்ப்புணர்வுடன் ஆராய்கிறார்கள். இது தான் ஆத்திகத்தை, குறிப்பாக நாத்திகத்தை பார்க்கும் கண்ணோட்டமாக இருக்கிறது. இந்த கண்ணோட்டத்திலிருந்து நண்பர் சாதிக் சமது விடுபட்டிருக்கிறாரா?

உலகின் அனைத்து மதங்களும் பிற்போக்குத் தனங்களையே உள்ளீடாய் கொண்டிருக்கின்றன. அவைகளை எதிர்க்க வேண்டும் என்பதிலோ, எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை. அவை அறிவியலுக்கு எதிரானவை என்பதினாலும் கூட. ஆனால் இதை இரண்டு உண்மைகளுக்கு உட்பட்டே செய்ய வேண்டும். 1. உலகெங்கிலும் இருக்கும் பெரும்பான்மை மக்கள் அவைகளில் ஏதேனும் ஒன்றை நம்பி -கூடுதலாகவோ, குறைவாகவோ- வழிநடந்து வருகிறார்கள். 2. எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் போகும் வரை மதங்களை, கடவுள் நம்பிக்கையை ஒழிக்க முடியாது. இந்த இரண்டு உண்மைகளையும் புறந்தள்ளி விட்டு நாத்திகம் பேசும் யாரும், அதை உணர்ச்சிவயப்பட்டு செய்கிறார்கள் என்று தான் கொள்ள முடியுமேயன்றி அறிவுவயப்பட்டு செய்வதாய் கொள்ள முடியாது.

நண்பர் சாதிக் சமது தன்னுடைய பதிவில் பார்ப்பனியம் மக்களை எவ்வாறு பார்ப்பனியமயமாக்கி வருகிறது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். கூடவே, அது இஸ்லாத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது என்கிறார். எனவே, இரண்டையும் சம தூரத்தில் வைக்க வேண்டும் என்கிறார். அவ்வாறு இரண்டையும் சம தூரத்தில் வைக்காதவர்கள் கொள்கை வாதிகளல்ல கூலிவாதிகள் என்கிறார். ஆனால் பேச வேண்டிய முதன்மையான செய்தி இதில் விடுபட்டிருக்கிறது. அது எப்படி இதை சரி செய்யப் போகிறோம் என்பது தான். அதை உரைகல்லாக கொண்டு தான் நண்பர் கூறியிருப்பவை எந்த அளவுக்கு சரி என்று பார்க்க முடியும். நண்பரிடமிருந்து இரண்டு சங்கதிகளில் நான் மாறுபடுகிறேன். ஒன்று, இந்துத்துவாவையும், இஸ்லாத்தையும் சமதூரத்தில் வைக்க வேண்டுமா? என்பது. இரண்டு. இந்துத்துவாவைப் போல் இஸ்லாத்தை எதிரியாக பார்க்க முடியுமா? என்பது.

இஸ்லாமியர்கள், இந்துத்துவாவினர் என்பதை பொதுவில் பயன்படுத்தினாலும் அவை இரண்டு மதங்களையும் பின்பற்றும் எளிய உழைக்கும் மக்களைக் குறிக்காது. மதங்களை பின்பற்றுவதில் ஆபத்தான போக்கைக் கொண்டிருப்பவர்களை மட்டுமே குறிக்கும். (இவர்களை பிரித்தாள்வதற்கு பார்ப்பனிய மதத்தைப் பொருத்தவரை இந்து இந்துத்துவா என சொற்களை பயன்படுத்தினாலும் இஸ்லாத்தில் அவ்வாறு இருவேறு சொற்களாக பயன்படுத்த வாய்ப்பில்லை) எல்லா மதங்களிலும் ஆபத்தான போக்குள்ளவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஏனென்றால் மதம் என்பது உறைநிலையில் இருந்து சமூகத்தை பின்னோக்கி இழுக்கக் கூடியது. சமூகமோ முன்னேறிச் செல்லும் விளைவைக் கொண்டது. இந்த அடிப்படையிலிருந்து தான் நாம் மதங்களை பார்க்க வேண்டும்.

முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு ஓட்டரசியலில் இருக்கும் பல்வேறு கட்சிகள் இங்கே இருக்கின்றன, ஊழலில் திளைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றுவதில் போட்டி போட்டுக் கொண்டு என்று அந்த கட்சிகளுக்குள் ஒற்றுமைகள் பல இருக்கின்றன. என்றாலும், அந்த அனைத்து கட்சிகளையும் ஒரே தட்டில் சமமாக வைத்துத் தான் ஆய்வு செய்ய வேண்டுமா? ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் இடையே வித்தியாசங்கள் இருக்காதா? என்றால் இருக்கத்தான் செய்கின்றன. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது ஒற்றுமையான சங்கதிகளை மட்டுமல்லாது வேற்றுமையான சங்கதிகளையும், சூழலையும் கணக்கில் எடுத்துக் கொண்டே ஆய்வு செய்ய வேண்டும். தவறினால் தவறிப் போவோம். இஸ்லாத்தையும் பார்ப்பனிய மதத்தையும் சமதூரத்தில் எதிரியாக பார்க்க வேண்டும் என எண்ணும் சாதிக்சமது அவைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறார்?

மதத்தை விட்டு வெளியேறியவர்களுக்கான பாதுகாப்பு எனும் ஒற்றைப் புள்ளியிருந்தே இந்த வினைப்பாடுகள் தொடங்குகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் ஒரு சிறுபான்மை மதம், பார்ப்பனியம் என்பது ஆதிக்க நோக்கம் கொண்ட அதிகாரத்தில் இருக்கும் மதம். இஸ்லாத்திலும் ஆதிக்கக் கொலைகள் நடந்திருக்கின்றன, நடக்கின்றன என்றாலும் இதில் பார்ப்பன வெறியும், இஸ்லாமும் ஒன்றா? கோவை பரூக் கொலையையும், உ.பி அக்லக் கொலையையும் ஒரே பார்வையில் பார்க்க முடியுமா? இப்படியும் கூட பார்க்கலாம். பார்ப்பனியம் ஆதிக்கத்தில் இருக்கும் அக்லக் கொலையும், இஸ்லாம் ஆதிக்கத்தில் இருந்த அஸ்மா பின் மர்வான் கொலையையோ அல்லது கசௌரி கொலையையோ எடுத்துக் கொள்வோம். இரண்டும் ஒன்றாக முடியுமா?

இஸ்லாம், இல்லாத ஒரு நிர்வாக முறைமையை (அரச கட்டமைப்பை) ஏற்படுத்த, தங்கள் ஆளுமையை நிரூபித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட மதம். பார்ப்பனிய மதமோ தங்கள் ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மக்களை பிரித்தாள அடிமைத்தனத்தில் இருத்தி வைக்க, எதிர்ப்போரை இல்லாமல் செய்ய ஏற்படுத்தப்பட்ட மதம். இரண்டையும் எப்படி ஒன்றாக பார்க்க முடியும்?

இந்தியாவில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் என்பவை அரசியல் சதியின் வெளிப்பாடுகள். இந்தப் போக்கு 80களின் பிறகே படிப்படியாக வளர்ந்திருக்கிறது. இன்னமும் வளரக் கூடும். இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எந்த அளவுக்கு வலுப் பெறுகிறதோ அந்த அளவுக்கு அது தீவிரமடையும். அதை இஸ்லாத்தின் தன்மையோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது பார்ப்பனிய தன்மைக்கு சமமாக புரிந்து கொள்ள வேண்டுமா? என்பது தான் இதில் இருக்கும் சிக்கல்.

