
இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் முன்னேறிவிட முடியும் எனும் மாயை ஒரு நம்பிக்கையாக மக்கள் மனதில் திணிக்கப்பட்டது. இரண்டு, மாநிலக் கட்சிகள் தங்களை முன்னிருத்தும் தேவையிலிருந்து மாநில அளவிலான போராட்டங்களே இன்றியமையாதவை எனக் கருதின. இவை இரண்டும் எதிர்மறையான பலன்களையே இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கியுள்ளன.
இந்திய தொழிலாளர்களின் இன்றைய நிலை என்று பார்த்தால், சற்றொப்ப ஆண்டான் அடிமை காலகட்டத்தின் அடிமை நிலையை ஒத்ததாக இருக்கிறது. போராடிப் பெற்ற அத்தனை உரிமைகளையும் இழந்து விட்டு நிற்கிறது. எடுத்துக்காட்டுக்காக எட்டு மணி நேர வேலை என்பதை எடுத்துக் கொண்டால், எட்டு மணி நேர வேலை என்பது இன்றைய நிலையில் ஒரு கவர்ச்சிகரமான முழக்கம் மட்டும் தான். இந்திய தொழிலாளர் வர்க்கம் என்பதே நிரந்தர தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என்று பிளக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால், நிரந்த தொழிலாளர்கள் என்பது அடையாளத்துக்காக சிலர் என்றும், தற்காலிக தொழிலாளர்கள் முடிந்த வரை குறைக்கப்பட்டும், ஒப்பந்த தொழிலாளர்களே முழுமைக்கும் என்றான நிலையில், இன்னும் கூடுதலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு சிறு முதலாளிகளின் கீழ் சிதறடிக்கப் பட்டுவிட்ட நிலையில் எட்டு மணி நேர வேலை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த நிலை வெகு துல்லியமாக திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த அவலம் தான் மக்கள் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளுக்கும் நிகழ்ந்துள்ளது.
மறுபக்கம், வாழ்வதற்கான செலவுகள் படிப்படியாக அதிகரிக்கப் பட்டுள்ளன. ஒருமுனையில், நிறுவனங்களின் லாப வெறினாலும், ஊக வணிகம் உள்ளிட்ட ஏற்பாடுகளினாலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் வாழ இன்றியமையாத பொருட்களின் விலைவாசி. மறுமுனையில், பண்பாட்டு அற்ப உணர்ச்சிகள், போலி கௌரவங்கள் மூலம் தூண்டி விடப்படும் நுகர்வு மோகம். இவை இரண்டும் வாழ்வதற்கான செலவை மடங்குகளில் அதிகரிக்க வைத்துள்ளன.
மற்றொரு பக்கம், புற்றீசல்களைப் போல் புறப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம், பெற்றோர் உழைப்பை உரிஞ்சிக் கொண்டு, காகித சான்றிதழ்களைக் கொடுத்து வெளியில் தள்ளப்படும் மாணவர்கள். இவர்களின் வேலை வாய்ப்புக்கு அரசு எந்தவித உத்திரவாதமும் அளிக்கவில்லை. இதன் விளைவு, கடைநிலை துப்பரவுப் பணிக்குக் கூட பி.ஹெச்.டி முடித்தவர்களும் விண்ணப்பித்து போட்டியிடும் அவலம். வேலை வாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அவலப் போட்டி, முதலாளிகளுக்கு ஊதியத்தை மேலும் குறைப்பதற்கான வாய்ப்பையும். பணியாளர்களை அடிமைகளைப் போல் நடத்துவதற்கான வாய்ப்பையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டுள்ள இதே போன்ற நெருக்கடியை ஐரோப்பியத் தொழிலாளர்கள் தொழிற் புரட்சியின் தொடக்க காலத்தில் ஏதிர்கொண்ட போது, தொழிற்சாலைகளிலுள்ள இயந்திரங்களை அடித்து நொறுக்கினார்கள். ஆனால் இந்தியாவிலோ போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படாமல் மாநில அளவிலும், பிராந்திய அளவிலும் சுருங்கித் தேய்ந்து சடங்குகளைப் போன்ற வடிவை எட்டியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் குறைந்தபட்சக் கூலி உறுதிப்படுத்தல், சமூக பாதுகாப்பு, திட்டப் பணிகளில் தற்காலிகமாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியமும் பிற பலன்களும், வரைமுறையற்ற தனியார்மய மற்றும் ஒப்பந்தத் தொழில்முறை கைவிடப்படல், 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக மாற்றும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனை ஆதரித்து முன்னெடுப்பது வாழ விரும்பும் மக்கள் அனைவரின் கடமையாக இருக்கிறது. ஆதரிப்போம், தொடர்ந்து இதை முன்னெடுத்துக் கொண்டு செல்வோம்.
அதேநேரம், பாட்டாளி வர்க்கத்தின் மீது பன்முனைத் தாக்குதல்களை ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த அண்மைக் காலங்களில் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதிலும், அவர்களை அரசியல் மயமாக்குவதிலும் இந்திய இடதுசாரிகள் ஆற்றிய பங்கு என்ன? எனும் கேள்வியை எழுப்பாமல் இதனை முடித்து விட முடியாது. தம்முடைய பிரிவு, அதன் கீழான தொழிற்சங்கம், அதிலிருக்கும் தொழிலாளர்கள், அவர்களுக்கான பிரச்சனைகள் என்பதைக் கடந்து எட்டு வைத்த முயற்சிகள் என்ன எனும் ஆய்வு ஒவ்வொரு இயக்கத்திலும் செய்யப்பட வேண்டும். ஐக்கிய முன்னணியை கட்டியமைக்காமல் பாசிசங்களை வீழ்த்த முடியாது எனும் அடிப்படையிலிருந்து மீளாய்வு தொடங்கப்பட்டாக வேண்டும்.
எதிர்வரும் காலம் பாட்டாளி வர்க்கத்திற்கே.