இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே.

1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள்

இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என எண்ணுகிறேன்.//

நானும் இஸ்லாத்தையும் முஸ்லிமையும் பிரித்துதான் பார்க்கிறேன் அதனால்தான் அவர்களை அதிலிருந்து வெளியேற வேண்டும் என்கிறேன்

சரி இஸ்லாத்தை விட்ருவோம் இன்னும் எத்தனை காலத்திற்கு பார்ப்பனிய எதிர்ப்பு அதைமட்டும் வரையறை செய்து விடுங்க 80 ஆண்டுகளுக்கு முன் இயக்கமாக உருவானவன் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டான் அவனை வரவிட்டது யார் ? வளர்ச்சி எப்படி கிடைத்தது கூடணியும்  வெளி நடப்பும்தானே வளரவிட்டது ?

எனக்கு உடனடி எதிர்வினை தரவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவன் அல்ல தரலாம் அல்லது புறக்கணிக்கலாம் அது உங்கள் விருப்பம் சார்ந்தது

//இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் மாயவலைக்குள்//அதென்ன இஸ்லாமிய மீட்டுருவாக்கம்  மாயவலை ? கூடுதலாக சிலவார்த்தைகளை சேர்ப்பது ஏன் ?  இன்னும் நேரடியா சொல்லனும்ன்னா எல்லா சித்தாந்தங்களுகே ஒரு மாயவலை தானே  ஆனால் அது நடை முறைக்கு வந்தபின் எப்படி மாயையாக இருக்கும் சொர்க்கம் என்பது மாயை அதை நம்பி எதிராளியை கொல்வது எப்படி மாயை ஆகும்  ஒவ்வொரு சிந்தாந்தளுமே மறு எழுச்சி பெற  வாய்ப்பு இருக்கு அது இஸ்லாத்திற்கு மட்டுமல்ல மற்ற சிந்தாந்தங்களுக்குமான பொது வழிதானே?

முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு இணையாமல் பார்ப்பனியத்தை எதிர்ப்பதும் சாத்தியமானது அல்ல. அப்படியென்றால் நம்முடைய செயலுத்தி இந்த அனைத்து உண்மைகளையும் தழுவிதாகத் தானே இருக்க வேண்டும்?

ஆனால் இருப்பது என்ன? இஸ்லாத்தால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனவே அதனைத் தாக்க வேண்டும், அதற்கு எதிராக இருக்க வேண்டும் எனும் வெஞ்சினம் தான் அனைவரிடமும் வெளிப்படுகிறது. இது தவிர்க்கப்பட்டே ஆகவேண்டும். ஏனென்றால் இது முஸ்லீம்களை நம்மிடமிருந்து விரட்டுகிறது. வெளியேறியோருக்கான பாதுகாப்பு எனும் அடிப்படையிலும் கூட, ஒட்டுமொத்த முஸ்லீம்களிடமிருந்தும் தனிமைப்பட்டு நின்று நமக்கான பாதுகாப்பை நம்மால் ஒருபோதும் அடைய முடியாது.//

ஏன் முடியாது  என் கருத்தை நீங்களே ஒப்புக்கொள்கிறேன் ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வித்தைக்குள் வர வேண்டும் என்கிறீர்கள். ஒரே ஒரு கேள்வி. சரி. ….முஸ்லிம்களுடன் இணைத்து பார்ப்பனியத்தை ஒழித்து விட்டோம்  பிறகு இஸ்லாம் உங்களை வாழ விடுமா? ..

