
கடந்த இரண்டாம் தேதி (02.12.2019) அதிகாலையில் கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள நடூர் எனும் பகுதியில் கட்டப்பட்டிருந்த நீண்ட சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். எந்த ஈர்ப்பும் இல்லாமல், பத்தோடு பதினொன்றாய் கடந்த போகவிருந்த இச்செய்தி, நாகை திருவள்ளுவன் அவர்களின் போராட்டம், திரைப்பட இயக்குனர் இரஞ்சித், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகள் ஆகியவற்றால் உயிர் பெற்று தமிழ்நாட்டின் விவாதப் பொருளாய் ஆகியது. துல்லியமாய் பார்த்தால் 17 பேரின் உயிரிழப்பு எந்த விவாதத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அந்தச் சுவர் தீண்டாமைச் சுவரா? இல்லையா? என்பதும் நிகழ்ந்தது விபத்தா? இல்லையா? என்பதும் தான் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.
முதலில், இப்படி கொத்துக் கொத்தாய் நிகழும் மரணங்கள் ஏன் மக்களின் மனங்களை அறுக்க மறுக்கிறது? மரணித்தவர்கள் நம்மில் ஒருவர் இல்லை எனும் எண்ணம் தீவிரமாக வேறூன்றி இருக்கிறது. அது இங்கு மிக நீண்ட காலமாக ஜாதிய மேல்கீழான அடுக்குக் கட்டமைப்பின் மூலம் பரவலாக்கப்பட்டு இறுகலாக்கப் பட்டிருக்கிறது. நிர்பயாவுக்கு ஏற்பட்ட கொதிப்பு, கயர்லாஞ்சி நிகழ்வுகளுக்கு இங்கே ஏற்படவே முடியாது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம், தற்போது தீவிரமாய் செயல்படுத்தப்பட்டு வரும் உலகமயமாக்க பொருளாதாரக் கொள்கையினால் அன்றாடம் நிகழும் கொத்துக் கொலைகள் இவைகளை எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்ல பயிற்றுவித்திருக்கிறது. கும்ப கோணம் பள்ளிச் சிறுவர்கள் படுகொலை மக்களிடம் உளவியல் ரீதியாக ஏற்படுத்திய தாக்கம் என்ன? எதுவும் இல்லை. ஏனென்றால் மக்கள் இங்கே இவ்வாறு தான் வடிக்கப் பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியம் இங்கே இவைகளை திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த செயல்படுத்தலில் கல்லெறிந்தது தான் திருவள்ளுவன் உள்ளிட்டோரின் போராட்டங்கள். ஆகவே தான் உடனடியாக ஓர் எதிர் திருப்பல் உத்தியோடு அது தீண்டாமைச் சுவர் இல்லை என்றும், நிகழ்ந்தது ஒரு விபத்து தான் என்றும் விவாதங்கள் கிளப்பப்பட்டன. கூடவே, 17 பேர் மரணமடைந்து கிடக்கு இடத்தில் ஜாதி அரசியல் செய்யலாமா? எனும் கழிவிரக்கமும் கட்டவிழ்க்கப்பட்டது.

அது தீண்டாமைச் சுவர் இல்லையா? அந்தப் பகுதியில் பெரும் பணக்காரர்கள் குடியேறும் முன்பே அருந்ததியர் இன மக்கள் அங்கே வசித்து வருகிறார்கள். என்றால் புதிதாக குடிவந்த ஆதிக்க ஜாதியினருக்கு அந்த இடத்தில் மதில் சுவர் ஏன் தேவைப்படுகிறது? அவர்கள் கலந்து புழங்க வேண்டாம் எனும் எண்ணம் தானே. அதுவும் சுவர் எழுப்பும் போதே கற்சுவர் வேண்டாம், ‘வேண்டுமானால் கம்பி வேலி அமைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி இருக்கிறார்கள். அதை மீறித்தான் கற்சுவர் கட்ட்ப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்ன? அதிலும் முதலில் பத்து அடி உயரத்தில் தான் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. ஆதிக்க ஜாதியினரின் வீடுகளின் பகுதி மேடாகவும், அருந்ததியினர் வசிக்கும் பகுதி பள்ளமாகவும் இருப்பதால் சுவரையும் மீறி அவர்கள் கண்களுக்கு தெரிகிறார்கள் என்பது தான் அது இருபது அடியாக உயர்த்தப்பட்டதற்கான காரணம். தீண்டாமைச் சுவர் இல்லை என்போர், பத்தடிச் சுவர் என்ன காரணத்தினால் இருபது அடிச் சுவராக மாற்றப்பட்டது என்பதற்கு விளக்கம் கூற முடியுமா? கலந்து புழங்கக் கூடாது என நினைத்த ஆதிக்க ஜாதியினர் தங்களின் கழிவுகளை, சுவருக்கு இந்தப் பக்கமாக அருந்ததியினர் பகுதியில் குழாய்கள் மூலம் விட்டிருக்கிறார்கள். இந்த மனோபாவத்தில் ஒழிந்திருப்பது தீண்டாமை இல்லாமல் வேறென்ன?

