
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது எனும் மோசடி, காங்கிராசால் தொடங்கி வைக்கப்பட்டு பாஜகவில் வாஜ்பேயி வழியாக இன்று மோடியிடம் புதிய விரைவு பெற்று தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஐந்து டிரில்லியன் பொருளாதாரம் என்று வாயில் வடை சுற்றிய மோடி, இன்று நடப்பு பொருளாதார அலகான 2.7 டிரில்லியனில் நீடிக்க வைப்பதற்கே தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதற்காகத் தான் வேக வேகமாக பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தள்ளும் ஊதாரியாக மோடி காட்சி தருகிறார். கடந்த ஆண்டு 80 ஆயிரம் கோடிக்கு பொதுத்துறை விற்பனை இலக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அந்த இலக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் விற்கப்படும் என செய்தி வந்தது. பின்னர் அதுவே ஐந்து நிறுவனங்கள் என்றானது. தற்போது 28 நிறுவனங்களை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள 28 பொதுத்துறை நிறுவனங்கள்
1. Project & Development India Ltd.
2. Hindustan Prefab Limited (HPL).
3. Hospital Services Consultancy Ltd. (HSCC)
4. National Project construction corporation (NPCC)
5. Engineering Project (India) Ltd.
6. Bridge and Roof Co. India Ltd.
7. Pawan Hans Ltd.
8. Hindustan Newsprint Ltd(subsidiary)
9. Scooters India Limited
10. Bharat Pumps & Compressors Ltd
11. Hindustan Fluorocarbon Ltd. (HFL) (sub.)
12. Central Electronics Ltd
13. Bharat Earth Movers Ltd. (BEML)
14. Ferro Scrap Nigam Ltd.(sub.)
15. Cement Corporation of India Ltd (CCI)
16. Nagarnar Steel Plant of NMDC
17. Alloy Steel Plant, Durgapur; Salem Steel Plant; Bhadrawati units of SAIL
18. Air India and its five subsidiaries and one JV.
19. Dredging Corporation of India
20. HLL Life Care
21. Indian Medicine & Pharmaceuticals Corporation Ltd. (IMPCL)
22. Karnataka Antibiotics
23. Kamrajar Port
24. Indian Tourism Development Corporation (ITDC)
25. Rural Electrification Corporation Limited (REC)
26. Hindustan Petroleum Corporation Limited (HPCL)
27. Hindustan Antibiotics Ltd. (HAL)
28. Bengal Chemicals and Pharmaceuticals Ltd. (BCPL )

மேற்கண்டவை என்னென்ன நிறுவனங்கள்? எதை உற்பத்தி செய்கின்றன? அவைகளின் நடப்பு விற்பனை சந்தை மதிப்பு என்ன? அவைகளுக்கு இருக்கும் அசையும், அசையா சொத்து மதிப்பு என்ன? எந்த நிறுவனங்களை எத்தனை கோடிக்கு யாருக்கு விற்பனை செய்யப் போகிறார்கள்? என்னென்ன விதிமுறைகள் ஏற்கப்பட்டுள்ளன? எனபன போன்ற எந்த விவரங்களாவது மக்களுக்கு தெரியுமா? தெரிவிக்கப்படுமா? கடந்த கால வரலாற்றிலிருந்து பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்கள் அவைகளின் சொத்து மதிப்பு, சந்தை மதிப்பை விட மிகமிகக் குறைந்த விலையில் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. இனியும் அவ்வாறே விற்கப்படும், இது இப்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு எந்த விதத்திலேனும் உதவுமா?