பார்பனியத்தை விட்டு விட்டு இஸ்லாத்தை ஒழித்து விட்டோம் பிறகு பார்ப்பனியம் உங்களை வாழ விடுமா?  இரண்டையும் எதிர்த்து ஏன் புதிய சித்தாந்தங்களை உருவாக்க கூடாது ? பழைய சிந்தாந்ததிற்குள் தான் இருக்கவேண்டுமா சூழலுக்கேற்ப்ப மாறகூடாதா?  சரி என் கருத்து ஏற்க்கபடாததாகவே இருக்கட்டும் உங்களின் பாதை உங்கள் கருத்தாக இருக்கட்டும் எங்கள் பாதை எங்கள் கருத்தாக இருக்கட்டும் நட்புகள் நீடிக்கட்டும்

எந்த போராட்டமானாலும் எந்த தனி முஸ்லிமும் கலந்துக்கொள்வதில்லை கலந்துக்கொள்ளும் முஸ்லிம்கள் ஒரு லேபிளின் பிண்ணனியில்தான் கலக்கிறார்கள்  பார்ப்பனிய எதிர்ப்பிலும் கலந்துக்கொள்பவர்களும் அப்படிதான் இந்த லேபிள்கள் ஸுன்னி & வஹாபிய ஸுன்னி யாக இருக்கும் அதன் தலைவர்கள் இஸ்லாமிய அடிபடையான கிலாஃபத்தில் தான் இருப்பார்கள் ஹிந்துதுவாவின் ஒரே நாடு ஒரே மொழி போன்றது தான் கிலாஃபாவின் நோக்கமும்  எதனுடன் நீங்க சேர்ந்து போரிட்டாலும் வெல்வது ஒன்று ஹிந்துதுவா அல்லது கிலாஃபா  ..பிறகு உங்களுக்கான கிரவுண் எது?

ஆனால் இருப்பது என்ன? இஸ்லாத்தால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனவே அதனைத் தாக்க வேண்டும், அதற்கு எதிராக இருக்க வேண்டும் எனும் வெஞ்சினம் தான் அனைவரிடமும் வெளிப்படுகிறது.//முற்றிலும் தவறான திணிப்பு நான் இதுவரை எந்த முஸ்லிமாலும் தாக்கப்பட வில்லை  எந்த வெறுப்பாலும் இஸ்லாத்தை அணுக வில்லை பொது வழியில் உலக அமைதிக்கு எதிராக இஸ்லாமிய சிந்தாந்தம் இருப்பதால் எதிர்க்கிறேன் எதிர்ப்பவர்களும் அப்படிதான் எதிர்க்கிறார்கள் முன்பொரு காலத்தில் நீங்கள் எதிர்த்ததும் அப்படிதானே  அல்லது இஸ்லாத்தின் மீது  கொண்ட வெறுப்பால் எழுதினீர்களா?  நிச்சயமாக அப்படியில்லை என்பதை நான் அறிவேன் ஒருவேளை நீங்கள் இஸ்லாமிய மறுப்பை நிறுத்தி விட்டதால்  மற்றவர்களையும் நிறுத்த வலியுருத்த மாட்டீர்கள் என்றே கருதுகிறேன்

நண்பர் சாதிக் சமத் மட்டுமல்ல, இஸ்லாத்திலிருந்து வெளியேறி நாத்திகர்களாக தங்களை அடையாளம் கட்டிக் கொண்டிருக்கும் பலரும் இதே கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.//

இதுவும் பிழையான புரிதல்  எங்களை நாங்கள் நாத்திகர்களாக சுருக்கிக்கொள்ளவில்லை இன்னும் சொல்வதாக இருந்தால் நாஸ்திகர் என்ற வார்த்தையிலேயே எனக்கு உடன் பாடில்லை அதனால்தான் நாத்திகர் பண்பாட்டு கழகம் என்ற பெயரை  மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் அது என்ன நாஸ்தீகம்? நாஸ்தி என்றால் அழிவு என்று பொருள் இங்கே  வேதங்களை அழிப்பவர்கள் என்று பொருள் தருகிறார்கள் அதுவும் ஆஸ்திகர்கள் சூட்டும் காரண பெயர் மட்டுமே நமக்கான பெயரை நாம் தான் தேர்வு செய்யனும் என்று கருதுகிறேன் என் பெயரை என் கருத்தியல் எதிரி முடிவு செய்வதோ சூட்டுவதோ என்னால் அனுமதிக்க முடியாது அதனால் நாஸ்திகர் என்ற எதிர் கருத்தாளி சூட்டும் அடையாளத்தில் எனக்கு உடன் பாடில்லை  அடுத்து ஒரு பகுத்தறிவாதி சுதந்திர சிந்தனையாளன் எதார்த்தவாதி  என்று என்னை/எங்களை அடையாளப்படுத்துகிறோம்  இந்த கருத்தியல் என்ன தாக்கத்தை உருவாக்கும் என்பதை அது நடை முறைக்கு வந்தபின் கருத்து கூறுங்கள் அதல்லாமல் யூகத்தின் அடைப்படையில் கூறும் கருத்துக்கள் உண்மையாகாது

