IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்

கடந்த ஒன்பதாம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்விக்கப்பட்டார். இது முதல் முறை அல்ல, கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அது உறுதியில்லை. ஏனென்றால் ஏகலைவனின் கட்டை விரலை துண்டித்த பார்ப்பனியம், பலப்பல உயிர்களை குடித்த பின்னும் உயிப்ர்புடன் நீடித்துக் கொண்டிருகிறது.

தரம் குறித்து வெளியே கதை விடும் அம்பிகள், பாத்திமா லத்தீப் ஒவ்வொரு தேர்விலும் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள் என்பதைக் கண்டு உள்ளே(!) புழுங்கியிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் தற்கொலை எனும் பெயரால் அழைக்கப்படும் அந்தக் கொலை. சில மாணவிகள் சொல்லியிருக்கிறார்கள், ‘பாத்திமாவுக்கும் (முதன்மைக் குற்றவாளியாக பாத்திமா குறிப்பிட்டிருக்கும் பேராசிரியரான) சுதர்சன் பத்மனாபன் சாருக்கும் நல்ல புரிதல் உண்டு. பலமுறை அவர்கள் வகுப்பறைகளில் விவாதம் நடத்தியிருக்கிறார்கள்’ என்று. (the quint இணைய இதழ்) அது தானே சிக்கல். பாப்பானான தனக்கு சமமாக ஓர் இஸ்லாமிய மாணவி உரையாடுவதா? எல்லா பாடங்களிலும் internalல் 20க்கு 19 வாங்கியிருக்கும் பாத்திமா, சுதர்சன் பத்மநாபன் எடுக்கும் பாடத்தில் மட்டும் 13 வாங்கியிருக்கிறாள். நல்ல புரிதலோடு வகுப்புகளில் ஆசிரியர்களுடன் கல்வி தொடர்பான விவாதங்களில் ஈடுபடும் மாணவி திடீரென தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன?

எங்கள் மகளுக்கு இஸ்லாமிய அடையாளம் தனித்து தெரிய வேண்டாம் என்பதற்காக முக்காடு அணியும் பழக்கத்தையே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறோம் என்கிறார் பாத்திமாவின் அம்மா. இந்திய சமூகத்தை, இந்து சமூகத்தை செருப்பால் அடிக்கும் மதிப்பீடு இது. மதச் சார்பற்ற ஒரு நாட்டில் பன்முகக் கலாச்சாரம் விளங்கும் ஒரு நாட்டில் தன் மத அடையாளம் வெளியே தெரிய வேண்டாம் என்று ஒரு நடுத்தர வர்க்கத் தாய் சொல்லியிருப்பதன் பொருள், இந்துக்களே நீங்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருக்கிறீர்கள் பாருங்கள் என்பது தான். இந்து வெறியர்கள் கொடூரமாக இருக்கிறார்கள். பிற பெரும்பான்மை இந்துக்கள் மௌனமாய் கடந்து செல்கிறார்கள். தமிழர்கள் குறித்தும் சற்றொப்ப இதே மதிப்பீட்டை கொண்டிருக்கிறாள் அந்தத் தாய். முன்னது அவநம்பிக்கை என்றால் பின்னது நம்பிக்கை.

