
இன்று 71 வது குடியரசு தினம் நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகமாக யாரும் கொண்டாடுகிறார்களா? என்று கொண்டாடிக் கொண்டிருப்பவர்களைக் கேட்டால் தான் தெரியும். இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்களில் பெரும்பான்மையோர், ‘ஞாயிற்றுக் கிழமையில் வந்து விட்டதே, ஒரு நாள் விடுப்பு போய் விட்டதே’ எனும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதன் பொருள், ஞாயிற்றுக் கிழமை விடுப்பை விட குடியரசு தினம் ஒன்றும் அவ்வளவு இன்றியமையாதது அல்ல என்பது தான். இதை அவர்கள் நேர்மறையில் பொருள் கொண்டிருக்கிறார்களா, எதிர்மறையில் பொருள் கொண்டிருக்கிறார்களா என்பதை விட்டு விடலாம். அடுத்த முறை விடுமுறை தினத்தில் வராமல் இருக்க அவரவர்களின் கடவுளர்கள் அருள் பாலிப்பார்களாக!
இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை,
இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச் சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடி மக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், சமய நம்பிக்கை மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் உறுதியாக கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் (உடன் பிறப்புணர்வை) சகோதரத்துவத்தை அவர்கள் அணைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி ஏற்கிறோம்.
என்று கூறுகிறது. இது இப்படியே இருக்கட்டும்.
கீழே இருப்பது வெகுமக்கள் ஊடகத்தில் வந்த ஒரு காணொளிக் காட்சி. இது பாசிசத்தின் குறியீடுகள் என்ன என்று விளக்குகிறது.
பார்த்து விட்டீர்களா?
இன்றைய எதார்த்த நிலை என்ன? நம் அரசியல் சாசனத்தின் முகப்புரையில் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த வாசகங்களுக்கு பொருத்தமாக எதார்த்த நிலை இருக்கிறதா? அல்லது காணொளிக் காட்சிக்கு பொருத்தமாக எதார்த்த நிலை இருக்கிறதா? பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இது குடியரசு நாடா? இல்லையா என்பதை.