
“நாடு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யலாமா?” சமூகம் குறித்து, மக்களைக் குறித்து அக்கரை கொள்ளும் எவரும் இந்தக் கேள்வியை தவிர்த்திருக்க முடியாது. அரசை விமர்சித்து, அர்சின் செயல்பாடுகளை எதிர்த்து எப்போதெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவோ அப்போதெல்லாம்; எப்போதெல்லாம் அரசிடம் அல்லது அரசின் ஆதரவாளர்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லையோ அப்போதெல்லாம், இந்தக் கேள்விதான் முன்வைக்கப்படுகிறது. ஏன்? செய்தால் என்ன? அரசியல் செய்வதற்கு இடம், பொருள், ஏவல், காலம் எல்லாம் உண்டா? அரசுக்கு, மக்களுக்கு ஒரு நெருக்கடி நேரும் போது அந்த நெருக்கடி காலத்தை தவிர பிற நேரங்களில் தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால்; பிற நேரங்களில் அரசியல் செய்திருந்தால் ஏன் நெருக்கடி ஏற்படுகிறது? ஆகவே, இப்போது நெருக்கடி இருக்கிறது என்பதன் பொருள், ஏற்கனவே அரசியல் செய்யப்படவில்லை என்பது தானே? ஏற்கனவே, அரசியல் செய்யப்படவில்லை, இப்போதும் அரசியல் செய்யக் கூடாது என்றால் எப்போது அரசியல் செய்வது?
அரசியல் செய்யக் கூடாது என்பதை இன்னொரு விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அரசியல் செய்யக் கூடாது என்று கூறுகிறார்களோ அப்போதெல்லாம், அவர்கள் அரசியல் செய்திருக்கிறார்கள் என்றும், அதை மறைப்பதற்காக கேள்வி எழுப்புவோர்களிடம் அரசியல் செய்யாதீர்கள் என்று கூறுகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
அரசியல் என்பது என்ன? மக்களின் வாக்குகளைப் பெற்று மக்களை நிர்வகிப்பதற்காக பொறுப்பில் இருப்பதாக கூறப்படும் அரசாங்கம், என்ன செய்திருக்கிறதோ அதை மக்கள் தங்கள் நலன் சார்ந்து விவாதத்துக்கு உட்படுத்துவது தான் அரசியல் என்பதன் பரந்துபட்ட நடவடிக்கை. மக்கள் தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதை பேசவே செய்வார்கள், தடுக்க முடியாது. கொரோனாவை எடுத்துக் கொள்வோம். ஏன் கொரோனா நெருக்கடியில் அரசியல் செய்யக் கூடாது?
1. செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை, அதாவது, சீனாவில் வைரஸ் தொற்று பரவுகிறது என்றதும், இங்குள்ள மக்களை காக்கும் வண்ணம் என்ன செய்திருக்க வேண்டுமோ அதை செய்யவில்லை. அதனால் தான் அரசியல் செய்யாதீர்கள் என்று கூறுகிறார்கள். ஒருவேளை முறைப்படி மக்களைக் காக்க ஏன்னென்ன செய்திருக்க வேண்டுமோ அதையெல்லாம் செய்திருந்தால், அவர்கள் நம்மிடம் அரசியல் செய்யாதீர்கள் என்று கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்தார்களோ அதை அட்டவணையிட்டுக் கூறி, பாருங்கள் இவ்வள்வும் செய்து நாங்கல் மக்களை காத்திருக்கிறோம் என்று பதில் கூறியிருப்பார்கள். இவ்வாறு பதில் கூற முடியவில்ல, அதனால் தான் அரசியல் செய்யாதீர்கள் என்று கூறுகிறார்கள்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகிறது. மக்களை பலி வாங்குகிறது என்பதை தெரிந்தவுடன், வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும் அத்தனை விமான சேவைகளையும் ரத்து செய்யவோ அல்லது தீவிரமான கண்காணிப்புக்கு உட்படுத்தவோ செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், சீனாவில் இருந்து வரும் விமானங்களை முழுமையாக நிறுத்தி விட்டிருக்க வேண்டும். பிற நாடுகளிலிருந்து வருவதையும் சுற்றுலாவுக்காக வருவதை ஓரிரு மாதங்களுக்கு தள்ளி வையுங்கள் என்றும் கோரியிருக்க வேண்டும். தவிரக்க முடியாமல் வருபவர்களை குறிப்பிட்ட காலம் தனிமைப்படுத்தி வைத்திருந்து அறிகுறி எதுவும் இல்லை என உறுதியானதின் பின் வெளியில் விட்டிருக்க வேண்டும். தேவையான மருத்துவ கருவிகள் எவ்வளவு இருக்கின்றன, எவ்வளவு தேவைப்படும்? தனிமைப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆலோசித்து அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி இருக்க வேண்டும். இவைகளில் எதையுமே செய்யாததால் தான் இப்போது பதில் கூற முடியாமல் அரசியல் செய்யாதீர்கள் என்கிறார்கள்.
