ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்

கடந்த ஜனவரி 3ம் தேதி ஈரானின் இராணுவத் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டார். இதை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர் ஒரு பயங்கரவாதி, அமைதிக்கு எதிரானவர், முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர். எனவே, என்னுடைய உத்தரவின் பேரில் அமெரிக்க வீரர்கள் அவரை கொன்றனர் என்று தெரிவித்தார். அதாவது, அமெரிக்காவுக்கு அவரை பிடிக்கவில்லை அல்லது அமெரிக்காவுக்கு எதிராக அவர் செயல்பட்டார், அதனால் நாங்கள் அவரைக் கொன்றோம் இது தான் அமெரிக்கா சொல்வது. இதையே வேறொரு நாடு அமெரிக்காவுக்கு எதிராக செய்தால் .. .. ?

கொல்லப்பட்டவர் தனி மனிதரல்லர். ஒரு நாட்டின் மீப்பெரும் பொறுப்பில் இருப்பவர். அவரின் இறுதிச் சடங்கில் திரண்ட மக்கள் கூட்டம் அவர் தன் சொந்த நாட்டு மக்களால் நேசிக்கப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. அப்படியான ஒருவரை, உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டின் அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவரை எந்தவித தார்மீகமும் இல்லாமல் எளிதாக  கொன்றுவிட முடியுமா? கொன்று விட்டு திமிராக அதை அறிவிக்க முடியுமா? முடிந்திருக்கிறது என்றால் அதன் பொருள் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அட்டியின்றி எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பது தான். பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, துருக்கி உள்ளிட்ட வெகு சில நாடுகள் இதைக் கண்டித்திருக்கின்றன (ஈரான் இந்தியாவின் நட்பு நாடு என்ற போதிலும் இந்த படுகொலை குறித்து இந்தியா எதையும் தெரிவிக்கவில்லை) என்றாலும் அவை எதிர்ப்பு எனும் அளவில் ஒரு சடங்காகவே முடிந்து விட்டன.

ஆனால், ஈரான் இதை தன் நாட்டின் மீதான தாக்குதலாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மீது போர் அறிவித்திருப்பதன் அடையாளமாக சிவப்புக் கொடியை ஏற்றி இருக்கிறது. தொடர்ந்து ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவ நிலை மீதும், தூதரகத்தைக் குறி வைத்தும் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதன் பிறகான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பெரும் முரண்பாடு தெரிகிறது. தன்னுடைய இராணுவ நிலை தாக்கப்பட்டிருந்த போதிலும், தூதரகத்தைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அமெரிக்க எந்தவித எதிர் நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. உலக போலீஸ்காரனாக தன்னை கருதிக் கொண்டிருக்கும், ஈரானை அழித்து அதை தன்னுடைய பொம்மை நாடாக மாற்றுவதை இலக்காக கொண்டிருக்கும் அமெரிக்கா அமைதியாக இருப்பதன் பொருள் என்ன? இந்தக் கேள்வியின் முழுமையான பொருள் புரிய வேண்டுமென்றால் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆதிக்க வரலாறு புரிந்திருக்க வேண்டும்.

முகம்மது மொசாதக்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கச்சா எண்ணையின் பயன்பாடு இயந்திரம், போக்குவரத்து என எல்லா துறைகளுக்குமாக விரிந்த போது உலகின் மேலாதிக்க நாடுகள் எண்ணை வளங்களை கைப்பற்ற முனைந்தன. புதிய மேலாதிக்க வல்லரசாக உருவான அமெரிக்கா எண்ணெய் வளம் நிறைந்த மத்திய தரைக்கடல் பகுதியை தன்னுடைய நிழல் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இதில் அமெரிக்காவுக்கு எதிராக இருந்த நாடு ஈரான். அன்றைய ஈரான் பிரதமர் முகம்மது மொசாதக் நாட்டின் எண்ணை வளத்தை தேசிய மயமாக்க முனைந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து ஈரானின் முகம்மது ரஜா ஷா பஹ்லாவி தலைமையில் உள்நாட்டு இராணுவக் கலகத்தை தூண்டியது. முடிவில் 1953ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது மொசாதக்கை வீட்டுச் சிறையில் வைத்து விட்டு முகம்மது ரஜா ஷா ஈரானின் அதிபரானார். 1901 முதல் ஆங்கிலோ பெர்சியன் எண்ணெய் நிறுவனமாக இருந்து பின் மொசாதக்கினால் முடக்கப்பட்ட நிறுவனங்கள் 1954ல் பிரிட்டிஷ் பெட்ரோலியமாக மீண்டும் கால்பதித்தன.

