விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?

முன் குறிப்பு: இந்தக் கட்டுரை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் எழுதி சில காரணங்களுக்காக வெளியிடாமல் வைத்திருந்தேன். தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், மாணவர்கள், இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் குறித்த அடிப்படை புரிதலை இக் கட்டுரை வழங்கும். வியாபம் ஊழல் எப்படி கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி எனும் உழைப்பை மிகக் கொடூரமாக சுரண்டியதோ, அதே போலவே, தமிழ்நாட்டின் டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளும் கொடூரமான சுரண்டலே. ஆனால், மாணவர்கள் இளைஞர்களிடமிருந்து இதற்கு போதிய அளவில் எதிர்ப்புக் குரல் ஏதும் வந்து விடவில்லை. இவ்வாறான தேர்வுகள் குறித்த அடிப்படைப் புரிதல்கள் இல்லாததே இதற்கு முதன்மையான காரணம் என நான் எண்ணுகிறேன். இந்த அடிப்படையில் இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு இதுவே பொருத்தமான நேரம்.

அன்பார்ந்த மாணவர்களே! இளைஞர்களே!

நம்மில் சிலர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கலாம், அல்லது படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டோ, தகுதித் தேர்வுகள் எனப்படும் போட்டித் தேர்வுகளுக்கோ தயாராகிக் கொண்டிருக்கலாம். பொதுவாகவே, கல்வி என்பதை வேலை தேடித் தருவதற்கான ஒரு ஆப்(app) ஆக, ஒரு கருவியாக நமக்குள்ளே இன்ஸ்டால் செய்ய முயல்கிறோம். இதற்காக பெற்றோரின் உழைப்பு, குடும்ப சொத்துகள், சேமிப்பு என அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறோம். கல்லூரிக் காலம் என்பது நாம் வாழ்நாளில் மிக மகிழ்வான காலம் என்பது ஒரு விதத்தில் உண்மையாக இருந்தாலும், இன்னொரு விதத்தில் முதன் முதலில் நாம் நெருக்கடிகளைச் சந்திக்கும் காலமும் அது தான்.

வீட்டில் அதுவரை செய்த செலவுகளுக்கான பலனை எதிர்பார்க்கத் தொடங்கும் காலம். எல்லோரும் நம்மிடம் சூழலுக்கேற்ற பக்குவத்தை எதிர்பார்க்கும் காலம். நாமும் அனைவரிடமும் நம் முதிர்வை காட்ட விரும்பும் காலம். எல்லாவற்றுக்கும் மேலாக, “மாமலையும் ஒரு கடுகாம்” என பாரதிதாசன் கூறியது போல ஒரு கடைக் கண் பார்வைக்காக மலையையும் கவிழ்க்கத் துடிக்கும் காலம். இந்த காலகட்டத்தில் நாம் சமூகத்தில் எதிர்கொள்வது என்ன? வேலையின்மையும், நம்பிக்கையின்மையும்.

பொறியியல், அறிவியல், கலை, வரலாறு, தொழில்நுட்பம் இன்னும் பலவாறாக இருக்கும் அனைத்து பிரிவுகளிலும் இருந்து ஆண்டுதோறும் 90 லட்சம் பட்டதாரிகள் வெளிவருவதாக மனிதவளத்துறை ஆணையத்தின் கடந்த ஆண்டு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதேநேரம் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரம் ஒன்று, இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் 9.4 சதவீதம் என்று தெரிவித்திருக்கிறது. சற்றேறக்குறைய 13 கோடி பேர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். 13 கோடி பேர் என்பதை இரண்டு செய்திகளோடு இணைத்து பார்க்க வேண்டும். ஒன்று, அரசு சொல்லும் புள்ளி விபரம் என்பது எப்போதும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவே இருக்குமே அன்றி உண்மையான துல்லியமான தகவலாக இருக்காது என்பது. இரண்டு, எம்.ஏ படித்துவிட்டு ஓட்டலில் தட்டு கழுவும் நம்முடைய அண்ணன்களை எல்லாம் வேலை செய்து கொண்டிருப்பவர்களாக கணக்கெடுத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட புள்ளி விபரம் என்பது. இவ்வளவு பிரமாண்டத்துக்கு நடுவில் தான், ‘நண்பன் படத்தில் பிரின்ஸி சத்யராஜ்’ சொல்வது போல ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் தான் சிலர், “அரசு வேலையையே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. சுய தொழில் செய்தால் நாமே சிலருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கலாம்” என்கிறார்கள். அப்படியென்றால் நமக்கு வேலை தருவதற்கு அரசு கடமைப்பட்டது இல்லையா? நம்முடைய சொந்தக் கையிருப்பிலிருந்து, வங்கியிடமிருந்தோ பிறரிடமிருந்தோ வாங்கிய கடனிலிருந்து, குடும்பச் சொத்தை விற்று, பெற்றோரின் நகை போன்றவற்றை விற்று, அண்ணன் அல்லது அக்கா ஆகியோரின் படிப்பை தியாகம் செய்து தான் நாம் படித்து முடித்து வெளியேறுகிறோம். இவ்வளவு கடினமான சூழலில் நாம் எதை படிக்கிறோம்?

ஒரு இயந்திரத்தை இயக்குவது அல்லது வடிவமைப்பது எப்படி என்பதை பொறியியலிலும், ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்வது எப்படி?, அதை லாபமீட்டும் நிறுவனமாக ஆக்குவது எப்படி? என்பதை நிர்வாகவியல், கலை படிப்புகளிலும்,. நிலவியல் வளங்களை வானியல் தகவல்களை எப்படி நிறுவனங்களுக்கு ஏற்றபடி கண்டுபிடிப்பது,  பயன்படுத்துவது என்பதை அறிவியல் படிப்புகளிலும், இன்னும் பலவாறாக நாம் படிக்கும் அனைத்துமே நாம் பணியாற்றப் போகும் நிறுவனங்களை வளமானதாக, லாபமீட்டக் கூடியதாக ஆக்குவதற்குத் தான் பயன்படுகிறது. நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு நேரடியாக பயன்படவில்லை. அரசின் பொதுத்துறை நிறுவனங்களுமே ஒன்றன் பின் ஒன்றாக தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்படுகிறது எனபது நமக்கு நன்றாகவே தெரியும். அப்படியென்றால் யாரோ ஒருசில தனியார் நிறுவனங்களுக்கு, அதன் முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக நாம் ஏன் நம்முடைய சொந்தப் பணத்தில் கல்வி கற்க வேண்டும்? ஒரு சிறிய பட்டறைக்கு வேலைக்கு செல்கிறோம் என்று கொள்வோம். அந்த பட்டறையில் இருக்கும் லேத் தை இயக்குவதற்கு சொல்லித் தரும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? பட்டறை உரிமையாளருக்கா? நமக்கா? ஆனால் நாம் கற்கும் கல்வி என்பது அதற்கு நேர் எதிராக, தலைகீழாக அல்லவா இருக்கிறது.

எப்படியோ, கையை ஊன்றி கரணம் அடித்து ஒரு வேலையில் சேர்ந்து விட்டால், அப்பாடா நம் வாழ்க்கை செட்டிலாகி விட்டது, எதிர்காலம் குறித்த பயம் இனி தேவையில்லை என்று நிம்மதியாக இருக்க முடியுமா? எந்த நேரமும் நாம் வேலையை விட்டு துரத்தியடிக்கப் படலாம். கடந்த ஓர் ஆண்டில் ஐ.டி துறையில் மட்டும் 56,000 பேரை வேலையில் இருந்து விரட்டியனுப்பியுள்ளனர். என்றால் பிற துறைகளையும் சேர்த்து எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். நிரந்தர வேலை, தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட, தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளாக இருந்த பல சட்டங்கள், இன்று படிப்படியாக நீக்கப்படுகின்றன. அரசு நீக்குகிறது. ஏன்? ஏனென்றால் அரசின் நோக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் தானே தவிர மக்களின் வாழ்வு அல்ல.

மறுபுறம், இப்படி வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையாய் இருக்கிறது. எந்த அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறதோ அந்த அளவுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை குறைத்துக் கொள்ள முடியும். இப்போது நவீன தொழில் நுட்பங்கள் மூலம் இயந்திரங்களே நிலமைகளை உணர்ந்து கொண்டு செயலாற்றும் திறன் கொண்டதாக உருவாக்கப் படுகின்றன. இதன் மூலமும் பல லட்சம் வேலை வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. எந்த தொழில் நுட்பத்தை நாம் படித்து புதிய புதிய கருவிகளை படைக்கிறோமோ அந்தக் கருவிகளே நம்முடைய வேலைக்கு வேட்டு வைக்கின்றன. அதாவது, கல்வியின் மூலம் நாம் பெறும் அறிவு மக்களாகிய நம்முடைய வளர்ச்சிக்கு உதவாமல்  கார்ப்பரேட்டுகளின் லாபத்துக்கு உதவுகிறது.

இதை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்? தகுதியும் திறமையும் இருந்தால் நம்மை யார் வேலையில் இருந்து தூக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறோம். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு வேலை வாய்ப்புகள் இருக்கிறதோ அதை விட பல மடங்கு அதிகமாக பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். இதில் அனைவருமே தகுதியோடும் திறமையோடும் இருந்தாலும் அனைவருக்கும் வேலை கிடைக்கப் போவதில்லை என்பது தானே உண்மை. கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைத்தனம் தான் தேவையன்றி திறமையோ தகுதியோ அல்ல. ஊதியத்தைக் குறைத்தாலும், சலுகைகளை வெட்டினாலும், பணிச்சுமையை அதிகரித்தாலும் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் வேலை பார்க்க வேண்டும். அப்ரைசல் என்று சொல்லப்படுவது இப்படியான அடிமைத் தனத்தை கண்டுபிடிக்கும் ஒரு யுக்தி தான்.

இப்போது பல நிறுவனங்கள் வளாக நேர்காணல் நடத்தி பல ஆயிரம் மாணவர்களை அவர்கள் படித்து முடிக்கும் முன்னரே பணிக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதாவது ஏற்கனவே பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவமும், திறமையும் கொண்டிருக்கும் ஊழியர் ஒருவரை அப்ரைசல் மூலம் வேலையிலிருந்து எடுத்துவிட்டு அந்த இடத்தில் புதிதாக கல்லூரியிலிருந்து வரும் மாணவர்களை அப்ரெண்டிஸ் எனும் பெயரில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு இணைத்துக் கொள்கிறார்கள். அவர்களையும் ஓரிரண்டு ஆண்டுகளில் ஏதாவது காரணம் சொல்லி நீக்கி விட்டு புதிதாக வேறு கல்லூரியிலிருந்து ஆளெடுத்துக் கொள்கிறார்கள். இதில் தெரிவது தகுதி திறமையா? ஊதியக் குறைப்பின் மூலம் முதலாளிகளுக்கு கிடைக்கும் லாபமா?

இந்த சூழ்நிலைகளுக்கு நடுவில் தான் நாம் நம்முடையை திறமைகளை வளர்த்துக் கொள்வது, தகுதியை மேம்படுத்திக் கொள்வது எனும் பெயரில் போட்டித் தேர்வுகளும் தகுதித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. சிவில் சர்வீசஸ் தேர்வு, எஞ்சினியரிங் சர்வீசஸ் தேர்வு, எக்கனாமிக் சர்வீஸ், பாரஸ்ட் சர்வீஸ், டிஃபென்ஸ் சர்வீசஸ், அப்ரெண்டிசஸ் தேர்வு, மெடிக்கல் சர்வீசஸ் எனும் பல பிரிவுகளில் நூற்றுக் கணக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குதிரைக்கு முன்னே கேரட்டை கட்டி, கேரட்டின் ஆசையில் நுரை பொங்க ஓடும் குதிரையைப் போல் போட்டி, தகுதித் தேர்வுகளின் பின்னே ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

கல்லூரிகளில் அதிகமான மதிப்பெண் பெற்று பட்டம் பெற்ற நாமக்கு தகுதித் தேர்வை நடத்தி தான் நம் தகுதியை நிர்ணயிக்க வேண்டுமென்றால் இத்தனை காலம் நாம் படித்தது எதை? அதில் நம் தகுதி தெரியவில்லை என்றால், அது நம்முடைய குறையா கல்லூரிகளின் குறையா? போட்டி, தகுதி தேர்வுகளில் கேட்கப்படும் பத்தாம் வகுப்பு கேள்விகளுக்கு பதிலளித்து விட்டால் நாம் தகுதி பெற்றவர்களாக ஆகி விடுவோமா? அப்படி என்றால் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்து விட்டு நேரடியாக தகுதித் தேர்வுகளை நடத்தி விடலாமே.

