ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத எல்லை கடந்து அனைத்து மக்களும் இந்திய உணர்வோடு போராடும் இந்தப் போராட்டத்தை ஒரு மதப் போராட்டம் போல் சித்தரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும் நின்று போகாமல் இடையறாது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கர்னாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 20ம் தேதி (20.02.2020) ஒவைசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒரு போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு கல்லூரி மாணவி, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கம் எழுப்ப, உடனேயே பேச்சு இடைநிறுத்தப்பட்டு அம் மாணவி மேடையிலிருந்து கீழிறக்கப் பட்டார். தற்போது அவர் மீது தேசத் துரோக குற்றம் பதியப்பட்டு 14 நாட்கள் நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிகழ்வை முன்வைத்து எதிரும் புதிருமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசும், ஊடகங்களும், சங்கிகளும் திட்டமிட்டு இது இஸ்லாமியப் போராட்டம் என்று நிரூபி(!)ப்பதற்காக தலை கீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிக்கிறார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். “அவர்களின் உடைகளைக் கொண்டே போராடுவோர்கள் யார் என்பது தெரிய வருகிறது” என்று பிரதமர் மோடியே இதை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் போராட்டங்களில் ஊடுறுவல் செய்து இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்த சங்கிகள் முயலக் கூடும் எனும் போராடுவோரின் கருத்து நிராகரிக்கத் தக்கதல்ல. ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டத்தின் போது காவல் துறையினரே கலவர் தீவைப்புகளில் இறங்கியதும், தொடர்பே இல்லாமல் நூலகத்தில் இருந்த மாணவர்களையும் கூட கண்மூடித் தனமாக தாக்கியதும் காணொளிக் காட்சியாக வெளிவந்தும் இதுவரை யாரும் இதற்கு துறை அதிகாரிகளோ, அதற்குப் பொறுப்பேற்கும் அமைச்சரோ (அமித்ஷா) வாய்திறந்து இதை கண்டிக்கவோ, விசாரணைக்கு உத்தரவிடுவதாகவோ அறிவிக்கவில்லை. இதில் மட்டுமல்ல, மெரீனா எழுச்சி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் என்று இன்னும் பல போராட்டங்களில் அரசும் அதன் உறுப்புத் துறைகளும் இவ்வாறு தான் நடந்து கொள்கின்றன. மக்களுக்கு எதிராக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம், அதற்கு எதிராக மக்கள் போராடினால் அந்த போராட்டத்தை அடக்குவதற்கு சட்டத்தை மீறி எதை வேண்டுமானாலும் செய்வோம் என்பது தான் அரசின், அதன் துறைகளின், இன்னும் ஊடகங்களின், நீதித் துறைகளின் செயல்களாக இருக்கின்றன. எனவே, போராடுவோரின் ஐயம் முழுக்கவும் ஏற்புடையதே.

மறுபக்கம் சங்கிகளின் செயல்களும் இதை ஐயந்திரிபற எடுத்துக் காட்டுகின்றன. அன்று இரவே, அந்த மாணவி அமுல்யாவின் வீடு இந்துவ பயங்கரவாதிகளால் கல்லெறிந்து தாக்கப்படுகிறது. அமுல்யாவின் தந்தை மிரட்டப்படுகிறார். ‘பாரத் மாத்தாக்கி ஜொய்’ என்று திரும்பத் திரும்ப சொல்ல வைக்கப்படுகிறார். ‘உன் மகளை வீட்டில் சேர்க்கக் கூடாது’ என்றும் ‘அவளை பிணையில் எடுக்கக் கூடாது’ என்றும் மிரட்டப்பட்டிருக்கிறார். விடிந்த்து பார்த்தால், காவல் துறை மிரட்டியவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறது. ஊடகங்களோ ஒரு படி மேலே சென்று ஜாமீன் எடுக்க மாட்டேன் என்று அந்த மாணவியின் தந்தையே கூறிவிட்டார் என்று பெருமைப்பட்டு புளகமடைந்திருக்கின்றன. இவை எதை எடுத்துக் காட்டுகின்றன? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, போராட்டங்களைக் கண்டு நாங்கள் பயப்படுகிறோம், எனவே, அதை முறியடிக்க எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் என்பதைத் தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்கட்டும். ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று சொன்னால் அது தேசத் துரோகமா? நம் அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவு இப்படி வரையறுத்திருக்கிறது? நீதிபதி எந்த அடிப்படையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார்? யாரை பிடித்துக் கொண்டு போய் என்ன வழக்கு தொடுத்திருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நீதி மன்றக் காவலுக்கு அனுப்புவது நீதிபதிகளின் வழக்கமாக இருக்கிறது. எந்தச் சட்டம் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கிறது? இது காவல் துறையும் நீதித் துறையும் செய்து கொண்டிருக்கும் கள்ளக் கூட்டு. அரசுக்கு எதிராக எதையும் செய்ய விடக்கூடாது எனும் பாசிசத்தின் முதற்படி இதிலிருந்து தான் தொடங்குகிறது.

