கரோனா வைரஸ்: சில கேள்விகள்

கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள வூஹான் எனும் நகரில் கரோனா என்ற உயிர்க் கொல்லி வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்டது. சற்றேறக் குறைய ஒரு மாதம் ஆகி விட்ட இன்றைய போதில் உலகம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை செய்திருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தம் மக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பதோடு விமானங்களை ரத்து செய்திருக்கின்றன.

சீனாவில் வூஹான் மற்றும் அதனைச் சுற்றிய 30 நகரங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்பதே நாளில் பெரிய சிறப்பு மருத்துவமனை ஒன்று கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்து வேலைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. வணிக வளாகங்கள், சாலைகள் வெறிச்சோடிப் போகும் அளவுக்கு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப் பட்டிருக்கிறார்கள். தவிர்க்க இயலாமல் வெளியில் வருவோரும் மருத்துவ முகமூடி அணிந்தே வெளியே வருகிறார்கள்.

ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை 140 பேர் வரை இறந்திருக்கிறார்கள். இது அதிகரிக்கவும் கூடும். சீனா மட்டுமல்லாது பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாமல் இந்த வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் நாடுகளாக இருபது நாடுகளை அறிவித்து எச்சரித்திருக்கிறது ஐ.நா அவை.

கரோனா வைரஸ் என்பது புதிய வைரஸ் அல்ல, ஏற்கனவே இந்த வைரஸ் கண்டறியப்பட்டது தான் என்பதோடு இந்த வைரஸின் ஆறு வகைகள் கண்டறியப்பட்டு அதை கரோனா குடும்பம் என்று அழைக்கிறார்கள். அந்த ஆறில் இல்லாமல் இது ஏழாவதான புதிய வகை என்கிறார்கள். இதற்கு நாவல் கரோனா வைரஸ் (2019nCoV) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த வகை வைரஸ் வீட்டு விலங்குகள், பறவைகள், ஊர்வன(பாம்பு), கடல் உணவுகளின் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களிடமிருந்தும் மனிதர்களுக்கு பரவுகிறது.

இந்த வைரஸ் தக்கியிருப்பதன் அறிகுறிகளாக சளி, காய்ச்சல், கடுமையான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு ஆகியவற்றைக் கூறுகிறார்கள். இதன் தீவிரம் தான் மரணம் வரை நோயாளிகளைத் தள்ளிக் கொண்டு செல்கிறது.

கரோனா வைரஸ்

மேற்கண்ட விவரங்கள் தான் புதிய கரோனா வைரஸ் குறித்து கிடைத்திருக்கும் தகவல்கள். இவை தான் உலகையே அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவ்வப்போது இது போல புதிது புதிதான வைரஸ்கள் கிளம்பி மனிதர்களை கதிகலங்க வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. சார்ஸ், பன்றிக் காய்ச்சல், எபோலா, ஜிகா, மெர்ஸ், நிபா என்று புதிது புதிதாய் வைரஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்திற்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள், ஒரே மாதிரியான அச்ச எச்சரிக்கைகள், மரணங்கள், பின் புயல் ஓய்வது போல் காணாமல் போய் விடுகின்றன. ஒருவேளை வைரஸ்களின் அரசு மனிதர்களின் மீது போர் அறிவிப்பு ஏதும் செய்திருக்கிறதோ! பிற வைரஸ்கள் போலவே இதுவும் காணாமல் போய் விடும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. ஆனால் வேறு சில ஐயங்கள் எழுகின்றன.

காலரா, அம்மை போன்ற நோய்கள் மனிதர்களை தாக்கியிருக்கின்றன. அன்றைய உலக மக்களை தொகையை கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கெல்லாம் காலரா கோர ஆட்டம் ஆடியிருக்கிறது. அவைகளுடன் ஒப்பிடப் போனால் இப்போதைய வைரஸ்கள் ‘லுச்சாப் பயல்கள்’ போல தான். ஆனால் ஏன் உலகையே அச்சத்துக்குள் தள்ளுவது போல் பீதி கிளப்பப்படுகிறது? எச்சரிப்பதில் தவறில்லை. ஆனால் 30 நகரங்களுக்கு சீல் வைப்பது, விமானப் போக்குவரத்தை ரத்து செய்வது என்று உலகமே அல்லோல கல்லோகப் படுகிறதே ஏன்?