இந்த எதிர் வினைகளிலிருந்து தொகுப்பாக என்ன புரிந்து கொள்ள முடிகிறது? சில கேள்விகள் இருக்கின்றனவே அன்றி சாரமாக புரிந்து கொள்ள அதில் ஒன்றுமில்லை. அதாவது, முதல் கட்டுரையில் முதன்மையாக முன்வைக்கப்பட்டிருந்த மூன்று செய்திகள் ஏனவென்றால், ஒன்று, இஸ்லாத்தையும் பார்ப்பனியத்தையும் ஏன் ஒன்றாக ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது என்பது. இரண்டு, முஸ்லீம்களை ஏன் பகையாளியாக பார்க்காமல் நட்பாய் பார்க்க வேண்டும் என்பது. மூன்று, இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத முகத்துக்கு பின்னால் இருக்கும் அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் சதி. இந்த மூன்று செய்திகள் குறித்தும் நண்பர் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? ஏற்கிறாரா? மறுக்கிறாரா? மறுக்கிறார் என்றால் என்ன விதத்தில் மறுக்கிறார் போன்ற விவரங்கள் அவரின் மறுப்புரையில் தெளிவாக இல்லை.

தாயிப் எனும் நகரில் சாக்கடைக்குள் கிடந்த குரான்கள்

நண்பரின் எதிவினையில் இருக்கும் கேள்விகள். 1. 1400 ஆண்டு பழமையான செய்திகளை எப்படி அண்மைச் செய்திகளோடு ஒப்பிடலாம்? 2. எத்தனை காலத்துக்கு பார்ப்பன எதிர்ப்பைச் செய்வது? 3. கூட்டணியும் வெளிநடப்பும் தானே அவர்களின் வெற்றிக்கு காரணம்? 4. எல்லா சித்தாந்தங்களுக்கும் மறுஎழுச்சி சாத்தியம் தானே? (இப்படி கேட்டிருப்பதன் மூலம் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பது குறித்த புரிதலற்ற தன்மை வெளிப்படுகிறது) 5. பாதிக்கப்பட்டதால் இஸ்லாத்தை எதிர்க்கிறோமா? 6. புதிய சித்தாந்தங்கள் கூடாதா? 7. சுதந்திர சிந்தனையாளன் என்பது நடைமுறைக்கு வரும் முன்னரே யூகம் செய்யாதீர்கள்.

இதை இப்படி புரிந்து கொள்ளலாம். சுதந்திர சிந்தனையாளர்களாக செயல்பட விரும்பும் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய நாத்திகர்கள், ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இருந்தாலும் அதிலிருக்கும் சாரத்தைக் கொண்டு தான் இஸ்லாத்தையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நன்று. ஆனால் நண்பரே, நீங்கள் எழுதியிருந்த கட்டுரை முடிவை அல்லவா முன்வைத்திருந்தது. இஸ்லாமிய வன்முறையையும், பார்ப்பனிய பயங்கரவாதத்தையும் தனித்தனியாக பார்ப்பது கூலிவாதிகளின் செயல் என்றல்லவா முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த உங்களின் முடிவுக்கு  இந்த சில கேள்விகள் போதுமானவையாக இல்லை என்பது தான் என் கருத்து.

