பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 3

நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை

பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 1

இந்த நூலின் இதற்கு முந்திய பெரிய அளவுப் பதிப்புகள் எல்லாம் கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே விற்பனையாகித் தீர்ந்து விட்டபடியால் நான் ஒரு புதிய பதிப்பை தயாரிக்க வேண்டுமென்று பதிப்பாளர் (இ. டீட்ஸ்) கடந்த சில காலமாக என்ன வற்புறுத்தி வந்தார். அதைக் காட்டிலும் அவசரமான பணிகள் ஏற்பட்டு இதுவரை அதைச் செய்ய இயலாதபடி தடுத்து விட்டன. முதல் பதிப்பு வெளியாகி ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த ஏழு ஆண்டுகளில் குடும்பத்தின் மூல வடிவங்களைப் பற்றிய நமது அறிவில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நூலின் பொருளை மேலும் விவரித்து மேம்படுத்தும் பணியில் நான் அக்கரையுடன் ஈடுபடுவது அவசியமாயிற்று. குறிப்பாக, மற்றொரு காரணமும் உண்டு. இந்த நூலை அப்படியே அச்சுப் பதிவு செய்து விட்டால், பிறகு நான் மேற்கொண்டு மாறுதல்கள் செய்வது சிறிது காலம் வரை இயலாமற் போய் விடும்.

ஆகவே, நான் நூலின் முழு வாசகத்தையும் கவனத்துடன் மீண்டும் படித்துத் திருத்தினேன். சில விவரங்களைப் புதிதாகச் சேர்த்தேன். அவை இன்றைய விஞ்ஞான நிலையை கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கின்றன என்றே கருதுகிறேன். மேலும், குடும்பத்தின் வரலாறு பாஹொஃபென்னிலிருந்து மார்கன் வரை பெற்ற வளர்ச்சியைக் குறித்து சுருக்கமான விமர்சனத்தை இந்த முன்னுரையில் தருகிறேன். இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு: இங்கிலாந்தில் உள்ள ஏடறியா வரலாற்று மரபினரிடம் சிறிது இனவெறி படிந்துள்ளது; இவர்கள் மார்கனுடைய முடிவுகளைத் திருடி தமதாக்கிக் கொள்வதற்குச் சிறிதும் தயங்கவில்லை, எனினும் புராதனச் சமூக வரலாற்றைப் பற்றிய கருத்தோட்டங்களில் மார்கனின் கண்டுபிடிப்புகள் ஏற்படுத்திய புரட்சியை மௌனம் சாதிப்பதன் மூலம் அழித்து விடலாம் என்று இந்த மரபினர் தம்மால் முடிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த ஆங்கில உதாரணத்தை மற்ற நாடுகளும் அடிக்கடி பின்பற்றி வருகின்றன.

என்னுடைய நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. முதலில் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்டது: L’origine della famiglia, della proprieta privata e della stato. Versione riveduta dall’autore, di, pasquale Martignetti. Benenvento 1885; பிறகு ருமேனிய மொழியில் யாஸி நகரிலிருந்து வெளியிடப்பட்ட Contemporanul எனும் சஞ்சிகையில் [Contemporanul (சமகாலத்தவன்) ருமேனியாவிலிருந்து வெளிவந்த சோசலிச சஞ்சிகை; யாஸியிலிருந்து 1881 முத்ல் 1890 வரை வெளியிடப்பட்டது] 1885 செப்டம்பர் முதல் 1886 மே வரை வெளியிடப்பட்டது: Originea familiei, propriettii private si a statului. Traducere de Joan Nadejde. மேலும், டேனிஷ் மொழியில் வெளிவந்தது; Familiens, Privatejendommens og Statens Oprindelse. Dansk of Forfattern gennerngaaet Udgave, besorget of Gerson Trier. Kobenhaven 1888. இந்த ஜெர்மன் பதிப்பை ஆதாரமாகக் கொண்டு அன்ரீ ரவே மொழிபெயர்த்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பு அச்சில் இருக்கிறது.

