17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன? பகுதி 2

மேட்டுப் பாளையத்தில் நடந்த 17 பேர் கொலையை ஒரு பேச்சுக்காக அதை விபத்து என்றே கொள்வோம். 17 பேர் மரணமடைந்துள்ள ஒரு விபத்தில் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் காவல் துறை நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது? நடந்தது வெறும் விபத்தில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் காவல் துறை நடந்து கொண்ட விதம் சரியா? இப்படி கேள்வி கேட்பதே அபத்தமானது. எந்த நிகழ்வில் காவல் துறை சரியாக நடந்து கொண்டிருக்கிறது, அல்லது சட்டப்படி நடந்து கொண்டிருக்கிறது, இதில் சரியாக நடந்து கொள்வதற்கு? காவல்துறை சட்டத்தை மீறும் அதிகாரம் தனக்கு உண்டு எனும் மிதப்பில் தான் தொடர்ந்து நடந்து கொள்கிறது. அதனாலேயே இதை இயல்பாக எடுத்துக் கொண்டு நகர்ந்து போக வேண்டுமா? இதை எதிர்க்காமல் கடந்து செல்வது என்பது காவல் துறையின் அந்த திமிரை விட அதிக ஆபத்தானது.
இந்த நிகழ்வில் காவல்துறையின் நடவடிக்கையை இரண்டு பிரிவாக பார்க்கலாம். ஒன்று, போராட்டத்தின் போது காவல் துறை நடந்து கொண்ட விதம். இரண்டு, அவசரம் அவசரமாக அன்று இரவே இறந்த உடல்களை காவல் துறையே எரியூட்டியது.
நாகை. திருவள்ளுவன் உள்ளிட்டோர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் ஜனநாயக மீறல் எதுவும் இருந்ததா? இறந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். தீண்டாமைச் சுவரின் சொந்தக்காரரான சிவசுப்ரமனியனை கைது செய்ய வேண்டும். அவரின் மீதும், துணை போன அரசு அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவை தானே போராடியவர்களின் கோரிக்கைகள். கோரிக்கைகள் எனும் அளவில் இவைகளில் எதுவும் ஜனநாயக மீறல் இருக்கிறதா? எதுவும் இல்லை எனும் போது காவல் துறை அடித்து, இழுத்துச் சென்று கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் எந்தப் போராட்டம் என்றாலும், அதன் கோரிக்கைகள் என்னவாக இருந்தாலும், அதன் காரணம் என்னவாக இருந்தாலும், அதன் பின்னணி எவ்வளவு கோரமானதாக இருந்தாலும், போராட்டம் என்றால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமே என்பது தான் காவல் துறையின் பார்வை. கோரிக்கைகள் தொடர்பான துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடப்பது கோரிக்கைகளை ஏற்பது அல்லது எவ்வாறு ஏற்க முடியாமல் போகிறது என்று விளக்குவது என்பதெல்லாம் நடப்பதே இல்லை. காவல் துறையே நேரடியாக களத்தில் இறங்கி போராடுபவர்களை மிரட்டும். பத்து நிமிடங்களில் கலையவில்லை என்றால் தடியடி நடத்துவோம் என்பது தான் காவல் துறையின் முதல் பேச்சாக இருக்கும். காவல் துறையினர் ஆண்டைகள், போராட்டம் நடத்துபவர்கள் அடிமைகள் எனும் ஹோதாவில் தான் காவல் துறையினரின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளும் இருக்கும். ஆண்டைகள் சொல்வதை அடிமைகள் மீறலாமா? கண்மூடித் தனமான தாக்குதல் தான். சிக்குவோரை பொய் வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்புவது. காவல் துறை இப்படி செயல்படுவதற்கு சட்ட ரீதியான அனுமதி எதுவும் இருக்கிறதா?