1400 ஆண்டுக்கு முன்பு நடந்ததையும், இப்போது நிகழ்வதையும் தான் ஒப்பீடு செய்ய வேண்டும் என்றொரு திட்டம் என்னிடம் இல்லை. அவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. அதிலும் சாக்கடையில் குரான், முத்தவாக்கள் தண்டிக்கப்பட்டது போன்றவை அண்மைச் செய்திகள் தாம். நஜ்ரான் படுகொலைகள் நடந்து நாற்பத்துச் சொச்சம் ஆண்டுகள் தான் ஆகின்றன. அந்த காலம் அல்ல முதன்மை அதன்பின் தொழிற்படும் அரசியல் தான் மதன்மையானது. எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும், எல்லா மதங்களிலும் அரசியலே வினையூக்கியாக இருக்கிறது என்பது தான் நான் சுட்டிக் காட்ட விரும்பியது. அந்த அரசியலை விலக்கி விட்டு மதக் கொள்கையாக அவைகளை பின்னொடுங்கச் செய்து விடக் கூடாது என்பதே என் வாதம்.

அமெரிக்காவுக்கு மீட்டுருவாக்கக் குழுக்களுடனான தொடர்பு

2,3,4 ஆகிய கேள்விகள் பார்ப்பனியம் குறித்தும், இஸ்லாமிய மீட்டுருவாக்கம் குறித்தும் உங்களுக்கு போதாமை இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகின்றன.

ஆம். பாதிக்கப்பட்டதால் தான் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். நம்மைப் பாதிக்காத எதுகுறித்தும் நாம் எதிர்வினை ஆற்றுவதில்லை. மாற்றுக் கருத்தை முன்வைக்கத் தொடங்கியதுமே பாதிப்புகள் தொடங்கி விடுகின்றன. கருத்தியல் ரீதியாக, பழக்கங்கள் ரீதியாக, குடும்ப ரீதியாக, சமூக ரீதியாக. ஆனால் பாதிப்பின் பிறகுதான் எதிர்க்கிறோம் என்பது பிழையானது தான் (நான் எழுதியிர்ந்ததில் அப்படியான தொனி இருக்கிறது என்பது குறித்து நான் சுயவிமர்சனம் செய்து கொள்கிறேன்) அதேநேரம் இஸ்லாத்திலிருந்து வெளியேறும் நாத்திகர்களின் உளக்கிடை அவ்வாறான பழிவாங்கல் போக்கில் நிலைக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கதே. பார்ப்பனியத்தை விட இஸ்லாமிய எதிர்ப்புக்கு அவர்கள் தரும் முதன்மைத்தனம், அறியாமை என்பதோடு இதிலும் அடங்கியிருக்கிறது.

6,7 புதிய சித்தாந்தங்கள், நடைமுறைகள் வரும்போது ஆய்வுக்கு உட்படுத்தி சரியானதை ஏற்பதில் தயக்கம் ஏதும் இல்லை. ஆனால் இது தான் எங்கள் கொள்கை இது தான் எங்கள் நடைமுறை என வெளிப்படுத்தாமல் எதையும் செய்ய முடியாது. எனவே, அதை வெளிப்படுத்துங்கள். அதேநேரம் நீங்கள் வெளிப்படுட்தியதற்குத் தான் இந்த எதிர்வினை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

எத்தனை காலத்துக்கு பார்ப்பனிய எதிர்ப்பைச் செய்வது? இந்தக் கேள்வியின் பின்னுள்ள உங்களின் புரிதல் வியப்பையே தருகிறது. ஆயிரம் ஆண்டுகளாக இங்கே பார்ப்பனிய எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. அதை முற்றுமுழுதாக முறியடிக்கும் வரை தொடரும், தொடர வேண்டும். ஆனால் இதை எப்படிச் செய்வது என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. தமிழகத்தில் ஒப்பீட்டளவில் வெற்றிகள் கிடைத்திருந்தாலும், இந்திய அளவில் அது கைகூடவில்லை. மாற்றி யோசித்துப் பார்ப்போம். பார்ப்பனிய ஆதிக்கம் என்பது எவ்வாறு கைகூடி இருக்கிறது? அதிகாரத்தில் இருப்பவர்களை, மன்னர்களை தன்வயப்படுத்தியதன் மூலம் தொடக்கத்தில் பார்ப்பனிய மதம் ஆதிக்கம் பெற்றது. பின்னர் சூழல் மாறிய போது, சூழல் மாற்றத்தின் தேவைக்கேற்ப தன்னை இந்து மதமாக உருமாற்றிக் கொண்டது. இதன் பொருள் என்னவென்றால், அதுவரை தன்னால் தீண்டத் தகாதவர்களாக மட்டுமல்லாமல், பார்க்கத் தகாதவர்களாகவும் ஒதுக்கி வைத்திருந்த பிற மக்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக இந்து மதம் என்றாக்கிக் கொண்டது என்பது தான். தேவைக்கேற்ப அவர்களுடன் ஐக்கியமாகிக் கொண்டது. இந்த ஐக்கியம் தான் அவர்களை இன்றுவரை ஆதிக்கத்தில் நீடிக்க வைத்திருக்கிறது. ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே.