             *************

1860களின் தொடக்கம் வரை குடும்பத்தைப் பற்ரிய வரலாறு ஒன்றுமே இருக்கவில்லை. இத்துறையில் வரலாற்று விஞ்ஞானம் மோசஸ் அருளிய ஐந்து நூல்களின் செல்வாக்கின் கீழ் இன்னும் முழுமையாக இருந்து வந்தது. வேறு எந்த நூலையும் விட இவற்ரில் தான் தந்தை வழிக் குடும்பத்தின் வடிவம் அதிகமான விவரங்களுடன் வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்த தஹ்டை வழிக் குடும்ப வடிவம் தான் குடும்பத்தின் மிகத் தொன்மையான வடிவமென்று அப்படியே ஏற்றுக் கொள்லப்பட்டது மட்டுமின்றி, பலதார மணம் நீங்கலாக, குடும்பம் என்பது வரலாற்று ரீதியில் சிறிதும் வளர்ச்சி அடையவேயில்லை என்ற போக்கில் அந்த தந்தை வழிக் குடும்பமும் தற்கால முதலாளி வர்க்கக் குடும்பமும் ஒன்றோடொன்று இனங்காணப்பட்டது. அதிகமாகப் போனால், ஆதிமனித சகாப்த காலத்தில் வரைமுறையற்ற புணர்ச்சி நிலவிய காலம் இருந்திருக்கலாம் என்று மட்டும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஒரு தார மணம் மட்டுமின்றி, கீழ்த்திசை நாடுகளின் பலதார மணமும் இந்திய-திபேத் வகைப்பட்ட பல கணவர் மணமும் நாம் நன்கறிந்தவை தான். ஆனால் இம்மூன்று வடிவங்களையும் எவ்விதமான வரலாற்றுத் தொடர் வரிசையிலும் வைக்க முடியாதிருந்தது; அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஒன்றுக்குப் பக்கத்தில் இன்னொன்று இருக்கின்ற மாதிரிக் காட்சியளித்தன. பண்டைய காலத்தைச் சேர்ந்த சில மக்களினங்கள் மத்தியிலும் தற்காலத்தில் இன்னும் உள்ள சில காட்டுமிராண்டிகள் மத்தியிலும் மரபு வழியைத் தந்தை வழியாகக் கொள்ளாமல் தாய்வழியாகக் கொண்டு, அத்தாய்வழி மரபு முறைதான் செல்லத் தக்கது என்று கருதப்பட்டது என்பதும் தற்கால்த்தைச் சேர்ட்ந்த பல மக்களினங்களிடையே சில திட்டவட்டமான பெரிய குழுக்காளுக்குள் (அக்காலத்தில் அக்குழுக்கள் நெருங்க ஆராயப்படவில்லை) திருமணம் செய்தல் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதும் இந்த வழக்கத்தை உஅல்கின் எல்லாப் பகுதிகளிலும் காணலாம் என்பதும் தெரிந்தவை என்பது மெய்யே; மேலும் புதிய உதாரணங்களும் இடைவிடாமல் வெளிப்படுத்தப்பட்டு வந்தன. ஆனல், அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று எவருக்குமே தெரியவில்லை.எ.ப.டேய்லர் எழுதிய மனித குலத்தின் ஆரம்ப வர்லாற்ரைப் பற்றிய ஆராய்ச்சிகள், இதரவை (1865) என்ற நூலில் கூட அவை “விசித்திரமான பழக்கவழக்கங்களாகவே” காணப்படுகின்றன; எரியும் விறகை இரும்புக் கருவிகளால் தொடக் கூடது என்று சில காட்டுமிராண்டிகளிடையே உள்ள மரபுத் தடை, இன்னும் அதைப் போன்ற மத சம்மந்தமான மூடத்தனங்களின் வரிசையில் அவையும் வைக்கப்பட்டு “விசித்திரமான பழக்கவழக்கங்களாகத்” தோற்றமளிக்கின்றன.

