பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 4

நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை

பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 2

பாஹொஃபெனின் பெரிய நூல் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது அதாவது இன்றைய குடும்பத்தின் வரலாற்றுக்கு முந்திய நிலையைப் பற்றி அக்காலத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக அக்கறை காட்டிய நாட்டின் மொழியில் எழுதப்பட்டது. இந்தத் துறையில் அவருக்கு அடுத்தவர் 1865 ஆம் ஆண்டில் வந்தார். அவர் பாஹொஃபென் பெயரை கேள்விப்படவேயில்லை.

அவருக்கு பிறகு வந்தவர் ஜா.ஃபெ. மாக்லென்னான் என்பவர்; முந்தியவர்க்கு நேர்மாறானவர். திறைமை மிக்க மாயாவாதிக்கு பதிலாக உணர்ச்சிக்கு இடமளிக்காத வழக்குரைஞர் வந்தார். வழமான கவித்துவ கற்பனைக்கு பதிலாக இப்பொழுது தன்னுடைய வழக்கை விளக்குகின்ற வழக்குரைஞரின் உன்மையைப் போன்ற வாதங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவர் காட்டுமிராண்டிகள், அநாகரிகர்கள் மற்றும் பண்டைக் காலத்தில் இருந்த, நவீன காலத்தில் இருக்கின்ற நாகரிகமடைந்த மக்களிடையில் கூட திருமணத்தின் ஒரு வடிவத்தைக் காண்கிறார். அதன்படி, மணமகன் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ சென்று மணப்பெண்ணை உறவினர்களிடமிருந்து பலாத்காரமாக தூக்கி வருவதாகப் பாவனை செய்ய வேண்டும். முன்காலத்தில் நிலவிய வழக்கமாகத்தான் இது இருக்க வேண்டும். அந்த முந்திய வழக்கத்தின்படி, ஒரு இனக்குழுவை சேர்ந்த ஆண்கள் தமது இனக்குழுவுக்கு வெளியில் இருந்து, மற்ற இனக்குழுக்களிலிருந்து பெண்களை பலாத்காரமாகக் கடத்திக் கொண்டுவந்து மனைவிகளாக்கிக் கொண்டார்கள். இந்த “களவு முறைத் திருமணம்” எப்படித் தோன்றியது? தமது இனக்குழுக்களுக்குள்ளாகவே ஆண்களுக்கு போதிய எண்ணிக்கையில் பெண்கள் கிடைத்துக் கொண்டிருந்தமட்டில், இப்படிப்பட்ட மண முறைக்கு அவசியமில்லாதிருந்தது. ஆனால் இது எவ்வளவு சகஜமாக இருந்ததோ, அதே போல இன்னொன்றும் சகஜமாக இருக்கக் காண்கிறோம். வளர்ச்சிஅடையாத மக்களினங்களிடையில் சில குழுக்கள் இருக்கின்றன (1865 ஆம் அண்டு வரை இக்குழுக்களும் இனக்குழுக்களும் ஒன்று என்றே கருதப்பட்டது); இக்குழுவுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது, எனவே அந்தக் குழுக்கு வெளியில் இருந்து தான் ஆண் தனக்கு மனைவியையும் பெண் தனக்கு கணவனையும் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது; மற்றக் குழுக்களில் ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்த ஆண் தனது சொந்தக் குழுவை சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் மணந்து கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்திக்கின்ற வழக்கம் இருந்து வருகிறது. முதல் ரகத்தை சேர்ந்த குழுவை புறமண முறைக் குழு (exogamous group) என்றும் இரண்டாவது ரகத்தை சேர்ந்த குழுவை அகமண முறைக் குழு (endogamous group) என்றும் மாக்லென்னான் அழைக்கிறார்; அதன் பிறகு சுற்றி வளைக்காமல் புறமண முறை “இனக்குழுக்களுக்கும்” அகமண முறை “இனக்குழுக்களுக்கும்” இடையில் உறுதியான முரண்பாட்டை நிருவுகிறார். புறமண முறையைப் பற்றி அவர் நடத்திய ஆராய்ச்சிகளே இந்த முரண்பாடு அவரது கற்பனையில்தான் இருக்கிறது என்ற உண்மையை பெரும்பாலான அல்லது எல்லா உதாரணங்களிலும் இல்லாவிட்டாலும், பல உதாரணங்களில் அவர் கண்ணெதிரே காட்டிய போதிலும் அவர் அந்த முரண்பாட்டையே தனது தத்துவம் முழுவதற்கும் அடிப்படையாகக் கொள்கிறார். அதன்படி, புறமண முறை இணக்குழுக்கள் தமது மனைவியரை மற்ற இனக்குழுக்களிலிருந்துதான் கொள்ளக்கூடும்; ஆனால் இனக்குழுக்கு இடையில் எப்பொழுது போர் நடைபெற்றுக் கொண்டிருப்பது காட்டுமிராண்டி நிலையின் குணாம்சம், ஆகவே மற்ற இனக்குழுக்களிலிருந்து மனைவியைப் பெறுவதற்கு பலாத்காரமாகக் கடத்திச் செல்வது ஒன்றுதான் வழி என்று அவர் கருதுகிறார்.

