வெறிபிடித்து அலையும் காவல்துறை

“மர்ம உறுப்பை குறி வைத்து தாக்கினார்கள்”, கேட்கும் போதே காதில் அமிலத்தை ஊற்றியதை போல் இருக்கிறது. தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவி தான் இப்படி கதறுகிறார்.

ஜாமியா மில்லியா மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பிப்ரவரி 10 ஆம் தேதி காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர்.

பாராளுமன்றம் நடைபெற்று வருவதால் கவன ஈர்ப்பாக இருக்கும் என இந்தப் போராட்டம். ஏற்கனவே ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது மோடியின் பா.ஜ.க அரசு கடும் கோபத்தில் உள்ளது. அதனால் இந்தப் போராட்டத்தின் போது மாணவர்களை கடுமையாக கையாள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த போகிறோம் என மத்திய அரசு அறிவித்ததில் இருந்தே போராட்டம் துவங்கி விட்டது அனைவரும் அறிந்தது. 2019 டிசம்பரில் அசாமில் போராட்டம் துவங்கியது.

ஆனால் இந்தப் போராட்டம் பெரும் இயக்கமாக மாறியதற்கு ஜாமியா மாணவர்களே காரணமாகினர். 2019 டிசம்பர் 15 அன்று ஜாமியா மாணவர்கள் போராட்டத்தில் குதித்தப் போது தில்லி ஸ்தம்பித்து போனது. மாணவர்கள் மோடி அரசை திணற அடித்தனர்.

அதை தடுக்க அரசே வன்முறையில் இறங்கியது. அரசு பேருந்துகள், மெட்ரோ ஸ்டேஷன் போன்றவற்றில் காவல்துறையை சேர்ந்தவர்களே தீவைத்து கொளுத்தினர். அரசு சொத்துகள் சேதப்படுத்தப் பட்டன. மாணவர்கள் மீது பழியை போட்டு, அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது காவல்துறை.

பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறை புகுந்தது. வகுப்பறை, மாணவர் விடுதிகளில் புகுந்து தாக்கினர். நூலகத்தையும் விடவில்லை, படித்துக் கொண்டிருந்தவர்களையும் தாக்கினர். உச்சக்கட்டமாக மாணவியர் விடுதியில் புகுந்தனர். மின்சாரத்தை துண்டித்து விட்டு தாக்கினர். மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். இது தேசிய செய்தியானது. இந்தியா முழுதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பாரதிய ஜனதா எதிர்பார்த்ததற்கு மாறாக, போராட்டத் தீ கடுமையாகப் பரவியது. அனைத்து எதிர்கட்சிகளும் போராட்டக் களத்திற்கு வந்தனர். மக்கள், அரசியல் கட்சிகளை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள் தான் போராடுவார்கள் என அமித்ஷாவும், மோடியும் நினைத்திருக்கையில், இந்து மக்களும் பெருவாரியாக போராடினர். இது மதத்தின் பேரை சொல்லி மக்களை பிரித்து அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பேரிடியானது.

இந்தக் கோபம் ஜாமியா மாணவர்கள் மீது பா.ஜ.கவுக்கு தீராமல் இருந்தது. இன்று போராட்டத்தின் போது அந்தக் கோபத்தை கொடூரமான முறையில் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

தில்லி மாநில போலீஸார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். அதனால் தான் காவி யூனிபாஃர்ம் அணிந்தவர்கள் போல் நடந்துக் கொள்கிறார்கள்.

ஜனவரி 30 அன்று ஜாமியா மாணவர்கள் போராட்டத்தில் இருந்த போது, காவல்துறையினர் சூழ்ந்திருக்க, இந்துத்துவா தீவிரவாதி ஒருவன் கைத்துப்பாக்கியோடு வந்து மிரட்டியுள்ளான். அடுத்து துப்பாக்கியால் சுட்டு ஒரு மாணவனை காயப்படுத்தி உள்ளான்.