முழு ஐக்கியமாக இல்லாமல் படிநிலையான ஐக்கியத்தை தான் அது வைத்திருக்கிறது. இந்த படிநிலையை ஏற்றுக் கொண்டு ஐக்கியப்பட வைத்திருக்கிறது. இந்த திட்டமிடல், முனைப்பு பார்ப்பனியத்தை எதிர்ப்போரிடம் இருக்கிறதா? இல்லை என்பது தான் இங்கு இருக்கும் சிக்கல். பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டும் என்றால் எதனால் அது ஆதிக்கத்தில் நீடிக்கிறதோ அதை தகர்க்க வேண்டும். இதை யாரும் தகர்த்து விடக் கூடாது என்பதற்காகத் தான் பார்ப்பனியம் இஸ்லாத்தை பொது எதிரியாக முன்னிருத்தி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தன்னோடு இணைக்கிறது. இது தான் தகர்க்கப்பட வேண்டிய கண்ணி. இதைத் தகர்க்க நீங்கள் கொண்டிருக்கும் கொள்கை உதவுமா? மாறாக நீங்கள் இஸ்லாத்தை தாக்கத் தாக்க அது பார்ப்பனியத்திற்கான உதவியாகத் தான் சென்று முடியும். என்றால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அல்ல. இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் அந்த எதிர்ப்பு பார்ப்பனியத்துக்கு உதவியாக ஆகாமலும், இஸ்லாமியர்களை விலக்கி விடாத வகையிலும் இருக்க வேண்டும். கடினமாக இருந்தாலும் அந்த வழியை கண்டுபிடித்து, கைபிடிப்பதை தவிர வேறு வழியில்லை.

சரி. பார்ப்பனியத்தை ஒழித்து விட்டோம், இஸ்லாம் நம்மை வாழ வைத்துவிடுமா? அல்லது இஸ்லாத்தை ஒழித்து விட்டோம், பார்ப்பனியம் நம்மை வாழ வைத்து விடுமா? நண்பரே, எந்த மதமும் மக்களை வாழவைப்பதை நோக்கமாக கொண்டதில்லை. பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழித்த பிறகு அங்கு ஏற்படும் வெற்றிடத்தை எந்த ஆதிக்கம் நிரப்பும்? எனும் கேள்விக்கான பதிலில் இருக்கிறது இந்த குழப்பத்திற்கான தெளிவு. நாத்திகம் எப்படி முழுமையானதில்லையோ அதுபோலவே, ஆத்திகமும் முழுமையானதில்லை. எனவே, நாம் இதை மத ஆதிக்கம் என்பதாக சுருக்காமல் சமூக ஆதிக்கம் என்பதாக பார்க்க வேண்டும். சமூக ஆதிக்கம் பொருளாதார அடிப்படையிலேயே கட்டியமைக்கப் பட்டிருக்கிறது. பொருளாதார ஆதிக்கத்திலிருந்து தான் எல்லா ஆதிக்கங்களும் ஒழுங்கமைக்கப் பட்டிருக்கின்றன. தெளிவாகச் சொன்னால் பொருளாதார உயர்வு தாழ்வுகளினால். பொருளாதார ரீதியாக அனைவரும் சமம் எனும் நிலை வரும் போது பொருளாதார ஆதிக்கம் தகரும். பொருளாதார ஆதிக்கம் தகரும் போது எல்லா ஆதிக்கங்களும் தகரும். எல்லா ஆதிக்கங்களும் என்றால் அதில் மத ஆதிக்கமும் அடங்கும். மத ஆதிக்கம் எனும் போது அதில் இஸ்லாமிய மத ஆதிக்கமும் அடங்கும்.