தலைக் கவசத்தை வெறுமனே தலையில் அணிந்திருக்கிறார்களா அல்லது அதற்கான பட்டையையும் மாட்டி இருக்கிறார்களா என்பது வரை நுணுக்கமாக கவனிக்கும் நீதி மன்றம், காவல்துறையின் இந்த அத்து மீறலை கண்டு கொள்வதே இல்லை. மாறாக, ஒத்துழைக்கிறது. வெறுமனே இவன் தெருவில் நடந்து சென்றான் அதனால் பிடித்து வந்தோம் என வழக்கு எழுதி நீதி மன்றத்தில் நிறுத்தினாலும், எதையும் கவனிக்காமல் 15 நாட்கள் நீதிமன்ற காவல் என்று தான் தீர்ப்பு எழுதப்படும். ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமையே 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்த நீதி மன்றங்கள் இங்கே இருக்கின்றன.
இந்த அடிப்படையில் தான் தமிழ்ப் புலிகள் நாகை திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, சமத்துவ முன்னணி தலைவர் கார்கி ஓரிரு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் (பெயர் தெரியவில்லை) உள்ளிட்ட 12 பேர் அடித்து இழுத்துச் சென்று சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகள் என்ன? பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகள். எந்த பொதுச் சொத்துக்கும் அவர்கள் சேதம் விளைவித்தார்கள்? எந்த அதிகாரியின் என்ன பணியை செய்ய விடாமல் தடுத்தார்கள்? எனும் கேள்விகள் யாருக்கும் எழவே செய்யாதா? சில மாதங்களுக்கு முன்பு பாஜக எச் ராஜா நீதி மன்றமாவது மயிராவது என்று காவல் துறையினரோடு வாக்குவாதம் செய்தார். அப்போது அண்ணாச்சி நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கெஞ்சிக் கொண்டிருந்தது காவல் துறை. அப்போது அடித்து இழுத்துச் சென்று வழக்கு பதிந்து சிறையில் அடைக்காமல் இருந்ததற்கும், இப்போது அதைச் செய்வதற்கும் இடையிலுள்ள உளவியல் வித்தியாசம் என்ன? ஜாதி தானே. இதை கண்டும் காணாமல் இருப்பது பேராபத்து இல்லையா? இந்த அசிங்கத்தை தூக்கிச் சுமக்க அவர்கள் வெட்கப்படவில்லை. அதை எதிர்ப்பதற்கு மக்கள் வெட்கப்பட வேண்டுமா?
சிறையில் அடைத்தார்கள் என்பதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. அவர்களை கோவை சிறையில் அடைக்கவில்லை. மாறாக, சேலம் கொண்டு சென்று அங்குள்ள சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஏன்? இறந்த உடல்களை மருத்துவமனையிலிருந்து வாங்க மாட்டோம் என்றோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினேலோ மீண்டும் போராட அணி திரட்டி விடக் கூடாது என்பதினால் தானே. அதை மெய்ப்பிக்கும் விதமாக அன்று இரவே காவல் துறையினரே முன்னின்று 17 உடல்களையும் ஒரே நேரத்தில் எரியூட்டி விட்டனர். இது தான் காவல் துறையின் வேலையா? இப்படிச் செய்வதற்கு காவல் துறைக்கு சட்ட அங்கீகாரம் எதுவும் இருக்கிறதா?