மாக்லென்னான் மேலும் வாதிடுகிறார்: புறமண முறை என்ற வழக்கம் எங்கிருந்து வந்தது? இரத்த உறவு முறை (consanguinity), முறைக்கேடான புணர்ச்சி (incest) ஆகிய கருத்துகளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஏனென்றால் இவை மிகப் பிந்திய காலத்தில் வளர்ச்சி அடைந்த விஷயங்கள். ஆனால் பெண் குழந்தைகளை பிறந்தவுடனே கொன்று விடும் வழக்கம் காட்டுமிராண்டிகளிடம் பரவலாக இருகிறது; இந்த வழக்கத்துக்கும் புறமண முறைக்கும் சம்பந்தம் இருக்கக்கூடும். இந்த வழக்கம் ஒவ்வொரு இனக்குழுவிலும் ஆண்கள் உபரியாக இருக்கிண்ற நிலைமையைத் தோற்றுவித்தது. இந்த நிலைமையின் அவசியமான, உடனடியான பின்விளைவாகப் பல ஆண்கள் ஒரு பெண்ணைப் பொதுவில் அனுபவித்தார்கள். அதுவே பல கணவர் மண முறை (polyandry) எனப்படுகிறது. இதன் விளைவு என்னவென்றால் குழந்தையின் தாய் யார் என்பது தெரிந்ததே தவிர, தந்தை யார் என்பது தெரியவில்லை. என்வே ஆணை முற்றிலும் விலக்கி விட்டுப் பெண்வழியில் மட்டுமே இரத்த உறவு கணக்கிடப்பட்டது இதுதான் தாய் உரிமை. மேலும், ஒரு இனக்குழுவில் பெண்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டதின் – இந்தப் பஞ்சத்தைப் பல கணவர் மண முறை தணித்ததே தவிர, தீர்க்கவில்லை – மற்றொரு விளைவு மற்ற இனக்குழுக்களிலிருந்து பெண்கள் முறைப்படியாக, பலாத்காரமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகும்.

”ஆணும் பெண்ணும் சம அளவில் இல்லை என்ற ஒரே காரணத்தையே புறமண முறையும் பல கணவர் மண முறையும் குறிப்பிட முடியும் என்பதனால் புறமண முறை இனங்கள் அனைத்துமே ஆதியில் பல கணவர் மண முறைக்கு உட்பட்டவையாக இருந்தன என்று கருத வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்…… ஆகவே புறமண முறை இனங்களிடையில் தாய்வழியில் மட்டுமே இரத்த உறவுகளை அங்கீகரிக்கின்ற முறைதான் முதன் முதலான இரத்த உறவுமுறையாக இருந்தது என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்றுதான் நாம் கருத வேண்டும்.” (மாக்லென்னான், பண்டைக்கால வரலாற்றில் ஆராய்ச்சிகள், 1886. “பூர்விக மண முறை”, பக்கம் 124.)

மாக்லென்னான் புறமண முறை என்று பெயரிட்ட முறை பொதுவில் பரவியிருப்பதையும் அதன் மாபெரும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியதுதான் அவருடைய சிறப்பாகும். ஆனால் புறமண முறைக் குழுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்து நிச்சயமாக அவரல்ல; அவர் கண்டு பிடிக்காதது மட்டுமல்ல அதைப் புரிந்து கொள்ளவுமில்லை. மாக்லென்னானுக்கு மூலங்களாகப் பயன்பட்ட பல பார்வையாளர்களுடைய தனித்தனிக் குறிப்புகள் ஒரு புறமிருக்க, இந்தியாவில் மஹர்களிடையே இருக்கின்ற இந்த முறையை லாதாம் (விளக்க முறை இனவியல், 1859) துல்லியமாகவும் சரியாகவும் வர்ணித்திருக்கிறார். மேலும், அது பொதுவாக வழக்கத்தில் உள்ளது, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வருகிறது என்று லாதாம் அறிவித்தார். அவருடைய நூலின் இந்தப் பகுதியை மாக்லென்னானே மேற்கோள் காட்டியிருக்கிறார். மேலும், நமது மார்கன் கூட, ஏற்கெனவே 1847 ஆம் ஆண்டிலேயே (American Review என்ற சஞ்சிகையில்) இராகோஸ்களைப் பற்றி எழுதிய கடிதங்களிலும் 1851 இல் எழுதிய  இராகோஸ் லீக் என்ற நூலிலும் இம்முறை இந்த இனக்குழுவில் இருப்பதாக நிரூபித்தார், அதைச் சரியாகவும் வர்ணித்தார். ஆனால், மாக்லென்னானுடைய மாயாவாதக் கற்பனை ஏற்படுத்திய குழுப்பத்தை விட மிகவும் அதிகம் என்பதை நாம் பார்க்க முடியும். தாய்வழியாக அறிகின்ற மரபு முறைதான் ஆதிமுறை என்று இவர் அங்கீகரித்தது – பின்னால் அவரே ஒத்துக் கொண்டபடி, பாஹொஃபென் இதை அவருக்கு முன்பே கூறியிருக்கிறார் என்ற போதிலும் – மாக்லென்னானின் மற்றொரு சிறப்பாகும். ஆனால் இங்கும் அவர் மிகவும் தெளிவில்லாதபடி இருக்கிறார். “பெண்வழியில் மட்டுமே அறியப்பட்ட இரத்த உறவுமுறை”  என்பதைப் பற்றியே அவர் இடைவிடாமல் பேசுகிறார்; முந்திய கட்டத்துக்குச் சரியாக இருந்த இச்சொற்றொடரைப் பிந்திய வளர்ச்சிக் கட்டங்களுக்கும் பயன்படுத்துகிறார். இந்தப் பிந்திய வளர்ச்சிக் கட்டங்களில் மரபு வழியும் வாரிசுரிமையும் பெண்வழியில் மட்டுமே அறியப்பட்ட போதிலும் ஆண் வழியிலும் இரத்த உறவுமுறை அங்கீகரிக்கப்பட்டுக் குறிப்பிடப்பட்டு வருகிறது. இது சட்ட நிபுணருக்கு உரிய குறுகிய கண்ணோட்டம். அவர் வளைந்து கொடுக்காத ஒரு சட்டச் சொற்றொடரைத் தயாரித்துக் கொண்டு இடைக்காலத்தில் அது பொருந்தாதபடி மாறி விட்ட நிலைமைகளுக்கும் அதைத் திருத்தாமல் பயன்படுத்துகிறார்.