பொதுத்துறை நிறுவனங்கள் விற்ப்னை என்பது பொருளாதார நெருக்கடியோடு தொடர்பு கொண்டதில்லை. ஆனால் அவ்வாறு காட்டப்படுகிறது. பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு வெறு வழியில்லை என்பதால் தான் பொதுத்துறை நிறுவனங்களை அல்லது அதன் பங்குகளை விற்கிறோம் என்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. விற்பனைக்கு ஆதரவாக கூக்குரலிடுவோர் எவராவது இதற்கு பதில் கூறட்டும். இதுவரை விற்பனை செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த மதிப்பு என்ன? விற்பனை செய்யப்பட்ட மதிப்பு என்ன? விற்பனை செய்யப்பட்டதால் எற்பட்ட பொருளாதார மேம்படல் என்ன? அல்லது, அரசு ஏன் இந்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கையாய் வெளியிடவில்லை? பதில் கூறுவார்களா?
47ல் இந்தியா சுதந்தரமடைந்து விட்டதாக கூறிக் கொண்ட போது, பல துறைகளை வங்கிகள் முதல் ரொட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் வரை இந்திய முதலாளிகள் முதல்(!) போட்டு தொழில் செய்ய தொடங்கினார்கள். ஆனால் அந்தத் தொழில்களெல்லாம் சீராக வளர்ச்சியடைய வேண்டுமென்றால், லாபம் வந்து கொண்டே இருக்க வேண்டுமென்றால் அதற்கு இந்தியாவின் அடிப்படை கட்டுமானங்கள் வளர வேண்டும். சாலைப் போக்குவரத்து, இருப்புப் பாதைகள், துறைமுகங்கள், வான் வழிப் போக்குவரத்து, அனைக்கட்டுகள், கனரக இயந்திரங்கள், சுரங்கத் தொழில் போன்றவை அடையும் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற தொழில்கள் வளர முடியும். ஆனால் இவைகளின் முதலீடு செய்ய இந்திய முதலாளிகள் தயாராக இல்லை. எளிமையாகச் சொன்னால், பேருந்து விட்டு சம்பாதிக்க முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் சாலைகள் போட அவர்கள் தயாராக இல்லை. இதற்கு மூன்று காரணங்கள், 1. லாப உத்திரவாதம் இல்லை அல்லது மிகவும் குறைவு. 2. மிக அதிகமாக முதலீடு தேவைப்படும். 3. லாபம் கிடைக்க நீண்ட காலம் ஆகும். இந்த மூன்று காரணங்களால் இந்திய முதலாளிகள் பின்வாங்க, முதலாளிகளின் சார்பில் இந்த அடிப்படைக் கட்டுமானங்களை செய்யும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது.
காடுகளை திருத்தி, மலைகளை மேடறுத்து சாலைகள், இருப்புப் பாதைகளை அமைப்பது, விமான நிலையங்கள், துறைமுகங்கள் கட்டுவது, தொலைத் தொடர்புகளுக்காக நாடெங்கும் கோபுரங்களை அமைத்தது, நூலாம்படை இழைகளைப் போல் மூலை முடுக்கெல்லாம் விரவிக்கிடக்கும் தந்திக் கம்பங்களை அமைத்து மின்சாரம் வழங்கியது, சுரங்கங்களைத் தோண்டி பூமியின் மடியிலிருந்த கனிம வளங்களை வெட்டியெடுத்து வெளியில் கொண்டு வந்தது, பெரிய பெரிய அணைகளுக்காக பல லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தது என பலப்பல துறைகளில் நாட்டின் ஒட்டு மொத்த உழைப்பையும் கொண்டுவந்து கொட்டியது அரசு. இதற்காக உருவாக்கப்பட்டவை தான் பொதுத்துறை நிறுவனங்கள். இந்த அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்குவதில் பல ஆயிரம் தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இந்த அடிப்படைக் கட்டுமானங்களுக்கான நிதி, மக்களின் வரிப் பணத்திலிருந்தும், வங்களில் இருந்த மக்களின் சேமிப்புகளிலிருந்தும், மக்களை பணயம் வைத்து பெறப்பட்ட கடன்களிலிருந்தும் பெறப்பட்டது. இதற்காக தேவைப்பட்ட தொழில்நுட்ப அறிவுக்காக நாடெங்கும் பள்ளிகளும், கல்லூரிகளும் தொழில்நுட்ப பாடத் திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இன்று நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் எனக் கருதும் அனைத்தும் முதலாளிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனும் புள்ளியில் இருந்து தான் தொடங்கின.