குடும்பத்தின் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி 1861 இலிருந்து, பாஹொன்ஃபென் எழுதிய தாய் உரிமை என்ற நூல் வெளிவந்ததிலிருந்து தான் தொடங்குகிறது. இந்த நூலில் அதன் ஆசிரியர் பின்வரும் கருத்துகளை முன்வைக்கிறார்: 1) ஆரம்பத்தில் மனித குலம் வரைமுறையற்ர புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் தான் இருந்தது; இந்நிலைக்கு ஆசிரியர் பொது மகளிர் முறை (lietaerism) என்று பெயரிட்டிருக்கிறார். இந்தப் பெயர் முற்றிலும் பொருத்தமானது என்று கூற முடியாது. 2) இந்த வரைமுறையற்ற புணர்ச்சி காரணமாக யார் தந்தை என்று நிச்சயிக்க முடியவில்லை; ஆகவே மரபு வழியைத்  தாய்வழியாகவே – தாய் உரிமைப்படி தான் – கணக்கிட முடியும்; மேலும், ஆரம்பத்தில் பண்டைக்கால மக்கள் எல்லோரிடமும் இதே நிலை தான் இருந்தது. 3) எனவே, தாய்மார்கள் என்ற முறையில், இளம் தலைமுறையினருடைய பெற்றோர்கள் என்று பெண்கள் மட்டுமே திட்டமாக நிச்சயிக்கபட முடிந்த காரணத்தால் அவர்கள் மிக உயர்ந்த சலுகையுடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டார்கள்; பாஹொஃபென்னுடைய கருத்தின்படி, பெண்களின் பரிபூரண ஆட்சி (Gynaecocracy) ஏற்படுகின்ற அளவுக்கு அந்த மரியாதை உயர்ந்திருந்தது. 4) ஒரு பெண் ஓர் ஆணுக்கு மட்டுமே உரியவள் என்கிற ஒரு தார மணத்துக்கு மாறிச் சென்ற நிலை ஆதிக்கால மதக் கட்டளையை மீறியதையே குறித்தது (அதாவது, ஒரு பெண் மீது மற்ற ஆண்களுக்கும் உரிமை உண்டு எனும் பண்டைக்கால பரம்பரை உரிமையை மீறியதைத் தான் இது குறித்தது) இந்த மதக் கட்டளையை மீறியதற்குப் பிராயச் சித்தம் செய்தாக வேண்டும், அல்லது அதைப் பொறுத்துக் கொண்டு அனுமதி தருவதற்கு தட்சனை தர வேண்டும், அதாவது அந்தப் பெண்ணை குறிப்பிட்ட காலத்துக்கு மற்ற ஆண்கள் அனுபவிப்பதற்கு ஒப்படைக்க வேண்டும்.