மாக்லென்னானுடைய தத்துவம் ஏற்கத் தக்கது என்று தோன்றினாலும் அது வலுவான அடிப்படையைக் கொண்டிருப்பதாக அவருக்கே தோன்றவில்லை என்பது வெளிப்படை. குறைந்தபட்சம், பின்வரும் உண்மை அவருக்கே புலப்பட்டிருக்கிறது: “குறிப்பாக ஆண்வழி இரத்த உறவுமுறை”(அதாவது, ஆண்வழியாக மரபைக் குறிப்பிடுகின்ற முறை) “உள்ள மக்களினங்களிடையில்தான் பெண்ணை” (போலியாக) “அபகரித்துச் செல்லும் திருமண வடிவம் மிகவும் தெளிவாகப் பதிந்தும் அழுத்தமாகவும் விளங்குகிறது என்பதைப் பார்க்க முடியும்” (பக்கம் 140). மேலும், “புறமண முறையும் ஆதிகால இரத்த உறவுமுறையும் அடுத்தடுத்து நிலவி வருகின்ற இடங்களில் குழந்தையைக் கொலை செய்தல் நாமறிந்த வரைக்கும் எங்குமே கடைப்பிடிக்கப்படவில்லை என்பது விசித்திரமான உண்மைதான்” (பக்கம் 146)

இந்த இரண்டு உண்மைகளும் அவருடைய விளக்கத்தை நேரடியாக மறுக்கின்றன. இவற்றுக்கு எதிராக புதிய, இன்னும் சிக்கலான ஊகங்களை மட்டுமே அவரால் கூற முடியும்.

எனினும் இங்கிலாந்தில் அவருடைய தத்துவம் மிகவும் பாராட்டப் பெற்றது. அதிகமாக வரவேற்கப் பெற்றது. குடும்பத்தைப் பற்றிய வரலாற்றின் ஸ்தாபகர் என்றும் அந்தத் துறையின் தலைசிறந்த நிபுணர் என்றும் மாக்லென்னான் அங்கே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். புறமண முறை இனக்குழுக்களுக்கும் அகமண முறை இனக்குழுக்களுக்கும் இடையில் அவர் கண்ட முரண்பாடு – அதி சில விலக்குகளும் திருத்தங்களும் செய்யப்பட்ட போதிலும் – அன்று நிலவிய கருத்தோட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. அது போலவே பார்வையை மறைக்கின்ற திரையாக அமைந்து ஆராய்ச்சி செய்யப்படுகின்ற திரையாக அமைந்து ஆராய்ச்சி செய்யப்படுகின்ற துறையில் சுதந்திரமாக ஆய்வு செய்வதை இயலாததாக்கி விட்டது, ஆகவே, திட்டமான முன்னேற்றம் எதுவும் சத்தியமில்லாமலாகி விட்டது. மாக்லென்னானை மிகையாக மதிப்பிடுதல் இங்கிலாந்தின் வழக்கமாகி விட்டது. . ஆங்கில பாணியை பின்பற்றி மற்ற நாடுகளிலும் அது வழக்கமாகி விட்டது. புறமண முறை இனக்குழுக்களுக்கும் அகமண முறை இனக்குழுக்களுக்கும்  இடையில் அவர் கண்ட முற்றிலும் தவறான முர்ன்பாட்டினால் அவர் செய்த தீமை அவருடைய ஆராய்ச்சியினால் விளைந்த நன்மையைக் காட்டிலும் அதிகமாக இருந்தது என்பதை மேற்கூறிய மிகையான மதிப்புக்கு எதிராக சுட்டிக் காட்டுதல் நம் கடமை.

இதற்கிடையில் மென்மேலும் பல உண்மைகள் தெரிய வந்தன, அவை அவருடைய கச்சிதமான அமைப்பிற்குள் பொருந்தவில்லை. பலதார மணம், பல கணவர் மணம், ஒருதார மணம் என்ற மூன்று மண வடிவங்கள் தான் மாக்லென்னானுக்குத் தெரியும். ஆனால் ஒரு தடவை இதன் மீது கவனம் திருப்பப்பட்டதும், வளர்ச்சியில்லாத மக்களினங்களில் ஆண்களின் குழு ஒன்று பெண்களின் ஒரு குழுவை பொதுவில் அனுபவிக்கின்ற மண வடிவங்கள் இருக்கின்றன என்ற உண்மைக்கு மென்மேலும் அதிக ஆதாரங்கல் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இந்தக் குழு மணம் (Communal maarriage) ஒரு வரலாற்று உண்மையே என்று லாப்பக் (1870 இல் அவர் எழுதிய நாகரீகத்தின் தோற்றம் என்ற நூலில்) அங்கீகரித்தார்.

