
கடந்த 12ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்பதற்காக காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருக்கும் தாவீந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண செய்தி போல கடந்து போகத் தோன்றும். ஏனென்றால், காஷ்மீரில் இராணுவமும் போலீசும் நடத்தி வரும் வெறியாட்டங்களை அறிந்திருப்பவர்களுக்கு, இது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாக இருக்காது. அதேநேரம், இந்திய அரசையும், காவி பயங்கரவாதிகளையும் புரிந்திருப்பவர்களுக்கு இதில் முக்கியமான செய்தி இருகிறது. தாவீந்தர் சிங்கை விசாரித்த அதிகாரிகள் கூட, “பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அவற்றை இப்போது கூற முடியாது. இந்த விசயத்தில் இரகசியம் காக்கப்படுவது அவசியம்” என்று கூறியதாக 13ம் தேதி தமிழ் இந்து நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பதும், அதன் பலன்களை அனுபவிப்பதும் புதிய செய்திகள் அல்ல என்றால், அதைப் போன்றதான இந்தச் செய்தியில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இந்திய அரசியல் வரலாற்றில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவரை சீக்கிரம் தூக்கில் போடுங்கள் என்று போராட்டம் நடத்தியது ஒரு கட்சி. அந்தக் கட்சி பாரதிய ஜனதா கட்சி, அந்த தூக்கு தண்டனை கைதி அப்சல் குரு, குற்றம் நாடாளுமன்ற தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு உதவியது. 2013 பிப்ரவரியில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு விட்டார் என்பதானால் அதுகுறித்த சிறு நினைவூட்டல்.

2001 டிசம்பர் 13ம் தேதி காலை 11:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தினுள் வெள்ளை கார் ஒன்று நுழைகிறது. நாடாளுமன்றத்தையே தகர்க்கக் கூடிய அளவுக்கு வெடி பொருட்களை கொண்டிருந்த அந்த காரிலிருந்து இறங்கிய ஐந்து பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்குகிறார்கள். பாதுகாப்பு வீரர்களும் திருப்பித் தாக்க, வந்த ஐந்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள். மட்டுமல்லாது எட்டு பாதுகாப்பு வீரர்களும் ஒரு தோட்டக்காரரும் இதில் கொல்லப்பட்டனர். இது இந்திய அரசியலில் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் அளவுக்கு பதட்டத்தை உண்டாக்கியது. இதில் கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளும் பாகிஸ்தானியர்கள் அல்ல என்று இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்தது பாகிஸ்தான். அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என உறுதிப்படுத்திய ஒரே ஆதாரம், ‘அவர்கள் பாகிஸ்தானிகள் தான்’ எனும் அப்சல் குருவின் வாக்குமூலம் மட்டுமே. இந்த வாக்கு மூலத்தை போலீஸ் வாங்கிய வாக்குமூலத்தை ஏற்கவியலாது என்று நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. கூடுதல் விவரம் தேவைப்படுவோர் இந்த கட்டுரையை படித்துப் பார்க்கலாம்.
அப்சல்குரு: நிரபராதியின் மரணத்தில் திருப்தியடைந்த இந்திய மனசாட்சி.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேனன், சிறையிலிருந்து கடிதம் எழுதினார், “தீவிரவாதி டைகர் மேமனின் சகோதரன் என்பதற்காக என்னை தூக்கில் போடுங்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தொடர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியாக என்னை தூக்கில் போடாதீர்கள். அதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்று. காவி பயங்கரவாதத்தின் அரசியல் எதிரிகளாக சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்று அடையாளம் காணப்பட்டார்களோ, அன்றிலிருந்து அவர்களின் குரல் சமூகத்தில் பொதுக் கருத்தாக ஏற்றப்பட்டதே இல்லை. இதே போல் தான் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு சிறையில் தூக்கை எதிர்பார்த்துக் காத்திருந்த அப்சல் குரு சில கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்கள் நிரபராதியான அவர் எப்படி இந்த வழக்கில் சிக்க வைக்கப் பட்டார் என்பதை விவரிக்கின்றன. அந்தக் கடிதங்களில் அப்சல் குரு குறிப்பிட்டிருந்த ஒரு பெயர் தான் இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் தாவீந்தர் சிங்.