2. இந்த கொரோனாவை முன்வைத்து அவர்கள் அரசியல் செய்திருக்கிறார்கள். அதனால் தான் மக்களை அரசியல் செய்யாதீர்கள் என்று கூறுகிறார்கள். என்ன அரசியல் செய்தார்கள்? திட்டமிடுதல் என்பது அரசின் முதன்மையான கடமை. பொருளாதார மந்தம் வரவிருக்கிறது எனத் தெரிந்தவுடன், கார்ப்பரேட்டுகளுக்கு எவ்வளவு வரித்தள்ளுபடி செய்வது? எவ்வளவு வரிச் சலுகைகள் கொடுக்க முடியும் என திட்டமிட்டு செயல்படுத்துவது நடந்திருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையவிருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கு இணையாக வரியை உயர்த்தி விலை குறைவின் பயன் மக்களை சேர்ந்து விடக் கூடாது என்று திட்டமிட்டு செயல்படுத்துவது நடந்திருக்கிறது. என்றால், இந்த கொரோனா நெருக்கடிக்கு என்ன திட்டமிடல் நடந்தது? எந்த திட்டமிடலும் நடக்கவில்லை. சும்மா தூங்கிக் கொண்டிருந்தார்கள் என எடுத்துக் கொள்ள முடியுமா? ஏன் முடியாதென்றால், ஜனவரி மாத மத்தியிலிருந்து சீனாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்தவர்கள் கார்ப்பரேட்டுகளும், மேட்டுக்குடியினரும். அவர்களை தடுத்தி நிறுத்தி தனிமைப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. ஏனென்றால் அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசு இருக்கிறது. அவர்களுடைய சொகுசு, அவர்களுடைய இன்பம், அவர்களுடைய லாபம், அவர்களுடைய வளம் இவர்களை மையப்படுத்தி தான் அரசு இயங்குமே அன்றி, அவர்களுடைய நலனுக்காக மக்களை துன்புறுத்துமே அல்லாது, மக்களுடைய நலனுக்காக கார்ப்பரேட்டுகளுக்கு சிறு துயரம் கூட ஏற்படுத்தாது. அவ்வாறு ஏற்படாமல் காப்பது அரசின் கடமை. இது வெறும் யூகத்திலிருந்து கூறப்படுவதல்ல. தரவுகளிலிருந்தே பார்க்கலாம்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக 21 நாட்கள் என்று அறிவிக்கப்பட்ட முதல் ஊரடங்கு முடிந்து அடுத்த ஊரடங்கு தொடர்சியாக மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா 80 விழுக்காடு ஏழைகளையும் விவசாயிகளையும் கொண்டிருக்கும் நாடு. அவர்கள் தொடர்ச்சியாக 40 நாட்கள் அடைந்திருக்க முடியுமா? எதைக் கொண்டு அவர்கள் சாப்பிடுவார்கள்?அவர்களின் சிக்கல்களுக்கு என்ன தீர்வு? பலமுறை நாட்டு மக்களுக்கு ஊரடங்கு குறித்து உரையாற்றிய மோடி ஒருமுறை கூட இது குறித்து பேசவில்லை. ஆனால் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு மக்களிடம் நன்கொடை கோரியிருக்கிறார். தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனாவுக்காக மடை மாற்றி இருக்கிறார். மாநிலங்கள் தன்னிச்சையாக மருத்துவ கருவிகள் வாங்கக் கூடாது என்று மாநில உரிமைகளை பறித்திருக்கிறார். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிதி எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறாமல் தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்திருக்கிறார். இவைகளெல்லாம் அரசியல் செய்வது இல்லையா?

