கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படித்து விட்டு இதை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அதை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்: கொரோனா: ஊரடங்கின் பிறகு?

திருட்டு அதிகரித்து விட்டது அதானால் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். பிற நாட்டினர் இங்கு சட்ட விரோதமாக வசிக்கிறார்கள் அதனால் குடியுரிமை சட்டம் திருத்தப்படலாம். மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. முறைகேடு நடக்கிறது. அதனால், தேசிய அடையாள அட்டையை உருவாக்கி அதனுடன் எல்லா சேவைகளையும் இணைக்கலாம். கட்டற்ற செய்தி வலையங்களான செல்லிடப்பேசி, இணையம் ஆகியவைகளில் வதந்தி பரவுகிறது. அதனால், அவைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் செய்யலாம். குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அதனால் காவல், உளவுத் துறைகளுக்கு கூடுதல் அதிகாரமும், கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கலாம். இன்னும் இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவ்வாறான திட்டங்கள் அனைத்திலும் கூறப்படும் காரணம் ஒன்றாகவும், அதனை செயல்படுத்தும் நோக்கம் வேறொன்றாகவும் இருப்பதை வெளிப்படையாக அறியலாம்.

சிசிடிவி கேமராக்களை நிறுவுவதன் மூலம் திருட்டு, வழிப்பறிகளை தடுத்துவிட முடியுமா? குடியுரிமை சட்டத்தின் மூலம் வெளிநாட்டினரை வெளியேற்றிவிட முடியுமா? ஆதார் போன்ற திட்டங்கள் மூலம் முறைகேடுகளை தடுத்துவிட முடியுமா? இணையம், செல்லிடப்பேசிகளை கண்காணிப்பதன் மூலம் வதந்திகளை தடுத்து விட முடியுமா? காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதன் மூலம் குற்றங்களை தடுத்து விட முடியுமா? முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். என்றாலும், ஓரளவு மட்டுப்படுத்தலாம் தானே என்றொரு பதில் கிடைக்கலாம். மீண்டும் ஒரு கேள்வி. மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு ஓரளவு மட்டுப்படுத்தக் கூட முடியாமல் இருந்ததா? என்றால் அதன் பதில் என்ன? ஏற்கனவே, இருக்கும் வசதிகள் சட்ட திட்டங்களைக் கொண்டே ‘ஓரளவு’ செய்ய முடிந்திருக்கும் போது, அதே ‘ஓரளவை’ செய்வதற்கு கூடுதலான திட்டங்களும் வசதிகளும் ஏன் தேவைப்படுகின்றன? என்றால் கூடுதலான அந்த திட்டங்களுக்கும் வசதிகளுக்கும் வேறு நோக்கங்கள் இருக்கின்றன என்பது தான் பதில். அந்த வேறு நோக்கம் தான் மக்களை கண்காணிப்பது.

அரசுகள் ஏன் மக்களை கண்காணிக்க வேண்டும்? அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றன என்பதால் தான். அரசுகள் மக்களை தமக்கு ஆதரவானவர்கள் எதிரானவர்கள் என்று மட்டுமே பார்க்கின்றன என்பதால் தான். துல்லியமாகச் சொன்னால் கார்ப்பரேட்டுகளின் நலன் மட்டுமே முதன்மையானது. இதனை ஏற்றுக் கொள்வோர்கள் ஒருபுறம், மறுப்போர்கள் எதிர்ப்புறம் என்பது தான் அரசுகளின் கண்ணோட்டம். தன் குடிமக்களின் மறுப்போரும், எதிராக நிற்பவர்களும் தான் அதிகம் என்பதால் தான் அரசுகள் அவ்வாறு எதிர்ப்பாக நிற்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க, அவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, அவர்களின் திட்டங்களை நசுக்க விரும்புகிறது. இதனை செய்வதற்கு கண்காணிப்பது அவசியம் தானே.

