
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு மதிப்பை வழங்கும் 370 ஆவது சட்டப் பிரிவை நீக்கி ஒரு மாதம் ஆகிறது. இது எந்த அளவுக்கு பயங்கரமான முடிவோ அதற்கு இணையான அளவில் அதற்கான எதிர்ப்பு இல்லை. உலகளாவிய அளவில் பாகிஸ்தான் எதிர்ப்புகளைக் கிளப்ப முயல்கிறது. உள்நாட்டில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளுக்கு -தேசியக் கட்சிகளானாலும், மாநிலக் கட்சிகளானாலும்- இதன் விளைவுகள் குறித்த சரியான புரிதல் இல்லையோ எனத் தோன்றுகிறது. ஓரிரு அறிக்கைகளோடு, அடையாளப் போராட்டங்களோடு முடித்துக் கொண்டன. எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே. ஒரே பொருளாதாரக் கொள்கையில் ஊன்றி நிற்பவை தானே. அவை அப்படித் தான் இருக்கும். ஆனால் மக்கள் .. .. ..
காஷ்மீர் மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் அடக்கி, ஒடுக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள். இன்று வரை தொலைபேசி, இணையச் சேவைகள் முழுமையாக திருப்பியளிக்கப் படவில்லை. அரசியல் தலைவர்கள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. அத்தனையையும் மீறி மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. பிற மாநில மக்களோ காஷ்மீரின் சூழல் குறித்தோ, 370 ன் வரலாற்றுப் பாத்திரம் குறித்தோ, முதலாளித்துவ ஜனநாயகமே கூட முடக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்தோ போதிய கவனமற்று, போதிய புரிதலற்று இருக்கிறார்கள். இந்நிலையில் புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019 இதழில் வெளிவந்திருக்கும் 6 கட்டுரைகள் காஷ்மீர் குறித்த தெளிவான, துல்லியமான, அதேநேரம் சுருக்கமான புரிதலை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கோணத்தில் காஷ்மீரை நமக்கு அருகில் கொண்டு வருகின்றன. படியுங்கள் பரப்புங்கள்.
முதல் கட்டுரை : அண்டப் புழுகு .. ஆகாசப் புழுகு .. ஆர்.எஸ்.எஸ். புழுகு.
காஷ்மீர் நிலைமை குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததாகவும், தற்போது அது நீக்கப்பட்டுவிட்டதால், அம்மாநில மக்களின் வாழ்க்கை மேம்படப் போகிறது” என்றும் நீட்டி முழக்கினார். மோடி மட்டுமல்ல, சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருமே இப்படிப்பட்டதொரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறார்கள். இந்த வாதமுறையின் மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஏதோ பீகாரைவிட வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதைப் போன்ற கருத்தை நாட்டின் பிற பகுதி மக்களிடம் உருவாக்கிவிட முயன்று வருகிறது, ஆர்.எஸ்.எஸ். ஆனால், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி குறித்து அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரங்களே அம்மாநிலம் பல்வேறு சமூக நலன் சார்ந்த அம்சங்களிலும், மனித வளர்ச்சிக் குறியீட்டிலும் (Human Development Index) பா.ஜ.க. ஆண்டுவரும் பசு வளைய மாநிலங்களைவிட, ஏன் குஜராத்தை விடவும் முன்னேறிய நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.
மனித வளர்ச்சி குறியீடு என்பது மூன்று முக்கிய காரணிகளான கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.
இம்மதிப்பீட்டில் ஜம்மு காஷ்மீர் 1990-களில் இருந்தே ஓரளவு முன்னேறிய நிலையில்தான் இருந்து வருகிறது. 25 மாநிலங்களைக் கொண்ட மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் காஷ்மீர் 11-ஆவது இடத்தில் உள்ளது. 370 போன்ற “தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான” சட்ட உரிமைகள் இல்லாத இராஸ்தான், ஆந்திரா, ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உ.பி., பீகார் ஆகிய மாநிலங்களெல்லாம், ஜம்மு காஷ்மீரை ஒப்பிடும்போது பின்தங்கிய நிலையில்தான் உள்ளன. உ.பி., பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களை விடுங்கள், மோடியின் சாதுர்யத்தால் அசாத்திய வளர்ச்சியடைந்திருப்பதாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்கூட காஷ்மீருக்குக் கீழே 14-ஆவது இடத்தில்தான் இருக்கிறது.

மனித வளர்ச்சி குறியீட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதி செய்யப்படும் சமூகப் பாதுகாப்பு முக்கியமானதொரு அம்சமாகும். பேறுகால சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் விகிதமும், பச்சிளம் குழந்தை மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மரணமடையும் விகிதமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2005-க்கும் 2015-க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் கணிசமாகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. தேசிய குடும்ப சுகாதார அறிக்கை. அவ்வறிக்கைகளின்படி, 2005-இல் 1000 குழந்தைகளுக்கு 38 ஆக இருந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 2015-இல் 32 ஆகக் குறைந்திருக்கிறது.