உலக அளவில் இஸ்லாத்தின் மீது சாட்டப்படும் தீவிரவாத முகம் என்பதுடன் அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு தொடர்பே இல்லை என்று யாரேனும் கூற முடியுமா? சாதிக்சமது அப்படி எண்ணுகிறாரா? இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பதே அமெரிக்கா பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தை அல்லவா. அல்காய்தா, ஐ.எஸ் என அனைத்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கும் அமெரிக்காவுக்கு இருக்கும் தொடர்புக்கான ஆதாரங்களை இணையத்தில் புழக்கம் உள்ள எவரும் எளிதாக கண்டடையலாம். உலக ஆளவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் நீர்த்த வடிவம் தான் தமிழகத்தின் தவ்ஹீத் வகைமாதிரி இயக்கங்கள். அல்காய்தா போன்ற இயக்கங்களின் செயல்பாடுகளைக் கொண்டு இஸ்லாம் பயங்கரவாத மதம் என முத்திரை குத்துவது எவ்வளவு அபத்தமானதோ, அதைப் போலவே தமிழகத்தின் தவ்ஹீத் வகைமாதிரி இயக்கங்களைக் கொண்டு இஸ்லாத்தை பார்ப்பனியத்தோடு இணைப்பதும் அபத்தமானது.

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கை விட பார்ப்பனிய இயக்கங்களின் பங்கே அதிகம். சம்ஜௌதா குண்டு வெடிப்பு தொடங்கி எத்தனையோ குண்டு வெடிப்புகளில் பார்ப்பனிய இயக்கங்களின் பங்கு ஆதாரத்துடன் அம்பலப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ தாக்குதல்களில் நேர்மையான புலன்விசாரணை நடந்தால் அவைகளிலும் பார்ப்பனிய இயக்கங்களின் பங்களிப்பு அம்பலப்படும். அப்சல்குரு எப்படி சிக்க வைக்கப்பட்டார் என்பதும், இந்து மனசாட்சியை அமைதிப்படுத்தவே அவர் தூக்கிலிடப்பட்டார் என்பதும் யாருக்கும் புரியாத செய்திகளல்ல. இவைகளையெல்லாம் ஒப்பீடு செய்யாமல் இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்று என்று கூறுவது எப்படி அறிவுடையோர் செயலாக இருக்க முடியும்?

பார்ப்பனிய மதத்துக்கு வெள்ளையர்கள் இந்து மதமாக பெயர் மாற்றியதிலிருந்தே அது தன் கட்டமைப்பு ஒழுங்குக்காக இஸ்லாத்தை எதிரியாக முன்னிருத்தி வருகிறது. பார்ப்பனிய மதத்துக்கு வெளியிலிருந்தோரை இந்து மதமாக மடைமாற்றுவதற்கு இஸ்லாம் பலம் வாய்ந்த எதிரியாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி இருந்தால் தான் அதைக் காட்டி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்களாக இருத்த முடியும். இதற்கு உதவுவதற்காகவே இங்கு இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லீம்களுக்கு இருக்கும் மதத்தின் மீதான பற்றை பிஜேக்களும், உவைசிகளும் பார்ப்பனியத்திற்கான உதவியாக மாற்றீடு செய்கிறார்கள். இந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல் பார்ப்பனியமும் இஸ்லாமும் ஒன்று என்று எப்படி கூற முடியும்?

சரி. இஸ்லாம் என்றதும் நாம் இஸ்லாமியர்களை குறித்துப் பார்ப்பதா? இஸ்லாத்தின் கொள்கைகளைக் குறித்துப் பார்ப்பதா? அந்த மக்கள் தங்கள் கொள்கைக்காகவே வாழ்வதாக தங்களைத் தாங்களே உருவகப் படுத்திக் கொள்ளட்டும். அது அவர்களின் கவலை. நாம் அவர்களை எப்படி பார்ப்பது? ஒரு தாழ்த்தப்பட்டவன் தான் தாழ்த்தப்பட்டிருப்பது கடவுளின் படைப்பு விதி என ஏற்கிறான் என்று கொள்வோம். ஓர் ஆதிக்கம் செலுத்துவோன் தான் ஆதிக்கம் செலுத்துவது கடவுளின் படைப்பு விதி என ஏற்கிறான் என்று கொள்வோம். இருவரையும் நாம் சமமாக பார்ப்போமா? தாழ்த்தப்பட்டவன் கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படையில் நாத்திகத்தை கடுமையாக எதிர்க்கிறான் என்றும் கூடுதலாக கொள்வோம். நம்முடைய நடவடிக்கைகள் யாரை அண்மித்து இருக்கும்? இதில் அந்தந்த கடவுட் கொள்கையின் பங்களிப்பு என்னவாக இருக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?

