
2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு, இந்திய வம்சாவளி அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அந்த ஆண்டில் நல்ல மழை பெய்தால் கூட எங்கள் மோடிஜி யால் தான் மழை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று புழகமடைந்து போகும் பக்தாள்கள் இந்த முறை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். பின் இடதுசாரி என்று தூற்றினார்கள். (இடதுசாரி என்பது வசைச் சொல்லா?) மாறாக, மறுபக்கத்திலிருந்து வாழ்த்தினார்கள். கரடியே காறித் துப்பியதை மீம்ஸாக போட்டார்கள். ஆனால் இவைகளைத் தாண்டி இதில் கவனம் கொள்ள வேண்டியவை இருக்கின்றன.
பொருளாதார ரீதியாக வறுமை ஒழிக்க செயலுத்திகளுடன் கூடிய திட்டத்தை கண்டடைந்ததற்காக பொருளாதாரத்துக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கண்டடைந்த திட்டம் என்ன? ஏற்கனவே உலகெங்கிலுமுள்ள அரசுகள் வறுமையை ஒழித்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றன. அதில் என்ன வேதனை என்றால் அந்த திட்டங்கள் சரியாக பலனளிக்காமல் போய்விடுகின்றன. இதனால் வறுமை ஒழிப்பு இன்னும் சாத்தியமாகாமல் இருக்கிறது. உலகில் இன்னும் வாழ வழியில்லாமல் மக்கள் வறுமையில் இருப்பது அந்த அரசுகளுக்கு மானக்கேடாக இருக்கிறது. அதற்காக என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு இருக்கும் போது தான் நம்முடைய நோபல் பரிசு வின்னர்களின் திட்டம் வருகிறது.
ஜே பால் (J-PAL Jmeel-Poverty Action Lab) என்றொரு நிறுவனம். அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட வழியிலான வறுமை ஒழிப்பு என்பதை இலக்காக கொண்டிருப்பதாக அறிவித்திருக்கும் நிறுவனம். இந்த நிறுவனம் அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுஃப்லொ, செந்தில் முல்லை நாதன் ஆகியோரால் 2003 தொடங்கப்படுகிறது. நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்கள், NGO களின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. சிந்தனை இவர்களுடையது. ஆனால் இயக்குவது அப்துல் லதீப் ஜமீல் எனும் நிறுவனம். சௌதியை தலைமை இடமாகக் கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம். போக்குவரத்து, பொறியியல் உற்பத்தி, ரியல் எஸ்டேட், சுற்றுச் சூழல் என்று இவர்கள் கைவக்காத துறைகளே இல்லை.
ஜே பால் நிறுவனம் உலகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான நாடுகளோடு தொடர்பில் இருக்கிறது. அதில் இந்தியாவும் உண்டு. காங்கிரசால் முன்மொழியப்பட்ட நியுந்தம் ஆய் யோஜனா (என்ன இழவு பேர்டா இது) ஜே பாலின் வழிகாட்டுதலின் பேரில் உருவான திட்டம் தான். மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுடன் ஜே பால் 2014ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு எனும் சொல்லே மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது. மக்களின் வறுமையை போக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். அதற்காக அரசும் அரசு அல்லாத நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்து ஒப்பந்தம் போடுகிறார்கள். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்று மட்டும் மக்களுக்கு சொல்ல மாட்டார்களாம். அதற்கு பெயர் புரிந்துணர்வு ஒப்பந்தமாம். போகட்டும், தமிழ்நாட்டில் ஜே பால் சுகாதாரம், கல்வி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, சமூக நலன், சத்துணவு திட்டம், சிறுகுறு தொழில்கள், வணிக வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆய்வுகளைச் செய்துள்ளது. நோபல் பரிசு அறிவிப்பு வெளிவரும் வரை ஜே பால் ஒப்பந்தம் குறித்தும், அது செய்யும் ஆய்வுகள் குறித்தும் யாருக்காவது தெரியுமா?