ஒரு மகளின் தந்தை தன் மகளின் குற்றத்தைப் பொருத்து அவளை மன்னித்து சிறை மீட்கப் போராடலாம். அல்லது, மன்னிக்காமல் ஜாமீன் எடுக்க மாட்டேன் சிறைக்குள்ளே கிடக்கட்டும் என்றும் கூறலாம். அது அந்த தந்தையைப் பொருத்தது. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வர் அவளுக்கு ஜாமீன் வழங்கப்படாது என்று கூற முடியுமா? அவ்வாறு கூறுவதற்கான அதிகாரம் முதல்வருக்கு இருக்கிறதா? சங்கிகளின் உடனடியான எதிர்வினை, காவல்துறையின் கண்டுபிடிக்க முடியாது எனும் மெத்தனம், முதல்வரின் வரம்பு மீறிய பேச்சு எனும் இவை அனைத்தும் சட்டப்படி தவறே இல்லாத பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டதற்காக. அதாவது சட்டப்படி தவறாக இல்லாத ஒன்றுக்காக சட்டத்தைக் கையில் வைத்திருக்கும், சட்டத்தை காப்பற்றும் பொறுப்பில் இருக்கும் அனைத்து துறைகளும் சட்டத்தை மீறி நடந்து கொள்கின்றன. இதில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் யார்? இது தான் அரசு என்பதன் பொருள். இதை போராடுவோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் முதன்மையான இன்னொன்றை எடுத்துக் கொள்ளலாம். அமுல்யா எனும் அந்த மாணவி அந்த மேடையில் கூறியது அல்லது கூற வந்தது என்ன? அந்த மாணவி குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். போராட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்த அடிப்படையில் அன்று மேடையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதும் மேடையில் இருந்தவர்களால் உடனே தடுக்கப்பட்டு முழக்கத்தை இடை நிறுத்தி கிழே அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் கூற வந்ததை முழுமையாக கூறவில்லை என்பதும், அதற்கடுத்து இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்றும் கூறியிருக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டியவை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு இத்தனை சிக்கல்கள் என்றால், இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்றும் கூறியிருக்கிறாரே அதை என்ன செய்யலாம்?

அன்று அவர் மேடையில் பேச வந்ததன் சாரத்தை 16ம் தேதியே டுவிட்டரில் பதிவிட்டிருந்ததாக கூறுகிறார்கள். “பாகிஸ்தான் ஜிந்தாபாத், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், பங்களாதேஷ் ஜிந்தாபாத், சிரிலங்கா ஜிந்தாபாத், நேபாள் ஜிந்தாபாத், சீனா ஜிந்தாபாத், அமெரிக்கா ஜிந்தாபாத், எந்த நாடாகவும் இருந்தாலும் ஜிந்தாபாத்!” அதாவது நாடு என்பது எல்லை அல்ல, அந்த எல்லைக்குள் வழும் மக்கள். ஒரு நாடு வாழ்க என்று முழக்கமிட்டால் அதன் பொருள் அந்த நாட்டு மக்கள் வாழ வேண்டும் என்பது தான். இந்தியா வாழ்க என்றால் அதன் மக்கள் வாழ வேண்டும். மக்கள் வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும். இது தான் அன்று அவர் சொல்ல வந்த கருத்தாக இருக்கக் கூடும். இதில் என்ன தவறு இருக்கிறது?