இதை உடனடியாகத் தொடர்ந்து, 1871 இல் புதிய மற்றும் பல விசயங்களில் நிர்ணயமான ஆதாரங்களுடன் மார்கன் தோன்றினார். இராகோஸ் மக்களிடையில் நிலவிவந்த அலாதியான இரத்த உறவு முறை அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த எல்லாப் பூர்வீகக் குடிகளுக்கும் பொதுவானது என்றும் அது அங்குள்ள மண முறையிலிருந்து எதார்த்தத்தில் தோன்றுகின்ற இரத்த உறவு முறையின் வரையறைகளுடன் நேரடியாக முரண்பட்டிருந்தாலும் அது ஒரு கண்டம் முழுவதிலும் பரவிக் கிடக்கிறது என்றும் மார்கன் உறுதியாகக் கருதினார். எனவே, அவர் வினாக் குறிப்புகளையும் அட்டவணைகளையும் தயாரித்து அவற்றின் அடிப்படையில் மற்ற மக்களினங்களிடையில் நிலவும் இரத்த உறவு முறைகளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் படி அமெரிக்க மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அவர் விடைகளிலிருந்து பின்வருவனவற்றைக் கண்டுபிடித்தார், 1) அமெரிக்க செவ்விந்தியர்களிடையே உள்ள இரத்த உறவு முறை ஆசியாவிலும் பல இனக்குழுக்களிடையில் பரவியிருக்கிறது. அதிலிருந்து சிறிது மாறுபட்ட வடிவத்தில் ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பரவியிருக்கிறது. 2) ஹாவாய் தீவுகளிலும் இதர ஆஸ்திரேலியத் தீவுகளிலும் இப்பொழுது அழியும் தருவாயில் இருக்கின்ற குழு மண வடிவம் இதை முழுமையாக விளக்குகின்றது. 3) எனினும் இந்தத் திருமண வடிவத்துடன் சேர்ந்து ஓர் இரத்த உறவு முறையும் இதே தீவுகளில் நிலவுகிறது. அதற்கும் முந்திய காலத்தைச் சேர்ந்த, ஆனால் இப்போது நசித்து விட்ட ஒரு குழு மண வடிவத்தைக் கொண்டு தான் இந்த இரத்த உறவு முறையை விளக்க முடியும். மார்கன் தான் சேகரித்த விவரங்களையும் முடிவுகளையும் 1871 ஆம் ஆண்டில் இரத்த உறவு உறைகளும் மற்ற உறவு முறைகளும் என்ற நூலில் வெளியிட்டார் அதன் மூலம் விவாதக் களத்தை விரிவு படுத்தினார். அவர் இரத்த உறவு முறைகளைத் தனது தொடக்க் நிலையாகக் கொண்டு  அவற்றுக்குறிய குடும்ப வடிவங்களை மறுநிர்மாணம் செய்து தந்தார். அதன் மூலம் ஒரு புதிய ஆராய்ச்சிப் பாதையையும் மனித குலத்தின் ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய வரலாற்றைப் பற்றி முன்னைவிடத் தொலைவாக பார்க்கும் பின்னோக்கு நிலையையும் வகுத்தளித்தார். இந்த ஆராய்ச்சி முறை சரியானது என்று அங்கீகரிக்கப்படுமானால் மாக்லென்னான் நிமாணித்த கச்சிதமான அமைப்பு காற்றில் கரைந்து விடும்.

பூர்வீக மணமுறை (பண்டைக்கால வரலாறு பற்றிய ஆராய்ச்சிகள், 1876) என்ற தமது நூலின் புதிய பதிப்பின் மாக்லென்னான் தன்னுடைய தத்துவத்தை வலியுறுத்தினார். தன்னைப் பொறுத்தமட்டில், வெறும் ஊகங்களைக் கொண்டு குடும்பத்தைப் பற்றிய வரலாற்றை செயற்கையான முறையில் நிர்மாணித்த இவர் லாப்பாக்கும் மார்கனும் தம்முடைய ஒவ்வொரு கூற்றுக்கும் ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்று கோருவதுடன் ஸ்காட்லாந்து நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படக் கூடியதைப் போன்ற மறுக்க முடியாத ஆதாரங்களையே சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார். ஜெர்மானியர்கள் மத்தியில் ஒருவருடைய தாயின் சகோதரனுக்கும் சகோதரியின் மகனுக்கும் இடையிலிருந்த நெருங்கிய உறவு முறையை (டாசிட்டஸ் எழுதிய ஜெர்மானியா, 20ஆம் அத்தியாயத்தைப் பார்க்க) வைத்துக் கொண்டும் பிரிட்டானியர்கள் பத்து அல்லது பனிரண்டு நபர்களைக் கொண்ட குழுக்களாக அமைந்து தமது மனைவியரைப் பொதுவில் அனுபவித்து வந்தார்கள் என்னும் சீசரின் அறிக்கையைக் கொண்டும் அநாகரீக மக்களிடையே பெண்கள் பொதுவில் இருப்பதைப் பற்றிப் பண்டைக்கால எழுத்தாளர்கள் தந்த இதர செய்திகள் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டும் இந்த எல்லா மக்களிடையிலும் பல கணவர் மணம் விதியாக இருந்தது என்று தயங்காமல் முடிவு செய்கிற மாக்லென்னான் இப்படிக் கேட்கிறார்! தன்னுடைய வழக்கைத் தயாரிப்பதில் எல்லா விதமான சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்கின்ற வாதியின் வழக்குரைஞர், பிரதிவாதியின் வழக்குரைஞர் மட்டும் தான் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் மிகவும் முறையான, சட்ட ரீதியில் மிகவும் சரியான ஆதாரங்களைத் தர வேண்டும் என்று வற்புறுத்துவதைப் போல இது இருக்கிறது.

குழு மணம் என்பது வெறும் கற்பனை என்று மாக்லென்னான் சாதிக்கிறார். ஆகவே, அவர் பாஹொஃபென்னுக்கும் வெகுதூரம் பிந்தங்கி விடுகிறார். மார்கன் குறிப்பிட்ட இரத்த உறவு முறைகள் சமூக மரியாதையை சுட்டிக் காட்டுகின்ற உரைகளே தவிர வேறொன்றுமில்லை என்று அவர் கூறுகிறார். செவ்விந்தியர்கள் முன்பின் தெரியாதவர்களை, வெள்ளைக்காரர்கள் கூட சகோதரன் என்றும் தந்தை என்றும் அழைக்கிறார்கள். இந்த உண்மையே அதை நிரூபிக்கிறது என்கிறார். கத்தோலிக்க சமயப் பாதிரியார்களும் கன்னிமடத் தலைவிகளும் தந்தையே என்றும் தாயே என்றும் அழைக்கப்படுவதால் ஆண் துறவிகளும், பென் துணைவிகளும் ஃப்ரீமேசன்களும் இங்கிலாந்தின் கைத் தொழில் சங்கங்களின் உறுப்பினர்களும் கூட பேரவைக் கூட்டத்தின் போது சகோதரரே, சகோதரியே என்று அழைக்கப்படுவதினால் தந்தை தாய் சகோதரன் சகோதரி என்பவை வெறும் விளிச் சொற்களே என்று ஒருவர் வாதிடுவதைப் போன்றதே இது. சுருக்கமாகக் கூறினால் மாக்லென்னானுடைய தற்காப்பு மிகவும் பலவீனமாக இருந்தது.

எனினும் ஒரு விசயத்தில் மட்டும் அவரை யாரும் மறுக்கவில்லை. புறமண முறை ‘இனக்குழுக்களுக்கும்’ அகமண முறை ‘இனக்குழுக்களுக்கும்’ இடையில் அவர் நிறுவிய முரண்பாடு அவருடைய கருத்தமைப்புக்கு அடிப்படையாக இருந்தது. அந்த முரண்பாட்டை யாரும் மறுக்கவில்லை என்பது மட்டுமின்றி, குடும்பத்தின் வரலாறு அதுவே அச்சாணி என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முரண்பாட்டை விளக்குவதற்கு மாக்லென்னான் செய்த முயற்சி போதுமானதல்ல, அது அவரே விவரித்த உண்மைகளுக்கு மாறுபாடாய் இருக்கிறது என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், அவர் வகுத்தளித்த முரண்பாடு – ஒன்றை ஒன்று விலக்கி வைக்கும் ரீதியலமைந்த தனித்தனியான, சுயேட்சையான இரண்டு இனக்குழுக்கள் உண்டு, இதில் ஒரு இனக்குழு தனக்குள்லாகவே மனைவியரைத் தேடிக்கொண்டது. இன்னொரு இனக்குழு, இந்த முறையை முற்றிலும் தடை செய்திருந்தது என்ற முரண்பாடு – மறுக்கப்பட முடியாத வேதவாக்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, ஜீரோ-தெய்லோன் எழுதிய குடும்பத்தின் தோற்றம் (1874) என்ற நுலையும் லாப்பாக் எழுதிய நாகரீகத்தின் தோற்றம் (நான்காம் பதிப்பு, 1882) என்ற நூலையும் கூட ஒப்பிட்டுப் பாருங்கள்.

இந்தக் கட்டத்தில் தான் மார்கன் எழுதிய முக்கியமான நூலாகிய பண்டைக்காலச் சமூகம் (1877) பிரவேசிக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. மார்கன் 1871 ஆம் ஆண்டில் எதைத் தெளிவில்லாமல் யூகித்தாரோ அது இங்கே முழுத் தெளிவுடன் வலர்க்கப்பட்டிருக்கிறது. அகமண முறையும் புறமண முறையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இந்த நாள்வரை புறமண முறை இனக்குழுக்கள் எவையும் எங்குமே கண்டுபிடித்து சொல்லப்படவில்லை. ஆனால், குழுமண முறை நிலவிய காலத்தில் – அனேகமக அது எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு காலத்தில் இருக்கவே செய்தது – ஒரு இனக்குழு என்பது சிலகுழுக்களை குலங்களைக் கொண்டு அமைந்திருந்தது. அவை தாய் வழியில் இரத்த உறவு கொண்டிருந்தன. இந்தக் குழ்லங்கள் ஒவ்வொன்றும் தனக்குள்லேயே மணம் செய்து கொள்ளக்கூடாதென்று கண்டிப்பான தடை இருந்தது. இதன் விளைவாக, ஒரு குலத்தைச் சேர்ந்த ஆண்ட்கள் தனது இனக்குழுவிற்குள்ளேயே பெண்களை மனைவியராக கொள்ள முடிந்தது, வழக்கமாக அப்படித்தான் செய்தார்கள் என்றாலும் அந்த ஆண்கள் தமது குலத்துக்கு வெளியிலிருந்தே மனைவியரைக் கொள்ள வேண்டியிருந்தது. ஆக, குலத்தைப் பொறுத்தமட்டில், அது கண்டிப்பாகப் புறமண முறையைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தக் குலங்களைத தன்னுள் கொண்டிருந்த இனக்குழு கண்டிப்பாக அகமண முறையைக் கடிப்பிடித்தது. இத்துடன் மாக்லென்னான் நிர்மாணித்திருந்த செயற்கையான அமைப்பின் கடைசி எச்சங்களும் தகர்ந்து விட்டன.

