இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல

தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள்

70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் அனைவரும் வாதப் பிரதிவாதங்கள் செய்யாமல் தீர்ப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதாவது, இன்னும் ஒரு கலவரமா? என்று நாடே அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பது போல் ஒரு தோற்றம் வலிந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவருக்கும் எளிமையான ஒரே ஒரு கேள்வி. ஒரு வேளை அந்த இடம் பாபரி பள்ளிவாசலுக்கே சொந்தம். அங்கே அரசு 3 மாதத்திற்கும் பள்ளிவாசல் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருந்தால்.. .. ..? இரத்த ஆறு ஓட்டப்பட்டிருக்கும். இப்போது பொது அமைதியை பேசும் அனைவரின் மூளைகளும் அதை எப்படி சமாளிப்பது என்பதை நோக்கி கசக்கப்பட்டுக் கொண்டிருக்கும். தெளிவாகச் சொன்னால் பொது அமைதி என்பதன் பொருள் அப்படி மூளையை கசக்கும் கட்டாயத்திலிருந்து எங்களைக் காப்பாற்றி விட்டீர்கள் என்பது தான்.

நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றால், சட்டப்படி அது சரியா? தவறா என்பது தான் முதன்மையான விவாதமாக இருக்க வேண்டும். அதிலும் 70 ஆண்டுகளாக நடந்து வந்த ஒரு சிவில் வழக்கில் நம்பிக்கைப் படி தீர்ப்பு வழங்குவது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது உரத்து சொல்லப்பட்டிருக்க வேண்டும். மாறாக பொது அமைதியை முன்னிருத்துவது என்பது வழங்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக எங்களால் எதையும் செய்ய முடியாது என்பதும் அந்த அநீதியை ஆதரிக்கிறோம் என்பதற்குமான ஒப்புதல் வாக்குமூலம் தான்.

கீழ் வெண்மணி வழக்கில் மதிப்பு மிக்க ஒரு பண்ணையார் இவ்வளவு கீழ்த்தரமான செயலில் இறங்கியிருக்க மாட்டார் என நீதி மன்றம் ‘நம்பியதை’ போல, அப்சல் குருவுக்கு எதிரான எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இந்து மனசாட்சியை திருப்தி படுத்துதுவதற்காக தூக்கிலிடப்பட்டதைப் போல, இன்னும் இது போல் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளைப் போலவே இப்போது இந்த பாபரி பள்ளிவாசல் நிலம் குறித்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, இதுவரை இந்து வெறியர்கள் கூறித் திரிந்த, மக்களும் அது உண்மைதானோ என நம்பியிருந்த அண்டப் புழுகுகளான 1. கோவிலை இடித்து அதன் மீது பாபரி பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது, 2. குழந்தை ராமன் பொம்மை பள்ளிவாசலுக்குள் தானே உருவானது, 3. பள்ளிவாசலை இடித்தது வன்முறை நடவடிக்கை அல்ல, ஏற்கனவே வரலாற்றில் நடந்த தவறை நேர்படுத்திக் கொண்டது ஆகிய மூன்றையும் அது பொய்தான் உண்மையல்ல என்று என்று கூறிக் கொண்டே ராமன் கோவிலை அந்த இடத்தில் கட்டிக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை வேறு என்னவாக புரிந்து கொள்ள முடியும்?

