
பெயரில்லாத ஒரு சிறுவன் அல்லது சிறுமி
தூர்ந்து போன ஆழ்துளைக் கிணற்றில் .. .. ..
தூர்ந்து போனது கிணறு மட்டும் தானா?
பொக்லைன்கள் வருகின்றன,
ரிக் எந்திரங்கள் வருகின்றன,
அரசின் அக்கரை மட்டும் இன்னும் வரவில்லை.
ஆம்.
அதிகாரிகள் இரவு பகலாய் விழித்திருக்கிறார்கள்
அமைச்சர்கள் அழுக்கு வேட்டியுடன் அமர்ந்திருக்கிறார்கள்
ஊடகத் துறையினர் தத்தமது கருவிகளுடன்
எம்பிக்கள்
சமூக ஆர்வலர்கள்
2 வயது சிறுவனுக்கான பதில் மட்டும்
யாரிடமும் இல்லை.
முயற்சிக்கிறார்கள்
இல்லையெனக் கூற முடியாது
கொண்டுவந்துவிட வேண்டுமென்று
மூச்சையும் மறந்து முயற்சிக்கிறார்கள்.
இல்லையெனக் கூற முடியாது.
காற்று மிதப்பானை உடலில் கட்டிக் கொண்டு
கண்களையும் கட்டிக் கொண்டு
கடலில் விழுந்த ஊசியை
பசியையும் மறந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாமும் வந்து விட்டன
எல்லோரும் வந்து விட்டார்கள்
அரசின் அக்கரை மட்டும் இன்னும் வரவே இல்லை.
எத்தனை சுஜித்கள்?
சுற்றி இருப்பவர்களின் முனைப்புகளை
காணாமல் கண் மூடிக் கொண்டார்கள்?
நாளைய காட்சி மாற்றத்தின் பிறகு
சுஜித்துகளுக்காக கண்பனிப்போர்
யாரேனும் இருப்பார்களா?
இன்னோர் திருச்சியில்
இன்னோர் கிராமத்தில்
இன்னொரு அமைச்சர்
அழுக்கு வேட்டியுடனும், முகத்தில்
ஒட்டவைத்த சோகத்துடனும்
ஊடகங்களுக்கு
அரசின் முயற்சிகளை விளக்கலாம்.
எல்லா இடங்களிலும்
முயற்சி செய்வதாய் சொல்லும் அரசு
எந்த இடத்திலும்
அரசாய் என்ன செய்ய வேண்டுமோ
அதை மட்டும் செய்வதே இல்லை.

நாளை நிகழ்ந்தால் .. .. ?
கொள்கை என்ன?
இல்லையென்றால் உருவாக்கப்படுமா?
மீட்புக் கருவிகள் என்ன?
இல்லையென்றால் கண்டுபிடிக்கப்படுமா?
நிபுணர்கள் எங்கே?
இல்லையென்றால் பயிற்றுவிக்கப்படுவார்களா?
கொஞ்சம் நிவாரணப் பணம் நீட்டினால்
நாளைய சுஜித்துகளின் மூச்சை
வேறெதுவும் தடை செய்யப் போவதில்லை.
எங்களுக்கு அரசு வருவதை விட
அரசின் அக்கரை வர வேண்டும்
என்ன செய்யலாம்?
அதை நாம் கூடிச் செய்வோம்.