எளிமையாகச் சொன்னால், ஏழை நாடுகளில் மூன்றாம் உலக நாடுகளில் வறுமை நிலை எந்த அளவுக்கு இருக்கிறது? அரசு எந்த அளவுக்கு திட்டமிடுகிறது? அதன் பன்முகத் தன்மை என்ன? சமூக புவிசார் தன்மைகள் என்ன? செயல்படுத்தப்படும் திட்டம் மேற்கண்ட அம்சங்களோடு செயல்படுத்தப்படுகிறதா? இல்லை என்றால் எதை தவறவிடுகிறது? போன்ற விபரங்களை ஆய்வு செய்து சில பரிந்துரைகளை ஜே பால் நிறுவனம் அரசுக்கு அளிக்கும். குறிப்பாக, ஜே பால் செய்யும் ஆய்வுகள் மூலம் அரசுக்கான வீண் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அவ்வளவு தான். இதை கண்டறிந்து பல நாடுகளில் நடைமுறைப் படுத்தியதற்காகத் தான் நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது.
இதை இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள வணிக வீதி இதழில் முனைவர் எஸ். புஷ்பராஜ் அவர்கள் எழுதியிருந்ததை பார்க்கலாம்.
பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக புத்தங்கள் வழங்கும் திட்டம் பலனளிக்குமா? என்பதை இந்த அணுகுமுறையின் படி எவ்வாறு கையாளுவது என்பதைப் பார்ப்போம். கற்றலின் பலனை அளவிட சிறந்த அளவை மாணவர்களின் மதிப்பெண்கள்தான். பட்டியலில் உள்ள மொத்தப் பள்ளிகளில் இருந்து ஒரு கூறெடுப்பை நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை இரண்டு பகுதியாக எடுத்துக்கொள்வோம். முதல் வகைப் பள்ளிகளில் (A) இங்கு இலவச புத்தக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் (Treatment Group). இரண்டாவது வகைப் பள்ளிகளில் (B) இத்திட்டம் செயல்படுத்தப்படாது (Control Group). ஆண்டு இறுதியில் இந்த இரு பள்ளி மாணவர்களின் சராசரிமதிப்பெண்களை ஒப்பீடு செய்து, A பள்ளி மாணவர்களின் சராசரி மதிப்பெண் B பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களைவிட அதிகமாக இருந்தால் திட்டம் பலன் அளித்துள்ளது என முடிவுக்கு வரலாம். இத்தகைய ஆய்வுகளின் சிறப்பம்சம் என்னவெனில், புத்தகம் தவிர்த்த கற்றலை பாதிக்கும் மற்ற காரணிகளின் விளைவுகளை ஒட்டுமொத்த விளைவுகளிலிருந்து இலாவகமாக நீக்குவதுதான். ஏனெனில், மாணவரின் கற்றல் திறனை தீர்மானிப்பது புத்தகங்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களின் திறமை, மாணவர்களின் சமூகப் பின்னணி, திறமையான பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட பலவற்றை கூறலாம். மதிப்பெண்களில் இவற்றின் பங்கை பிரித்து நீக்குவது பெரிய சவாலாகும். இதன்பின்பு எஞ்சியிருக்கும் மதிப்பெண் வித்தியாசம்தான் திட்டத்தின் விளைவை அளக்கும் அளவுகோல். ஒரே ஒரு கள ஆய்வில் கண்ட முடிவுகளைக் கொண்டு இலவசமாக வழங்கப்பட்ட புத்தகங்கள் கற்றலை மேம்படுத்தும் என்ற முடிவை பொதுமைப்படுத்த முடியுமா? இந்தத் திட்டத்தை மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்த/நடைமுறைபடுத்த முடியுமா? என்பதையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இதன் விளைவாக திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அனைவருக்கும் பாட புத்தகங்களை இலவசமாக வழங்கினால் சந்தையில் ஏற்படப்போகும் காகிதத்தட்டுப்பாடு, அதைத்தொடர்ந்து உயரும் பேப்பர் விலை, மாணவர்கள் பயன்படுத்தும் வகுப்பறை நோட்டுகளின் விலை உயர்வு ஆகியவற்றையும் கணிக்க முடியும். இதுதவிர, பாடப் புத்தக வாசிப்பு ஏற்படுத்தும் புத்தக வாசிப்பு பழக்கம் ஆகியவற்றையும் அந்த விளைவுகளையும் கணக்கிட முடியும்.