இந்தக் கருதுகளுக்கு ஆதரவளிக்கின்ற சாட்சியங்களை பாஹொஃபென் பண்டைக்கால மூலச் சிறப்பான இலக்கியத்தின் பல பகுதிகளில் காண்கிறார். அவர் கடுமையாக பாடுபட்டு அவற்றைச் சேகரித்தார். “பொது மகளிர் முறையிலிருந்து” ஒரு தார மணத்துக்கு மாறுகின்ற பரிணாம வளர்ச்சி – குறிப்பாக கிரேக்க மக்களிடையே – மத சம்மந்தப்பட்ட கருத்துகளிடையே நிகழ்கின்ற பரிணாம வளர்ச்சியின் ஒரு விளைவாகத் தான், புதிய கண்ணோட்டத்தின் பிரதிநிதிகளான புதிய தெய்வங்கள், பழைய கண்ணோட்டத்தின் பிரதிநிதிகளான பழைய தெய்வங்களின் குழுவில் பலவந்தமாக நுழைவதன் ஒரு விளைவாகத் தான் நடைபெற்றது என்று அவர் கருதுகிறார். புதிய தெய்வங்கள் பழைய தெய்வங்களை மென்மேலும் பின்னால் தள்ளுகின்றன. ஆக, பாஹொஃபென்னுடைய கருத்துப்ப்படி, ஆணும் பெண்ணும் பரஸ்பரம் வகிக்கின்ற சமூக நிலையில் வரலாற்று ரீதியான மாறுதல்களை உண்டாக்குவது மக்கள் வாழ்கின்ற எதார்த்த நிலைமைகளின் வளர்ச்சி அல்ல, அதற்கு பதிலாக இந்த நிலைமைகள் மக்கள் மனங்களில் உருவாக்குகின்ற மதம் சார்ந்த பிரதி பிம்பம் தான் அந்த மாறுதல்களை உண்டாக்குகிறது. பாஹொஃபென் இங்கு எஸ்கிலஸ் எழுதிய ஒரெஸ்தெயா என்ற நாடகத்தை சுட்டிக் காட்டுகிறார். கிரேக்க வீர யுகத்தில் நலிந்து வருகிற தாய் உரிமைக்கும் வளர்ந்து வெற்றி பெற்று வருகின்ற தந்தை உரிமைக்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டத்தை உணர்ச்சிகரமாக சித்தரிப்பது தான் அந்த நாடகம் என்கிறார். கிளிதெம்னெஸ்த்ரா தனது காதலன் எகிஸ்தருக்காக, அப்போதுதான் ட்ரோஜன் யுத்தத்திலிருந்து [ட்ரொஜன் யுத்தம் பத்து ஆண்டுகள் நடைபெற்றதாக ஹோமர் எழுதிய “இலியாத்” மற்றும் “ஒடிஸி” என்னும் காவியங்கள் தெரிவிக்கின்றன. ஆஹேய அரசர்களின் கூட்டணி மைசீனிய அரசான அகமெம்னான் தலைமையில் ட்ராய்க்கு எதிராக இந்த யுத்தத்தை நடத்தியது. ட்ராய் நகரம் உத்தேசமாக கி.மு 1260இல் நீண்ட காலம் முற்றுகையிடப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது என்பதை சமீப காலத்தில் அங்கே நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் அறிகின்றோம். அகழ்வாராய்ச்சிகள் கிரேக்கத் தொல் கதைகளை நிரூபிக்கின்றன] திரும்பி வந்த தன் கணவன் அகமெம்னானைக் கொன்று விட்டாள். ஆனால் அகமெம்னான் மூலம் அவள் பெற்ற மகனாகிய ஒரேஸ்தஸ் தந்தையின் கொலைக்கு பழி வாங்குவதற்காகத் தன் தாயைக் கொலை செய்கிறான். அதற்காக எரீனியேக்கள் அவனைத் துரத்திச் செல்கின்றன. அவை தாய் உரிமையைப் பாதுகாக்கின்ற பிசாசுகளாகும். தாய் உரிமைப்படி தாய்க் கொலை தான் எல்லாக் குற்றங்களையும் விட மிகவும் பாபகரமான, பிராயச்சித்தத்துக்கு இடமில்லாத குற்றமாகும். ஆனால் அபோல்லோ என்ற தெய்வமே தனது அசரீரியின் மூலம் இக்குற்றத்தைச் செய்யுமாறு ஒரெஸ்தசைத் தூண்டினார். அப்போல்லோவும் மத்தியஸ்தம் செய்ய அழைக்கப்பட்ட அதீனா என்ற தெய்வமும் – ஒரெஸ்தஸை பாதுகாக்கின்றனர். இரு தரப்பையும் அதீனா விசாரிக்கிறாள். ஒரெஸ்தசுக்கும் எரினியேக்களுக்கும் நடைபெறுகின்ற வாதத்தின் சர்ச்சை முழுவதும் சுருக்கித் தரப்படுகிறது. கிளிதெம்னெஸ்த்ரா தனது கணவனைக் கொன்றது ஒரு குற்றம், எனது தகப்பனாரைக் கொன்றது மற்றொரு குற்றம், ஆகவே அவள் இரண்டு குற்றங்களைச் செய்தவள் என்று ஒரெஸ்தஸ் கூறுகிறான். தன்னை விடப் பெரிய குற்றவாளி கிளிதெம்னெஸ்த்ரா, இந்த எரினியேக்கள் அவளை விட்டு விட்டுத் தன்னை ஏன் துன்புறுத்த வேண்டும் என்று அவன் கேட்கிறான். இக்கேள்விக்கு அடித்தாற் போன்ற பதில் வருகிறது:

“அவள் கொலை செய்த ஆணுடன் அவளுக்கு இரத்த உறவு எதுவுமில்லை”

இரத்த உறவு இல்லாத ஆணை – அவன் கொலை செய்தவளின் கணவனாக இருந்த போதிலும் – கொல்வது பிரயச்சித்தத்துக்கு உரியதே; அதற்கும் எரினியேக்களுக்கும் சம்மந்தம் எதுவும் கிடையாது. இரத்தக் கலப்புள்ள உறவினர்களிடையே நடக்கும் கொலைகளுக்குப் பழி வாங்குவது தான் எரீனியேக்களின் வேலை; இப்படிப்பட்ட கொலைகளில் தாய் உரிமைப்படி மிகவும் பாபகரமான கொலை தாய்க் கொலையே ஆகும். இப்பொழுது ஒரெஸ்தசுக்கு ஆதரவாக அபோல்லோ குறுக்கிடுகிறான். இந்தப் பிரச்சனையை வாக்களிப்பின் மூலம் முடிவு செய்யும் படி அதீனியன் நீதிபதிகளான எரியோபகைட்ஸ் என்பவர்களை அதீனா கேட்டுக் கொள்கிறாள். குற்றமில்லை எனத் தீர்ப்பளிப்பதை ஆதரிக்கின்ற வாக்குகளும், தண்டிப்பதை ஆதரிக்கின்ற வாக்குகளும் சமமாக இருக்கின்றன. நீதிமன்றத்தின் தலைவி என்ற முறையில் அதீனா ஒரெஸ்தசுக்கு ஆதரவாக வாக்களித்து அவன் குற்றவாளி அல்ல என்று தீர்மானிக்கிறாள். தாய் உரிமையை தந்தை உரிமை வெல்கிறது. “இளைய மரபு வழியைச் சேர்ந்த தெய்வங்கள்” என்று எரீனியேக்களால் வர்ணிக்கப்படுகின்ற தெய்வங்கள் எரீனியேக்களை வென்று விடுகின்றனர். முடிவில் புதிய அமைப்புக்கு சேவை செய்வதற்கு புதிய பதவியை ஏற்கும்படி எரீனியேக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு அதற்கு அவையும் உடன்படுகின்றன.