சென்னை ஐஐடியில் படிக்கும் ஒரு மாணவர் முகநூலில் இப்படி எழுதி இருக்கிறார், “ஐஐடி மெட்ராஸ் கல்வி வளாகத்தில் குறிப்பாக மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு மற்றும் சாதிய உணர்வுகளால் நிரம்பியுள்ளது. எங்கள் வகுப்பறைகளில் நிலவும் ஒவ்வொரு விவாதத்தின் முடிவிலும் பாகிஸ்தானை இழுப்பதும், முஸ்லிம் பெண்களின் அடையாளங்களை குறிப்பிடுவதாகவே அமையும். “பெருமளவு மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்களும், கிருஸ்துவர்களும் ஏன் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒப்பீட்டளவில் பிராமணர்கள் இரண்டு சதவிகிதமே இருக்கும் பொழுது முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் தான் சிறுபான்மையினரா..” என்ற கேள்வியை ஒரு முஸ்லிம் பெண் ஆய்வாளரை பார்த்து கேட்கிறார் எனது பேராசிரியர். பிராமணர்கள் சிறுபான்மையினராக இருக்க நினைப்பதென்பது அவர்களது பிராமணிய மனோநிலை. அந்த பிராமணியம் தான் கல்வியை குறிப்பிட்டு பிராமணர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டுமென போதிக்கிற மனுதர்மத்தினை உயர்த்தி பிடிக்கிறது” தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்ளும் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய இடம் இது.

இன்னும் எத்தனை கொலைகள் இங்கு நடக்க வேண்டும்? இது குறித்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் தலைப்பு உயர் கல்வி நிறுவனங்களுக்கு திமுக காவிச் சாயம் பூசுவது சரியா? ஊடகங்களின் அசிங்கமான, அறுவெறுப்பான, வெட்கமற்ற, பிழைப்புவாத, அம்மண நடவடிக்கைகளை என்ன செய்வது? தொலைக்காட்சி பார்ப்பதை ஒட்டு மொத்தமாய் புறக்கணிக்க வேண்டும். இது காவிக் கொடூரமல்லாமல் வேறு என்ன?

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய உயர் கல்வி நிறுவனங்களான இவைகளில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தாமல் பிடிவாதமாய் மறுக்கும் போக்குக்கு யாராவது விளக்கம் கூறியது உண்டா? 98 விழுக்காடு பாப்பான்களே கோலோச்சும் இங்கு நிறுவனக் கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது யாரிடமும் எந்தச் அசைவையும் ஏற்படுத்த வில்லையா? இதுவரை நடந்திருக்கும் எத்தனையோ நிறுவனக் கொலைகளில் ஒரு பார்ப்பனிய மாணவன் கூட இல்லையே. இதன் பொருள் என்ன?

மாணவர்கள் போராட்டம் நீடிப்பதால் தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கை மாற்றி இருக்கிறார்களாம். தற்கொலை என்பதை சந்தேக மரணம் என்று முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற வைப்பதற்கே போராட வேண்டியதிருக்கிறது. இந்த லட்சணத்தில் இந்த அமைப்பிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியுமா? அதுவும் பாபர் பள்ளிவாசல் வழக்கு குறித்த தீர்ப்பில் தன்னை அப்பட்டமாக வெளிக்காட்டிக் கொண்ட ஒரு நீதி அமைப்பு உள்ள நாட்டில்?

மாணவி பாத்திமா தற்கொலை செய்யப்படுவதற்கு முன் மூன்று பேராசிரியர்கள் குறித்து தன் திறன்பேசியில் பதிவு செய்திருக்கிறார். உடனடியாக அவர்களை பதவி நீக்கம் செய்து, கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும். காவல்துறை விசாரிப்பதற்கு இணையாக போராடும் மாணவர்களைக் கொண்டே ஒரு குழு அமைத்து அவர்களும் இந்த விசாரணையை நடத்த வேண்டும். அவர்களையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும். தவிரவும் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும் மற்றும் கல்வி தொடர்பான சீர்கேடுகளை களையவும் அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர் தேர்தலை நடத்த வேண்டும்.

உயர் கல்வியில் மட்டுமல்ல வாழ்வின் அன்றாட அசைவுகள் அனைத்திலும் இந்த பார்ப்பன பாசிச வெறித்தனம் தன் தடங்களைப் பதிந்தே இருக்கிறது. இதற்கான தீர்ப்பை மக்கள் வீதியில் எழுத நினைக்காத வரை இதனை முடிவுக்கு கொண்டுவர முடியாது.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s