நிதியை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாநிலமும் இந்த கொரோனா நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளன. தமிழ்நாடு கேட்டது 9,000 கோடி ஒதுக்கி இருப்பது 510 கோடி. ஒட்டு மொத்தமாக தொகுதி மேம்பாட்டு நிதியாக 7,900 கோடியை மத்திய அரசு எடுத்துக் கொண்டு விட்டது. மாநிலங்கள் நிதி நெருக்கடியில் தத்தளிக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம், வரி விதிக்கும் உரிமைகள் பெரும்பாலும் பறிக்கப்பட்டு விட்டன. ஜிஎஸ்டி வந்த பிறகு மத்திய அரசு மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டிய பெரும்தொகை நிலுவையாக இருக்கிறது. கோரப்பட்டிருக்கும் நன்கொடை கூட மாநிலங்களுக்கு போகக்கூடாது மத்திய அரசுக்கே நேரடியாக வரவேண்டும் என்பதற்காக மத்திய அரசுக்கு நன்கொடை அளித்தால் அநத தொகை சி.எஸ்.ஆர் ல் சேர்க்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு நன்கொடை அளித்தால் அந்த தொகை சி.எஸ்.ஆரில் சேர்க்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. பல மாநிலங்கள் நேரடியாக மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்துங்கள். அது இந்த கொரோனா நெருக்கடியை சமாளிக்க பயன்படும் என்று கோரிக்கை வைத்துள்ளன. மத்திய அரசு இவைகளை பரிசீலிக்கவே இல்லை. இவைகளெல்லாம் அரசியல் செய்வது இல்லையா?
கடந்த ஆண்டில் சி.எஸ்.ஆரில் சேர்க்கப்பட்ட தொகை என அரசு தெரிவித்தது 17,500 கோடி. (CSR – Corporate Social Responsibility சமூக நலனுக்காக கார்ப்பரேட்டுகள் ஒதுக்கும் தொகை. எந்த நிறுவனம் எவ்வளவு செலுத்தி இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வெளியிட மாட்டார்கள்) அதே கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடை அளிக்கின்றன. 2017ம் ஆண்டில் பாஜக எனும் ஒரு கட்சி மட்டும் பெற்ற நன்கொடை 742 கோடி. இதையும் சி.எஸ்.ஆர் ஐயும் ஒப்பீடு செய்து பார்த்தால் தான் கார்ப்பரேட்டுகளின் சமூக அக்கரை(!) தெரியும். இந்த 17500 கோடியையும் கொரோனாவுக்காக செலவு செய்வதற்கு என்ன தயக்கம்? ஆனால் தற்போது நன்கொடை தாருங்கள் அதை சி.எஸ்.ஆரில் வரவு வைத்துக் கொள்கிறோம் என்று கூற வேண்டிய அவசியம் என்ன?
ஒரு கணக்கு போட்டுப் பார்க்கலாம். மோடி பொறுப்பேற்ற இந்த ஆறு ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரித் தள்ளுபடி மட்டும் 7 லட்சத்து 78 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி என்பதால் அளிக்கப்பட்ட சிறப்பு சலுகை 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி. ரிசர்வ் வங்கியிலிருந்து எடுத்த பணத்தில் அளிக்கப்பட்ட நிதி 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டு மட்டும் கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனில் வாராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டது 2 லட்சம் கோடி. இந்த நான்கையும் மட்டும் சேர்த்தால் 12 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருகிறது. இந்தியாவில் வரிய நிலையிலுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 32 கோடியே 72 லட்சம். இந்தக் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் 5,000 வீதம் மூன்று மாதங்களுக்கு 15,000 ரூபாய் கொடுத்தால் வரும் மொத்த தொகை 5 லட்சம் கோடிக்கும் குறைவே (4,908,00,00,00,000) சற்றேறக் குறைய 13 லட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்காக அள்ளிக் கொடுத்த மோடி, இந்த கோடூரமான கொரோனா வைரஸுக்கு பயந்து, உயிருக்கு பயந்து, உழைக்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இந்தக் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு 5,000 வீதம் கொடுத்தால் மக்களுக்கு ஊரடங்கை சிரமமின்றி கடப்பார்கள். கொரோனாவும் கட்டுக்குள் வரும். இதை செய்ய மறுப்பதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?