எடுத்துக்காட்டுக்கு கொரோனா குறித்த செய்திகளையே எடுத்துக் கொள்வோம். ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். ஆனால், மாட்டு மூத்திரம் தொடங்கி, தீண்டாமை சரியானது என்பது வரை கொக்கரித்த சங்கிகளில் எவரும் கைது செய்யப்படவில்லை. (இப்படி கூறுவதன் மூலம் ஹீலர் பாஸ்கரையோ, அவரின் இலுமினாட்டி உளரல்களையோ ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது பொருளல்ல) ஒரு சிறுவனின் ஜோதிட முக்கல்களுக்கு கொடுத்த முதன்மைத் தனத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து கண்டுபிடித்திருக்கிறேன் என்று கூறிய மருத்துவருக்கு கொடுக்கப்படவில்லை (அவர் சித்த மருத்துவர் தானா? அந்த மருந்து குணப்படுத்துமா? எனபனவெல்லாம் வேறு விசயங்கள்) காவலர்களையும், மருத்துவர், செவிலியர்களையும், தூய்மைக் காவலர்களையும் பாருங்கள். அரசின் திட்டங்களுக்காகவே அவர்கள் களத்தில் நிற்கிறார்கள் என்றாலும் கடைநிலையில் இருப்பவர்களின் எளிய, நியாயமான கோரிக்கைகளான குறைந்தபட்ச பாதுகாப்பு கருவிகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசின் அத்தனை செயல்பாடுகளிலும் இந்த பேதத்தை நாம் தெளிவாக பார்க்க முடியும். எனவே, கொரோனா ஊரடங்கில் இந்த பேதம் இருக்காது என்றும், மக்களின் நலம் ஒன்றே இந்த ஊரடங்கின் ஒரே நோக்கம் என்றும் உறுதியாகக் கூற முடியாது.

கடந்த டிசம்பர் மத்தியில் கொரோனா பரவத் தொடங்கியது. சீனா அதை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிறகு இன்று ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மரண எண்ணிக்கை சீனாவோடு ஒப்பிடுகையில் மடங்குகளில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. மக்கள் தங்கள் அரசுகளை நோக்கி கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? என்று. ஏனென்றால் மக்கள் மீது மெய்யான அக்கரை கொண்டு அவர்களை காக்கும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசுகளின் பழக்கமாகவே இல்லை. கார்பரேட்டுகளை காப்பது மட்டுமே அரசுகளின் கடமை, பழக்கம். அது கொரோனா போன்ற நெருக்கடிகளில் மக்களுக்காக என்று கொஞ்சம் நடிக்க வேண்டியதிருக்கிறது. மக்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்து விடக் கூடாதே என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. அது தான் பிரச்சனை. கொரோனா விசயத்தில் இந்த சிக்கலிலிருந்து நழுவிக் கொள்வதற்கு மடைமாற்றும் உத்தியை அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கின்றன.

சீன வைரஸ் என்று ட்ரம்ப் ஒவ்வொரு இடத்திலும் சொல்லி வந்தார். சீனா முழுமையான தகவல்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மரண எண்ணிக்கை 40,000க்கும் அதிகம் ஆனால் 3000 என்று தவறான தகவலை உலகிற்கு அளிக்கிறது என்றும், பிற நாடுகளுக்கு உதவியாய் வழங்கும் மருத்துவப் பொருட்கள் தரம் குறைந்தவைகளாக இருக்கின்றன என்றும் சீனா மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இப்போது குற்றம் சாட்டும் இதே உலக அமைப்புகள் தாம் தத்தமது நாடுகளில் பிரச்சனை பெரிதாகாத வரையில் சிறப்பாக நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்துவதாக சீனாவை பாராட்டிக் கொண்டிருந்தன. மிக விரைவாக ஜனவரி தொடக்கத்திலேயே வைரஸின் வடிவம் கணிக்கும் மருத்துவ ஆய்வுத் தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக நன்றி கூறிக் கொண்டிருந்தன. இதன் மூலம் சீனாவில் இருப்பது முழுமையாக மக்கள் நலன் பேணும் அரசு என்றோ, தகவல்களை மறைக்காமல் வெளிப்படையாக நடந்து கொண்டது என்றோ பொருளல்ல, மாறாக, ஒப்பீட்டளவில் அந்நாடு சிறப்பான நடவடிக்கைகளைக் கொண்டிருந்தது என்பது மட்டுமே இதன் பொருள்.