மார்கன் இத்துடன் திருப்தியடைந்து விடவில்லை. அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட துறையில் இரண்டாவது நிர்ணயமான முன்னேற்றத்தைச் சாதிப்பதற்கு அமெரிக்க செவ்விந்தியர்களின் குலங்கள் ஒரு சாதனமாக அவருக்குப் பயன்பட்டன. தாய் உரிமை அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்த குலங்களே ஆதி வடிவம், அதிலிருந்து தான் பின்னால் தந்தை உரிமையை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் வளர்ந்தன என்று மார்கன் கண்டுபிடித்தார். இப்படி தந்தை உரிமை அடிப்படையில் அமைந்தவையே பண்டைக்கால நாகரீகத்தைச் சேர்ந்த மக்களிடையே நாம் பார்க்கும் குலங்களாகும். முந்த்ய வரலாற்று ஆசிரியர்கள் அனைவருக்கும் கிரேக்க, ரோமானியக் குலங்கள் ஒரு புதிராக இருந்தன. ஆனால், அவை இப்போதுஅமெரிக்க செவ்விந்தியக் குலங்களைக் கொண்டு விளக்கப்பட்டன.  ஆக, பூர்வீகச் சமூகத்தின் வரலாறு முழுவதற்கும் புதிய அடிப்படை கண்டுபிடிக்கப்பட்டது.

பரிணாம வளர்ச்சியைப் பற்றி டார்வின் கண்டுபிடித்த தத்துவம் உயிரியல் துறையில் எவ்வளவு முக்கியமானதோ, உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கண்டித்த தத்துவம் அரசியல் பொருளாதாரத் துறையில் எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு நாகரீகமடைந்த மக்களினங்களின் தந்தை உரிமை குலத்துக்கு பூர்வாங்கமான கட்டமாக ஆதிகாலத் தாய் உரிமைக் குலம் இருந்தது என்ற மறு கண்டுபிடிப்பும் பூர்வீக சமூகத்தின் வரலாற்றுத் துறையில் அதே முக்கியத்துவத்தைக் கொண்டதாகும். அதைக் கொண்டு குடும்பத்தைப் பற்ரிய ஒரு வரலாற்றை முதல் தடவையாக மார்கன் உருவரையில் காட்ட முடிந்தது. தற்சமயம் கிடைக்கின்ற ஆதாரங்கள் அனுமதிக்கின்ற அளவுக்கு, குறைந்தபட்சம் மூலச் சிறப்பான வளர்ச்சிக் கட்டங்களாவது மொத்தத்தில் அந்த அந்த வரலாற்றில் பூர்வாங்கமாக நிறுவப்பட்டுள்ளன. பூர்வீகச் சமூகத்தின் வரலாற்றை விளக்குவதில் இது ஒரு புதிய சகாப்தத்தை துவக்குகிறது. என்பது தெளிவு. இந்த விஞ்ஞனம் தாய் உரிமைக்குலம் என்ற அச்சாணியைச் சுற்ரிக் கொண்டிருக்கிறது. அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நாம் எந்தத் திசையில் ஆராய்ச்சிகளைச் செலுத்த வேண்டும் என்பது தெரிந்து விட்டது. எதை ஆராய வேண்டும், ஆராய்ச்சியின் முடிவுகளை எப்படி வகைப்படுத்த வேண்டும் என்பது தெரிந்து விட்டது. எனவே, மார்கனுடைய நூல் வெளிவருவதற்கு முன்பிருந்ததைக் காட்டிலும் தற்போது இந்தத் துறையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தின் ஏடறியா வரலாற்றுத் துறை ஆராய்ச்சியாளர்கள் மார்கனின் கண்டுபிடிப்புகளை இப்பொழுது பொதுவாக அங்கீகரிக்கிறார்கள் – இல்லை, அவற்ரைத் திருடித் தம்முடையதாக்கிக் கொள்கிறார்கள். எனினும் ஆய்வு நோக்கில் ஏற்பட்டுள்ள இந்தப் புரட்சிக்கு மார்கனே காரணம் என்று அவர்களின் ஒருவர் கூட பகிரங்கமாக ஒத்துக் கொள்ள மாட்டர் இங்கிலாந்தில் அவருடைய நூலைப்பற்ரி இயன்றவரை மௌனம் சாதிக்கப்படுகிறது. அவருடைய முந்திய நூலகளை மட்டும் பெரியமனதுடன் புகழ்ந்து பேசி விட்டு அவரை மறைத்து விடுகிறார்கள். மாஎகணின் விளக்கவுரையில் உள்ள விவரங்களை ஆர்வத்துடன் பொறுக்கி எடுத்து விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், உண்மையாகவே மகத்தான அவருடைய கண்டுபிடிப்புகளைப் பற்றி பிடிவாதமாக மௌனம் சாதிக்கிறார்கள். பண்டைக்காலச் சமுகம் என்ற அந்த நூலின் மூலப்பதிப்பு இப்போது விலைக்குக் கிடைப்பதில்லை. இத்தகைய நூல்கள் அமெரிக்காவில் லாபகரமான முறையில் விற்பனையாவதில்லை. இங்கிலாந்தில் இந்த நூல திட்டமிட்டு அலட்சியப்படுத்தப்பட்டது என்று தோன்றுகிறது. சகாப்தத்தைப் படைக்கின்ற இந்த நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஒன்று தான் புத்தகக் கடைகளில் இன்னும் கிடைக்கின்ற ஒரே பதிப்பாகும்.