நோபல் பரிசை பெற்றுத் தந்த பொருளாதார ஆய்வுகள் குறித்து ஓரளவுக்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது சில கேள்விகளை எழுப்புவோம். இந்த ஆய்வுகள் கொஞ்சமாவது வறுமை ஏன் நீடிக்கிறது? அதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு செய்யுமா? முதலாளித்துவம் வந்து இந்த அளவுக்கு ஆய்வுகள் செய்து திட்டங்கள் தீட்டியதால் தான் உலகில் இந்த அளவுக்கு வறுமை குறைக்கப் பட்டிருக்கிறது என்கிறார்கள். ஏற்றத் தாழ்வு விகிதம் அதிகரித்து கொண்டே செல்வது குறித்து கவலைப்படுபவர்கள் வறுமை அளவு குறைக்கப்பட்டிருப்பதை கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். முதலாளித்துவ ஆய்வுகளால் வறுமை அளவு குறைந்திருக்கிறது என்பது தோற்றம் தான். முதலாளித்துவத்துக்கு முன்பு வரை பூமியின் வளங்கள் சூரையாடப் பட்டிருக்கவில்லை. விவசாயம் தவிர வேறு தொழில் வாய்ப்புகள் பெருமளவில் இல்லை. இன்றைய நிலை அப்படி இல்லை. அனைவருக்கும் பொதுவான அத்தனை வளங்களும் சூரையாடப்பட்டு விட்டன. சூரையாடப்பட்ட வளங்களின் மதிப்பு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கிறதா? என்பது தான் பிரச்சனை.
நிலப்பிரபுத்துவ காலகட்டம் வரை தனிமனித சொத்து மதிப்பு என்பது நிலம் மட்டுமே. ஆனால் இன்று தனி மனிதனிடம் பில்லியன் கணக்கான கோடிகள் சொத்தாக குவிந்து கிடக்கிறது. முதலாளித்துவத்திற்கு முன்பு வறுமை என்பது அபகரிக்கப்பட்ட சொத்து, அபகரிக்கப்பட்ட உழைப்பு, அபகரிக்கப்பட்ட சமூக மதிப்பு ஆகியவை காரணமாக இருந்தன. இன்று இவைகளோடு அவர்களுக்கு சேர வேண்டியதை தடுத்து தன்பக்கம் திருப்பி விடப்பட்டதும் சேர்ந்து காரணமாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் தகவமைப்பே உழைப்பை சுரண்டுவதிலும், பொதுவானதை தனதானதாக மாற்றும் உள்ளடக்கத்துடனே இருக்கிறது. இந்த புரிதலின்று விலகி நின்று வறுமை ஒழிப்பு குறித்து பேசவே முடியாது.
வறுமையின் அளவு முன்பிருந்ததை விட தற்போது குறைந்துள்ளது என்பது ஓர் ஒப்பீடு. உலகம் முழுவதிலும் இருப்பவை முதலாளித்துவ அரசுகளே. அவை கொடுக்கும் புள்ளிவிரங்கள் மோசடியானவை. எடுத்துக்காட்டாக வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களைக் கணக்கெடுக்க இந்தியா கடைப்பிடித்த ஒரு வழிமுறையே போதும். கிராமப்புறங்களில் 27 ரூபாயும், நகர்பகுதிகளில் 32 ரூபாயும் நாள் ஊதியமாக ஒருவன் பெற்றால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலேஇருப்பதாக கணக்கில் வைக்கப்படும். இது வறுமையை ஒழிக்குமா? இல்லை புள்ளி விபரத்தை ஏற்படுத்துமா?