காவல் துறை இப்படி எரியூட்டுவது இது முதல் முறையுமல்ல. அண்மையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருநாள் கொண்ட சேரி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவரின் உடல் எங்கள் தெரு வழியாக செல்லக் கூடாது என்று ஆதிக்க ஜாதியினர் தடுத்த பிரச்சனை எழுந்தது. இதில் தடுத்த அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு உடலை கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அளிப்பது தான் சட்டப்படி காவல் துறையின் வேலை. ஆனால், காவல் துறை செய்தது என்ன? உடலை சுமந்து வந்தவர்களை அடித்து விரட்டி விட்டு, சட்டத்தை மீறி அந்த உடலைக் கைப்பற்றி வயல் வழியே எடுத்துச் சென்று எரியூட்டியது. இது மட்டுமா ஹைதராபாத் பலகலையில் தற்கொலை செய்த ரோஹித் வெமூலா உடலை கடத்திக் கொண்டு சென்று எரியூட்டியது காவல்துறை. இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும் சட்டத்தை மீறி செயல்பட்டது ஏன் என்று காவல் துறையை நோக்கி ஒரு சுட்டு விரல் கூட நீண்டதில்லை. என்றால், ஆதிக்க ஜாதியினருக்கு சேவகம் செய்வதற்கும் வஞ்சிக்கப்பட்ட மக்களை அடித்து நொறுக்குவதற்கும் தான் காவல் துறை இருக்கிறதா? இதையே வேறொரு மொழிதலில் சொன்னால், கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யவும், போராடும் மக்களை அடித்து நொறுக்கவும் தான் காவல் துறையும், அரசும் இருக்கிறது.

இந்த உண்மை, இந்த யதார்த்தம் புரிந்த பின்னர் தான் அடுத்து என்ன எனும் கேள்வி எழுகிறது. வாய்ப்புள்ள இடங்களில் அடித்து நொறுக்குவதும், பிற நேரங்களில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதும் தான் காவல் துறையின் வேலை என்றாகி விட்ட பின் மக்கள் தொடர்ந்து அமைதி காப்பது பொருத்தமானது தானா? அல்லது அடையாளமாய் சுவரொட்டி ஒட்டி, ஒரு நாள் போராட்டம், ஆர்ப்பட்டம் நடத்தி விட்டு அமைதியாகி விடுவது சரியானது தானா? காவல் துறையினர் எந்த அடிப்படையில் பொய் வழக்குகளை புனைகின்றனர்? தண்டனை அடைந்து விடுவார்கள் என்றா? அது பொய் வழக்கு என்பதும் சில நாட்களில் பிணையில் வந்து வழக்கு நடத்தி, பொய் வழக்கு என்று நிருவி வெளியேறி விடுவார்கள் என்பது காவல் துறைக்கு தெரிந்தது தான். அவர்கள் நிரூபிப்பதற்காக பொய் வழக்கு போடுவதில்லை. உளவியல் ரீதியாக மக்களை நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வைத்து, அதன் மூலம் காவல் துறை என்றாலே ஒரு பயம் வர வேண்டும் என்பதற்காகத் தானே. இதே உத்தியை மக்கள் காவல் துறை மீது திருப்பி ஏவ முடியாதா? பொய் வழக்கு போட்டு என் வாழ்வை முடக்கி விட்டார் இந்த அதிகாரி. எனவே, அவரை தண்டிக்க வேண்டும், எனக்கு நட்டஈடு வேண்டும் எனக் கோரி வழக்கு தொடுக்க முடியாதா? ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நகரத்திலும் இவ்வாறு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான வழக்குகளை காவல் துறையின் மீது ஏவ முடியும். இவைகளில் வெல்வது என்பதோ, மக்கள் தாங்களாகவே இவ்வாறு வழக்குகளை தொடுக்க முடியுமா என்பதோ இங்கு கேள்வி இல்லை. இங்கு தான் புரட்சிகர சக்திகள் மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து பாதுகாப்பு அரணாக நிற்க வேண்டும். அவர்களும் நடைமுறை சிக்கல்களை எதிர் கொள்ளட்டுமே, வழக்குகளில் சிக்கி பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவைகள் பிரச்சனைக்கு உரித்தாகட்டுமே, காலதாமதம் ஆகட்டுமே. நீதி மன்றங்களும் இது போன்ற ஆயிரக்கணக்கான வழக்குகளால் தடுமாறட்டுமே. அப்போது தான் காவல் துறையின் திமிரையும், நீதி மன்றத்தின் அலட்சியத்தையும், இவை இரண்டின் கள்ளக் கூட்டையும் உடைக்க முடியும்.
தொடரும்
இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி