
2. முதற் பதிப்புக்கு 1884ல் எழுதிய முன்னுரை
ஓர் அர்த்தத்தில் பின் வரும் அத்தியாயங்கள்மார்க்ஸ் விட்டுச் சென்ற பனியை செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே. வரலாற்றைப் பற்றித் தன்னுடைய – எங்களுடைய என்று சில வரம்புகளுக்கு உட்பட்டு நான் சொல்லக் கூடும் – பொருள் முதல் வாத ஆராய்ச்சியின் மூலம் தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களுக்கு முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் நாற்பது ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் கண்டுபிடித்திருந்த வரலாற்று பொருள் முதல் வாத கண்ணோட்டத்தைத் தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார். மார்கன் அநாகரீகத்தையும் நாகரிகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது மார்க்ஸ் எந்த முடிவுகளைச் செய்தாரோ – பிரதான விசயங்களில் – அதே முடிவுகளுக்கு வருமாறு இந்தக் கண்ணோட்டம் செய்தது. மேலும், ஜெர்மனியில் அதிகார வர்க்கச் சார்புள்ள பொருளியலாளர்கள் எப்படி பல ஆண்டுகளாக மூலதனம் என்ற நூலிலிருந்து ஆர்வத்துடன் திருடிய போதிலும் அந்த நூலைப்பற்றி விடாப்பிடியாக மௌனம் சாதித்து அமுக்கியும் வந்தார்களோ, அதே மாதிரியாக இங்கிலாந்தில் ‘வரலாற்றுக்கு முந்திய’ விஞ்ஞானத்தின் சார்பாகப் பேசியவர்கள் மார்கன் எழுதிய பண்டைக் காலச் சமூகம்* என்ற நூல் விசயமாக நடந்து கொண்டார்கள். (Ancient Society, or Researches in the Lines ofHuman Progress from Savagery through Barbarism to Civilization. By Lewis H. Morgan, London, MacMillan & co., 1877. இப் புத்தகம் அமெரிக்காவில் அச்சிடப்பட்டது, லண்டனில் அனேகமாகக் கிடைப்பதில்லை. ஆசிரியர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். (ஏங்கல்ஸ் எழுதிய குறிப்பு)) காலஞ்சென்ற என்னுடைய நண்பர் செய்ய முடியாமல் போன பணிக்குப் பதிலாக நான் செய்திருக்கின்ற பணி அற்பமாகத்தான் இருக்க முடியும். மார்க்ஸ் மார்கனுடைய நூலிலிருந்து விரிவான பகுதிகளை* எடுத்து அவற்றுக்கு விமர்சனக் குறிப்புகளை எழுதியுள்ளார். (கா. மார்க்ஸ் எழுதிய மார்கணுடைய பண்டைக் கால சமூகம் என்ற நூலின் சுருக்கம் இங்கு குறிப்பிடப்படுகிறது) அவை எனக்கு முன்னால் இருக்கின்றன. இந்நூலில் சாத்தியமான இடங்களில் அவற்றை அப்படியே வெளியிட்டிருக்கிறேன்.
பொருள் முதல் வாதக் கருத்தமைப்பின் படி – கடைசியாகப் பார்க்கும் பொழுது – உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும், புனருற்பத்தியுமே[மீள் உற்பத்தியுமே] வரலாற்றில் தீர்மானகரமான காரணியாகும். ஆனால் இது இரு வகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது – அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும் அவற்றை பெறுவதற்குத் தேவையான கருவிகளையும் உற்பத்தி செய்வது -; மறுபக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது – அதாவது மனித இனத்தைப் பெருக்குவது -. ஒரு திட்டவட்டமான வரலாற்றுச் சகாப்தத்தைச்[காலகட்டத்தைச்] சேர்ந்த, ஒரு திட்டவட்டமான நாட்டைச் சேர்ந்த மக்கள் எந்த சமூக அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகிறார்களோ அந்த சமூக அமைப்பை உற்பத்தியின் இரண்டு வகைகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு பக்கத்தில், உழைப்பின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் மறுபக்கத்தில், குடும்பத்தின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன. எந்த அளவுக்கு உழைப்பின் வளர்ச்சி குறைவாக இருக்கிறதோ, எந்த அளவுக்கு உழைப்பின் உற்பத்தியளவு குறுகியதாகவும், அதன் காரணமாக சமூகத்தின் செல்வமும் குறுகியதாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சமூக அமைப்பின் மீது குலமரபு உறவுகள் ஆதிக்கம் பெற்றிருப்பதாகத் தோன்றும். எனினும் குலமரபு உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சமூகக் கட்டுக் கோப்புக்குள்ளாகவே உழைப்பின் உற்பத்தித் திறன் மேன்மேலும் வளர்கிறது; அத்துடன் கூடவே தனிச் சொத்தும் பரிவர்த்தனையும்[கொடுத்து வாங்குவது] வளர்கின்றன; செல்வத்தில் வேற்றுமைகளும் மற்றவர்களுடைய உழைப்புச் சக்தியை பயன்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பும், அதன் மூலம் வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையும் வளர்கின்றன. இவை புதிய சமூக அம்சங்கள்; இவை தலைமுறைக்குப் பின் தலைமுறையாக பழைய சமூகத்தின் கட்டுக்கோப்பைப் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப் பார்க்கின்றன. முடிவில், அவ்விரண்டுக்கும் இடையிலுள்ள பொருந்தா நிலை ஒரு முழுமையான புரட்சிக்கு இட்டுச் செல்கிறது. புதிதாக வளர்ச்சியடைந்த சமூக வர்க்கங்களின் மோதலில் குலமரபுக் குழுக்களின் அடிப்படையில் அமைந்திருந்த பழைய சமூகம் வெடித்துச் சிதறி விடுகிறது. அந்தப் பழைய சமூகத்தின் இடத்தில் அரசாக அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய சமூகம் தோன்றுகிறது. அந்த அரசின் கீழ்நிலை அங்கங்களாக குலமரபுக் குழுக்கள் இனி இல்லை, வட்டார அடிப்படையில் அமைந்த குழுக்களே இருக்கின்றன. இந்தப் புதிய சமூகத்தில் சொத்துடமை அமைப்பு குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும், இந்த சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களும் இப்போது சுதந்திரமாக வளர்கின்றன. இந்த வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களுமே இதுவரை ஏடறிந்த எல்ல வரலாற்றுக்கும் உள்ளடக்கமாக இருக்கின்றன.
நமது ஏடறிந்த வரலாற்றின் இந்த வரலாற்றுக்கு முந்திய அடிப்படையின் முக்கியமான அம்சங்கலைக் கண்டு பிடித்து மறுபடியும் நிர்மாணித்துக்[உருவாக்கிக்] கொடுத்தது தான் மார்கனுடைய மகத்தான் சிறப்பாகும். மேலும், மிகவும் தொன்மையான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய வரலாற்றின் இதுவரை விடுவிக்க முடியாதிருந்த மிகவும் முக்கியமான புதிர்களை விடுவிப்பதற்குரிய வழியை வட அமெரிக்க செவ்விந்தியர்களின் குல உறவுகளில் கண்டுபிடித்ததும் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும். எனினும் அவருடைய நூல் ஒரே நாள் வேலையல்ல. அவர் தன்னுடைய விவரத் தொகுப்பைப் புரிந்து கொள்வதற்கு நாற்பதாண்டுகள் போராடி கடைசியில் முழு வெற்றி பெற்றார். நம் காலத்தில் வெளியிடப்பட்டிருக்கின்ற, சகாப்தத்தைப் படைக்கின்ற நூல்களில் அவருடைய நூலும் இடம் பெற்றிருப்பது அதனால் தான்.
பிவரும் விளக்க உரையில் மார்கனிடமிருந்து நான் எடுத்துக் கொண்டிருப்பது எது, நானாக சேர்த்துக் கொண்டது எது என்று மொத்தத்தில் வாசகர்கள் சுலபமாக வேறுபடுத்திப் பார்க்க முடியும். கிரீஸ், ரோமாபுரி பற்றிய வரலாற்றுப் பகுதிகளில் மார்கன் கொடுத்துள்ள விவரத் தொகுப்புகளுடன் நான் நின்றுவிடவில்லை; நான் சேகரித்தவற்றையும் எழுதியிருக்கிறேன். கெல்டுகள், ஜெர்மானியர்கள் பற்றிய பகுதிகள் கணிசமான அளவுக்கு என்னுடைய சொந்தச் சரக்கேயாகும். இவை சம்மந்தமாக மார்கனிடம் இருந்தவை பெரும்பாலும் இரண்டாம் தரமான மூலாதாரங்களே. ஜெர்மானிய நிலைமைகளைப் பொருத்தமட்டில் மார்கனுக்குக் கிடைத்தவை டாசிட்டஸ் எழுதிய நூலைத் தவிர திரு ஃப்ரீமான் எழுதிய கேவலமான மிதவாதப் புரட்டுகள் மட்டுமே. மார்கனுடைய நோக்கத்துக்குப் போதுமானவையாக இருந்த பொருளாதார வகையான வாதங்கள் என்னுடைய நோக்கத்துக்கு சிறிதளவில் கூடப் போதுமானவை அல்ல. அவை எல்லாவற்றையும் நானே புதிதாக விரித்துரைத்து இருக்கிறேன்.
முடிவுரையாக ஒன்று: மார்கனை திட்டமாக மேற்கோள் காட்டாமல் செய்யப்பட்டுள்ல முடிவுகளுக்கு பொறுப்பு நானே.
1884 மே 26 வாக்கில் எழுதப்பட்டது.
முந்திய பதிவு: