
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் அதிகரிக்குமோ எனும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு எனும் வீட்டுச் சிறைக்குள் மக்கள் தங்களைத் தாங்களே பிணைத்துக் கொண்டுள்ளார்கள். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் 200 கிமீ தூரம் கூட மக்கள் நடந்தே கடக்கிறார்கள் எனும் செய்திகளையும், ஊரடங்கு காலத்தில் இதுவரை பட்டினியால் 22 பேர் மரணமடைந்துள்ளார்கள் எனும் செய்தியையும், விளைந்தும் அறுவடை செய்ய முடியாத, கறந்த பாலை சாக்கடையில் கொட்டும் செய்திகளையும் காணும் போது, மழுங்கிய ரம்பத்தால் உடலை அறுப்பது போல் வலிக்கிறது.
கொரோனா எனும் தொற்று நோய் அல்லது அந்த நோய் குறித்தான அச்ச உணர்வு எப்போது குறையும்? 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14 தேதியுடன் முடிந்து விடுமா? அல்லது மேலும் நீட்டிக்கப் படுமா? மேலும் நீட்டிக்கப் பட்டால் உழைக்கும் மக்களின் நிலை என்னவாகும்? போன்ற கேள்விகள் சிந்தையை உலுக்குகின்றன. ஆனாலும் இவைகளை ஒதுக்கி வைத்து விட்டு வேறு சில விசயங்களைப் பேசலாம்.
பகத்சிங் கூறியது போல தொற்று நோய்கள் கொரோனாவுடன் தொடங்கவும் இல்லை, கொரோனாவுடன் முடியப் போவதும் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கடல் அலைகளைப் போல் மீண்டும் மீண்டும் வேறு வேறு பெயர்களில் வந்து கொண்டே தான் இருக்கப் போகின்றன. என்றால் ஒவ்வொரு முறையும் இது போன்று ஊரடங்கு திட்டங்கள் போடப்பட்டால் மக்களின் நிலை என்னாவது? அது மக்களின் வாழ் நிலையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
இந்த ஊரடங்கு உத்தரவு தேவை தானா? என்றொரு கேள்வி எழுப்பினால், கொரோனாவின் பரவும் வேகம், தடுப்பு மருந்து இல்லாதது உள்ளிட்ட காரணங்கள் கூறப்படலாம். அவை பொருத்தமான காரணங்களும் கூட. இந்த நிலையில் கோரோனா பரவலைத் தடுக்க வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டு பரவத் தொடங்கிய நிலையில் பரவலை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அரசின் பக்கமிருந்து பதில் ஏதாவது இருக்கிறதா? ஏற்பட்ட துன்பங்களுக்கு மன்னிப்பு கோருகிறேன், வேறு வழியில்லை என்று கூறினால் போதுமானதாகுமா? இரண்டரை மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததற்கான பொறுப்பை யார் ஏற்பது?
இப்போதும் கூட, அரசின் ஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கவில்லை எனும் பிம்பம் அரசாலும், காவல் துறையாலும், அச்சு காட்சி ஊடகங்களாலும் மக்களிடம் பதிய வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக 99 விழுக்காடு மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவை மதித்து தங்களைத் தாங்களை வீட்டுச் சிறையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எஞ்சி இருக்கும் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடு யார்? அரசு முன் திட்டமிடுதல் இல்லாமல் ஊரடங்கு உத்தரவை அறிவித்ததால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்போரும், அன்றாட, அவசியத் தேவைகளை வாங்குவதற்காக வெளியில் வருவோரும், குறிப்பிட்ட நேரம் தான் காய்கறி இறைச்சிக் கடைகள் இயங்கும் என அறிவித்ததால், அதற்குள் வாங்கி விட வேண்டும் எனும் எண்ணத்தில் கூடுவோரும் தான். மிக சொற்பமானவர்கள் ஊரடங்கை புரிந்து கொள்ளாமல் மீறவும் செய்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த விதிவிலக்குகளை காட்டி மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கை மதிக்காமல் சுற்றித் திரிகிறார்கள் என்று பதிய வைக்கப் படுவது ஏன்? நாளை கொரோனா பரவல் மிகைத்து தவிர்க்க இயலாமல் துன்பமான கெடுவாய்ப்பை எதிர் கொள்ள நேர்ந்தால், அப்போது அரசு கட்டுப்படுத்த முயன்றது மக்கள் தான் மதிக்கவில்லை என்று பழியை மக்கள் மீது தள்ளிவிடுவதற்கான முன்னேற்பாடா?