கோவில் கட்ட கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதி எந்த வழியில் பெறப்பட்டிருக்கிறது? 1. பாபரி பள்ளிவாசல் வெற்று நிலத்தில் கட்டப்படவில்லை. கீழே கட்டிட இடிபாடுகள் இருக்கின்றன. மட்டுமல்லாது அந்த கட்டிட மிச்சங்கள் இஸ்லாமிய அடையாளம் கொண்டதாக இல்லை. 2. இடைக்காலத்தில் வணக்க வழிபாடுகள் நடந்தது என்பதற்கான ஆதாரங்களை இஸ்லாமிய தரப்பு நிரூபிக்கவில்லை. 3. பள்ளிவாசலில் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதற்கு இஸ்லாமிய தொன்மங்களில் ஆதாரங்கள் இல்லை எங்கும் தொழுகை நடத்தலாம். இந்த காரணங்களால் தான் அந்த இடத்தில் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற கேள்விகள் கோவில் தரப்பிடம் எழுப்பப்படவே இல்லை. (இராமன் என்றொரு மனிதன் பூமியில் வாழ்ந்தான் என்பது உண்மை என்று கொண்டாலும்) அந்த இடத்தில் தான் பிறந்தான் என்பதற்கு ஆதாரம் உண்டா? ஏனென்றால் ஜென்ம பூமி கட்டிடம் பிறக்காத இடத்தில் கட்ட முடியாதல்லவா? பாபரி பள்ளிவாசலுக்கு கீழே இருந்தவை கோவில் இடிபாடுகள் தான் என்பதற்கு ஆதாரம் உண்டா? 1500 களில் பாபரி பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன் அந்த இடத்தில் இராமன் கோவில் இருந்தது என்பதையோ வழிபாடு நடந்திருக்கிறது என்பதையோ கோவில் தரப்பு நிரூபித்திருக்கிறதா? இவை எதுவுமே இல்லாத போது அந்த இடத்தில் கோவில் கட்ட எப்படி அனுமதி வழங்க முடியும்? இதற்கான பதில் தான் மத நம்பிக்கைகளில் சட்டம் தலையிட முடியாது என்பது. அதாவது குறிப்பிட்ட அந்த இடத்தில் தான் இராமன் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை அதில் நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்று கொக்கரித்தார்களே இந்து வெறியர்கள் அதை நீதி மன்றம் அங்கீகரித்திருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், குறிப்பிட்ட அந்த இடத்தில் கோவில் இருந்திருக்கவில்லை என்பதை பள்ளிவாசல் தரப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். அதேநேரம் இராமன் அங்குதான் பிறந்தான் என்பது கோவில் தரப்பின் நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே போதுமானது. இது தான் தீர்ப்பில் வெளிப்படும் செய்தி.

ஒரு இடம் யாருக்கு சொந்தம் என்பதை ஆவணங்களின் அடிப்படையில் தான் தீர்மானிக்க முடியுமே அன்றி நம்பிக்கைகளின் அடிப்படையில் அல்ல. இதை பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. என்றாலும் நம்பிக்கை அளவுகோலாக கொள்ளப்பட்டிருக்கிறது என்றால், சட்ட அடிப்படையிலான நீதி என்பதை உச்ச நீதிமன்றம் கைகழுவி இருக்கிறது என்பது தான் பொருள். இந்த வழக்கில் கோவில் தரப்பை விட பள்ளிவாசல் தரப்புக்குத் தான் அதிக ஆதாரங்கள் ஆவணங்கள் இருக்கின்றன. கூடுதலாக, குழந்தை இராமன் சிலை வன்முறை மூலம் உள்ளே வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், சட்ட விரோதமாக, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி பள்ளிவாசல் இடிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிமன்றம் ஏற்று உறுதி செய்திருக்கிறது. அப்படி என்றால் தீர்ப்பு மட்டும் எப்படி கோவில் கட்ட அனுமதிக்க முடியும்?

உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த இந்த வழக்கின் அடிப்படை குறிப்பிட்ட அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பதும், மூவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்ட தீர்ப்பின் மீதான மேல்முறையீடு என்பதும் தான். இந்த அடிப்படையில் கோவில் தரப்புக்கே நிலம் உரியது என்பதுடன் தீர்ப்பு முடிந்து போயிருக்க வேண்டும். ஆனால் அதற்கும் மேலே சென்று கோவில் கட்ட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க 3 மாதத்திற்கும் ஒரு குழு உருவாக்கி நீதி மன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதை மத்திய அரசே தன் பொறுப்பில் செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட வேண்டிய தேவை என்ன? இதற்கு அப்பாற்பட்டு பள்ளிவாசல் தரப்புக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிட வேண்டிய தேவை என்ன? அதிலும் மூன்று மாதத்திற்குள் குழு உருவாக்கி அதை நீதி மன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என கோவில் தரப்புக்கு உத்திரவிட்ட நீதி மன்றம். ஐந்து ஏக்கர் நிலத்தை பொருத்தவரை மத்திய அரசோ, மாநில அரசோ வழங்க வேண்டும் என்று குழப்பமாகவும், காலவரையறை எதுவும் நிர்ணயிக்காமலும் விட்டிருப்பதன் நோக்கம் என்ன?

இந்த தீர்ப்பில் இருக்கும் முரண்பாடுகள், சட்டத்தை மீறிய தன்மை, பொது அமைதி எனும் பெயரில் அப்பட்டமாக பள்ளிவாசல் தரப்புக்கு செய்யப்பட்டிருக்கும் அநீதி ஆகிய எதையும் கேள்விக்கு உட்படுத்தப்படாமல் கலவர அச்சமூட்டி தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வற்புறுத்துவதும், இஸ்லாமியர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி அதையே தீர்ப்பின் நியாயமாக கட்டமைப்பதும் அயோக்கியத் தனமானவை.

