
குடியுரிமை திருத்தச் சட்டம் பெரும் விவாதமாகவும், நாடெங்கும் தணியாத போராட்டங்களாகவும் வடிவெடுத்திருக்கும் வேளை. வேறெந்த பிரச்சனைகளையும் விட, பொருளாதார பின்னடைவைக் கூட பின்னுக்குத் தள்ளி குடியிரிமை போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. இப் போராட்டங்களை தடுக்க வழக்கம் போல காவல்துறை மூலம் வன்முறையை கையிலெடுத்திருக்கிறது. அனைத்தையும் மீறித் தான் போராட்டங்கள் தொடர்கின்றன. ஏனென்றால், பிற எல்லாவற்றையும் விட குடியிரிமை சட்டத் திருத்தம் மக்களைப் பாதிக்கும் முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது. அந்த போராட்ட நெருப்பை அணையாமல் பாதுகாப்பதும், தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதும் நாட்டை, மக்களை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமையாகிறது.
தொடக்கத்தில், இச்சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது, வேறொரு பிரச்சனையை மறைப்பதற்காகத் தான் இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றொரு தியரி பேசப்பட்டது. அது, 2019 நாடாளுமன்றத் தேர்தல் முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற நிர்வாகவியல் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு.
நாடாளுமன்ற முடிவுகள் வெளிவந்திருந்த நேரத்தில், பாஜகவின் அசுர வெற்றி மின்னணு வாக்கு எந்திரத்தின் மூலமே சாத்தியமானது என்றொரு காரணமும் அலசப்பட்டது, அதில் உண்மையின் அளவு அனைவருக்கும் தெரிந்திருந்தது என்றாலும் அது பெரிய செய்தியாகாமல், வெகு மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைக்கப்பட்டது. இன்று மேற்கண்ட வழக்கின் மூலம் அந்த உண்மைக்கு வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது.
பாஜக வென்ற பெரும்பாலான தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று அந்தக் குழு சுட்டிக் காட்டுகிறது. நீதி மன்றம் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு தேர்தல் கமிசனுக்கு பதில் கூற பணித்திருக்கிறது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டால், இந்திரா காந்தி அலகாபாத்தில் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதைப் போல இதிலும் வழங்கப்படலாம்.
ஆனால், அவ்வாறு நடக்கும் என எதிர்பார்ப்பது, யதார்த்தத்தை மீறிய கற்பனை எதிர்பார்ப்பு என்று தான் கூற வேண்டும். ஊடகங்கள், நீதி மன்றம், தேர்தல் கமிசன் உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புகளும் காவி மயமாக்கப்பட்டு விட்டன. அதனால் தான் அடுத்தடுத்து இந்து இராஜ்ஜியம் என்ற பெயரில் பார்ப்பனிய இராஜ்ஜியம் அமைக்கும் செயல்கள் முழு வேகத்தோடு நடக்கின்றன.
தற்போது நடந்து வரும் குடியுரிமை திருத்த எதிர்ப்பு போராட்டங்கள் பார்ப்பன இராஜ்ஜிய கனவில் மண்ணை அள்ளிப் போடும் வேலையைச் செய்து வருகின்றன. அதற்கு இந்தக் காணொளி மேலும் வலு சேர்க்க வேண்டும். வெற்றி பெற்றதே ஐயத்திற்குறியது எனும் போது, அந்த வெற்றியின் வழியே கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு என்ன மதிப்பிருக்கும்?
காணொளியைப் பாருங்கள். பரப்புங்கள்.