இந்தியாவிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா நடப்புகளும் தெரிந்திருந்தும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எந்த நடவடிக்கையும் கொரோனா பரவலுக்கு எதிராக எடுக்கவில்லையே ஏன்? எனும் கேள்வியை எதிர் கொள்ள முடியாத நிலை வந்துவிடக் கூடாது என்பதால் தான், சிரமங்களுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் எனும் கழிவிறக்கமும், இஸ்லாமியர்களே கொரோனாவை பரப்பினர் எனும் மதவெறியும் பரப்பப்படுகிறது. தமிழ்நாடு, தில்லி அரசுகளின் தகவகளே இதில் முரண்பாடாக இருக்கின்றன. தில்லி தப்லீக் மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து 500 பேர்கள் கலந்து கொண்டார்கள் என்று தில்லி அரசும், 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். அதில் 550 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தி உள்ளோம். இன்னும் 600 பேரை கண்டறிய முடியவில்லை. செல்லிடப்பேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தமிழக அரசு கூறுகிறது. தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தில்லி மருத்துவர்கள் கூறுகிறார்கள். தனிமைப்பட்டிருப்பவர்களோ எங்களை தனிமைப்படுத்தி மட்டுமே வைத்துள்ளார்கள், எங்களுக்கு எந்த விதமான டெஸ்ட்டும் எடுக்கவில்லை, குறைந்தபட்சம் இரத்த மாதிரி கூட எடுக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டிருப்பதாக நாளிதழ்கள் முகவரியுடன் கூறுகின்றன. காவல்துறை கொடுக்காமல் முகவரி நாளிதழ்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அரசு கூறாமல் காவல்துறை துணிந்து இப்படி இறங்காது.

ஊறடங்கு அறிவிக்கப்படாத நிலையில் கூடிய ஒரு மாநாடு குறித்து இவ்விதம் வதந்தி கிளப்பும் ஊடகங்களும் அரசும், தில்லி மாநாடு நடந்த தினத்திலும், அதை ஒட்டியும், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரும் மோடி டிரம்ப் நடத்திய கிரிக்கெட் திடல் கூட்டம், அயோத்தியில் நடந்த ராமர் பொம்மை மாற்ற நிகழ்ச்சி என பல நிகழ்வுகள் நடந்துள்ளன. இவை குறித்து இது போன்ற எந்த வதந்தியும் பரப்படவில்லை. என்றால் இதன் பொருள் என்ன? அரசே திட்டமிட்டு இப்படி பிரச்சனையை திசை மாற்றி விடுகிறது என்பது தானே.

அரசுகளின் செயலாற்ற மறுக்கும் தன்மையை கேள்வி கேட்கும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்திகள் மூலம் தப்பிப்பதற்கு அப்பாற்பட்டு ஏன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கமும் மரணமும் அதிகம் இருக்கின்றன என்பதற்கு மருத்துவ ரீதியான காரணம் ஒன்றும் இருக்கிறது. கோரோனா மட்டுமல்ல, பழைய வைரஸ் தொற்றுகளின் வரலாறுகளில் இருந்தும் பார்த்தால் எந்த நாடுகளிலெல்லாம் அலோபதி மருத்துவ முறையுடன் மரபு ரீதியான மருத்துவ முறைகளும் இணையாக இயங்கி வந்திருக்கிறதோ அந்த நாடுகளிலெல்லாம் மரண விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்திருக்கிறது. அடிப்படையில் அலோபதி மருத்துவம் மனிதர்களிடம் உள்ள இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை குலைத்து வெளியிலிருந்து உட்கொள்ளப்படும் மருந்துகளின் ஆற்றலே நோயை முறிக்கும் தன்மையை கொண்டது. பிற மரபு முறைகளோ வெளியிலிருந்து உட்கொள்ளப்படும் மருந்துகளின் ஆற்றல் இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து அதன் மூலம் நோயை முறிக்கும் தன்மையை கொண்டது. எனவே, அலோபதியை மட்டுமே மருத்துவ முறையாக கொண்டிருக்கும் நாடுகளின் மக்கள் இயல்பாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் குலைந்தவர்களாகவே இருப்பார்கள். இது தொற்று தாக்குவதற்கும், மரணமடைவதற்கும் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அலோபதிக்கும் தனிமார்மயத்துக்கும் அரசுகளுக்கும் அடையிலான தொடர்பு அதன் இந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை குலைக்கும் தன்மையிலேயே இருக்கிறது.