இதே தில்லியில் மகாத்மா காந்தியை , ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்ற சம்பவத்தின் தொடர்ச்சியாகத் தான் இதை பார்க்க வேண்டும். அத்தோடு நிற்கவில்லை. தொடர்ச்சியாக மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒரு குற்றவாளியின் பெயர் “ராம் பக்த் கோபால்” என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடுத்தக் கட்டம் தான், இன்று மீண்டும் போலீஸார் நடத்தியுள்ள அரச பயங்கரவாதம்.

இன்றைய பேரணியில் பங்கேற்ற ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர், அதுவும் அந்தரங்க உறுப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள், ஜாமியா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிருபர்களிடம் பேசிய சுகாதார மைய மருத்துவர்கள்,”சில காயங்கள் மிகவும் கடுமையானவை.

10க்கும் மேற்பட்ட பெண் மாணவர்களுக்கு பிறப்புறுப்பில் தாக்குதல் காயம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் காயங்களைக் கண்டறிந்துள்ளோம். காயங்கள் தீவிரமாக இருப்பதால் நாங்கள் அவர்களை அல் ஷிஃபாவுக்கு மாற்ற வேண்டியிருந்தது”, என்று தெரிவித்துள்ளனர்.

“சில மாணவர்களுக்கு லத்திகளால் மார்பில் தாக்கப்பட்டதால் உள் காயங்களும் ஏற்பட்டுள்ளன” என்றும் கூறினர்.

இரண்டு ஆண் மாணவர்கள், நடந்த சம்பவம் பற்றி கூறுகையில், காவல்துறையினரால் எங்கள் பிறப்புறுப்பு பகுதி தாக்கப்பட்டது என குற்றம்சாட்டினர்.

சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மாணவி, கூறுகையில், “நான் எனது பிறப்புறுப்பு உள்ளிட்ட வெளியில் சொல்ல முடியாத உடல் பாகங்களில் போலீசாரால் பூட்ஸால் தாக்கப்பட்டேன். ஒரு பெண் போலீஸ்காரர் என் புர்காவை கழற்றி என் பிறப்புறுப்பில் லத்தியால் தாக்கினார்,” என்று அவர் அழுதபடி கூறினார்.

“நடக்கும் சம்பவங்களை வீடியோவாக எடுப்பதை தடுக்க, போலீசார் எங்களை இடுப்புக்கு கீழே அடித்தனர்”, என்று மற்றொரு மாணவர் கூறினார்.

“போலீசார் எங்களை பிடித்து தள்ளினர், நாங்கள் நான்கு அல்லது ஐந்து முறை கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டோம்” என்று ஒரு மாணவி கூறினார்.

மோடி, அமித்ஷா கும்பலின் ரத்த வெறியாட்டம் எல்லை கடக்கிறது. குஜராத் கலவரம் போல் சிறுபான்மை மக்கள் மீது அரச படையினையும், காவி படையையும் கட்டவிழ்த்து விட்டு, பீதி ஏற்படுத்தி அச்சத்தில் மூழ்கடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் ஒரு படி மேல் சென்றுள்ளார். இஸ்லாமிய மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தி 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது, அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிந்து நஷ்ட ஈடாக அவர்களது சொத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் இதை செய்ய முடியாது என்பதால் தான் இந்த கேவலமான செயலில் தில்லியில் இறங்கியுள்ளனர். எல்லா செயலுக்கு எதிர்வினை உண்டு என்பதை மறந்து விட்டு ஆட்டம் போடுகிறார்கள்.

இவர்களை விட அதிகாரம் படைத்தவர்களாக ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகளின் வரலாற்றை படித்தால் முடிவு புரியும்.

இடி அமீனும், ஹிட்லரும் பாவத்திற்கு பதில் சொல்லியே விடை பெற்றனர் !

நன்றி :- சிவசங்கர் எஸ்.எஸ்
கலை அரசன் வை

முகநூல் பதிவிலிருந்து.

2 thoughts on “வெறிபிடித்து அலையும் காவல்துறை

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s