காஷ்மீரில் பல போராளிக் குழுக்கள் இயங்கி வந்தன. அவற்றில் இந்தியா உருவாக்கிய போராளிக் குழுக்களும் அடக்கம். இந்தப் போராளிக் குழுக்கள் ஒன்றிலிருந்து வெளியேறி கடை ஒன்றை வைத்துக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தவர் தான் அப்சல் குரு. சாராயம் காய்ச்சுபவனையே சும்மா இருக்க விடாத காவல் துறை முன்னாள் போராளியை இருக்க விடுமா? அவ்வப்போது பணம் பறிக்கவும், உளவு சொல்பவராகவும் அப்சல் குருவை பயன்படுத்துகிறது காவல் துறை. ஒரு நாள் தாவிந்தர் சிங் (அப்சல் குரு தன்னுடைய கடிதத்தில் இவரை திராவிந்தர் சிங் எனக் குறிப்பிட்டிருக்கிறார்) ஒருவரை அறிமுகப்படுத்தி இவரை பாதுகாப்பாக தில்லியில் கொண்டு போய் சேர்த்து விடுங்கள் என்று கேட்கிறார். மறுத்துப் பேச இயலாத அப்சல்குரு அதைச் செய்கிறார். அவ்வாறு அப்சல்குரு தில்லிக்கு கொண்டு சென்று சேர்த்த அந்த ஒருவர், நாடாளுமன்ற தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளில் ஒருவன். அவ்வளவு தான். மறுநாள் அப்சல்குரு கைது செய்யப்படுகிறார். தூக்கிலிடவும் பட்டார். ஆனால் தாவிந்தர் சிங்கோ பதவி உயர்வு பெற்று காவல் துறை துணை கண்காணிப்பாளராக ஆகி விட்டார்.
இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பல கேள்விகளுக்கு விடை காணப்படவே இல்லை. அவசர அவசரமாக தேசத்தின் மனசாட்சி உலுக்கி விடப்பட்டு ஒருவனை பிடித்து தண்டித்து கதை முடித்து வைக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் எனும் கேள்வி எழுப்பப்படவே இல்லை. சரியான கோட்டில் விசாரிக்கப்பட்டால் அன்றைய வாஜ்பேயி, அத்வானி முதல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தண்டனையை அடைய வேண்டியதிருக்கும். ஆம் நாடாளுமன்ற தாக்குதலின் சூத்திரதாரிகள் அவர்கள் தாம்.
தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை அண்மைய புல்வாமா தாக்குதலும், வாக்கு இயந்திர முறைகேடுகளும் தெளிவாக காட்டுகின்றன. இராஜிவ் காந்தி கொலை தொடங்கி, இராஜ்குமார் கொலை வரை (சுவாதி கொலை வழக்கு) இங்கு எந்த விசாரணையும் நேர்மையாக நடக்கவில்லை. அதுபோன்ற ஏராளமான வழக்குகளில் தற்போது அம்பலப்பட்டிருக்கும் தாவிந்தர் சிங்கும் அடக்கம். இப்படிக் கூறுவதன் மூலம் தாவிந்தர் சிங் மாட்டிக் கொண்டார் என்றோ, காவி பயங்கரவாதம் வெளிப்பட்டு விட்டது என்றோ பொருள் கொள்ள முடியாது. ஏதோ ஒரு தேவை காரணமாக இது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது என்று தான் கொள்ள வேண்டும். ஏனென்றால் நீதிபதி லோயாவைக் கொன்றது போல் சத்தமில்லாமல் கொலை செய்வதிலும் அவர்கள் வல்லவர்கள். காவி பயங்கரவாதம் என்பதும், அரசு எந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பதும் எவ்வளவு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது இன்னும் ஒரு சான்று. அவ்வளவு தான்.
இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் DSP தேவிந்தருக்கு தொடர்பா? கறைப்படிந்த அதிகாரி ஏன் காவல்துறையின் மிக உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்?