இப்போதைய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகட்டும், இதற்கு முந்தைய வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகட்டும், மரணமடைந்தவர்கள் எதனால் மரணமடைந்தார்கள் என்று உடற்கூராய்வு (போஸ்ட்மார்ட்டம்) செய்து தொகுக்கப்பட்டிருக்கிறதா? மெய்யாகவே அவர்கள் வைரஸ் தாக்குதல்களால் தான் இறந்தார்களா? அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? வேறு காரணங்கள் இருக்கின்றன என்றால் மீண்டும் மீண்டும் உலகை பீதியில் உறைய வைப்பது ஏன்?

உலகில் கரோனாவுக்கு முன் பல வைரஸ் தாக்குதல் நிகழ்ந்து மக்கள் மடிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை இப்படி மக்கள் மடியும் போதும் குறிப்பிட்ட அந்த வைரஸ் எவ்வாறு மனிதர்களை கொல்கிறது? அதாவது, வைரஸ் தொற்றிய பின்னர் உடலில் படிப்படியாக என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன? என்ன விதத்தில் அது மனிதனை மரணத்தை நோக்கி நடத்திச் செல்கிறது? நோய்க்கு எதிராக செய்யப்படும் மருத்துவம் என்னென்ன விதங்களில் அவற்றை முறியடிக்கிறது? எப்படி நலனை மீட்டெடுக்கிறது? என்பன குறித்த எந்தப் பதிவும் மருத்துவ உலகில் இருப்பதாய் தெரியவில்லை. இப்படி செய்ய வேண்டிய எதையும் கவனிக்காமல் வைரஸை காட்டி பீதி உண்டாக்குவது எந்த விதத்தில் சரியானது?

ஆறே நாளில் மருத்துவமனை முனைப்புகள்

உடல் நலனின் மனதுக்கு தொடர்பு உண்டா இல்லையா? தொடர்பு இருக்கிறது என்பது அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்டது தானே. என்றால், இப்படி அச்சம் உணர்வை உச்சத்துக்கு கொண்டு சென்றால் அதனால் நோயாளிகளின் உடல்நலம் பாதிக்கப்படாதா? கவனிக்கவும் தொடர்ச்சியான அனைத்து வைரஸ் பாதிப்புகளிலும் சிறப்பு அறிகுறி என்று எதுவுமே இல்லை சளி, காய்ச்சல், இருமல் போன்றவை தான். என்றால் இப்படி அச்ச உணர்வை உயர்த்தி சாதாரண அறிகுறிகளை வைரஸ் பாதிப்பாக மாற்றுவதில் என்ன அறிவியல் அடிப்படை இருக்கிறது? இதன் மூலம் வைரஸ் பாதிப்பு என்று எதுவுமே இல்லை என்று கூற வரவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படும் ஆறாயிரத்துக்கும் அதிகமானோரில் எவ்வளவு பேர் சாதாரண அறிகுறி உள்ளவர்கள்? எத்தனை பேர் வைரஸ் பாதித்த அறிகுறி உள்ளவர்கள்? எப்படி பிரித்தறிவது?

பூமியில் எப்படி கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றனவோ அதுபோல ஒவ்வொரு மனித உடலும் ஒரு கோளைப் போலத் தான். கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் வாழ்கின்றன. இந்த கோடிக் கணக்கான நுண்ணுயிரிகள் அனைத்தும் நம்மை செய்யும் வகையைச் சேர்த்தவை தான் என்று யாரால் உறுதிப்படுத்த முடியும்? இந்த உண்மையோடு ஒப்பிட்டால் புதிது புதிதான வைரஸ் தாக்குதல் என்பது மிக மிக மிகைப்படுத்தப்பட்ட அச்சம் என்பது போல் ஐயம் ஏற்படுகிறது. இந்த ஐயத்துக்கு யார் விளக்கம் சொல்வது? அல்லது யார் தெளிய வைப்பது?

மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவுகிறது என்கிறார்கள், அதாவது பாதிக்கப்பட்ட நோயாளி தும்மும் போதோ இருமும் போதோ அருகிலிருப்பவர்களுக்கு பரவுகிறது என்கிறார்கள். இதற்கு அளிக்கும் தீர்வு என்ன? கைக்குட்டையால் வாயை மூக்கை பொத்திக் கொண்டு தும்முங்கள், இருமுங்கள் என்கிறார்கள் (மருத்துவமனை தனி வார்டு, பொது இடங்களுக்கு செல்லாதீர்கள் என்பது கண்டறியப்பட்ட பின்பு தானே) பாதிக்கபடாதவர்கள் வெளியில் செல்லும் போது முகமூடி அணிந்து செல்லுங்கள் என்கிறார்கள். கைக்குட்டையோ முகமூடியோ அவை நூல்களினால் நெய்யப்பட்டவை. வைரஸ்களின் அளவு என்ன? துணிகளின் குறுக்கு, நெடுக்கு நூல் இடைவெளிகளில் ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான வைரஸ்கள் சென்று வர முடியுமே. என்றால் இது யாரை ஏமாற்றுவதற்கு?

