ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி

கடந்த மாத தொடக்கத்தில் காஷ்மீருக்கான சிறப்பு உரிமையான 370, 35 A ஆகிய பிரிவுகள் அடாவடியாக நீக்கப்பட்டன. காஷ்மீருக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று வேறெங்கோ கொம்பு முளைத்ததைப் போல சங்கிகள் ஒரே குரலில் ஓலமிட்டார்கள். வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் இருக்கின்றன என்று அமைதியாக பதிலளிக்கப்பட்டாலும், அதில் போதிய அழுத்தம் இருந்திருக்கவில்லை. ஆனால் அதைவிட எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் வழங்கு எனும் கோரிக்கை முழங்கப் பட்டிருக்க வேண்டும். அதை உரத்து முழங்க வேண்டிய நிலையில் தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.

நவீன நாசிகளான காவிகளின் கைகளில் இந்திய அரசு அதிகாரம் சென்ற பிறகு, முன்னெப்போதையும் விட அதிவிரைவில் பரவலாக்கப்படுவதற்கு மாற்றாக அதிகாரம் மையத்தில் குவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு இயந்திரம் பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது அனைத்து அதிகாரங்களும் ஒற்றைத் தலைமையின் கீழ் குவிக்கப்பட்டு வருகிறது. அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் இந்த ஒற்றைப் படுத்தலை நோக்கமாகக் கொண்டே உருவெடுக்கின்றன. ஒரே நாடு எனும் முன்னொட்டுடன் வரும் திட்டங்கள் அனைத்தும் துல்லியமாக மாநில அரசுகளிடமிருந்து அதிகாரங்களைப் பறித்து மத்தியில் கொண்டு சேர்ப்பதையே முதன்மை நோக்கமாக கொண்டிருக்கின்றன. இதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்தியத் தன்மையின் மீது அமிலம் ஊற்றி, அதை அரித்து இல்லாமலாக்க முனைகிறது.

இடஒதுக்கீட்டை எடுத்துக் கொள்வோம், இடஒதுக்கீடு என்பது ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்டு வரும் மக்களை கல்வி வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீடு செய்து வாய்ப்பளிப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவது எனும் நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது. ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களைக் கண்டறிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என இரண்டு ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாநில ஆணையமே முதன்மையானது. ஏனென்றால், சமூக ரீதியாக கல்வி வேலைவாய்ப்புகளுக்கு தகுதியானவர்களைக் கண்டறிந்து சேர்க்கவோ, நீக்கவோ மாநில அரசுக்குத் தான் வாய்ப்பு இருக்கிறது. அந்த மக்களோடு தொடர்பில் இல்லாத தேசிய ஆணையத்தால் இதை செய்ய முடியாது. இதை ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்றி இருக்கிறது மோடி அரசு. இதன்படி, பரிந்துரைக்கும் அதிகாரம் மட்டுமே மாநில ஆணையத்துக்கு இனி இருக்கும். முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படுகிறது.

மாநில ஆளுனர் என்பது வெறுமனே ஒரு அலங்காரப் பதவி தான். ஓய்வு பெற்றவர்களை குளிப்பாட்டி விடும் ஒரு பதவியாகவே இது இருந்து வந்திருக்கிறது. ஆனால், பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு மாநில ஆளுனர்களை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்களுக்கு இன்னல்கள், சிக்கல்களை ஏற்படுத்துவதற்காகவே நியமிக்கிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, தில்லி ஆகிய மாநில ஆளுனர்களை எடுத்துக்காட்டாக கூறலாம். குடியரசுத் தலைவரும் இதற்கு விலக்கானவர் அல்லர். சட்ட ரீதியாகவே அமைச்சரவை இரண்டாம் முறை அனுப்பும் கோரிக்கையை கேள்வி கேட்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு கிடையாது. ஆளும் கட்சியின் அல்லது பிரதமரின் விருப்பத்தை மீறி செயல்படுவர் எவரும் குடியரசுத் தலைவராக வந்துவிட முடியாது. ஜெயில்சிங் ராஜீவ்காந்தி முரண்பாடெல்லாம் அரிதிலும் அரிதான ஒன்று. எனவே, இடஒதுக்கீட்டில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு என்று கூறப்படுவது, இந்த விசயத்தில் மாநில அரசுக்கு அல்ல மத்திய அரசுக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது தான் அதன் முழுமையான பொருள்.