இஸ்லாம் ஆதிக்கத்தில் இருக்கும் நாடுகள் என்பதால் அரபு நாடுகளை எடுத்துக் கொள்வோம். கடவுளை மறுப்பது உயிர் வாழும் தகுதியை இழக்க வைக்கும் என்பது சட்டப்படி ஏற்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அது அரசியலின் வழியே ஏற்பட்டது தான் என்பது புரிய முடியாதது அல்ல. தாயிப் நகரில் நூற்றுக் கணக்கான குரான்கள் சாக்கடையில் வீசப்பட்டிருந்தது குறித்து எந்தவித மேல் நடவடிக்கையும் அரசினால் எடுக்கப்படவில்லை என்பதையும்; தம்மாம் நகரில் புர்கா அணிய மறுத்த ஐரோப்பிய பெண்கள் மீது நடவடிக்கை எடுத்த முத்தவாக்கள் உடனடியாக தண்டிக்கப்பட்டனர் என்பதையும்; கடவுள் நம்பிக்கை எந்த இடத்திலும் கேள்விக்குள்ளாக்கப் படவில்லை என்றாலும் கூட நஜ்ரான் நகரில் எழுபது கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதையும்; வணக்க வழிபாடுகளில் குறை வைக்காத கசௌரி துரத்தி துரத்தி வேட்டையாடப்பட்டார் என்பதையும் கவனியுங்கள். இந்த நிகழ்வுகளிலெல்லாம் ஊடாடியிருப்பது அரசியலா? மதமா? அரசியலை விலக்கி வைத்து விட்டு மதங்களைப் பார்க்க வேண்டும் என்றால் அதில் எஞ்சப் போவது உரிப்பதற்கு ஒன்றுமில்லாத வெங்காயம் தான். எனவே மதக் கொள்கையின் முரண்பாடுகள் அந்தந்த மதங்களை பின்பற்றும் மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்த பயன்படுத்த வேண்டுமேயன்றி, அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஒரு எல்லைக்கு மேல் அவைகளை பாவிக்கக் கூடாது.

நாத்திகர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன? அதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். வெறுமனே மதத்தை விட்டு வெளியேறியவர்களுக்கான பாதுகாப்பு என்பது மட்டுமா? அல்லது, இணையப் பரப்புகளில் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம். அப்படி விமர்சிக்கும் உரிமையில் அந்த மதவாதிகள் தலையீட்டை தடுத்த நிறுத்த வேண்டும் என்பதா? அல்லது, இஸ்லாம் உட்பட அனைத்து சாதி மதங்களை ஒழிக்க வேண்டும் என்பதா? அல்லது, அனைத்து மூடநம்பிக்கைகளையும், அனைத்து வித ஆதிக்கங்களையும் ஒழித்து அதை மக்களை சமவாய்ப்பு, சமவசதிகளுடன் வாழ வைப்பதற்காக பயன்படுத்த வேண்டும் எனபதா? எது உங்களின் அரசியல் நிலைப்பாடு என்பதை தெரிவிக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் அந்த நிலைப்பாட்டை அடையும் வழி என்ன? என்பதை சிந்திக்க முடியும். இவை எதுவுமே இல்லாமல், இஸ்லாத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, அதை எதிர்க்க வேண்டும். நாட்டில் நிலவும் வேறு முரண்பாடுகள் எது குறித்தும் ஆய்வு செய்ய மாட்டோம். எங்கள் அக விருப்பத்திலிருந்து மட்டுமே அனைத்தையும் முடிவு செய்வோம் என்றால் .. .. .. மன்னிக்கவும், உங்கள் காலத்தை நீங்கள் வீணாக்கிக் கொள்ள வேண்டாம்.