ஒரு கரோனா தாக்கப்பட்ட நோயாளிக்கு அருகிலிருக்கும் அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்படுகிறதா? என்று கேட்டால், இல்லை என்பதே பதில். யாருக்கு உடல் நலனில் குறைபாடு இருக்கிறதோ அவர்களுக்கு, குறிப்பாக சளியால் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு மட்டுமே நோய் தொற்றுகிறது. என்றால் சளிக்கும் கரோனா உள்ளிட்ட பிற வைரஸ்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன? அறிகுறிகளும், தொற்றுதலும் சளியை மையப்படுத்தியே இருக்கும் போது வைரஸை எதிரிகளாக காட்ட முனைவது ஏன்?

ரத்து செய்யப்படும் விமானங்கள்

ஒவ்வொரு முறையும் ஒரு புது வைரஸ்ள் மனிதர்கள் மீது படையெடுக்கும் போது தவறாமல் முன்வைக்கப்படும் ஒரு வாதம் உயிரியல் ஆயுதம் என்பது. கரோனாவின் போதும் சீனா தயாரிக்க விரும்பும் உயிரியல் ஆயுத சோதனைகளின் விளைவே இந்த கரோனா வைரஸ் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டி இருக்கிறது. எயிட்ஸ், எச்.ஐ.வி வைரஸ்கள் அமெரிக்கா ஆப்பிரிக்க காடுகளில் நடத்திய இரகசிய ஆய்வுகளின் விளைவு என்று ஆய்வாளர்களிடையே நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்த எட்டு பத்திரிக்கையாளர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மறைக்கப்பட்டு வரும் செய்தி. ஏன் இப்படி இருக்கக் கூடாது? இப்படி ஒரு கோணம் யாருக்கும் தோன்றி விடக் கூடாது என்பதற்காகவே இந்த அதீத அச்ச உணர்வு உற்பத்தி செய்யப்படுகிறதா?

எல்லாவற்றுக்கும் மேலாக, அறிவியல் அடிப்படையில், இயங்கியல் அடிப்படையில் இது சரியானது தானா? திடீரென்று வெளியில் இருந்து ஒரு வைரஸ் உடலுக்குள் புகுந்து கொத்துக் கொத்தாக மனிதர்களை கொன்றழிக்கும் என்பது எந்த விதத்தில் சரி. விசப் புகை போல் சுவாசிப்பவர்களை எல்லாம் கொல்கிறது என்றால் அது அறிவியல். காற்றில் பரவுகிறது ஆனால் தேர்வு செய்து சிலரை மட்டும் தாக்கும் என்பதில் வைரஸின் பங்களிப்பு குறைகிறதே. அதைக் கணக்கிட்டால் தானே அங்கு அறிவியல் அடிப்படை இருக்க முடியும்?

இயங்கியல் அடிப்படையில் உள்முரண்களின் ஒற்றுமையும் போட்டியும் தானே பொருளின் மாற்றத்தை வளர்ச்சியை தீர்மானிக்கிறது. இந்த மாற்றத்துக்கு புறத்திலிருந்து வரும் தாக்குதல்கள் துணை புரியலாம் என்பது தானே சரி. அகம் முதன்மையானதா? புறம் முதன்மையானதா? இப்படி கேள்வி எழுப்பாமல் கார்ப்பரேட் மருந்துக் கொள்ளையர்களின் அச்சமூட்டலை அப்படியே ஏற்றுக் கொண்டால் அது யாருக்கு சாதகமானது?

இவை ஐயங்கள் மட்டுமே. இப்படி கேள்வி எழுப்புவதாலேயே நவீன மருத்துவத்துக்கு எதிராக சிந்திப்பதாக யாரும் முடிவு கட்டி விட வேண்டாம். நவீன மருத்துவத்தின் சாதனைகளை அட்டவணைப்படுத்த வேண்டாம். இந்தக் கேள்விகள் சரியானவை என்றால் பதில் கூறுங்கள். சரியில்லாதவை என்றால் என்ன விதத்தில் இந்தக் கேள்விகள் சரியில்லாதவைகளாக இருக்கின்றன என்பதைக் கூறுங்கள். என்னவாக இருந்தாலும், இந்த பீதியூட்டல் தேவையற்றவை என்பது மட்டும் உண்மை.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

One thought on “கரோனா வைரஸ்: சில கேள்விகள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s