இப்படிப்பட்ட ஒதுக்கம் எங்கிருந்து வருகிறது? இது மௌனச் சதி என்று கருதாமலிருப்பது கடினமே. குறிப்பாக, வெறுமனே மரியாதைக்காகப் பல நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரும்பொழுது, தோழமை உணர்ச்சியைக் காட்டுவதற்கு பல சான்றுகளைத் தரும் பொழுது – அங்கீகரிக்கப்பட்டுள்ள நமது ஏடறியா வரலாற்ருத் துறை ஆராய்ச்சியாளர்களின் நூல்களில் இவை மண்டிக் கிடக்கின்றன – இந்த ஒதுக்கம் எங்கிருந்து வருகிறது? ஒருவேளை, மார்கன் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது காரணமா? மூலாதாரங்களைச்  சேகரிப்பதில் ஏடறியா வரலாற்றுத் துறையைச் சேர்ந்த ஆங்கில ஆராய்ச்சியாளர்கள்களிடம் மிகவும் பாராட்டத்தக்க விட்டமுயற்சி இருந்தும் கூட இந்த மூலாதாரங்களை வரிசைப்படுத்துதல், வகைபிரித்தல் ஆகியவற்ரை நிர்ணயிக்கின்றன் பொதுவான நோக்குக்கு, சுருக்கமாக் கூறினால் அவர்களுடைய கருத்துகளுக்கு திறமை மிக்க இரண்டு அன்னிய நாட்டவர்களை – மார்கனையும், பஹோஃபென்னையும் – ஆதாரமாகக் கொள்லவேண்டியதிருக்கிறதே என்பது காரணமா? ஜெர்மானியர்களையாவது சகித்துக் கொள்லலாம், அமெரிக்கனை எப்படி சகிப்பது? ஒரு அமெரிக்கனை நேருக்கு நேராக சந்திக்கின்ற பொழுது ஒவ்வொரு ஆங்கிலேயனுக்கும் நாட்டுப்பற்று பொங்கியெழுகிறது. நான் அமெரிக்காவில் இருந்த பொழுது இதற்குப் பல வேடிக்கையான உதாரணங்களைப் பார்த்தேன். [ஏங்கெல்ஸ் 1888 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பிரயாணம் செய்தார்] இத்துடன் இன்னொரு விசயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏடறியா வரலாற்றுத் துறையின் ஆங்கில மரபினருக்கு மாக்லென்னான் அதிகாரபூர்வமாகப் பிரகடனம் செய்யப்பட்ட ஸ்தாபகராகவும் தலைவராகவும் இருந்தார். குழந்தைக் கொலையிலிருந்து தொடங்கி பல கணவர் மண முறை மற்ரும் கடத்திச் செல்லும் மணமுறை மூலமாகத் தாய் உரிமைக் குடும்பத்துக்கு கொண்டு வந்து சேர்க்கின்ற மாக்லென்னான் செயற்கையாக நிர்மாணித்த வரலாற்றுத் தத்துவத்துக்கு மிகவும் அதிகமான மரியாதை அளிப்பதே நாகரீகமானது என்று அவர்கள் கருதினார்கள். ஒன்றையொன்று விலக்கி வைக்கின்ற புறமண முறை மற்றும் அகமண முறை இனக்குழுக்களைப் பற்றி மிகவும் அற்பமான சந்தேகத்தைத் தெரிவிப்பது கூட அப்பட்டமான முறையில் கலகம் செய்ததாகக் கருதப்பட்டது. ஆகவே, மார்கன் இந்தப் புனிதமான சூத்திரங்களை வெறும் காற்றாகக் கரைந்து போகும்படி செய்தால் ஒரு வகையில்  மாபாவம் செய்த குற்றத்துக்கு உள்ளானார்.  அதுமட்டுமல்ல, சொன்னவுடனே விசயம் வெளிப்படையாக புலப்படுகின்ற முறையில் மார்கன் சூத்திரங்களைப் பரிகரித்து விட்டார். புறமண முறைக்கும் அகமண முறைக்கும் இடையில் தடுமாறித் தள்ளாடிக் கொண்டிருந்த மாக்லென்னானின் பக்தர்கள் மண்டைகளை உடைத்துக் கொண்டு ‘இதையெல்லாம் நெடுங்காலத்துக்கு முன்பே நாமே கண்டுபிடிக்காமல் போகின்ற அளவுக்கு முட்டாளாக இருந்து விட்டோமே’ என்று வியப்புக் குரல் எழுப்புகின்ற நிலை ஏற்பட்டது.