அடுத்து கல்வியை எடுத்துக் கொள்வோம். தொடக்கத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. அதை பின்னர் பொதுப் பட்டியலுக்கு மாற்றினார்கள். தற்போது பொதுப்பட்டியலில் வைத்துக் கொண்டே மாநிலங்களுக்கு கல்வியின் மீது எந்த உரிமையும் கிடையாது என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மொழிவாரி மாநிலமும் தனக்கென தனித்தனியாக வரலாறு, கலாச்சாரம், சமூகச் சூழல், வாழ்நிலை தன்மை ஆகியவைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய இளம் மாணவர்களுக்கு இவைகளைத் தான் கற்பிக்க வேண்டும். பாடத் திட்டங்களை உருவாக்கும் உரிமை மாநிலங்களுக்கு இருக்கும் போது மட்டும் தான் இதை செய்ய முடியும். ஆனால் அது தற்போது பொதுப் பட்டியலில் இருக்கிறது. மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் பொதுவானது தான் பொதுப் பட்டியல் என்றாலும் மாநில அரசால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

துணைவேந்தர்களாக ஆர்.எஸ்.எஸ் சங்கிகளை நியமிக்கும் மத்திய அரசு. அதன் வழியே அண்ணா பல்கலைக் கழகத்தின் சூரப்பா பகவத் கீதையை பாடமாக அறிவித்தார். மாநில அரசு குறைந்த பட்சம் அறிக்கையால் கூட எதிர்க்கவில்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் விருப்பப் பாடம் என்று மாற்றப்பட்டாலும், அதில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை, பாடமாக நீடிக்கிறது. புதிய கல்விக் கொள்கை வரைவு என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கக் கல்விக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று அறிவித்தார். ஆனால் பொதுத்தேர்வு அடுத்த கல்வியாண்டில் இருந்து நடக்கவிருக்கிறது. நுழைவுத் தேர்வு முறை ஒடுக்கப்பட்ட மக்களை உயர்கல்விக்கு கொண்டு செல்ல தடையாக இருக்கிறது என்று நுழைவுத் தேர்வு முறையை நீக்கி விட்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளையே தகுதியாய் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருந்தது தமிழகம். ஆனால் நீட் முதலாக தொடரும் தகுதித் தேர்வுகள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றன. மாநில சட்ட மன்றம் அனுப்பிய தீர்மானம் அலட்சியப் படுத்தப்பட்டு ஒதுக்கப் பட்டிருக்கிறது. இவை எதிலாவது மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறதா? என்றால் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறதா? மத்தியப் பட்டியலில் இருக்கிறதா?

அடுத்து பொருளாதாரத்தை எடுத்துக் கொள்வோம். ஜிஎஸ்டி எனும் வரி விதிப்பு முறை மாநில பொருளாதாரத்தின் மீது இடியை இறக்கிய ஒரு வரி விதிப்பாகும். வாட் வரிவிதிப்புக்கு முந்திய முறைகளெல்லாம் மாநில அரசுகளே நேரடியாக வரியின் மூலம் கிடைக்கும் நிதியை கையாளும் உரிமையுடன் இருந்தன. ஆனால் தற்போது மத்திய அரசு பிரித்துக் கொடுக்கும் நிதியை தான் கையாள முடியும் எனும் நிலை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. நிதி குறைக்கப்படும் வாய்ப்பு என்பது மாநில அரசுகளின் தலைக்கு மேல் தொங்க விடப்பட்டுள்ள கத்தி.

தற்போது 15வது நிதிக்குழு புதிதாக ஒரு குறிப்பு விதியை அறிவித்திருக்கிறது. இதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகப்புக்கான நிரந்தர நிதியை (Non Lapsable Fund) உருவாக்க வேண்டும். அதாவது, தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு 42 விழுக்காடு நிதியை ஒதுக்கி வருகிறது. இந்த விதி இந்த 42 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கு முன்னதாக மேற்கண்ட நிரந்தர நிதியை ஒதுக்க வேண்டும் என்கிறது. சுற்றி வளைத்து இதன் பொருள் என்னவென்றால் 42 விழுக்காடு நிதி ஒதுக்கீடு என்பது இனி 35 விழுக்காடு அளவில் தான் இருக்கும் என்பது தான்.

இதை கண்டும் காணாமல் இருக்க விரும்புகிறோமா நாம்?

இன்னும் நிதிப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒழுங்கு முறைகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. நிதி ஒதுக்கிட்டுக்கு 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பு அலகாக கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மக்கட்தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சமூகத் திட்டங்களை குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக நடைமுறைப் படுத்தியதற்கான பரிசு இது என்று கூறலாம். அடுத்து, ஆண்டு வரவு செலவு திட்டத்தில் (Budget) ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை இனி மாநிலங்களுக்கு வழங்க வேண்டுமா என்பதை ஆய்வு செய்து கூற வேண்டும் என்று நிதிக் குழுவிடம் கோரியிருக்கிறது மத்திய அரசு. இதற்கான பரிந்துரை எவ்வாறு இருக்கக் கூடும் என்பதை இப்போதே கூறி விடலாம். மத்திய அரசு கொடுக்கத் தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக மாநில அரசுகளே நேரடியாக கடன் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தான் இருக்கப் போகிறது. இதனால் மாநிலங்கள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் என்பதோடு மட்டுமல்லாமல், பன்னாட்டு நிதி அமைப்புகளிடமிருந்து நேரடியாக கடன் வாங்கினால் கடனுடன் சேர்ந்து வரும் நிபந்தனைகளையும் நிறைவேற்றியே ஆக வேண்டிய கட்டாயமும் வந்து சேரும்.

