அமெரிக்காவை விட்டு சீனாவுக்கு அடியாளாகிறதா இந்தியா?

சீன அதிபர் ஷி ஜின் பிங் கும் இந்திய பிரதமர் மோடியும் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்காக தடை விதித்ததாக கருத்தப்பட்ட விளம்பர தட்டி வைக்க நீதி மன்றம் அனுமதித்தது ஒருபக்கம் இருக்கட்டும். சிறு கடைகள் அடாவடியாக துடைத்தெறியப் பட்டிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும். பேரூந்துகள் தடை செய்யப்பட்டிருப்பதும், போக்குவரத்து மட்டுப்படுத்தப் பட்டிருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். மாமல்லபுரம் தங்கும் விடுதி சீன அதிகாரிகளுக்கு உவப்பில்லாததால் கிண்டிக்கு மாற்றப்பட்டதால் சென்னை நகரில் ஏற்படவிருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபக்கம் இருக்கட்டும். சாலைகளில் வெயிலில் நிற்க வைக்கப்படவிருக்கும் மாணவிகளும் ஆசிரியர்களும் ஒருபக்கம் இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசு இந்த சந்திப்பை பயன்படுத்துவது குறித்து எந்தத் திட்டமும் இல்லாமல் வரவேற்பு என்பதோடு முடித்துக் கொள்ளவிருக்கிறதே அதையும் கூட ஒருபக்கம் தள்ளி வைத்து விடலாம். ஆனால், கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் விதந்து ஓதப்படும் இரண்டு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் எதுவும் மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதா?

எப்போதும் எதுவும் மக்களுக்கு சொல்லப்படுவதில்லை என்பது தான் இங்கு மக்களாட்சியின் பொருளாக இருக்கிறது. ஆனாலும், வெற்று அறிவிப்பேனும் இருக்கும். வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறோம் என்று கூறி விட்டு இராணுவ அடிமைப் பத்திரத்தில் ஒப்பமிட்டு வருவார்கள். இந்த மட்டத்தில் கூட இந்த மாமல்லபுர சந்திப்பைக் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாவப் போவதில்லை, வெறுமனே பேச்சு வார்த்தை மட்டும் தான் என செய்திகள் கசிந்திருக்கின்றன. அதிகாரபூர்வமாக இந்த சந்திப்பு குறித்து வந்திருப்பதெல்லாம் அலுவல் சாரா சந்திப்பு என்பது மட்டும் தான். இப்படி இரு நாட்டு தலைவர்களும் இப்படி அலுவல் சாரா சந்திப்பு நடத்துவது இது முதல் முறையல்ல, இரண்டாம் முறை. ஏற்கனவே கடந்த ஆண்டு சீனாவின் க்வான் எனும் நகரில் இந்த இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இரு நாட்டு தலைவர்களும் திரும்பத் திரும்ப என்ன பேசப் போகிறார்கள்?

மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்திருப்பதன் வரலாற்று முக்கியத்துவம் என்று சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. பல்லவ மன்னனான இரண்டாம் நரசிம்மன் அவனுடைய காலத்தில் திபெத்துக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போரில் சீனாவுக்கு உதவியாக படை நடத்தியதாகவும், அதனால் தென் சீனப் பகுதிகளுக்கு தளபதியாக இரண்டாம் நரசிம்மனை சீனப் பேரரசரான தாங் நியமித்ததாகவும் வரலாறு சொல்கிறர்கள். அப்படி ஏதேனும் போர் நடந்து இராணுவ ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததா? என்பது வரலாற்று ஆசிரியர்களின் பார்வைக்கு. ஆனால் இரண்டாம் நூற்றாண்டு முதலே சீனத்துடனான தொடர்பு தமிழகத்துக்கு இருந்திருக்கிறது. அதுவும் பல்லவர் காலத்தில் காஞ்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததும் யுவான் சுவாங் காஞ்சி வந்ததும் வரலாறு. அதேநேரம், இந்த வரலாற்றை தெரிந்து கொண்டு இதன் தொடர்ச்சியாகத் தான் மோடி மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதெல்லாம் இதை சட்னி என்றால் இட்லியே நம்பாது எனும் வகையைச் சேர்ந்தது. அண்மைக் காலங்களில் மோடி சமஸ்கிருதத்தை விட தமிழ் மூத்த மொழி என்பதும், ஐநா அவையில் கனியன் பூங்குன்றனாரை பாடுவதும் தமிழகத்தின் மீது தற்போது பார்ப்பனியம் கொண்டிருக்கும் பார்வையின் வெளிப்பாடு. ஒருவேளை அதன் தொடர்ச்சியாகக் கூட மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.

இடம் எதுவாக இருந்தாலென்ன, என்ன பேசுவார்கள் என்பதல்லவா முதன்மையானது? அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை ஊகிப்பதற்கு நடப்பு உலக அரசியல் குறித்த பார்வை தேவை. 90களின் பிறகு அமெரிக்காவின் ஒற்றை வல்லாதிக்கத்தின் கீழ் உலக நாடுகள் இருந்து வந்தன.  ஐரோப்பிய ஒன்றியம் உருவானது, அதன் நாணயமாக ஈரோ கொண்டுவரப்பட்டது என்பதெல்லாம் அந்த ஒற்றை வல்லாதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள். சப்பிரைம் நெருக்கடியின் பிறகு அந்நிலை மாற்றத்துக்கு உள்ளாகியது. ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகியவை போட்டியில் குதிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தன. தன்னுடைய வல்லாதிக்கத்தை தக்க வைக்க அமெரிக்காவும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. கடன் கொடுத்தும், தொழில்நுட்ப உதவிகள் செய்தும், மிரட்டியும் பல நாடுகளை தன்னுடைய அடியாட்படையாக மாற்றி வைத்திருக்கிறது அமெரிக்கா.

இந்தோ பசிபிக் திட்டம்

இந்தியாவைப் பொருத்தவரை, பஞ்சசீலக் கொள்கை, அணிசேரா கொள்கை என்பதையெல்லாம் இந்தியா முன்பே பரணில் போட்டுவிட்டது. 90களின் பிறகு வெளிப்படையாகவே அமெரிக்காவின் அடியாளாக மாறிவிட்டிருந்தது. அண்மையில் ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை அமெரிக்கா தடுத்தவுடன் எந்த மறுப்பும் இல்லாமல், எந்தக் கேள்வியும் கேட்காமல், இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பலன் தரக் கூடியது என்ற போதிலும் ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொண்டதை இதற்கு ஓர் அண்மை எடுத்துக்காட்டாக கூறலாம்.

தீர்க்க முடியாமல் தொடரும் பொருளாதார மந்தநிலை. சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் மீதான இரானுவ உத்திகள் ரீதியாக அடைந்த தோல்வி, சீனாவின் உற்பத்திப் பொருட்கள் உலகம் முழுதும் பரவுவதை தடுக்க இயலாமை என அமெரிக்கா தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி தன்னை உறுதியாக தக்கவைத்துக் கொள்வதற்கு இந்தோ பசிபிக் கடல் பகுதியில் தன்னுடைய ஐயத்துக்கிடமற்ற ஆதிக்கம் இன்றியமையாதது என கருதுகிறது அமெரிக்கா. ஏனென்றால், உலகின் இராணுவ வலிமை பெற்ற நாடுகளில் 7 நாடுகள் இந்தப் பகுதியில் அமைந்திருக்கின்றன, அவற்றில் 6 நாடுகள் அணு ஆயுத வல்லமை கொண்டவை. பெரிய அளவில் போக்குவரத்து நடக்கும் 9 பெரும் துறைமுகங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. இதன் வழியே உலகின் ஒட்டு மொத்த கடல்வழி வணிகத்தில் 60 விழுக்காடு இந்தப் பகுதியிலிருந்து தான் நடக்கிறது. எனவே, இதனை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்தோ பசிபிக் திட்டத்தை (Indo Pasific Strategy) செயல்படுத்தி வருகிறது. இதற்காக க்வாட் எனும் அமைப்பை ஏற்படுத்தி இந்தியா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இராணுவ வலிமையை அதிகரித்து அதனை அமெரிக்க இராணுவத்துடனான கூட்டாக மாற்றுவது. இந்த இராணுவ வலிமை மூலம் சீனாவின் கடல் வணிகத்தை கட்டுக்குள் கொண்டு வருவது. இது தான் அமெரிக்காவின் திட்டம்.

(இந்த அடிப்படையிலிருந்து தான் வான் தாக்குதல் வல்லமையை அதிகரிக்க பிரான்சிடமிருந்து ரபேல் தாக்குதல் விமானங்கள் வாங்கும் திட்டத்தை இந்தியா தீட்டியது. ஊழல் தரகு மூலம் வரும் பணம் அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு. இராணுவ வலிமை மூலம் கிடைக்கும் வணிக வாய்ப்பு மேலாதிக்கம் ஆகியவை அமெரிக்காவுக்கு. இந்திய மக்களுக்கு .. .. ..? ஆனால் இதற்கான செலவு முழுவதும் இந்திய மக்களின் தலையில். இந்திய இறையாண்மை, தேச பக்தி போன்ற சொற்களுக்கான பொருளை இதிலிருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.)

பட்டை சாலை முனைப்பு திட்டம்

இது ஐயத்துக்கு இடமின்றி சீனாவின் வணிக நலன்களுக்கு எதிரானது. இதை முடக்கவும் தன்னுடைய வணிக நலனை உறுதிப்படுத்தவும் சினா பட்டை சாலை முனைப்பு (Belt and Road Initiative) எனும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதாவது, நெதர்லாந்திலிருந்து தொடங்கி சீனாவின் யீவூ வரையிலான 12,000 கிமீ தூரத்தை ரயில் பாதையால் இணைப்பது. இதேபோல் சீனாவிலிருந்து வெனீஸ் வரையிலான கடல்வழிப் பாதையை அமைப்பது. இதன் மூலம் ஆசிய ஐரோப்பிய நாடுகளை இணைத்து வணிக மயமாக்குவது. அந்தந்த நாடுகளுக்கான வணிக வாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க திட்டத்தை தகர்ப்பது. இது தான் சீனாவின் திட்டம். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவின் திட்டத்தை ஆதரித்துள்ளன.

சற்றேறக் குறைய இதே போன்ற ஒரு திட்டத்தை, தன்னுடைய பிராந்திய வல்லரசு எனும் கனவுக்காக இந்தியாவும் செயல்படுத்தி வருகிறது. சாகர்மாலா என பொதுவாக அறியப்படும் பிம்ஸ்டெக் (BIMSTEC – Bay of Bengal Initiative for Multi Sectoral Tecnichal and Economic Corporation) எனும் திட்டம். இதன் உறுப்பு நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, பூட்டான், நேபாள் ஆகிய நாடுகளின் உள்கட்டமைப்பை வளப்படுத்துவதன் மூலம் பொருளாதரம் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் மேம்பாட்டை அடைவது. அதாவது இந்திய தரகு முதலாளிகளான அம்பானி அதானி முதலியோர் பன்னாட்டு முதலாளிகளாக தரம் உயர்வதற்கு மேற்கண்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்களாகிய நம்முடைய வரிப்பணத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது. சேலம் எட்டுவழிச் சாலை தொடங்கி பற்பல துறைமுகங்கள் சாலை, பாலம் கட்டும் திட்டங்கள், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் அம்பானிகளும், அதானிகளும் தங்களை பன்னாட்டு முதலாளிகளாக ஆக்குவதற்காக நம்முடைய செலவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள். தெளிவாகச் சொன்னால், நம்முடைய அரிசியை நம்முடைய செலவிலேயே குத்தி எடுத்துக் கொண்டு சென்றால் அவர்கள் அதை ஊதி ஊதி அரசியை எடுத்துக் கொண்டு உமியை நம்மிடம் தருவார்கள்.

இந்த நிலையில் தான் இந்திய சீன நாடுகளின் தலைவர்கள் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசுகிறார்கள். இது ஏற்கனவே க்வான் நகரில் நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சி. இந்த பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தொடர்புடையவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. என்றாலும், இந்தியாவின் நகர்வு தன்னுடைய பிம்ஸ்டெக் சாகர்மாலா திட்டத்துக்கு இயைபானது என்பதால் உதிர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவை கைவிட்டு விட்டு சீனாவின் பக்கம் இந்தியா சாய்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

பிம்ஸ்டெக் திட்டம்

அமெரிக்காவின் இந்தோ பசிபிக் திட்டமோ, சீனாவின் பட்டை சாலை முனைப்பு திட்டமோ அல்லது இந்தியாவின் பிம்ஸ்டெக் திட்டமோ எதுவும் அடித்தட்டு மக்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. கார்ப்பரேட்டுகளின் பெருமுதலாளிகளின் வணிக நலனை முன்னிட்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் எந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்? உலகில் யாருடைய ஆதிக்கம் மேலோங்கும்? என்பதல்ல கேள்வி. எந்தத் திட்டம் முழுமை பெற்று யார் ஆதிக்கம் செலுத்தினாலும் மக்களுடைய வாழ்வாதாரம் முழுமையான சீர்குலைவை சந்திக்கும் என்பது மட்டும் உறுதி.

எடுத்துக்காட்டாக சாகர்மாலா திட்டம் இங்கு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? புதிதாக பல துறைமுகங்கள் உருவாகும், உள்நாட்டுப் போக்குவரத்து சாலைகளாகவும், இரயில் பாதைகளாகவும், ஆற்றுவழி நீர்வழிப் பாதைகளாகவும் துறைமுகங்களோடு இணைக்கப்படும். இணைத்து துறைமுகங்கள் வழியாக எதைக் கொண்டு செல்வார்கள்? இங்குள்ள கனிம வளங்கள், மலிவு விலை உழைப்பில் உருவான உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் இங்கிருந்து வழித்துச் செல்லப்படும். எடுக்கப்படும் ஒவ்வொரு வளமும் -மக்களின் மிச்சமிருக்கும் வாழ்வாதாரங்களாக இருக்கும் விவசாயம், மீன்பிடி தொழில், சிறுகுறு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வெடி வைத்து தகர்த்து விட்டே- எடுக்கப்படும். என்றால் மக்களின் வாழ்வு .. .. ..?

இது தான் மாமல்லபுரத்தில் நடக்கிறது. நெருப்பு அதன் அனைத்து திசையிலும் வெப்பத்தை மட்டுமே வெளிப்படுத்தும் என்பதைப் போல முதலாளித்துவ அரசு எந்த வகையிலும் மக்களுக்கு எதிராகவே இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு வினையாற்ற வேண்டும். வேறு வழி ஒன்றும் இல்லை.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s