பாதையின் முடிவில் ..

தோழர்களே, நண்பர்களே,

நீண்ட காலமாகவே நெடுங்கதை, நாவல் எழுத வேண்டும் என்று ஆவல். அதற்கென்று நேரம் ஒதுக்காமல் திட்டமிடாமல் காலம் கடந்து கொண்டே இருந்தது. இடையிடையே நாவல் எழுத வேண்டும் என்றால் இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு வேண்டுமே என்றெல்லாம் சிந்தனை வந்தது. வேறு சில நேரங்களில் இலக்கியம் என்பது என்ன? நாம் கூற விரும்பும் கருத்துகளை நிகழ்வுகளில் தோய்த்தெடுத்து அழகியல் செம்மையோடு வழங்குவது தானே. எந்த வடிவிலாக இருந்தால் என்ன? முயற்சி செய்வோம். தவறு நேர்ந்தால் திருத்திக் கொள்வோம். அதிலிருந்து கற்றுக் கொள்வோம். ஏன் தயங்க வேண்டும் என்றும் சிந்தனை செய்ததுண்டு. விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கும், தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் ஆயத்தமாக இருக்கும் போது செயலில் இறங்குவது தானே சரியானது. அது தான் இறங்கி விட்டேன்.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது எனக்கு முதல் நாவலல்ல, மூன்றாவது நாவல். கல்லூரியில் படிக்கும் போது நான் தமிழ்வாணன் பைத்தியம். கிட்டத்தட்ட, அவருடைய துப்பறியும் நாவல்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். அதிலும் சிறப்பாக சங்கர்லால் துப்பறியும் நாவல்கள். அதிலும் கருப்பு பூனை, இன்னொரு செருப்பு எங்கே? போன்ற நாவல்களின் காட்சியமைப்புகளில் சில இன்னும் நினைவில் இருக்கின்றது. இந்த பாதிப்பில் தான் முதல் இரண்டு நாவல்களையும் எழுதினேன். ஹாஸ்டல் நாட்களில் அவை பிரபலம். ஒரு குயர் நோட்டில் கையால் எழுதி சுற்றுக்கு விட்டிருக்கிறேன். எல்லோராலும் படிக்கப்பட்டு பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. கல்லூரியை விட்டு வெளியில் வந்த பிறகு நாவல் எழுதும் எண்ணமே வரவில்லை. ஆனால் தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். (கேலி வேண்டாங்க எனக்கு அவை கவிதைகள் தாம்) பின்னர் இப்போது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நாவலைப் பொருத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று மாதம் நடைமுறை வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது யோசித்த கதை இது. அப்போதிலிருந்து நேரம் ஒதுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இப்போதும் அதேபோல நடைமுறை வேலைகளில் ஈடுபட முடியாமல் போன ஊரடங்கின் பயனால் எழுதத் துணிந்து விட்டேன். இது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல, முழுக்க முழுக்க நிஜமும் அல்ல. பல இடங்களில் கிடைத்த அனுபவங்களை என்னுடைய கற்பனைகளோடு கலந்து தொடராக எழுதப் போகிறேன்.  ம்ம் .. .. ம்ம் .. .. அவ்வளவு தாங்க. பை.

1. சந்திப்பு

அந்த மினிபஸ் மிகவும் சிரமத்துடன் தள்ளாடிய படியே சென்று கொண்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தெரிந்தது. இடது பக்கமும் வலது பக்கமும் ஆடிய படியே செல்லும் ஒருவனை தள்ளாடிக் கொண்டு செல்கிறான் என்று தானே கூறுவோம். அப்படித்தான் அந்தப் பேரூந்தும் இடதும் வலதுமாக தள்ளாடியபடியே சென்று கொண்டிருந்தது. அந்த அளவுக்கு செப்பனிட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்த ஆங்காங்கே பெரும் பள்ளங்களைக் கொண்டிருந்தது அந்த கிராமத்துச் சாலை.

ஒவ்வொரு முறையும் பேரூந்தின் சக்கரம் பள்ளங்களில் இறங்கி ஏறும் போதும் உள்ளிருந்த பயணிகள் தங்களை சமாளித்துக் கொண்டு அடுத்தவர்கள் மீது இடிக்காமல் இருப்பதற்கு சர்க்கஸ் கலைஞர்களின் உத்தியை பயன்படுத்துகிறார்களோ என எண்ணத் தோன்றியது. குறிப்பாக பின் வரிசையில் இருந்தவர்களுக்கு. ஆனால் அந்தப் பயணிகளோ சாலைகளின் தாள லயங்களுக்கு ஏற்ப பேரூந்தின் ஆட்டத்திற்கு தோதாக தாங்களும் அசைந்து கொண்டு இயல்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் செந்தில் மிகவும் சிரமப்பட்டே பயணித்துக் கொண்டிருந்தான். கைப்பிடிக்காக முன்னிருக்கையில் இருந்த கம்பிகளை பிடித்துக் கொண்டிருந்த போதும் பக்கத்தில் இருந்தவரின் மீது இடித்துக் கொண்டிருக்க வேண்டியதிருந்தது.

எவ்வளவு ஆண்டுகளாக இப்படி சாலை கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்தால், மக்கள் இவ்வளவு குலுங்கல்களையும் தாண்டி இயல்பாக பேசிக் கொண்டிருப்பார்கள் என்று சிந்தித்தான்.

இயல்பு என்பது பழகிப் போய் விடுவது தானா? அல்லது தன்னுடைய தேவை காரணமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றா? தன்னுடைய தேவை என்ன என்று யாருக்கும் தெரியாமல் இருக்காது. அது தன்னுடைய சொந்தத் தேவையாக, தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொந்த பந்தங்களுக்குமான தேவையாக இருந்தாலும் சரி. அந்தரங்கத் தேவையாக, தனித்த தன்னுடைய சொந்த ஆசைகள், அதை நிறைவேற்றும் வழிமுறைகள் ஆகியவற்றுக்கான தேவையாக இருந்தாலும் சரி. அல்லது தனக்கு வெளியேயான தன்னையும் உள்ளடக்கிய ஊருக்கு பொதுவான, நண்பர்களுக்கு இசைவானதான தேவையாக இருந்தாலும் சரி. அது எந்த மனிதனுக்கும் தெரியாமல் இருக்காது தானே. ஆனால் ஒவ்வொரு மனிதருக்குமான தேவைகள் வேறு வேறாக இருக்கலாம். அதேநேரம் பொதுவான தேவைகளும் இல்லாமல் இருக்காது அல்லவா? சக மக்களின் தேவையும் நம்முடைய தேவையும் ஒன்றியிருக்கிறதா? நம்முடைய தேவை புதிதான ஒன்றா? அல்லது மறுக்கப் பட்டிருப்பதன் விளைவா? மறுக்கப்பட்டிருப்பின் அதை மீட்டெடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம்? என்பன போன்ற எந்தக் கேள்விக்கும் இடமில்லாமல் ஒன்று பழகி விட்டது என்பதாலேயே அது நம்முடைய இயல்பாய் ஆகிவிடுமா?

ஏன்? நான் வரும் போது அந்த பேரூந்து பயணிகள், சாலை குண்டும் குழியுமாக இருப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்பதாலேயே அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் இயல்பாக கடந்து போக பழகி விட்டார்கள் என சிந்திப்பது எப்படி சரியாகும்? ஒருவேளை சரி செய்யச் சொல்லி மனுக் கொடுத்து, பல போராட்டங்களை செய்து எதுவும் நட்க்காமல் போய் சோர்வுக்கு உள்ளாகி, விரக்தி ஏற்பட்டு, இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று எண்ணிக்கூட இயல்பாகக் கடந்து செல்ல பழகியிருக்கலாமே.

தான் பார்த்த ஆனால் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையைப் பற்றி தான் மட்டும் தனியாக சிந்தித்துக் கொண்டிருப்பது எந்த விதத்தில் சரியானது? எனும் எண்ணம் தோன்றிய உடனேயே அதை மாற்றி பக்கத்தில் இருந்த பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தான் செந்தில்.

ஐயா புதுக்குளத்துக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமுங்க

எலே யாரு நீ? எங்கேருந்து வர்ர? ஊருக்கு புதுசா நீ?

தன் வயதை விட சற்று அதிகமாக இருக்கும் வயதுடைய ஆனால் தோற்றத்தில் முதுமை காட்டி, துண்டை தலையில் கட்டியிருந்த அந்தப் பெரியவர் சற்றும் தாமதிக்காமல் கேட்டார். பார்வையில் தான் எத்தனை கூர்மை.

வந்து சந்திக்க கோரியிருந்த ஒரு நண்பரை சந்திப்பதற்காகத் தான் தற்போது செந்தில் புதுக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தான். பயணங்களின் போது பேண்ட் அணிந்து செல்வது தான் வசதியாக இருக்கும் என்றாலும் செந்தில் அப்போது கைலி தான் உடுத்தி இருந்தான். மதுரையிலிருந்து ஆவூர் வரும் வரை பேண்டில் இருந்த செந்தில் அதன்பிறகு கைலிக்கு மாறி விட்டிருந்தான். கிராமத்துக்கு செல்லும் போது சாதாரணமாக இருக்க வேண்டும் வித்தியாசமாய் தெரியக் கூடாது என்பதற்காகவே கைலி உடுத்தியிருந்தான். கயில் கூட சாதாரண துணிப்பை தான் வைத்திருந்தான். என்றாலும், அந்தப் பெரியவர் சற்று அன்னியமாய் தான் உணர்ந்திருந்தார். அதனால் தான் அவரின் வார்த்தையும், பார்வையும் வெட்டுவது போல் இருந்தன.

நான் வெளியூர் தான் அண்னாச்சி. இங்கே புதுக்குளத்துல ஒரு நண்பரை பார்க்கணும் அதான் வந்திருக்குறேன்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணன் என்று பொருள் தரும் அண்ணாச்சி எனும் சொல் ஒரு நெருக்கத்தை உண்டாக்கும் என படித்த ஞாபகம் இருந்தது. அதைக் கொண்டு தான் அந்தப் பெரியவரை அண்ணாச்சி என விளித்தான் செந்தில். அது பயன் தருமா என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்தச் சொல் கொஞ்சம் வேலை செய்து தான் இருந்தது.

ஓஹோ .. .. .. யாரப் பாக்கணும்? அவர் கேள்வியில் இருந்த இழுவை எதையோ யோசிக்கிறார் என்பதை அறிவித்தது. ஆனால், என்ன யோசிக்கிறார் என்பது தான் புரியவில்லை.

இல்லைங்க அண்ணாச்சி. பூசாரி குடும்பண்ணு சொல்லுவாங்கல்ல, அவங்க மகன் .. .. பெயரைச் சொல்லலாமா வேண்டாமா என்று செந்திலும் யோசித்தான்.

பட்டென்று சிரித்தார் அந்தப் பெரியவர். அடடே நம்ம ஐயா கோவில் பூசாரி குடும்பமா? தாடி பூசாரி பையன் கட வச்சுருக்கானே வெங்கடேசு அவனை பாக்க வந்தியா. சரி, சரி, நான் அந்தப் பக்கமோன்னு நெனச்சேன்.

முதலில் அவரின் கூர்மைக்கும், இப்போது அவரின் இளிப்புக்கும் காரணம் விளங்கியது. திருநெல்வேலி பகுதியில் சாதி பார்ப்பது கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது இப்போது கண்ணெதிரில் நடக்கும் அனுபவமாகியது. அந்தப் பக்கம் என்றால் எந்தப் பக்கம்? நானும் ஆமோதிப்பது போல் சிரித்துக் கொண்டே தலையை லேசாக ஆட்டி வைத்தேன். இவருடன் பேச்சைத் தொடர வேண்டுமா? இல்லை முடித்துக் கொள்ளலாமா? தொடர்ந்தால் மேலும் சாதி கண்டுபிடிக்கும் நோக்கில் கேள்வி கேட்டால் என்ன செய்வது எப்படி பதிலளிப்பது என்று யோசனையில் இருக்கும் போது, அவரே முந்திக் கொண்டார்.

புதுக்கொளம் இப்போ வந்துரும். இன்னொரு அஞ்சு நிமிசம் தான். நா அதையும் தாண்டி போவணும் என்று சிரித்தார்.

எனக்குள் ஒரு இனம் புரியாத நிம்மதி பரவியது. இவரும் கூடவே இறங்கி யாரேனும் ஒரு வெங்கடேஷை அறிமுகப்படுத்தி உங்களை பார்க்குறதுக்குத் தான் வந்திருக்கார் என்று கோர்த்து விட்டால் என்ன செய்வது? முதல் மதிப்பீடு என்பது எப்போதுமே முக்கியமானது. அந்த யாரோ ஒரு வெங்கடேஷிடம் முதலில் அசடு வழிந்து, வேறு ஒருவரை பார்க்க வந்தேன் என்று கூறினால். இருவருக்கும் நம்மைப் பற்றி இரு மதிப்பீடு உருவாகி இருக்கும். ஒரு வேளை தொடர்ந்து இந்த கிராமத்துக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் நம்மை பார்க்கும் நிலை ஏற்படும் போதெல்லாம் அந்த இருவருக்குள்ளும் ஒரு குருகுருப்பு எழுந்து வரும். அதை அவர்கள் பிறரிடம் பகிர்ந்தால் நம்மைப் பற்றிய பிம்பம் கட்டியமைக்கப்பட நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போலாகும். அதனால் தான் புதுக்குளத்தையும் தாண்டி போகணும் என்று அவர் கூறும் போது ஒரு நிம்மதி வந்தது.