இந்த மூன்று திட்டங்கள் மட்டும் அல்லாது, மத்திய அரசு செயல்படுத்த எண்ணும் அத்தனை திட்டங்களும் இந்த நோக்கிலேயே அதாவது மாநிலங்களுக்கான உரிமையை அதிகாரத்தை தட்டிப் பறிப்பது எனும் நோக்கிலேயே தீட்டப்படுகின்றன, நிறைவேற்றப்படுகின்றன. மாநிலங்கள் என்பது வெறுமனே நிர்வாக வசதிக்கான பகுப்பு என்பதைத் தாண்டி எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்க வேண்டும். அனைத்து அதிகாரங்களும் மையப்படுத்தப்பட்ட ஒரு மத்திய அரசிடம் இருந்தால் போதும். அது தான் கார்ப்பரேட்டுகளுக்கு வசதியாக இருக்கிறது. அது தான் கார்ப்பரேட்டுகளின் விருப்பமாக இருக்கிறது. கனிம வளங்களை கொள்ளையிடுவது தொடங்கி, அதை எதிர்த்துப் போராடும் மக்களை கொடூரமாக அடக்கி ஒடுக்குவது வரை அனைத்தையும் செய்வதற்கு வரலாற்று கலாச்சார ரீதியில் தனித்த உரிமைகள் கொண்ட மாநில அரசுகள் இருப்பது கார்ப்பரேட்டுகளுக்கு உதவாது என்பதால் தான் இது போன்ற திட்டங்கள் உலக வர்த்தகக் கழகம், பண்ணாட்டு நிதியம் போன்றவற்றால் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மற்றொருபுறம் காவி பாசிசங்களுக்கு தங்களின் திட்டங்களான சமஸ்கிருத திணிப்பு, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மதம் போன்றவற்றை நிறைவேற்றுவதற்கான வழியாகவும் இருக்கிறது.

மாநிலங்கள் இதை எதிர்க்க முடியாதா? எதிர்க்கக் கூடாது என்பதற்காகத் தான் மேற்கண்ட ஒடுக்கு முறைகள். மத்திய அரசின் திட்டங்களுக்கு அட்டியின்றி தலையாட்டக் கூடிய மாநிலங்களுக்கு மட்டுமே நிதி கிடைக்கும். எதிர்க்கும் மாநிலங்களின் ஆளும் கட்சிகள் தேச விரோத, முன்னேற்றத்துக்கு விரோதமான, பிரிவினைவாத சக்திகளாக அவதூறு செய்யப்படும். அது உண்மை எனக் காட்டுவதற்கு அனைத்து ஊடகங்களும் ஆயத்தமாக இருக்கின்றன. மறுபுறம், அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வரி ஏய்ப்புத் துறை, ஊழல் ஒழிப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் எதிர்க்கும் மாநிலக் கட்சிகளை ஊழல்வாதக் கட்சிகளாக, ஊழல்வாத தலைவர்களாக அடையாளம் காட்டும். நீதி மன்றங்கள் எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட அவற்றை ஏற்றுக் கொள்ளும். அத்தனையையும் மீறிப் போனால், அடுத்த தேர்தலில் தொடர்புடைய கட்சிகள் தோற்று விட்டதாக தேர்தல் கமிசன் அறிவிக்கும். இவைகளெல்லாம் கற்பனையாக ஊகத்தில் கூறப்படுபவை அல்ல. கண்ணெதிரே துண்டு துண்டாக நடந்து கொண்டிருப்பவை. ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் திட்டத்தையும், இன்னும் அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ் சங்கிகளின் கூச்சல்களையும் ஒன்றிணைத்து சிந்தியுங்கள். இவை கற்பனை அல்ல எனப் புரியும்.

இதை முறியடிக்க வேண்டுமென்றால், இப்போதே ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டு வலுவான எதிர்ப்பை மாநிலங்கள் முன்வைக்க வேண்டும். மக்களோடு இணைந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்தது போன்ற உரிமைகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இராணுவம், வெளியுறவு, மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு போன்றவை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களும், உரிமைகளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். கூட்டுக் குடியரசாக இருக்க வேண்டும். ஆனால் இவைகளை மாநிலங்களில் இருக்கும் கட்சிகள் கோருமா? போராடுமா? என்றால் செயல்படுத்தாது என்பதே பதில். ஏனென்றால் அவைகளும் இந்த பொருளாதார கொள்கைகளை ஏற்றுக் கொண்ட கட்சிகள் தாம். எனவே, இவைகளுக்கு எதிராக மக்கள் கொடுக்கும் நிர்ப்பந்தம் ஒன்றே இதற்கான வழி.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s