இது ஒரு நெருக்கடியான நேரம். இந்த நெருக்கடியை அரசும் மக்களும் இணைந்து தான் எதிர் கொள்ள முடியும். இதை மக்கள் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, அரசு புரிந்து கொள்ள பிடிவாதமாய் மறுக்கிறது. காவல்துறையின் நடவடிக்கைகள் இதை உறுதிப் படுத்துகின்றன. தண்டனை கொடுக்கும் உரிமை எப்போதும் தங்களுக்கு உண்டு என்பது தான் காவல் துறையின் செயல்பாடுகளின் பொதுவான அடிப்படை. இப்போதும் அதே தான் அடிப்பதும், பிற தண்டனை வழங்குவதுமாய் ஊரடங்கை நிறைவேற்றுகிறார்கள். இந்த தாக்குதல்களுக்கு மருத்துவர்களும் தப்பவில்லை. ஆனால் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அரசின் திட்டங்களை மக்கள் இசைந்து செயல்படுத்த வேண்டுமென்றால் அதை தண்டனை பயத்தால் செயல்படுத்த முடியாது. இரு பக்க புரிதல் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். தினமும் காலையில் பல்துலக்க வேண்டும் என்பதை எந்த தண்டனை பயத்தில் மக்கள் நிறைவேற்றுகிறார்கள்? இந்த புரிதல் ஏற்பட வேண்டுமென்றால் அரசு தன் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். நிகழும் ஒவ்வொன்றையும் மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். இப்போதும் கூட நாட்டின் பல பகுதிகளில் துணை இராணுவப் படைகள் இறக்கப்படுகின்றன. ஏன் இராணுவம் வீதிகளில் நிற்கிறது என்பதை யாரும் அறிவிக்கவும் இல்லை. அதன் காரணம் யாருக்கும் தெரியவும் இல்லை. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ன செய்யப் போகிறது? என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை. பண மதிப்பிழப்பு போல், ஊரடங்கு போல் திடீரென உத்தரவிடுவார்கள் மக்கள் அடங்கி நடக்க வேண்டும். இதற்குப் பெயர் தான் மக்களாட்சியா?
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நடப்பில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு மட்டும் உலகமே ஊரடங்கை போர்த்திக் கொண்டிருப்பது ஏன்? கொரோனா வேகமாகப் பரவுகிறது என்பது மட்டும் தான் காரணமா? ஒவ்வொரு பேரிடர்களிலும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. மழை அதிகமாகப் பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனால் ஏற்படும் துன்பங்களான குடியிருப்பை வெள்ளம் சூழ்தல், வாழ்வாதாரம் கெடுதல் உள்ளிட்ட துன்பங்கள் உழைக்கும் மக்களுக்கு கிடைக்க, மறுபுறம் வெள்ளத்தால் உயரும் நிலத்தடி நீர்மட்டம், அதனை எடுத்து விற்பனை செய்யும் பெரு நிறுவனங்களுக்கு லாபமுமாய் கிடைக்கிறது. அதே போல் தான் இந்த ஊரடங்கிலும். வேலைக்கு செல்ல முடியாமல், சாப்பிட முடியாமல், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், ரேசன் பொருட்களுக்கும், பிச்சை போல் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய்க்கும் அடித்துக் கொண்டு உழைக்கும் மக்கள் வாடுகிறார்கள். மறுபக்கம், புதிய கல்விக் கொள்கையில் எதிர்க்கப்பட்ட காணொளிக் காட்சி மூலம் உலகின் ஏங்கோ ஒரு மூலையிலிருந்து அனைவருக்கும் கல்வி கற்பிக்கும் முறைக்கு சத்தமே இல்லாமல் வரவேற்பு கிடைக்க தொடங்கி இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ஊரடங்கு நீடித்தால் இந்தக் கோரிக்கையை மக்களே முன் வைப்பார்கள். பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் பெருநிறுவனங்கள் உற்பத்தி செலவை குறைக்கும் விதத்தில் அலுவலக பணிகளை வீட்டிலிருந்தே செய்வதற்கு வெகு எளிதாக தங்கள் ஊழியர்களை பயிற்றுவித்து விடுகின்றன. நாளை பெரு நிறுவனங்களுக்கு அலுவலக கட்டிடம், பராமரிப்பு, கணிணி, மின்சாரம் என எந்தத் தேவையும் இன்றி வேலை முடிந்து விடும்.
அரசுக்கு இதை விட பெரிய லாபம் ஒன்று கிடைக்க இருக்கிறது. இந்த கொரோனாவை முன்வைத்து சீனாவும் தென் கொரியாவும் தம் மக்களை பெரிய அளவில் உளவி வருகின்றன. மக்கள் என்ன நினைக்கிறார்கள் எந்தப் பொருளை விரும்புகிறார்கள், எந்தப் பொருள் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது என்பதை கண்டறிவது பெருநிறுவனங்களின் தேவையாய் இருக்கிறது. அதேநேரம் மக்கள் என்ன சிந்திக்கிறார்கள்? அரசின் திட்டங்களை யார் எதிர்க்கிறார்கள்? யார் அரசை எதிர்த்து பரப்புரை செய்கிறார்கள்? யார் அரசுக்கு எதிராக அமைப்பாகிறார்கள்? போன்ற தகவல்கள் எல்லாம் அரசுக்கு தேவையாய் இருக்கிறது. இந்த இரண்டையும் நிறைவேற்றுவதற்கு இந்த ஊரடங்கு உறுதுணையாய் இருக்கப் போகிறது. ஒரு விதத்தில் இந்த ஊரடங்கு மக்களை அதற்கு ஆயத்தப் படுத்தும் பயிற்சிக் களம்.