காலுக்கு பக்கத்தில் வைத்திருந்த பையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு இறங்குவதற்கு ஆயத்தமாக எழுந்து படிக்கட்டை நோக்கி நடந்தான்.

நன்றி அண்ணாச்சி என்று நட்ப்பாய் ஒரு புன்னகையை வீசினேன்.

அவரும் சரி சரி போய்ட்டு வா தம்பி என்று அனுப்பி வைத்தார். புதிதாக தம்பி முளைத்திருந்தது. ஒரு வேளை அவர் கூறியது போல அந்தப் பக்கம் உள்ள ஒருவரை பார்க்க வந்திருந்தால் இந்த சிரிப்பும் தம்பியும் கிடைத்திருக்குமா என்பது ஐயம் தான். வெள்ளந்தியான கிராமத்து மனிதர்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் அணிந்திருக்கும் சாதிக் கண்ணாடி வழியே சில மனிதர்கள் அவர்கள் மனிதர்கள் என்பது கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து விடுகிறது என்பது தான் பிரச்சனை.

புதுக்குளம் வந்திருந்தது. இன்னும் ஓரிருவர் இறங்கினார்கள். பெரியவர் மீண்டும் ஒரு புன்னகையை அனுப்பி வைத்தார், நானும். நான்கு பேர் உட்காரும் வசதியில் சேர்கள் கொண்ட நிழற்கூடை போன்ற அமைப்பு தான் பேரூந்து நிறுத்தமாக இருந்தது. அதன் முகப்பு முழுவதும் ஆவூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மலர்விழி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது என்று பெரிதாக பொறிக்கப்பட்டிருந்தது. காலியாக கிடந்த அந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து சந்திப்பதற்காக அழைத்திருந்த நண்பரை தொலைபேசியில் அழைத்தேன். ஓரிரு நிமிடங்களிலேயே வந்து விட்டார்.

வணக்கம் தோழர். நான் தான் அய்யாமுத்து.

வணக்கம்.

கொஞ்சம் நேரத்திலே வருவீங்கன்னு நெனச்சேன். சாப்டீங்களா தோழர்?

ம்ம் .. நீங்க?

ஆயிடுச்சு. வாங்க தோழர் டீ சாப்பிடலாம்.

இல்லைங்க. கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிடலாமே.

இல்லைங்க தோழர். பதினோரு மணிக்கு மேலே கடை இருக்காது. அடைச்சிடுவாங்க. அதனால முதல்ல டீ சாப்பிடுவோம் பிறகு பேசலாம்.

அப்படியா? சரிங்க போகலாம். தேனீர் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பக்கத்தில் தான் இருந்தது.

ஏன் பதினோரு மணிக்கு மேல அடைக்கிறாங்க?

இது கிராமம் தானே தோழர். குறைஞ்ச தலக்கெட்டு தானே. காலைல பசியாறிட்டு, டீ குடிக்கிறவங்க, அதுக்குள்ளே டீ சப்பிட்டு முடிச்சிருவாங்க. பதினோரு மணிக்கு மேல யாரும் வரமாட்டாங்க. அதனால நாலு மணிக்கு பெறகு தான் திறப்பாங்க.

ஓ.. ..

டீ குடிச்சுட்டு வீட்டுக்கு போயிடலாமா தோழர். பக்கத்துல தான்.

ம். சரி.

சிறிய வீடு தான் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு கட்டிய ஒரு பக்கம் ஓடும் மறுபக்கம் காரையும் போட்ட வீடு. முன் பகுதியில் சிறு முற்றம் போல் காலி இடம் இருந்தது. அதில் ஒரு மூலையில் ஓலையால மறைக்கப்பட்ட கழிப்பிடம். மறுபக்கம் காலியாக இருந்த இடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் போட்டு மறைத்து சிறிய அறை போல ஆக்கி இருந்தார்கள். அதில் தான் போய் உட்கார்ந்தோம். வெளியில் இருந்து பார்க்கும் போது சிறியதாக தெரிந்தது உள்ளே சென்றதும் போதுமான நீள அகலங்களைக் கொண்டதாக இருந்தது.

இதில் தான் தோழர் கூட்டங்கள் நடத்துவோம்.

ஓ .. .. எம்முல எவ்வளவு நாள் இருந்தீங்க?

அது இருக்கும் தோழர் ஒரு மூணு நாலு வருஷம் இருக்கும்.