தற்போது கொரோனா தாக்குதலின் பிறகு மக்களிடம் தனியார்மயத்துக்கு எதிரான கருத்து வலுப்பட்டு வருகிறது. குறிப்பாக, மருத்துவத் துறையில். அனைத்து மருத்துவ நிலையங்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுகின்றன. ஸ்பெயின் இதில் முதல் எட்டு எடுத்து வைத்திருக்கிறது. அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு எடுத்துக் கொள்ளும் என்று அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஆந்திராவும் இவ்வாறான அறிவிப்பை செய்திருக்கிறது. கொரோனா போன்ற கொள்ளை நோய்களை கட்டுப்படுத்த மருத்துவமனைகள் அரசிடம் இருப்பது அவசியமாகிறது. ஆனால் இதை எல்லா நாடுகளும் ஏற்று செயல்படுத்துமா?

ஒருபக்கம் கொரோனா போன்ற கொள்ளை நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மறுபக்கம் அரசுகள் நோய்களின் போதும் சாதாரண காலங்களிலும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் மக்களை வதைக்கின்றன. இவைகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது?

மக்கள் பொதுவாக தங்களை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக கருதிக் கொள்கிறார்கள். ‘அவனி’ன்றி அணுவும் அசையாது என்று கூறப்படுவது போல், அரசியலின்றி எதுவும் இங்கு இயங்காது. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் எனும் போது மக்களின் ஒவ்வொரு அசைவும் அரசியலாக மட்டும் தானே இருக்க முடியும்? இந்த கொரோனா தனிமைப்படுத்தலை எடுத்துக் கொள்வோம். இதில் அரசுக்கு சாதகமான அம்சங்கள் நிறைய இருந்தாலும் இதனால் ஏற்படப் போகும் பொருளாதார பாதிப்புகள் கொடுமையானதாக இருக்கும். ஏனென்றால் இதுவரை உலகம் சந்தித்திராத நெருக்கடி இது. இதுவரை உலகம் சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் ஒரு துறையில் இருக்கும், ஏனைய துறைகள் இயங்கிக் கொண்டிருக்கும். உற்பத்தி நெருக்கடி என்றாலும் கூட குறிப்பிட்ட சில பொருட்களில் நெருக்கடி நிலவும் ஏனையவை இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது உலகின் ஒட்டு மொத்த உற்பத்தியும் முடங்கியுள்ளது. அலையலையாக வந்திருக்கும் நெருக்கடிகளின் வரலாற்றை பார்த்தால், ஒவ்வொரு முறையும் நெருக்கடிகளின் சுமையை மக்களின் தலையில் சுமத்தியே தன் நெருக்கடியை (தற்காலிகமாகவேனும்) தீர்த்துக் கொண்டிருக்கிறது முதலாளித்துவம். இந்த முறையும் அது தான் நடக்கும் என்பதால் மூன்று வித சிக்கல்கள் மக்களை சூழ்ந்துள்ளன. 1. கொள்ளை நோய் தாக்குதல் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது. 2. இந்த தனிமைப்படுத்தலையும் சூழலையும் பயன்படுத்திக் கொண்டு மக்கள் மீது அரசு தீவிரப்படுத்த இருக்கும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள். 3. இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் மக்கள் தலையிலேயே ஏற்றப்படும்.