பாகிஸ்தான் என்ற சொல் வந்ததும் பதறிப் போய் நிறுத்தும் அளவுக்குத் தான் இஸ்லாமியர்களை இந்த நாடும், ஆளும் பாஜக அரசும் வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் என்ற சொல்லை உச்சரித்தாள் என்பதற்காகவே அவளின் தந்தை அவளை வீட்டுற்குள் இனி சேர்த்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்று தயங்கும் அளவுக்குத் தான் இந்துக்களை இந்த நாடும் காவிப் பாசிசங்களும் வைத்திருக்கின்றன. இஸ்லாமியர்கள் அரசை எதிர்த்து ஏதாவது சொல்லி விட்டால் பாகிஸ்தானுக்குப் போ, இந்துக்கள் இந்த அரசை எதிர்த்து ஏதாவது சொல்லி விட்டால் தேசத் துரோகி, கம்யூனிஸ்டுகளும், அறிவுத் துறையிரும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் இந்த அரசுக்கு எதிராக பேசி விட்டால் அன்னிய நாட்டுக் கைக்கூலி. ஆனால் இவர்களின் அகராதியில் அரசை நடத்துவது என்பதன் பொருள் நாட்டின் அத்தனை வளங்களையும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பது.

சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 13 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். அது குறித்த எந்த விளக்கமும், அது எப்படி நடந்தது எந்த மீளாய்வும் வெளிப்படவில்லை. ஏனென்றால் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் கிருஸ்தவர்கள் அல்லர். அப்படி இருந்தால் கிருஸ்தவர்களின் தேசப்பற்று கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கும். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் இஸ்லாமியர்கள் அல்லர், இருந்திருந்தால் இந்த நாடே அல்லோலகல்லோலப் பட்டிருக்கும். ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் குற்றவாளிக் கூட்டில் ஏற்றப்பட்டிருக்கும். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் இந்துக்கள் அல்ல, அதாவது ஒடுக்கப்பட்டவர்களோ தாழ்த்தப்பட்டவர்களோ அல்லர். இருந்திருந்தால் அவர்களின் தகுதியும் இட ஒதுக்கீட்டு சலுகைகளும் கடுமையான மீளாய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அனைவரும் (பெரும்பான்மை) பார்ப்பனர்கள். அதனால் தான் இந்த நாடும் ஊடகங்களும், ஏனைய துறைகளும் சலனமின்றி இதை கடந்து செல்கின்றன. அமுல்யா உச்சரித்த பாகிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு பொங்கிய தங்களை இந்துக்கள் எனக் கருதும் அனைவரும் இதற்கு பதில் கூறுவார்களா? பாகிஸ்தான் என்ற சொல்லை உச்சரித்ததற்காகவே இந்துவாக இருந்தும் வீடு புகுந்து தாக்கு ‘இனிமேல் உன் மகளை வீட்டுக்குள் சேர்க்கக் கூடாது’ என்று கூறியவர்கள், இந்திய ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற இந்துக்களின் வீடுகளுக்குப் போய் அவர்களின் குடும்பத்தினரை அவ்வாறு மிரட்டுவார்களா? மிரட்டவில்லை, மிரட்டவும் மாட்டார்கள். இதற்குப் பெயர் தான் பார்ப்பனியம்.

ஓட்டுப் பொறுக்குவதற்கு அனைவரும் இந்துக்கள் என்பது, மத ரீதியில் பிரிவுபடுத்துவது, ஆட்சியில் அமர்ந்து விட்டால் இந்துக்களை சூறையாடுவது, இது தான் இந்து முன்னேற்றம் பேசும் பார்ப்பன முன்னேறத்தை மட்டுமே செய்யும் பாஜக வின் நரித்தனம். இதை மக்கள் மெல்லப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் அவர்களின் தற்போதைய நடுக்கம். அதை தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பதற்கு ஆயிரம் அமுல்யாக்கள் நாடெங்கும் கிளம்பி வரட்டும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s