ஒரெஸ்தெயா நாடகத்தைப் பற்றி இது புதிய, ஆனால் முற்றிலும் சரியான விளக்கம். இது இந்த நூலில் உள்ள சிறந்த, அழகான பகுதிகளில் மிகவும் மேலான, மிகவும் அழகான் அபகுதியாகும். ஆனால் அதே சமயத்தில், எஸ்கிலஸ் தம் காலத்தில் எரீனியேக்கள் அபோல்லோ மற்றும் அதீனா மீது எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தாரோ, குறைந்தபட்சம் அதே அளவுக்கு பாஹொஃபென்னும் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. கிரேக்க வீர யுகத்தில் தாய் உரிமையை தூக்கியெறிந்து விட்டு அதனிடத்தில் தந்தை உரிமையை வைத்த அதிச்யத்தை அவர்கள் தான் செய்தனர் என்று மெய்யாகவே அவர் நம்புகிறார். உலக வரலாற்றில் தீர்மானகரமான நெம்புகோல் மதம் என்று கருதுகின்ற இப்படிப்பட்ட கருத்தோட்டம் கடைசியில் வெறும் மாயவாதத்துக்குத் தான் இட்டுச் செல்லும் என்பது தெளிவு. ஆகவே, பாஹோஃபென் எழுதிய இந்தப் பெரிய நூலைப் படித்து முடிப்பது கடினமான பணியாகும். அது எல்லாக் காலத்திலும் லாபம் அளிக்கக் கூடிய பணியுமல்ல. ஆனால் இவையெல்லாம் அவர் ஒரு முன்னோடி எனும் சிறப்பைக் குறைக்க மாட்டா; ஏனென்றால், வரைமுறியற்ற புணர்ச்சி நடைபெற்ற , யாருக்கும் தெரியாத ஒரு பூர்வீக நிலையைப் பற்றி வெறும் வார்த்தையளப்பு நடந்து கொண்டிருந்த காலத்தில் முதன் முதலாக ஆதாரங்களைக் காட்டியது அவர் தான். கிரேக்கர்கல் மற்றும் ஆசிய மக்களிடையில் ஒரு தார மணத்துக்கு முன்னர் உண்மையாகவே இருந்துவந்த ஒரு நிலமை பற்றிய அடையாளங்கள் பண்டைக்கால மூலச் சிறப்பான இலக்கியத்தில் மண்டிக் கிடக்கின்றனஎன்று அவர் நிரூபித்தார். ஒருதார மணத்துக்கு முந்திய அந்த நிலைமையில் ஓர் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலுறவு கொண்டது மட்டுமல்ல, ஒரு பெண்னும் ஒருவனுக்கு மேற்பட்ட ஆண்களுடன் பாலுறவு கொண்டிருந்தாள். இது அக்காலத்தில் நிலைத்திருந்த வழக்கத்தை மீறியதல்ல. இந்த வழக்கம் மறைகின்ற பொழுது தனது எச்சங்களை விட்டுச் செல்லாமல் போய்விடவில்லை. அவை வரம்புக்குட்பட்ட ஒப்படைப்பு எனும் வடிவம் பெற்றிருந்தன. இதன்படி, ஒரு பெண் தன்னை வரம்புக்குட்பட்ட விதத்தில் ஆண்களிடம் ஒப்படைத்த பிறகு தான் ஒரே கணவனை மணந்து கொள்கின்ற உரிமையுண்டு என்று நிர்ப்பந்திக்கப்பட்டாள். ஆகவே, ஆதியில் மரபு வழியை, தாய்க்குப்பின் தாய் என்ற ரீதியில் பெண் வழியாக மட்டுமே கணக்கிட முடிந்தது. இன்னார் தான் தந்தை என்பது நிச்சயப்பட்ட அல்லது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு தார மணம் வந்து விட்ட பிறகும்கூட பெண்வழி மரபு மட்டுமே செல்லத் தக்கது என்ற நிலை நெடுங்காலத்துக்கு நீடித்தது. மேலும் தனது குழந்தைகளைப் பெற்றவள் என்று நிச்சயமாகக் குறிப்பிடக் கூடியவள் தாய் மட்டுமே என்ற இந்த மூலநிலை அத்தாய்க்கும், அதன் மூலம் பொதுவாக எல்லாப் பெண்களுக்கும், அதன் பிறகு அவர்களுக்கு என்றுமே கிடைக்காத உயர்ந்த சமூக அந்தஸ்தை உறுதி செய்தது. இந்தக் கருத்துகளை பாஹொஃபென் இவ்வளவு தெளிவாகச் சொல்லவில்லை; அவருடைய மாயாவாதக் கருத்தோட்டம் அப்படிச் செய்வதைத் தடுத்தது. ஆனால் அவை சரி என்று அவர் நிரூபித்தார்; 1861 ஆம் ஆண்டில் இது ஒரு முழுமையான புரட்சியே ஆகும்.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s