ரஜாஷா சவாக் எனும் இரகசிய போலீஸ் அமைப்பைக் கட்டியமைத்து தனக்கு எதிராக போராடியவர்களை ஒடுக்கினார். ரஜாஷாவுக்கு எதிராகத் தான் தன்னுடைய ஆன்மீக அரசியல் பயணத்தை தொடங்கினார் கொமைனி. இஸ்லாம் மதத்தையும் அரசியலையும் இணைத்து ரஜாஷாவுக்கு எதிராக கொமைனி மக்களைத் திரட்டினார். இதனால் கொமைனி நாடு கடத்தப்பட்டார். முடிவில் 1979 எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்காவுக்கு ஓடிப் போனார் ரஜாஷா. ரஜாஷா தப்பித்த பின்னர் ஈரான் திரும்பிய கொமைனி, அயத்துல்லா எனும் பட்டமேற்று அயத்துல்லா கொமைனியாக ஈரானின் தலைவரானார். ரஜாஷாவை தங்களிடம் ஒப்படைக்க கோரியது ஈரான். ஆனால், அமெரிக்காவோ இரகசியமாக எகிப்துக்கு இடம் மாற்றி தங்க வைத்தது. இதனால் ஈரானின் மாணவர் படை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டது. உலகின் நீண்ட கால முற்றுகையில் ஒன்றான இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. புற்று நோய் காரணமாக ரஜாஷா மரணமடைந்ததாலும், அமெரிக்க அதிபராக ரீகன் பதவியேற்றதை அடுத்தும் முற்றுகை விலக்கிக் கொள்ளப் பட்டது.

ஈரானினுள் ஏற்கனவே ஒருமுறை இராணுவக் கலகம் நடத்தியிருந்ததாலும் மீண்டும் அதே முறை பலனளிக்காது என்பதாலோ கொமைனி விழிப்புடன் இருந்ததால் அம்பலப்பட நேரிடும் என்பதாலோ தெரியவில்லை, அமெரிக்காவின் நண்பராக இருந்த சதாம் உசேனை பயன்படுத்தியது. நீண்ட காலமாக இருந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சனையை முன்வைத்து 1980ல் ஈரான் மீது போர் தொடுத்தார் சதாம் உசேன். எட்டாண்டு காலம் நடந்த இந்தப் போரில் ஈரானின் பொருளாதாரம் பெரிதும் குலைந்து போனது. ஐநாவின் முயற்சியினால் சமாதானம் ஏற்பட்டிருந்தாலும், ஐநா என்பது அமெரிக்க சபை தானே. பல்வேறு நிபந்தனைகள் ஈரான் மீது சுமத்தப்பட்டன. அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி என்பதில் தொடங்கி ஹிஸ்புல்லாவை ஒழிப்பதற்கு இராணுவ உதவி செய்வது வரை பல நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக் கொண்டது. என்றாலும் ஈரானுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுப்பதை அமெரிக்க நிறுத்திக் கொள்ளவில்லை. அது ஈரானின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்துவது வரை நீண்டது. ஹஜ் பயணிகள் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய போதிலும் இஸ்லாமிய நாடுகள் எதுவும் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் சன்னி முஸ்லீம் நாடுகள், ஈரானோ ஷியா முஸ்லீம் நாடு.

காசிம் சுலைமானி

ஈரான் ஈராக் போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து சதாமை ஆதரிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு முடிந்து போனது. சதாமின் சர்வாதிகார ஆடம்பர வாழ்க்கையும், குர்துகள் மீது தொடுத்த தாக்குதல்களும் அமெரிக்காவுக்கு நெருடலை ஏற்படுத்தின. விளைவு, குவைத்தின் எல்லையோரம் இருந்த ஈராக்கின் எண்ணை வயல்களிலிருந்து அமெரிக்காவின் ஆசியோடு எண்ணையை திருடியது குவைத். அமெரிக்காவிடமும் ஐநாவிடமும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் குவைத்தை ஆக்கிரமித்தது ஈராக். அப்புறமென்ன, ஜனநாயகத்தை காக்கும் மாபெரும் கடமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. இதனால் ஈராக் நாசமடைந்தது, ஈராக்கின் எண்ணெய் வயல்கள் அமெரிக்காவின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கின்றன.