தற்போது அந்த அடிப்படைக் கட்டுமானங்கள் பெருமளவில் நிறைவேறி விட்டன. தொடக்கத்தில் முதலாளிகள் தயங்கிய மூன்று காரணங்களும் இப்போது இல்லாமல் போய் விட்டன. எனவே, அவைகளை முதலாளிகளிடம் கைமாற்றி விடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதில் பொருளாதார நெருக்கடி என்பது, கூறுவதற்காக, மக்களை ஏமாற்றுவதற்காக கிடைத்த காரணம் அவ்வளவு தான்.
இதை எதிர்ப்பில்லாமல் சாத்தியப் படுத்துவதற்காகத் தான், அந்த நிறுவனங்களை சீர் குலைத்து, போட்டியிடும் தகுதியை இல்லாமல் ஆக்கி, முன்னேறுவதற்கான எந்த வாய்ப்புகளையும் வசதிகளையும் நிராகரித்து, நட்டக் கணக்கு காட்டி, அடிமாட்டு விலைக்கு விற்பனை நடக்கிறது.
ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, அதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறோம், வேறு வழியில்லை என்கிறார்கள். மறுபக்கம் முதலாளிகளுக்கு சலுகைக்கு மேல் சலுகைகளாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கான வரி 30 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக நடப்பு நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக பத்து லட்சம் கோடிகளுக்கு சலுகைகளும் வரிவிலக்குகளும் அளிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் 90களுக்கு பிறகு சட்டபூர்வமாகவே முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளையும் வரி விலைக்குகளையும் ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால்; (இதில் சட்டபூர்வமாக வழங்கப்படும் வாராக்கடன் தள்ளுபடிகளும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு செய்யப்படும் ஊழல்கள் முறைகேடுகளும் கணக்கில் வராது) இதுவரை விற்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டு மொத்த மதிப்பு பத்து விழுக்காடு கூட வராது. என்றால் பொருளாதார நெருக்கடியினால் தான் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறோம் என்பது யாரை ஏமாற்ற?
இந்த பொருளாதார நெருக்கடி, மக்களிடம் வாங்கும் ஆற்றல் குறைவது என்றெல்லாம் கூறப்படுவதன் ஒருமுகப்படுத்தப்பட்ட பொருள் என்னவென்றால் மக்களுக்கு சொந்தமான நாட்டின் வளங்கள், அதில் ஈடுபடும் மக்களின் உழைப்பு ஆகிய அனைத்தும் முதலாளிகளின் காலடிகளில் காணிக்கையாக கொட்டப்படுகின்றன என்பது தான். பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை நம்முடைய சொத்து எனும் எண்ணம் மக்களுக்கு வரவில்லை. திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் எவன் அப்பன் வீட்டுச் சொத்தை எவண்டா விற்பது எனும் இயல்பான கோபம் மக்களுக்கு ஏற்படவில்லை.
அந்தக் கோபத்தை ஏற்படுத்துவது தான் மக்களை நேசிப்பவர்களின் பணி. இந்த பொருளாதாரக் கொள்கையினாலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அதற்கு தீர்வு இன்னும் தீவிரமாக அந்த பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்துவது தான் என்பது எப்பேற்பட்ட பித்தலாட்டம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள் மக்கள் மத்தியில் சிறிய அளவிலேனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சிறிய தொழிற்சாலைகள், எளிய நிறுவனங்கள் மக்களே தங்கள் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். இப்படி மாற்றுகளை மக்கள் கண்முன்னே காட்டுவது தான் அவர்களை புரட்சிகர பாதையில் நடைபோட வைக்கும். அல்லாது, முதுகலை மாணவர்களுக்கே விளங்காத பொருளாதாரப் பாடத்தை மக்களிடம் நடத்தினால் அவர்கள் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடத்தான் செய்வார்கள். அது அவர்களின் தவறில்லை.