அதிகாரபூர்வமான மரபினர் மார்கனைப் பற்றி அதிகமான அலட்சியத்தைக் கடைப்பிடிப்பதைஹ் தவிர வேறு விதமாக நடந்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர் செய்த இந்தக் குற்ரம் போதாதா? எனினும், அதுவும் போதாது என்பதைப் போல மார்கன் ஃபூரியேயை நினைவூட்டுகின்ற முறையில் நாகரீகத்தை, பண்ட உற்பத்தி சமூகத்தை, தற்காலச் சமூகத்தின் அடிப்படை வடிவத்தை விமர்சனம் செய்தது மட்டுமின்றி, கார்ல் மாக்ஸ் உபயோகப்படுத்தி இருக்கக்கூடிய சொற்களில் சமூகத்தின் எதிர்கால மாற்றத்தையும் பற்றிப் பேசினார். இது எல்லைமீறிப் போவது தானே. ஆகவே மார்கனுக்கு ‘வரலாற்று ரீதியான ஆராய்ச்சி முறை என்றாலே அதிகமான வெறுப்பு’  என்று மாக்லென்னான் அவர் மீது கடுங்கோபத்துடன் குற்றம் சாட்டினார். பேராசிரியர் ஜிரோ-தொய்லான் 1884 ஆம் ஆண்டில் கூட அந்தக் கருத்தை ஆமோதித்தார். அத்துடன் மார்கனுக்கு தகுந்த தண்டனை கிடைத்து விட்டது. 1874ஆம் ஆண்டில் (குடும்பத்தின் தோற்றம்) மாக்லென்னானுடைய புறமண முறை என்ற சிக்கலை விட்டு வெளியே வருவதற்கு வழி தெரியாமல், உதவி செய்ய யாருமில்லாமல் அலைந்தவரும் மார்கன் வந்து விடுதலை செய்ய வேண்டிய நிலையில் இருந்தவரும் இதே திரு ஜிரோ-தெய்லான் தானே?

பூர்வீகச் சமூகத்தின் வர்லறு மார்கனுக்கு கடன் பட்டுள்ள முறையில் பெற்ற இதர முன்னேற்றங்களை இங்கே நான் எடுத்துக் கொள்வது அவசியமல்ல. அவசியமானவை இந்நூலினூடே சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய இந்த முக்கியமான நூல் வெளியாகிப் பதினான்கு ஆண்டுகள் கழிந்துள்ளன. இக்காலத்தில் பூர்வீகச் சமூகங்களின் வரலாறு சம்மந்தமான மூலாதாரங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன. மானுடவியல் ஆராய்ச்சியளர்களும் பிரயாணிகளும் ஏடறியா வரலாற்றைத் தொழில் முறையில் பயில்பவர்களும் மட்டுமின்றி ஒப்புநோக்குச் சட்டவியல் ஆய்வாளர்களும் இத்துறையில் ஈடுபட்டு, புதிய ஆதாரங்களையும், புதிய கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்கள். அவற்றின் விளைவாக, குறிப்பிட்ட பிரச்சனைகள் குறித்து மார்கன் செய்த ஊகங்கல் ஆட்டங்கண்டு விட்டன, அவை நிலைகுலைந்து விட்டன என்றுங்கூட கூறலாம்.  ஆனால் புதிதாக சேகரிக்கப்பட்டுள்ள விவரங்கள் அவருடைய பிரதான கருதுகோளை நிராகரித்து அவற்றின் இடத்தில் மற்ற கருதுகோள்களை நிறுவுகின்றன் நிலை சிறிதும் ஏற்படவில்லை. பூர்வீகச் சமூகத்தின் வரலாற்றை ஆராய்வதில் மார்கன் ஏற்படுத்திய ஒழுங்குமுறை – அதன் பிரதான அம்சங்களில் – இன்றுவரை சரியாகவே இருந்து வருகிறது. இந்த மாபெரும் முன்னேற்றத்துக்கு அவரே ஆரம்பகர்த்தா என்ற விசயம் எந்த அளவுக்கு மூடிமறிக்கப்பட்டு வருகிறதோ, அதே அளவுக்கு அதை பொதுவாக ஏற்றுக் கொள்வதும் அதிகரித்து வருகிறது என்று கூட நாம் கூற முடியும். [நான் 1888 செப்டம்பர் மாதத்தில் நியூயார்க்கிலிருந்து கப்பல் பயணம் செய்து திரும்பிய போது அமெரிக்க சட்டப் பேரவையில் ராசெஸ்டர் மாவட்டப் பிரதிநிதியாக இருந்த ஒரு முன்னாள் உறுப்பினரைச் சந்தித்தேன். அவருக்கு லூயிஸ் மார்கனைத் தெரியும். ஆனால் அவர் மார்கனைப் பற்றி மிகக் குறைவான தகவலைத்தான் தெரிவிக்க முடிந்தது துரதிஷ்டமே. மார்கன் ராசெஸ்டர் நகரில் தன்னுடைய ஆராய்ச்சிகளில் மட்டுமே ஈடுபட்டுள்ள ஒரு சாதாரணக் குடிமகனாக வாழ்ந்து வந்தார். அவருடைய சகோதரர் இராணுவத்தில் கர்ணல் அந்தஸ்து உடையவர். வாஷிங்டனில் யுத்த இலாகாவில் பதவி வகித்தவர். சகோதரருடைய உதவியின் மூலம் தன்னுடைய ஆராய்ச்சிகளில் அரசாங்கம் அக்கரை காட்டும்படி செய்வதிலும் அவர் வெற்றி பெற்றார். சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த பொழுது தானும் உதவி செய்ததாக இந்த முன்னாள் உறுப்பினர் தெரிவித்தார். (ஏங்கல்ஸ் எழுதிய குறிப்பு)]

லண்டன், ஜூன் 16, 1891

பிரடெரிக் ஏங்கல்ஸ்

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s