இந்த குளறுபடிகளால் ஈரானை கவனிக்காமல் விட்டிருந்த அமெரிக்கா 2002ல் இஸ்ரேல் மூலம் புதிய சிக்கலை உருவாக்கியது. பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக ஈராக்கின் மீது குற்றம் சாட்டிய அமெரிக்கா அதற்கு ஆதாரமாக ஒரு குண்டூசியைக் கூட காட்டவில்லை. அதேபோலவே, ஈரான் இரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லாமல் இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றம் சாட்டின. ஈரானின் மறுப்பை ஐநா பொருட்படுத்தவில்லை. ஐநாவின் அணு ஆயுத முகமை பத்தாண்டுகள் ஈரானின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் முடிவு ஈரான் மீது திணிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் ஈரானும் அதை ஏற்றுக் கொண்டது.

முதலில், ஐநாவின் அணு ஆயுத கட்டுப்பாடு என்பதே ஒரு போங்காட்டம். அணு ஆயுதம் மனித குலத்தின் பேரழிவு என்றால், எந்த நாடும் அதை வைத்திருக்கக் கூடாது என்று முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லா நாட்டுக்கும் அனுமதி அளித்து அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை என்று பார்க்க வேண்டும். அல்லது ஏற்கனவே கண்டுபிடித்து அணு ஆயுதங்கள் தயாரித்து வைத்திருக்கும் நாடுகள் அதை மேம்படுத்தக் கூடாது, குறிப்பிட்ட காலக் கெடுவில் அவற்றை அழிப்பதற்கான விதியை ஏற்படுத்த வேண்டும். இதுவரை கண்டுபிடிக்காத நாடுகள், அதை கண்டுபிடிக்கவோ தயாரிக்கவோ முயலக் கூடாது என்று கூற வேண்டும். ஆனால் அணு ஆயுத பரவல் தடை என்ற பெயரில் புதிதாக எந்த நாடும் அனு ஆயுத ஆய்வோ தயாரிப்போ செய்யக் கூடாது. ஆனால் ஏற்கனவே அந்த தொழில் நுட்பமும் ஆயுதமும் வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் அதை மேம்படுத்தி, ஹைட்ரஜன் குண்டுகளாகவும், ஹீலியம் குண்டுகளாகவும் முன்னேறிச் செல்லும். அதை கொண்டு செல்லும் ஏவுகணைகளையும் நவீனப்படுத்திக் கொண்டே செல்லும் அதை ஐநாவோ வேறு எந்த நாடுகளோ எதுவும் கேட்க முடியாது. ஆனால் புதிதாக எந்த நாடுகளும் கண்டு பிடிக்க முயற்சி செய்தால் அல்லது கண்டு பிடிக்க முயற்சி செய்வதாக சந்தேகம் ஏற்பட்டால் அந்த நாட்டை ஏற்கனவே அணு ஆயுதம் வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் (குறிப்பாக அமெரிக்கா) கண்காணிக்கும். இதற்குப் பெயர் தான் அணு ஆயுத பரவலை தடுப்பது(!)

காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம்

அமெரிக்காவும் ஐநாவும் ஈரானை கண்காணித்துக் கொண்டிருக்கும் போதே (ஈரான் அணு ஆயுத கண்டுபிடிப்பை செய்கிறது என்பதை உறுதி செய்யும் முன்னரே) ஈரானின் மீது பல பொருளாதாரத் தடைகள் அடுத்தடுத்து விதிக்கப்படுகின்றன. இதனால் ஈரானின் பொருளாதாரம் அதள பாதாளத்துக்குச் சென்றது. இதன் பிறகு 2015ல் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கூட்டாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்கின்றன. அதாவது அனு தொடர்பான எந்த ஆய்வையும் எதிர்காலத்தில் ஈரான் செய்யக் கூடாது எனவும், அதனை பிளஸ் ஃபைவ் எனப்படும் நாடுகள் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் ஒப்பந்தம் போடப்படுகிறது. பதிலாக ஈரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடைகள் படிப்படியாக நீக்கப்படும் எனும் உறுதி ஈரானுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. அமெரிக்காவில் ஒபாமா மாறி ட்ரம்ப் வந்ததும் 2018ல் தன்னிச்சையாக அமெரிக்க அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. இது ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட அந்த ஒப்பந்தத்திலிருக்கும் நாடுகளுக்கும் கூட ஏற்புடையதாக இல்லை. அமெரிக்கா தான் மட்டுமல்லாது தன்னுடன் நட்பு நாடுகளாக இருக்கும் எவையும் ஈரானுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என தடை விதிக்கிறது. இந்த அடிப்படையில் தான் இந்தியாவும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது.