சுவர் இடிந்து விழுந்தது விபத்தா? சுவர் கட்டப்படும் போதே ‘எங்கள் குடியிருப்புக்கு மிக அருகில் கற்சுவர் கட்டியெழுப்புவது எங்களுக்கு ஆபத்தானது, வேண்டுமானால் கம்பி வேலி அமைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அதாவது, சுவர் கட்டப்படும் போதே அதன் ஆபத்து குறித்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் உயரம் பின் இருபது அடியாக உயர்த்தப்பட்ட போதும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டிருக்கிறது. மட்டுமல்லாமல், பல நேரங்களில் சுவருக்கு எதிராக அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. பின் மழை, மண் அரிப்பு காலங்களில் ஆபத்து ஏற்படக் கூடும் என போராட்டங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. அந்த சுவர் கட்டப்பட்டதன் பிறகான இருபது ஆண்டுகளில் இவ்வளவு முறையீடுகள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் கற்பாறையை வாய்க் காற்றால் ஊதியது போல் அரசின் துறைகள் இருந்து விட்டன. இப்போது இடிந்து விழுந்து 17 உயிர்கள் துடிக்கவும், வலியென்று கதறவும் நேரமில்லாமல் தூக்கத்திலேயே நசுங்கிச் செத்த பின்னர் வந்து, அது விபத்து என்று கூறுவோரை எந்தச் செருப்பால் அடிப்பது?
பிணங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்கிறார்கள். அவர்கள் அத்தனை முறை கோரிக்கை வைத்து போராடிய போது காதுகளை மூடிக் கொண்டு அழுத்தமாக இருந்த அத்தனை அரசு அதிகாரிகளுக்கும் பின்னே இருந்த அரசியல் என்ன? அவர்கள் அரசியல் செய்யாமலா அமைதியாக இருந்தார்கள். பலகாலம் எந்த ஆபத்து தங்களுக்கு நேர்ந்து விடும் என அஞ்சி போராடினார்களோ, அந்த ஆபத்து நடந்து விட்ட பிறகு அதை விபத்து என்று கூறுகிறார்களே அவர்களிடம் அரசியல் இல்லையா? அரசியல் இல்லை என்றால் அவர்களின் இத்தனை ஆண்டுகால போராட்டங்களுக்கு இந்த ‘விபத்து கும்பல்கள்’ கொடுக்கப் போகும் பதில் என்ன? தங்கள் வீடுகளுக்குள் காட்டு சிறுத்தை வந்தாலும் எங்களை காப்பாற்றுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கும் இந்த வர்க்கம், தங்கள் சொந்தக் காசில் இருபதடி சுவர் கட்டியிருக்கிறார்களே இதற்குப் பின்னே அரசியல் இல்லையா? இத்தனைக்குப் பிறகும் அந்த தீண்டாமைச் சுவரை, அரசு தங்கள் கேளாமை எனும் கடப்பாறையால் இடித்து வீழ்த்தி 17 பேரை கொன்று போட்டது என்று உண்மையை பாதிக்கப்பட்ட சிலர் கூறும் போது, அதுவரை பொத்திக் கொண்டிருந்த பலர் ஓடிவந்து பிணங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்கிறார்களே அதில் தான் மலத்தில் நெழியும் புழுவைப் போன்று அரசியல் நெழிந்து கொண்டிருக்கிறது.
அவர்களின் இருபது ஆண்டு போராட்டங்களோடு ஒப்பிடும் போது, 25 லட்சம் இழப்பீடு எனும் கோரிக்கை குறைவு தான். ஆதரவின்றி நிற்கும் குழந்தைகளுக்கு விரும்பும் உயர் கல்வியும், பின் அதற்குத் தகுந்த வேலையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் ஆதிக்க ஜாதியினரின் சொத்துகளை பறிமுதல் செய்வதின் மூலம் நடத்த வேண்டும். அவ்வளவு உயரமான சுவரைக் கட்டுவதற்கு விதிகளை மீறி யார் அனுமதி கொடுத்தார்களோ அல்லது கண்டு கொள்ளாமல் இருந்தார்களோ அந்த அதிகாரிகள் அனைவரின் மீதும் கொலைக்கு உடந்தையாய் இருந்தவர்கள் என்று வழக்கு பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும். இவை அத்தனையும் நடக்கும் போது தான் அந்தப் பகுதி அருந்ததியின மக்களின் இருபது ஆண்டு கால வேதனைகளுக்கு ஈடு செய்ததாக இருக்கும்.
தொடரும்.
அவர்களின் இருபது ஆண்டு போராட்டங்களோடு ஒப்பிடும் போது, 25 லட்சம் இழப்பீடு எனும் கோரிக்கை குறைவு தான். ஆதரவின்றி நிற்கும் குழந்தைகளுக்கு விரும்பும் உயர் கல்வியும், பின் அதற்குத் தகுந்த வேலையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் ஆதிக்க ஜாதியினரின் சொத்துகளை பறிமுதல் செய்வதின் மூலம் நடத்த வேண்டும். அவ்வளவு உயரமான சுவரைக் கட்டுவதற்கு விதிகளை மீறி யார் அனுமதி கொடுத்தார்களோ அல்லது கண்டு கொள்ளாமல் இருந்தார்களோ அந்த அதிகாரிகள் அனைவரின் மீதும் கொலைக்கு உடந்தையாய் இருந்தவர்கள் என்று வழக்கு பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும். இவை அத்தனையும் நடக்கும் போது தான் அந்தப் பகுதி அருந்ததியின மக்களின் இருபது ஆண்டு கால வேதனைகளுக்கு ஈடு செய்ததாக இருக்கும்.
ரொம்ப சரி. ஆனால் நிறைவேற்றுவது யாா் ? அரசு இயந்திரம் தன்தவறை உணரவேயில்லை.சுவா் உரிமையாளரை மட்டும் குற்றவாளி ஆக்கி தப்பிக்க பார்க்கின்றது. தாங்கள் குறிப்பிடும் நீதி கிடைக்குமா ?