இக்குறியீட்டில் மோடி-அமித் ஷாவின் குஜராத் மாநிலம் இன்றுவரையிலும் ஜம்மு காஷ்மீரைவிடப் பின்தங்கியேயுள்ளது. அங்கு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணவிகிதம் 2005-இல் 43; 2015-இல் 34.
பெண் கல்வியை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாண்டுகளில் காஷ்மீரில் பத்தாம் வகுப்பிற்கு மேலே படிக்கும் பெண்களின் எண்ணிக்கை 10.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆறு வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது 2005-06-இல் 57.5 சதவீதமாக இருந்தது. அது 2015-16-இல் 65.5% ஆக உயர்ந்த்திருக்கிறது. இச்சதவீதம் பா.ஜ.க. ஆளும் உ.பி. மாநிலத்தைவிட அதிகமாகும்.
பெண் சிசு பாதுகாப்பிலும்கூட ஜம்மு காஷ்மீர் குஜராத்தைவிட ஒருபடி மேலேதான் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 2005-06-இல் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 902 ஆக இருந்த பெண் குழந்தை பிறப்பு விகிதம் 2015-16 இல் 921 ஆக அதிகரித்திருக்கிறது. அதேசமயம், குஜராத்தில் கடந்த பத்து வருட காலத்திலும் பெண் பிறப்பு விகிதம் 902 என்ற எண்ணிக்கையிலேயே தேங்கி நிற்கிறது. இத்தேக்க நிலைக்குக் காரணம், தந்தை வழி ஆணாதிக்க இந்துத்துவா மனப்பான்மை என்பதை யாரும் மறுக்கவியலாது.
இளவயது பெண் திருமணங்களின் சதவீதம் ஜம்மு காஷ்மீரில் 8.7 ஆகச் சரிந்துவிட்ட நிலையில், குஜராத்தில் அதனைவிட மூன்று மடங்கு அதிகமாக 24.9 சதவீதமாக உள்ளது.
திட்ட கமிசன் 2009-10-இல் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஜம்மு காஷ்மீரில் கிராமப்புற வறுமை 8.1 சதவீதமாகும். இச்சதவீதம் தேசிய சராசரியைவிட (33.8%) மிகமிகக் குறைவாகும். இவ்விடயத்தில் ஜம்மு காஷ்மீரையும் குஜராத்தையும் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு தென்படுகிறது. திட்ட கமிசன் புள்ளிவிவரப்படி 2009-10-இல் குஜராத்தில் கிராமப்புற வறுமை 26.7 சதவீதமாகும். மோடி, குஜராத் முதல்வராகப் பதவியேற்று ஏழு ஆண்டுகள் கழித்து வந்த புள்ளிவிவரம் இது. தனது ஏழாண்டு கால ஆட்சியில் கிராமப்புற வறுமையைக் குறைக்க முடியாத மோடி, அம்மாநிலத்தை வளர்ச்சியின் உச்சத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டதாகக் கூறுவது எத்தகைய மோசடி!

ஜம்மு காஷ்மீரில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமென்றாலும், அவ்வெண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவானது எனத் தேசியக் கணக்காய்வு மையம் 2017-18-இல் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த கணக்கெடுப்பில் ஜம்மு காஷ்மீரைவிடப் பத்து மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதையும் அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதேசமயம், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தரமான வேலைவாய்ப்பு குறியீடு கணக்கீட்டின்படி தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜம்மு காஷ்மீர் குஜராத்தைவிட முன்னேறிய நிலையில் இருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கு அப்பால், ஊரகச் சாலைக் கட்டமைவு, மருத்துவர்களின் எண்ணிக்கை, சராசரி ஆயுட்காலம் ஆகிய சமூக மதிப்பீடுகளிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் சாதித்திருப்பதை அரசின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஜம்மு காஷ்மீரின் சமூகப் பொருளாதார நிலை குறித்துப் பச்சைப் பொய்யை உண்மையைப் போலப் பிரச்சாரம் செய்துவருகிறது, ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் மனித வள மேம்பாட்டு வளர்ச்சிக்கு திராவிட இயக்கங்களும், கட்சிகளும் செய்த பங்களிப்பை மறைத்துவிட்டு, திராவிட அரசியலால்தான் தமிழகம் பின்தங்கிச் சீரழிந்துவிட்டதைப் போல பிலாக்கணம் பாடிவரும் பார்ப்பன வக்கிர மனோபாவம்தான் 370-ஆவது அரசியல் சட்டப்பிரிவு குறித்தும் அவதூறு செய்துவருகிறது.
இங்கு நாம் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்களெல்லாம் காஷ்மீர் மக்களின் வாழ்வியல் வளர்ச்சி குறித்துக் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வளர்ச்சியாகக் கருத முடியாதென்றால், மோடியும் ஆர்.எஸ்.எஸ்.-ம் ஜம்மு காஷ்மீரில் யாருக்கு வளர்ச்சி இல்லை என்று அழுகிறார்கள்?
முதற்பதிவு: வினவு