ஆனால், அமெரிக்கா, ஐநாவின் இவ்வளவு நெருக்கடிகளையும் கடந்து ஈரான் படிப்படியாக தன்னை வலுப்படுத்தியது. அவ்வாறு ஈரான் வலுவடைவதற்கு கொமைனிக்கு மிகுந்த ஆதரவாகவும், தூண்டுதலாகவும், துணிவாகவும் செயல்பட்டவர் தான் காசிம் சுலைமானி. ஈரானில் கொமைனிக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருப்பவர். சிறந்த உத்தி வகுப்பாளராக அறியப்பட்டவர். மத்திய கிழக்கின் அமெரிக்காவுக்கு எதிரான சில நகர்வுகளுக்கு மூளையாக இருந்தவர். இது தான் அவர் மீது அமெரிக்கா கொலைவெறி கொள்வதற்கான காரணங்கள்.

இந்த பின்னணியில் இருந்து தான் அந்த கேள்வியை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஈரானை சீரழித்து அதன் எண்ணை வயல்களை தன் ஆளுகையின் கீழ் வைத்துக் கொள்வதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்திருக்கும் அமெரிக்கா, தன் இராணுவ நிலைகளை ஈரான் தாக்கியிருந்தும் கூட அமைதியாக இருப்பது ஏன்?

முகம்மது ரஜா ஷா பஹ்லாவி

இதற்கு மூன்று காரணங்களை கூறலாம். 1. அமெரிக்க செனட் சபைகளில் ட்ரம்ப் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி. ஏற்கனவே ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. தன்னிச்சையாக செயல்படும் அளவுக்கு இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு ட்ரம்புக்கு இல்லை. எனவே, ஒரு நாட்டின் மீது தாக்குதல் கொடுக்கும் முடிவை இரு அவைகளையும் மீறி ட்ரம்ப் தன்னிச்சையாக எடுக்க முடியாது.

2. நெருங்கிய கூட்டு நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கூட ஈரானின் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்கவில்லை. ஈரானின் எரிபொருட்கள் தவிர்க்க முடியாமல் ஐரோபியாவுக்கு இன்றியமையாததாக இருக்கின்றன. அண்மையில் ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக எண்ணெய் விலையை அதிரடியாக உயர்த்த அதனால் எரிபொருள் இல்லாமல் ஐரோப்பிய நாடுகள் தவித்ததை இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். தவிரவும் ரஷ்யா ஈரானுக்கு ஆதரவான நிலை எடுத்தால் அது அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாக இருக்கும்.

3. இவற்றை விட முதன்மையானதாக கொல்லப்பட்டது காசிம் சுலைமானி மட்டுமல்லர், ஈராக்கின் இராணுவத் தளபதி அபு மஹ்தி அல் முஹாண்டியும் ஒருவர். ஈராக் அமெரிக்காவின் பொம்மை ஆட்சியின் கீழ் இருந்தாலும் காசிம் சுலைமானி ஈராக்கினுள் ஈரான் ஆதரவு குழுக்களை உருவாக்கியிருக்கிறார். முஹாண்டியும், காசிமும் இணைந்து ஈராக்கை அமெரிக்காவிடமிருந்து ஈரானுக்கு நெருக்கமாக நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது ஈரானையும் ஈராக்கையும் வெளிப்படையாக ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்குள் கொண்டு வந்து விடக் கூடும். அவ்வாறு நடந்தால் ஈராக்கில் நிலை கொண்டிருக்கும் ஐயாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க இராணுவ துருப்புகளின் நிலை கேள்விக்கிடமாகி விடும்.

இவை அல்லாத வேறு காரணங்களும் இருக்கக் கூடும். எப்படி இருந்தாலும் அமெரிக்காவின் மேலாதிக்கம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதே வெளிப்படும் உண்மை. அதேநேரம் தனக்கு எதிராக செயல்பட்ட இருவரையும் (ஈரானின் காசிம் சுலைமானி, ஈராக்கின் அபு மஹ்தி அல் முஹாண்டி) அமெரிக்கா கொன்றிருப்பதும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லாமல் உலக நாடுகள் அமைதி காப்பதும் அமெரிக்காவுக்கு சாதகமானவையே. இதை தகர்ப்பதற்கு, அமெரிக்காவின் பிராந்தியக் கைக்கூலியாக இருக்கும் இந்தியாவை சரியாக புரிந்து கொள்வதே இப்போதைய தேவையாக இருக்கிறது.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

One thought on “ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்

  1. வணக்கம் தோழர்

    கட்டுரை மிக சிறப்பு. எனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன் தோழர்….

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s