இன்றைய இந்தியாவின் சூழல் நம்மிடம் கோருவது என்ன? பார்ப்பன பாசிசம் மிருக பலத்துடன் மக்களை குதறிக் கொண்டிருக்கிறது. மத வேறுபாடுகளைக் கடந்து எளிய மக்கள் அனைவரையும் திட்டமிட்டு பாழடித்துக் கொண்டிருக்கிறது பார்ப்பனியம். கொலைகளின் ஊடாக மட்டுமல்ல பண்பாட்டு பழக்க வழக்கங்களின் ஊடாகவும் பாசிசம் மக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் ஒரு நாத்திகவாதி என்ன செய்ய வேண்டும்?

தந்தை பெரியார் தன்னை எப்போதும் நாத்திகவாதி என அழைத்துக் கொண்டதில்லை, பகுத்தறிவுவாதியாகவே பார்த்தார். ஏனென்றால் கடவுளோடு பொருதுவது மட்டுமே அவர் வேலையில்லை. சமூகத்தை ஆய்வு செய்து அதனடிப்படையில் எல்லா வகைப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக போராடினார். தற்போது இஸ்லாத்திலிருந்து வெளியேறிய நாத்திகவாதிகள் தங்களை வேறுமனே நாத்திகவாதிகளாக பார்க்க விரும்புகிறார்களா? அல்லது பகுத்தறிவுவாதியாகவா? என்பதே முதன்மையான கேள்வி.

இஸ்லாம் எனும் மதத்தை விட்டு வெளியேறுவோர் இயல்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வாழ இயலாத நிலை இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. இதற்கு மைலாஞ்சி ரசூல் தொடங்கி கோவை பாரூக் வரை எடுத்துக்காட்டுகள் ஏராளம் உண்டு. இதை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை எப்படிச் செய்வது?

இரண்டுமே இங்கு நிலவும் உண்மைகள் தாம். பார்ப்பனியம் இங்கு அதிகாரத்தில் இருக்கிறது. வெறுமனே அதிகாரத்தில் இருக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், மதச்சார்பற்றது என்று கூறிக் கொண்டாலும் அரசு இயந்திரம் ஒட்டு மொத்தமாக பார்ப்பனிய மயமாகி இருக்கிறது. எஞ்சி இருக்கும் மிச்ச சொச்சமும் வெகு விரைவாக பார்ப்பனிய மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேநேரம் இஸ்லாமும் வாய்ப்பு கிடைக்கும் போதுகளில் தன் கோர முகத்தை வெளிக்காட்டியிருக்கிறது. இரண்டுமே இங்கு நிலவுபவையே. என்றால் இவைகளிலிருந்து மீள்வதற்கு நம் செயலுத்தி என்னவாக இருக்க வேண்டும்? நாத்திகவாதி எனும் அடிப்படையில் பெரியார் வழியில் பகுத்தாய்ந்து பார்த்தால் வர்க்க அடிப்படையில் அணி சேராமல் இவைகளுக்கு எதிராக நம்மால் தற்காத்துக் கொள்ள முடியாது என்பதல்லவா உண்மை. இரண்டு மதங்களிலும் இருக்கும் எளிய மக்களை அணி திரட்டாமல் இதற்கு வாய்ப்புண்டா?

இந்தியாவில் இஸ்லாமியர்கள் என்றால் அவர்கள் சிறுபான்மை மதத்தினர் எனும் அடிப்படையிலும், இந்துக்களை பார்ப்பனியத்துக்குள் ஒன்றுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட எதிரிகள் எனும் அடிப்படையிலும் இரட்டை ஒடுக்குமுறைக்கு இலக்காகி இருக்கிறார்கள். கூடுதலாக, உலகளாவிய அரசியலின் விளைவாக இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் மாயவலைக்குள் சிக்கி பார்ப்பனியத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பது தெரியாமலேயே தாங்கள் இஸ்லாமிய பிடிப்புடன் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை அவர்களுக்கு உணர்த்தும் கடமை யாருக்கு இருக்கிறது? நமக்கு இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

வெகு நிச்சயமாக காவிச் சாமியார்கள் எப்படி நமக்குத் தேவையில்லையோ, அந்தப்படியே, இஸ்லாமிய மௌலவிகளும் நமக்குத் தேவையில்லை. இஸ்லாமிய சாமியார்களுடன் இணைந்து பார்ப்பனியத்தை எதிர்ப்பது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. அதேநேரம் முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு இணையாமல் பார்ப்பனியத்தை எதிர்ப்பதும் சாத்தியமானது அல்ல. அப்படியென்றால் நம்முடைய செயலுத்தி இந்த அனைத்து உண்மைகளையும் தழுவிதாகத் தானே இருக்க வேண்டும்?

ஆனால் இருப்பது என்ன? இஸ்லாத்தால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனவே அதனைத் தாக்க வேண்டும், அதற்கு எதிராக இருக்க வேண்டும் எனும் வெஞ்சினம் தான் அனைவரிடமும் வெளிப்படுகிறது. இது தவிர்க்கப்பட்டே ஆகவேண்டும். ஏனென்றால் இது முஸ்லீம்களை நம்மிடமிருந்து விரட்டுகிறது. வெளியேறியோருக்கான பாதுகாப்பு எனும் அடிப்படையிலும் கூட, ஒட்டுமொத்த முஸ்லீம்களிடமிருந்தும் தனிமைப்பட்டு நின்று நமக்கான பாதுகாப்பை நம்மால் ஒருபோதும் அடைய முடியாது.

இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என எண்ணுகிறேன்.

பின்குறிப்பு1: இக் கட்டுரை நண்பர் சாதிக் சமத்தை குறிப்பது மட்டுமல்ல. இஸ்லாத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் குறிப்பது.

பின்குறிப்பு2: இந்தக் கட்டுரையின் பொருள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோளில் தூக்கிப் பிடிப்பதல்ல

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

2 thoughts on “இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?

 1. நானும் நண்பர் சாதிக் சமதுடன் முறன்படுகின்றேன். இஸ்லாத்தையும், பார்ப்பனியத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது, இஸ்லாம் மிகப் பயங்கரமானது, பார்ப்பனியம் இந்தியாவின் பிரச்சினை, இஸ்லாம் உலகளாவிய பிரச்சினை.

  இஸ்லாமிய பயங்கரவாதத்தை அமெரிக்காவுடன் முடிச்சுப் போட்டு குறுக்க முயல்வது முட்டாள் கம்யூனிஸ வேடதாரிகளின் புத்திப்பேதலிப்பு ஆகும்.இஸ்லாத்தைத் தெரிந்த, முஹம்மதின் வாழ்க்கையை அறிந்த எவனும் அமெரிக்கவுடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை குறுக்கிப் பார்க்கும் முட்டாள்தனத்தை செய்ய மாட்டான்.

 2. நண்பர் றிஷ்வின் இஸ்மத்,
  உங்கள் கம்யூனிச வெறுப்பைக் கண்டு பரிதாபம் தான் ஏற்படுகிறது.
  உங்கள் முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருந்தால் அதற்கான தரவுகளுடன் எழுதுங்கள். நாம் விவாதிக்கலாம்.
  இந்தக் கட்டுரையின் இரண்டாவது பகுதியும் வெளியாகி இருக்கிறது. படித்துப் பார்த்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.
  https://senkodi.wordpress.com/2019/09/30/islam-vs-parpanism2/

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s