ஒற்றை அறிவிப்புக்கே மக்கள் தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊராங்கையும் மீறி நோய் பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி அரசு இலவசமாக வழங்கும் ஒரு பட்டையை கைக்கடிகாரம் போல 24 மணிநேரமும் மக்கள் அதை அணிந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு, நுரையீரல் சளியின் அளவு ஆகியவற்றை ஒரு ஆப் மூலம் அருகிலுள்ள மருத்துவ நிறுவனம் கண்காணிக்கும் என்று கூறினால், மக்கள் அதை அணிந்து கொள்வார்களா? மாட்டார்களா? அல்லது ஒரு திறன்பேசி ஆப்பை மக்கள அனைவரும் தங்கள் திறன்பேசிகளில் பதிவிறக்கி செயல்படுத்த வேண்டும். நீங்கள் வழக்கமாக திறன்பேசிகளை கைகளால் பயன்படுத்தும் போது அது உங்கள் உடல்நிலை, இரத்த அழுத்தம், வெப்பநிலை, இதயத்துடிப்பு, நுரையீரல் சளியின் அளவு ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் மக்களை கண்காணித்து தொற்று நோய் பரவாமல் மக்களை பாதுகாக்க முடியும் என்று அறிவித்தால், மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? மாட்டார்களா? அந்த ஆப்களின் மூலம், கைப் பட்டைகளின் மூலம் உடல்நிலையை மட்டுமல்ல, நீங்கள் எதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியடைகிறீர்கள்? எதைப் பார்க்கும் போது துன்பமடைகிறீர்கள் அல்லது கோபப்படுகிறீர்கள்? எதன் போது உற்சாகமடைகிறீர்கள்? எந்த நிகழ்வின் போது வெறுப்படைகிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்? எவ்வளவு நேரம் தங்குகிறீர்கள்? என்பன போன்ற எல்லா தரவுகளையும் திரட்ட முடியும்.
நாட்டின் உளவுத் துறை முற்றுமுழுதாக தற்போது இந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். ஏற்கனவே, திருட்டு பயம் எனும் அச்சத்தின் மூலம் கடைவீதியின் பெரும்பாலான கடைகளில் காவல்துறை வற்புறுத்தலின் பேரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக அந்த கேமராக்கள் கடையின் வெளிப்பக்கமிருந்து உள்ளே நோக்குவது போல் ஒருபோதும் இருக்காது. உள்ளிருந்து வெளியே, அதாவது வீதியை நோக்குவது போலவே அமைக்கப்பட்டிருக்கும். இதனால் தானே திருடர்கள் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள் என நீங்கள் எண்ணலாம். அது ஒரு சாக்கு தான். அதன் முழுதான நோக்கம் அரசுக்கு எதிராக செயல்படுவோரின் நடமாட்டம், அவர்களின் திட்டம், செயல்பாடுகளை கண்காணிப்பது தான். ஆதார் போன்ற திட்டங்களும், ஆதாருடன் அனைத்து சேவைகளையும் இணைக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதன் பின்னாலும் இந்த நோக்கம் தான் இருக்கிறது. மட்டுமல்லாமல் முகத்தை அடையாளம் காணும் ஃபேஸ் ரெககனைசர், குரலை அடையாளம் காணும் வாய்ஸ் ரெககனைசர் போன்ற தொழில் நுட்பங்கள் ஏற்கனவே இங்கு செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த தொழில்நுட்ப தரவுத் தொகுப்புகள் குறித்து விசுவலாக தெரிந்து கொள்ள விரும்புவோர்கள் சித்தார்த் நடித்த உதயம் என்.ஹெச்,4, விஷால் நடித்த இரும்புத்திரை, டாம் குரூஸ் நடித்த மைனாரிட்டி ரிப்போர்ட் எனும் ஆங்கிலப் படம் ஆகிய படங்களை பார்க்கலாம்.
சரி. அரசு ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது? கோரோனா பரவலை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் இனி இது போன்ற நோயகளையே வராமல் தடுக்க முடியுமா? ஆபத்தான நோய் பரவல் நிலையிலும் அரசுகள் அலட்சியமாக இருப்பதன் காரணம் என்ன? மக்கள் அதை எவ்வாறு எதிர் கொள்வது போன்றவற்றை அடுத்த கட்டுரையில் காணலாம்.
விழிப்புணர்வு தரும் சிறப்பான பதிவு