இந்த மூன்று வித நெருக்கடிகளில் மக்கள் தனி மனிதனாக இருந்து எதையும் தீர்க்க முடியாது. ஒரு நாட்டின் குடிமக்கள் எனும் அடிப்படையில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு நமக்கும் இருக்கிறது என உணர்வதிலிருந்தே இதை தொடங்க முடியும். மக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதற்காக அரசை வலியுறுத்தும் எந்த வடிவத்தையும் கைக்கொள்ள மக்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பை எடுத்துக் கொள்வோம். இரண்டு மாதத்திற்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் காரணத்தை அரசு மக்களுக்கு விளக்கியாக வேண்டும். தொடக்கத்திலிருந்து இப்போது வரையும், இனியும் எடுத்த எடுக்கவிருக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் மக்களிடம் விளக்க வேண்டும். இந்த நோய் பரவல் நடவடிக்கையில் சீனாவும், கியூபாவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே அந்த நாடுகளோடு உதவியும் ஆலோசனையும் பெற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளை மட்டுமல்ல அனைத்து சேவை நிறுவனங்களையும் அரசே நடத்த மக்கள் கமிட்டிகளை அமைத்து அதன் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். அலோபதிக்கு இணையாக பிற மரபு மருத்துவ முறைகளையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தும் அளவுக்கு மக்கள் அரசியல் உணர்வு பெற்றாக வேண்டும்.

தனிப்பட்ட பொருளாதார தீர்வுகள் என்று எதுவுமில்லை. அரசு பொருளாதாரத்துக்கு இணையாக தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் தனித்தனியான மக்கள் பொருளாதாரத்தை ஒருங்கிணைந்த வடிவில் செயல்படுத்த மக்கள் முன்வர வேண்டும். கார்ப்பரேட்டுகள், பெருவங்கிகள், பங்குச் சந்தை போன்றவற்றை உள்ளடக்கிய அரசு பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்கள் பாதிக்காத வண்ணம் மக்கள் தங்கள் ஜாதி மத இன மொழி வேறுபாடுகளைக் கடந்து தங்களின் சொந்த பொருளாதார நலன்களின் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த ஒத்துழையாமை வடிவிலான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க வேண்டும். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட நடப்பிலிருக்கும் போராட்ட வடிவங்கள் வழக்கொழிந்து விட்டன. பாசிசத்தனமான, இராணுவ அரசாக இருக்கும் இன்றைய முதலாளித்துவ ஜனநாயக அரசின் ஒடுக்குமுறைகளுக்கு முன்னால் எதிர்த்து நிற்பதும், ஒன்று கூடுவதுமான போராட்ட வடிவங்கள் மக்களை விரக்திக்குள் தள்ளுகின்றன. எனவே, மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களை நடத்திக் கொண்டே வீட்டிலிருந்தபடியே ஆனால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்ட வடிவங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவைகளையெல்லாம் மக்கள் மத்தியில் செயல்படும் புரட்சிகர அமைப்புகள் செயல்வடிவம் கண்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உலகளாவிய அமைப்புகளை கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை தொடங்கி, உலக வர்த்தக கழகம் வரை. இவை போன்ற அமைப்புகள் மக்களுக்கு இருக்கின்றனவா? அரசுகள் மக்களை கிள்ளுக் கீரைகள் போல் மதிப்பதும், மக்கள் அமைப்புகளை நசுக்குவதற்கு எந்த எல்லைக்கும் செல்லவும் அவை தயாராக இருக்கின்றன. இதை கண்காணிக்கவும் கேள்வி கேட்கவும் ஓர் அமைப்பு வேண்டும். அகிலம் போன்ற உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலும், அதற்கான தொடக்க முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்கான முதற்படியாக தமிழ்நாட்டு அளவில், இந்திய அளவில் இருக்கும் அனைத்து வடிவிலான சோசலிசம் நோக்கிய கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

மேற்கண்டவைகள் எல்லாம் மிக மிகக் கடினமான வேலைகள் தாம். ஆனால் அதை செய்வதற்கு நாம் தயாராகாமல் பாசிச மயமாகி இருக்கும் அரசுகளை வீழ்த்தவோ மக்களைக் காக்கவோ, குறைந்த பட்சம் கொரோனா போன்ற நோய்களிலிருந்து மக்களைக் காக்கவோ கூட முடியாமல் போகும். வேறு வழியில்லை.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s