முன்பைவிட ஏழ்மை அதிகரித்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். இதை மேம்போக்காக கூறப்படுவது இல்லை. மக்களின் வாழ் நிலையில் இருந்து இதை உறுதிப்படுத்தலாம். தற்கொலைகள் மலிந்திருக்கின்றன, சக மனிதர்கள் மீதான உறவு சீரழிந்திருக்கிறது, இதுபோன்ற இன்னும் பலவானவைகளை ஆய்வு செய்யலாம். 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ வழியில்லாமல் தற்கொலை செய்தவர்கள் யாரும் இல்லை. இன்றோ விவசாயிகள் தொடங்கி தேசிய முதலாளிகள் வரை தற்கொலைகள் பரவி நிற்கின்றன. இவை சொல்லும் செய்தி என்ன? வறுமை நிலை முன்பை விட அபாயகரமாய் இருக்கிறது என்பது தானே. அரசு தரும் புள்ளி விபரங்களா? யதார்த்தம் தரும் வாழ்வியல் விபரங்களா? எது சரியானது?
முதன்மையான விசயத்திற்கு திரும்புவோம். முதலாளித்துவத்துக்கு எதிரான, முதலாளித்துவத்தை விமர்சிக்கும் ஒரு ஆய்வுக்கு நோபல் நிறுவனம் நோபல் பரிசை வழங்குமா? நிச்சயம் வழங்காது. அப்படி வழங்கப்பட்ட வரலாறும் இல்லை. என்றால் இந்த முரண்பாடு எங்கிருந்து தோன்றுகிறது? அதாவது முதலாளித்துவம் என்பது ஒன்று குவிப்பது. வறுமை ஒழிப்பு என்பது பரவலாக்குவது. ஒன்றுகுவிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு முதலாளித்துவ நிறுவனம் தனக்கு எதிரான பரவலாக்குவதை எப்படி ஆதரிக்க முடியும்?

விடை எளிமையானது தான். இங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது மக்களை வாழவைக்க வேண்டும் எனும் நோக்கிலான ஆய்வோ, வறுமையை ஒழித்தே ஆக வேண்டும் எனும் முனைப்புடன் செய்யப்படும் ஆய்வுகளோ அல்ல. கிமு கிபி போல 1917 க்கு முன் பின் என்று வகைப்படுத்திக் கொள்ளுங்கள். கண்மூடித்தனமான உழைப்புச் சுரண்டல், கொத்தடிமை முறையையும் மீறிய அதிகாரம், இருக்கும் அத்தனை துறைகளும் தொழிலாளர்களை கசக்கிப் பிழிவதற்காகவே இயங்கியது என மக்கள் மீது கொடுரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போது 1917 ல் ரஷ்யாவின் நடத்த புரட்சி அனைத்தையும் தலை கீழாக புரட்டிப் போட்டது. காலனிகளை பராமரிப்பது, உலகப் போர் நெருக்கடிகள் என உழன்று கொண்டிருந்த முதலாளித்துவ உலகம், மக்களுக்கு சலுகைகள் கொடுக்கவில்லை என்றால் ரஷ்யாவைப் போல் நாமும் ஒரு நாள் தூக்கி வீசப்படுவோம் எனும் அச்சத்தை தோற்றுவித்தது. அதன் பிறகு தான் மக்கள் நல அரசுகள் தோற்றம் கொண்டன. 90களில் அந்த அபாயம் நீங்கியது. கொடுத்த சலுகைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப எடுக்க வேண்டும். பிடுங்கப்படுவது மக்களுக்கு தெரியவும் கூடாது, அதேநேரம் இது நமக்கான உரிமை எனும் உணர்வும் தோன்றக் கூடாது. இந்த வேலையை செய்வதற்குத்தான் நோபல் பரிசு உள்ளிட்ட அத்தனை வாய்ப்புகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அப்படியான ஒரு ஆய்வை உருவாக்கி நடைமுறைப் படுத்தியதற்காகத் தான் அபிஜித் பானர்ஜி உள்ளிட்டோருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
இதை மேலும் உறுதிப்படுத்த வேண்டுமா? பொருளாதார வீழ்ச்சிக்கு மோடிக்கு எதிராக கம்பு சுற்ற வேண்டாம் பானர்ஜி, ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். ஏகாதிபத்தியம் குறித்த உங்கள் கருத்து என்ன? மக்களின் வறுமைக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? கொஞ்சம் ஆய்வு செய்து சொல்லுங்களேன்.