நாட்டிலுள்ள மக்கட் தொகையில் பொருளாதார அடிப்படையில் முதல் ஒரு விழுக்காட்டினரின் சொத்து மதிப்பு கடைசி 70 விழுக்காட்டு மக்களின் சொத்து மதிப்புக்கு சமம். தோராயமாக பார்த்தால் முதல் ஒன்றேகால் கோடி பேரின் சொத்து மதிப்பு கடைசி நூறு கோடி மக்களின் சொத்து மதிப்புக்கு சமம். அந்த ஒன்றேகால் கோடி பேருக்கு சிறப்பு கொரோனா வரி என்ற ஒன்றைப் போட்டு சில லட்சம் கோடிகளை இந்த கொரோனா நெருக்கடிக்காக பயன்படுத்த முடியாதா? பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் வரியை அதிகப்படுத்தி உழைக்கும் மக்களிடமிருந்து பலமுனையில் கொள்ளையடிக்கும் அரசு – அதாவது நேரடியாக பெட்ரோல் டீசல் வாங்குவதன் மூலம் கொடுக்கும் கூடுதல் வரி, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலை உயர்கிறதே அதனால் கொடுக்கும் கூடுதல் விலை என பல முனைகளில் கொள்ளையடிக்கும் அரசு – அந்த ஒன்றேகால் கோடி பேருக்கு சிறப்பு கொரோனா வரி போட்டால் என்ன? பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் 100 கோடி மக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். ஆனால் அந்த ஒன்றேகால் கோடி பேருக்கு சிறப்பு வரி போட்டால் அவர்களுக்கு அதனால் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை. ஏன் செய்யவில்லை? இதை செய்ய மறுப்பதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?
நாட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா டெஸ்ட் எடுக்க 4,500 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயித்துள்ளார்கள். இதை அரசே அளிக்கும் என்று அறிவிப்பு வருகிறது. இந்த 4,500 ரூபாயை எதிலிருந்து அளிப்பார்கள். மக்களின் வரிப்பணத்திலிருந்து தானே. ஏன் மக்கள் வரிப்பணத்திலிருந்து மருத்துவ கார்பரேட்டுகளுக்கு அளிக்க வேண்டும். அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா நெருக்கடி தீரும் வரை அரசு கையகப்படுத்த வேண்டியது தானே. (ஸ்பெயினில் இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். ஆந்திர மாநிலமும் இதை அறிவித்தது, ஆனால் அதன் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை) குறைந்தபட்சம் கொரோனா தொடர்பான சோதனைகளுக்கு, சிகிச்சைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் கட்டணமின்றி செய்ய வேண்டும் என்று அறிவிக்க வேண்டியது தானே. இதை செய்ய மறுப்பதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?
வேலையிலிருந்து யாரையும் நீக்கக்கூடாது என்ற வாய்மொழியாக அறிவிக்கிறார்கள். ஆனால் வேலை நீக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஊதியக் குறைப்பு இருக்கக் கூடாது என்கிறார்கள். ஊரடங்கு காலத்துக்கு சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது என்கிறார்கள். நிறுவனங்கள் இதைச் செய்து கொண்டு தான் இருக்கின்றன. கடன்களை வசூலிக்கக் கூடாது என்கிறார்கள். ஆனால் வட்டி ஏறிக் கொண்டே தான் இருக்கும். வாடகை வாங்கக் கூடாது என்கிறார்கள். தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏன் இவைகளை வாய் மொழியாக அறிவித்து விட்டு கடந்து செல்ல வேண்டும்? ஏன் இதை அவசரச் சட்ட திருத்தமாக, அல்லது நிதி மசோதாவாக அறிமுகம் செய்து கறாராக நடைமுறைபடுத்தக் கூடாது. இதை செய்ய மறுப்பதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?
இப்போதும் சில பாதந்தாங்கிகள் பேசுகிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 லட்சத்து 76 ஆயிரம் கொடிகளுக்கான திட்டங்கள் அறிவித்துள்ளாரே என்று. ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களும், பிற நிதிகளையும் இணைத்து இந்த திட்டம் வகுக்கப்பட்டுளது. இதில் விலையில்லா ரேசன்கடை பொருகளுக்கு 45 ஆயிரம் கோடியும், மூத்த குடிமகன்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் அளிக்கும் தொகை 34 ஆயிரம் கோடியும் தவிர ஏனைய அனைத்தும் பழைய திட்டங்களே. புதிய திட்டங்களும் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என உறுதியளிக்க முயாது.
ஆக, எல்லாமே அரசியல் தான்.ஒவ்வொருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னே அவரது வர்க்கம் ஒழிந்திருக்கிறது என்றார் மார்க்ஸ். அரசியலை நீ பற்றாவிட்டால் அரசியல் உன்னைப் பற்றிக் கொள்ளும் என்கிறார் லெனின். இலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்கிறார் மாவோ. அரசியல் இல்லாமல் அனுவும் இங்கே அசைவதில்லை. எனவே அனைத்திலும் அரசியல் இருக்கிறது. அதை பேசுங்கள் அனைவரிடமும் பேசுங்கள். அதுவே உங்களை வெற்றியின் பக்கம் கொண்டு சென்று சேர்க்கும், நாம் அரசியல் பேசப் பேசத் தான் சங்கிகள் களத்திலிருந்து அப்புறப்படுத்தப் படுவார்கள்.