இஸ்லாமியர்களின் அமைதி என்பது இரண்டு அடிப்படைகளைக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் என்பது நீதி சொல்லும் இடமல்ல. குறிப்பாக, காவி பாசிசங்கள் ஆட்சியில் இருக்கும் போது, நிர்வாக இயந்திரம் முழுவதும் காவி மயமாக்கப்பட்டிருக்கும் போது தீர்ப்பு இப்படித்தான் இருக்க முடியும் என்பது ஏற்கனவே இஸ்லாமியர்களால் எதிர்பார்க்கப் பட்டிருக்கிறது. நீண்டகாலம் எடுத்துக் கொண்டிருக்கும், இதைக் கொண்டே இந்து முஸ்லீம் மக்களிடையே வெறுப்பை வளர்த்துக் கொண்டும் இருக்கும் போக்குக்கு ஒரு முடிவு வரட்டும் எனும் எதிர்பார்ப்பு.

இஸ்லாமியர்கள் காட்டி இருக்கும் இந்த முதிர்ச்சியை அல்லது அரசின் மீதான நம்பிக்கையின்மையை கேலி செய்வது போல் தான் தீர்ப்பு இருக்கிறது. இந்துப் பாசிசங்களுக்கு அயோத்தி மட்டுமே ஒரே சிக்கல் என்பதில்லை. காசி மதுரா தொடங்கி இன்னும் 300 பள்ளிவாசல்களின் பட்டியல் இருக்கிறது அவர்களிடம். பாபரி பள்ளிவாசலுக்கு கீழே இருப்பது பள்ளிவாசல் கட்டிடமல்ல என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் எந்தப் பள்ளிவாசலையும் தொல்லியல் துறை மூலம் ஆய்வுக் குள்ளாக்கி அதன் அடியில் இஸ்லாமிய அடையாளங்கள் இல்லை என்பதை மட்டுமல்ல இந்து அடையாளங்கள் இருக்கின்றன என்று கூட நிரூபிக்க முடியும். வெளிப்படையாகச் சொன்னால் இந்த நாட்டில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இனி எப்போதும் சகோதரர்களாக வாழவே முடியாது, வாழவே கூடாது என்பதற்கான விதையும் இந்த தீர்ப்பில் ஊன்றப்பட்டிருக்கிறது. இது தான் அனைத்தையும் விட மிக அபாயகரமானது.

கோவில், பள்ளிவாசல் என்பதற்கு அப்பாற்பட்டு இதில் இருக்கும் உண்மைகள் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும். இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் பாஜக இந்துக்களின் ஆதரவை இழந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்தியதர வர்க்கமாக இருக்கக் கூடிய வியாபாரிகள், அலுவலர்கள் முதலானோர் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்றவற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜகவின் ஆதரவு சக்திகளான இவர்களிடையே இது விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விரிசலை ஒட்டும் பசையாக இராமர் கோவில் கட்டுவது பயன்படப் போகிறது. மட்டுமல்லாமல், மோடி வந்த பிறகு படு வேகமாக செயல்படுத்தப்பட்ட முதலாளித்துவ திட்டங்கள்; காஷ்மீர் விவகாரம், பாபரி பள்ளிவாசல் விவகாரம் போன்ற நீண்ட ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள கோருகிறது. இதனுடன் இந்துத்துவ திட்டங்களும் இணைந்திருக்கின்றன. இந்த அடிப்படையில் தான் விடுதலைப் புலிகள் பிரச்சனையும் தீர்த்து வைக்கப்பட்டது என்பதை இதனுடன் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி மேலும் முற்றி, தீர்ப்பதற்கு வழி தெரியாமல் மேலும் மேலும் மக்களிடம் சுமைகளை ஏற்றுவதை வழிமுறைகளாக கொண்டிருக்கின்றன. அதன் போது மக்களைக் கண்காணிக்கவும், அவர்களை ஒடுக்கவுமான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவது அவசியமாகிறது. இதனால் நீண்டகால பிரச்சனைகளை தீர்த்து மக்களிடம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, திட்டமிடப்பட்ட இந்தத் தீர்ப்பு என்பது வெறுமனே கோவில் பள்ளிவாசல் சிக்கல் என்பதைத் தாண்டி வேறு இலக்குகளையும் கொண்டிருக்கிறது என்பது உணரப்பட வேண்டும். அவ்வாறு உணரும் போது தான், காவி பாசிச அபாயம் என்பது ஓட்டுக் கட்சி அரசியலைக் கொண்டு மட்டும் முறியடிக்கப்பட முடியாதது என்பதையும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள், ஜன்நாயக சக்திகளுடன் கை கோர்த்து செயல்படுவதன் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதையும் நோக்கி நகர முடியும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s