அரசு ஒருபோதும் அவ்வாறு செய்யாது. ஏனென்றால் இரண்டும் வேவ்வேறு நோக்கங்களுக்காக நடத்தப்படுபவை. கல்லூரித் தேர்வுகள் நம்மை மைய நீரோட்டத்தில் கலக்கச் செய்து, இந்த சமூகத்தில் நானும் குறிப்பிட்ட தகுதியோடு இருக்கிறேன். அரசு என்ன செய்கிறது அதன் கொள்கைகள் என்ன? அது யாருக்கு பாடுபடுகிறது என்பன போன்ற விபரங்களை விட நான், என் குடும்பம், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய வசதி என்று நம்மை நாமே சுருக்கிக் கொண்டு விடுவதற்காக பட்டதாரி எனும் பட்டத்தை நமக்கு தருவதற்காக நடத்தப்படும் தேர்வு. போட்டி, தகுதி தேர்வுகளோ வெளியில் இருக்கும் கோடிக்கணக்கான நம்மைப் போன்ற வேலை தேடுவோரில் இருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்வு.

நாம் எதற்காக நல்ல வேலையில் சேர வேண்டும் என எண்ணுகிறோம்? நம்மை பெற்று, வளர்த்து, பாதுகாத்த பெற்றோரை நாமும் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும், நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத் தானே. அதற்காகத் தானே எந்த விதமான தேர்வு என்றாலும் நம்மை வருத்திக் கொண்டு படித்து தயாராகிறோம். அவ்வாறு நல்ல வாழ்க்கை வாழ முடியாமல் எவ்வளவு குறுக்கீடுகள்? விலைவாசி உயர்வு தொடங்கி எவ்வளவோ பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளை எல்லாம் அரசு சரி செய்யாதா? வேறு எதற்காகத் தான் அரசு இருக்கிறது? நாம் எதற்கு இந்த நாட்டை நம்முடைய நாடு என்று ஏற்றுக் கொள்கிறோம்? நாம் எதற்கு தீப்பெட்டி தொடங்கி பெட்ரோல் வரை வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம்? இந்த நாடும் அரசும் நம்மை நன்றாக வாழ வைக்கும் என்பதற்காகத் தானே. ஆனால் நம்மை அவ்வாறு வாழ வைக்கவில்லை இந்த அரசு. மாறாக, இருக்கும் வாழ்வையும் பறிக்க நினைக்கிறது. இதற்கு பண மதிப்பிழப்பு தொடங்கி, ஜி.எஸ்.டி வரை எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும். இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒருபுறம் நாம், இந்த அரசிடமிருந்து எதையும் பெறாமலேயே நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் இந்த அரசோ வரி உட்பட நம்மிடமிருந்து பெற வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொண்டு, நம்மை நல்ல முறையில் வாழ வைக்காமல் ஊழலில் திளைத்துக் கொண்டும், ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டும் இருக்கிறது. இந்த நிலையில் யார் யாருக்கு தகுதித் தேர்வுகள் நடத்த வேண்டும்? அரசுக்கு நாம் தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டுமா? அல்லது நமக்கு அரசு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டுமா?

இந்த அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று கற்றுக் கொள்வதே தலை சிறந்த கல்வி. அந்தக் கல்வியைக் கற்று மாணவர்கள் இளைஞர்களாகிய நாம் ஒன்று சேர்ந்தால் நம்மை வாழ விடாமல் செய்யும் அரசை தூக்கி வீசுவதன் மூலம், நமக்கும் நம்மைப் போன்ற அனைவருக்கும் விருப்பமான, பொருத்தமான வேலை வாய்ப்பை உருவாக்கலாம். இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்யலாம். வாருங்கள் நண்பர்களே நாம் ஒன்று சேர்வோம்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையை படித்து விட்டு இதன் கருத்துகளில் உடன்படாத அல்லது உடன்படும் மாணவர்கள் இளைஞர்கள் என்னுடன் senkodi002@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் நாம் இதை விரிவான விவாதமாக, செயலுக்கான தூண்டுதலாக முன்னெடுத்துச் செல்லலாம். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்க.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s