வெறுமனே மத ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பது மட்டுமே நோக்கமாக இருந்தால் அதில் என்ன முழுமை இருக்கிறது? எல்லா வளங்களையும், எல்லா வாய்ப்புகளையும் பெற்று மக்கள் வாழ வேண்டும் என்பதை முதன்மையாய் கொண்டால் மட்டுமே அதில் முழுமை இருக்கும். அந்த முழுமைக்கு இடையூறாக தடைக்கல்லாக இருக்கிறது என்னும் அடிப்படையில் தான் மத ஆதிக்கம் நீக்கப்பட வேண்டும் என்கிறோம். எல்லா மதங்களையுமே நாம் எதிர்க்கிறோம். ஒன்றை ஆதரித்து மற்றதை எதிர்ப்பதல்ல. இருக்கும் அரசியல் சூழலுக்கு பொருத்தமான நடைமுறை உத்திகளை தேர்ந்தெடுக்கிறோம். இந்த வழியில் பார்ப்பனியத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது. இதை பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து செய்வது தான் அதனை முறியடிக்கும் வலுவைத் தரும். அந்த வலுவுக்கு வேண்டிய அனைத்தையும் செய்கிறோம். இது இஸ்லாத்துக்கான ஆதரவு அல்ல. பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனும் அடிப்படையிலான இயல்பான கூட்டு. இதை சரியாக புரிந்து கொண்டு முன்னெடுக்கும் போது உங்கள் குழப்பங்களுக்கு தெளிவான விடை கிடைக்கும்.

அமெரிக்க அறிவுத்துறையினருடன் செய்யது குதூப்

அடுத்து இஸ்லாமிய மீட்டுருவாக்கம். நண்பரே, இது குறித்து நீங்கள் எழுதியிருப்பதை மீண்டும் வாசித்துப் பாருங்கள். எல்லா சித்தாந்தங்களும் மறு எழுச்சி பெற வாய்ப்பு இருக்கிறது. இதில் இஸ்லாம் மட்டும் என்ன? என்று கேட்டிருக்கிறீர்கள். இஸ்லாமியர்கள் தங்கள் மதப்பிடிப்பை உள்வசமாய் கேள்வி கேட்டு மறு எழுச்சி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்காகத் தான் வேலை செய்கிறோம். ஆனால் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பதன் பொருள் அதுவல்ல. அது ஓர் உலகளாவிய அரசியல் சதி.

அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம். சோசலிசத்தின் வெற்றி உலகின் எல்லா நாடுகளின் மீதும் தாக்கம் செலுத்தி உலகமெங்கும் அன்றிருந்த அரசுகளை மக்கள் நல அரசுகளாக மாற்றிக் கொண்டிருந்தன. சோவியத் யூனியன் சோசலிசக் கட்டமைப்பை விட்டு விலகிச் சென்றதால் மேலாதிக்க வல்லரசுப் போட்டியில் பொருளாதாரத்தை திருப்பி விட்டு திணறிக் கொண்டிருந்தது. சிலி போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள், அரபு நாடுகள், துருக்கி, எகிப்து, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா போன்ற ஐரோப்பிய, ஆசிய நாடுகள் மக்கள்நல அரசுகளின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுரங்கங்கள் அரசுடமையாக்கப்பட்டது, அரபு நாடுகளின் பெட்ரோலிய உற்பத்தி நிறுத்தம், துருக்கி, எகிப்து, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கம்யூனிசம் வளர்ந்து வந்தது ஆகியவை அமெரிக்காவின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் நெருடல்களாக இருந்தன. இவைகளில் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளாக இருந்தன. நேரடி யுத்தத்தில் இறங்க முடியாத நிலையில் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த செய்யத் குதூப் என்பவரின் கருதுகோளான அறிவியல் இஸ்லாம் என்பதை கோட்பாடாக மாற்றி மக்கள் நல அரசுகள் தூய இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படுகின்றன. எனவே, அந்த அரசுகளை நீக்க வேண்டும் எனும் கருத்து பரப்பப்பட்டு அதற்கான இயக்கங்கள் தொடங்கப்பட்டன. இதற்கு சௌதி அரசு ஏராளமாகவும், தாராளமாகவும் நிதியை ஒதுக்கியது. இந்தோனேசியாவில் லட்சக் கணக்கான கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டதும், ஆப்கானில் தரக்கி கொல்லப்பட்டு அதன் அரசு குலைக்கப்பட்டதும் தொடர்ச்சியாக நடந்தன. இதுதான் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பது. பனிப்போரின் தேவை தீர்ந்ததும், மீட்டுருவாக்க இயக்கங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அல்காய்தா தொடங்கி ஐஎஸ் வரை அனைத்து இயக்கங்களுமே அமெரிக்க வழிகாட்டுதலில் இயங்குபவை தான். இன்று அமெரிக்காவை ஒரு அரசு எதிர்த்தால் அந்த நாட்டில் மீட்டுருவாக்கக் குழுக்கள் இறங்கி பயங்கரவாத செயல்களைச் செய்யும். இந்தியாவில் இயங்கும் வஹ்ஹாபிய இயக்கங்களும் நீர்த்துப் போன மீட்டுருவாக்கக் குழுக்களே. இவைகள் தாம் இன்று இந்திய முஸ்லீம்களை மதத்தூய்மையின் பெயரால் ஒன்று திரட்டி எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் இஸ்லாமிய இளைஞர்களின் ஆற்றலை வீணடித்துக் கொண்டிருக்கின்றன. மறுபக்கமோ இவர்களைக் காட்டி பார்ப்பனியம் அனைவரையும் இந்துக்கள் எனும் கொட்டடிக்குள் அடைக்க முயல்கிறது. இதுதான் இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தின் இருப்பும் இயக்கமும். இன்று இஸ்லாத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் பயங்கரவாத உருவின் மூலவேர் இதிலிருந்து தான் தொடங்குகிறது.

இந்த அரசியல் சதியை புரிந்து கொள்ளாமல் நம்மால் இஸ்லாமிய ஆபத்திலிருந்து நீங்கிவிட முடியுமா? மதத்திற்கு எதிரான செயல்பாடுகள் என்பது இந்த அனைத்து உண்மைகளையும் உள்ளடக்கி அதற்குப் பொருத்தமான நடைமுறைகளை கொண்டிருக்க வேண்டாமா? வெறுமனே நாத்திக எதிர்ப்பு என்பது பீரங்கிகளுக்கு எதிராக புல்லை நீட்டுவதற்குச் சமமானது. கடந்த முதல் கட்டுரையில் கூறியது போல் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை தொடரும் வரை மக்களை மத நம்பிக்கைகளிலிருந்து முழுவதும் விலக்க முடியாது. எதிர்காலம் குறித்த பயம் நீங்க வேண்டுமென்றால் பொருளாதார ரீதியிலான சமவாய்ப்பும் சமவசதிகளும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்காக போராடுவது தான் இப்போது நம் முன்னிருக்கும் ஒரே வழி. நண்பர் சாதிக் சமத் இவைகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்வார் என நம்புகிறேன்.

இத் தலைப்பிலான முதல் கட்டுரை

இஸ்லாமும் பார்ப்பனியம் ஒன்றா?https://senkodi.wordpress.com/2019/09/24/islam-vs-parpanism/

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்கhttp://pdfmyurl.com/?url=https://senkodi.wordpress.com/2019/09/30/islam-vs-parpanism2/

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s