போகட்டும். இனி அடிக்கடி சந்திக்கப் போறோம் தானே சாகவாசமாக உங்கள் அனுபவங்கள கேடு தெரிஞ்சுக்கிறேன். இப்போ முதல்ல உங்கள பத்தி சொல்லுங்க. என்ன படிச்சிருக்கீங்க? என்ன பன்றீங்க? எத்தனை குழந்தைங்க?

ரெண்டு பையங்க தோழர். இங்கதான் மூணும், அஞ்சும் படிக்கிறாங்க. நான் எட்டாவது தான் தோழர். அதுக்கு மேல படிப்பு ஏறல. அப்படி இப்டின்னு நாள் ஓடிருச்சு. எந்த வேலை கிடைச்சாலும் பாப்பேன் தோழர். இப்போ கட்டிட வேலைக்கு போயிட்டிருக்கேன். எல்லா நாளும் வேலை கிடைக்காது. சும்மா இருக்குற நாள்ல என்ன வேலை கிடைக்குதோ அதைச் செய்வேன் தோழர். வீட்டுல ஒய்ஃப் பீடி சுத்துவாங்க. ஏதோ பிரச்சனை இல்லாம ஓடுது.

புத்தொளி இதழ் எவ்வளவு நாளா படிக்கிறீங்க? எப்படி அறிமுகம் ஆச்சு?

தோழர் ஒருத்தர் தான் கொண்டு வந்து கொடுத்து படிச்சுப் பாருங்க நல்லா இருக்கும்னு சொன்னர். படிச்சதும் புடிச்சிருச்சு தோழர். சூப்பரா எழுதுறாங்க. ஒரு பிரச்சனைன்னு எடுத்துக்கிட்டா அக்குவேறு ஆணிவேறா எல்லா விசயத்தையும் சேர்த்து சமரசம் இல்லாம தீவிரமா எழுதுவாங்க தோழர் அதனால் ரெம்ப புடிச்சுப் போயி மாசமாசம் வாங்கிருவேன். சமயத்துல இத வாங்குறதுக்காகவே திருநெல்வேலி கூட போயிருக்கேன் தோழர். அண்ணைல இருந்து இண்ணைக்கு வர ஒரு இதழக் கூட மிஸ் பண்ணுனதில்லை தோழர் எல்லாத்தையும் படிச்சிருவேன்.

அப்படியா ரெம்ப சந்தோஷம்.

எம்முல இந்த பத்திரிக்கை படிக்கிற பத்தி ஒண்ணும் சொல்லலையா? இல்லை தோழர் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஒரு தடவ கூட்டத்துக்கு புத்தொளிய கொண்டு போனேன். அப்ப மட்டும் கூட்டத்துக்கெல்லாம் கொண்டு வராதீங்கன்னு சொன்னாங்க, மத்தப்படி ஒண்ணும் சொன்னதில்லை.

போன்ல பேசும் போது இப்ப எம்முல இல்லைன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு? ஏன் வெளியில வந்துட்டீங்க.

ஒப்பனா சொல்றேன் தோழர் ஒரு பிரச்சனைக்காகத் தான் அதுல போயி சேர்ந்தேன். நல்லாத் தான் ஹெல்ப் பண்ணாங்க. ஒரு மாநாட்டுக்கு ஆள் கூட்டிப் போனதுல பிரச்சனை வந்துட்டு தோழர். கொஞ்சம் ஒப்பனா பேசிட்டேன். அதுல இருந்து அவங்களாவே கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்கிட்டாங்க. கடைசியா மூணு நாலு மாசமா எதுக்குமே கூப்பிடறதில்லை. அப்படியா? என்ன பிரச்சனை அது. காசு பிரச்சனை தான் தோழர். எல்லோரும் சேர்ந்து தான் வசூல் பிரிச்சோம். வசூல்லாம் மேலாவே கிடச்சுது. ஆனால் இன்னொரு இடத்துல ரெம்ப லோவா இருக்காங்க அவங்களையும் சேர்த்து நாம தான் பார்த்துகிடனும்னு சொல்லிட்டாங்க. கடைசில வேன் காசு கொடுக்கிறதுக்கு பத்தாப்பிடி ஆயிடுச்சு. நீங்க போட்டு பார்த்துகிடுங்க அடுத்த தடவ சரி பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க. அந்த நேரம் எனக்கும் கை ரெம்ப டைட்டா இருந்துச்சு. வேன் காரன் வீட்டுல வந்து உக்காந்துகிடான். அதான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன்.

அதில்லைங்க ஒரு பிரச்சனையினாலதான் சேர்ந்தேன்னு சொன்னீங்க இல்லையா. அதைபற்றி கேட்டேன்.

அதுவா .. .. .. ஒரு கொலை பண்ணிட்டேன் தோழர்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s