ஊரடங்கின் பின் மக்களின் பாடு

நடந்தே சென்றதால் வெடித்த பாதங்களுடன்

கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? அன்றாட உழைக்கும் மக்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொருளாதார பலத்தை ஏற்படுத்த அரசு ஏதாவது திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறதா? ரேசன் அரிசி, ஆயிரம் ரூபாய் போன்றவைகலெல்லாம் மக்கள் தேவைகளிலிருந்து எழும் திட்டங்களல்ல. மக்களை ஏமாற்றுவதற்கான திட்டங்களே. இப்படித் தான் இந்த ஊரடங்குகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பல்லாயிரக் கணக்கான மக்கள் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு, கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஆயிரக் கணக்கானோர் கால்நடையாகக் கூட செல்ல முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மும்பையில், சூரத்தில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் காவல் துறையால் தடியடி நடத்தி கலைக்கப் பட்டிருக்கிறார்கள். காவல் துறை தடியடி நடத்தி இருப்பதன் பொருள், ‘நீங்கள் பட்டினியால் சாக நேர்ந்தாலும் அதை நாங்கள் வெளிவராமல் மறைப்பதற்கு ஏதுவாக நகரங்களிலேயே சாக வேண்டும்’ என்பது தான். ஊரடங்கு தொடங்கிய முதல் வாரத்தில் 22 பேர் இவ்வாறு பட்டினியால் மாண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்தன. அதன் பின்னர் என்ன ஆனது என்று எந்தச் செய்தியும் இல்லை. முறையாக கணக்கிட்டால் இவை கொரோனா மரணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கக் கூடும். மக்களுக்கு அனைத்தையும் தெரிவிக்க கடமைப்பட்டவைகளாக தங்களை கருதிக் கொள்ளும் அச்சு, காட்சி ஊடகங்களோ ஆளும் வர்க்கத்துக்கு இசைவாக நடந்து கொள்வது என்ற பெயரில் பார்ப்பனியத்துக்கு இசைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசு இதில் செய்து கொண்டிருக்கும் குளறுபடிகள் ஏராளம். கொரோனாவில் எத்தனை பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் மரணமடைந்திருக்கிறார்கள்? எனும் கணக்கை தெரிவிப்பதில் கூட மத்திய அரசின் இரண்டு துறைகள் வெவ்வேறு முரணான புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. மாநில அரசுகள் இனி தனியாக மருத்து கருவிகளை வாங்கக் கூடாது, மத்திய அரசின் மூலமே வாங்க வேண்டும் என்று தன்னிச்சையாக ஆணையிடுகிறது. 20ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை சில விதயங்களில் மாநிலங்கள் தளர்த்திக் கொள்ளலாம் என முதலில் அறிவிக்கிறது. பின்னர் மத்திய அரசு தெரிவிக்கும் சில விதயங்களில் மட்டும் மாநிலங்கள் விரும்பினால் சில தளர்வுகளை செய்து கொள்ளலாம் என மாற்றி அறிவிக்கிறார்கள். தனியார்கள் கொடுக்கும் நன்கொடைகளில் மாநிலங்களுக்கு ஒரு விதமாகவும் மத்திய அரசுக்கு வேறொரு விதமாகவும் விதி செய்யப்படுகிறது. பேரிடர் நிதியை மாநிலங்களுக்கு பிரித்தளிப்பதில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் கடைப்பிடிக்கவில்லை. ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி என அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே நடப்பிலிருக்கும் பல திட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது. மட்டுமல்லாமல் 2024 வரையிலுமான காலத்துக்கு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

தேங்கிய உற்பத்தியுடன்

தமிழ்நாட்டு அரசின் புள்ளிவிவரங்களிலும் முரண்பாடுகள் மலிந்துள்ளன. மருத்துவத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவிப்புகளில் மத சிறுபான்மையினரை குறி வைக்கும் போக்கு அப்பட்டமாக தெரிகிறது. சுகாதாரத் துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரின் அறிவிப்புகளிலோ இது ஒரு நெருக்கடி கால தொற்றுப் பரவல் அதை உடைக்கப் போராடுகிறோம் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இன்றி எதிர்க்கட்சிகளை இந்த விதயத்தில் எப்படி மட்டம் தட்டுவது, இதிலிருந்து என்ன பலன்களை அறுவடை செய்து கொள்வது என்பதுமே வெளிப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ரேபிட் பரிசோதனைகளை அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்ததை கூறலாம். சத்திஸ்கர் மாநிலத்தில் 337 ரூபாய்க்கு வாங்கிய ரேபிட் கைக் கருவியை தமிழ்நாடு 600 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இதற்கு கூறப்படும் பதில் வழக்கமான சமாளிப்புகளையே உள்ளடக்கி இருக்கிறது. எதையும் இந்த நெருக்கடி நேரத்தில் அரசியல் செய்கிறார்கள் எனும் அற்ப உணர்ச்சியைக் கொண்டே கடக்க விரும்புகிறார்கள்.

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இஸ்லாமியர்கள் தான் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று திட்டமிட்டு அரசும் ஊடகங்களும் பரப்பின. அதன் விளைவு மக்களிடையே பல விதங்களில் வெளிப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு மருத்துவம் பார்க்க மறுப்பது, இஸ்லாமியர்கள் கொண்டு சென்ற உணவுப் பொருட்களை மறுப்பது, கடைகளில் இஸ்லாமியர்களுக்கு பொருட்கள் தர மறுப்பது, இஸ்லாமியர்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என அறிவிப்புப் பலகை வைப்பது என விரிந்து செல்கிறது. எல்லாம் முடிந்த பின்பு இப்போது மோடி திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார், “கொரோனாவுக்கு இனம் மொழி, மதம் கிடையாது” என்று. இது பொத்தம் பொதுவாக பேசி கடந்து செல்லும் உத்தியா? இல்லையா? ஏன் அவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா? பீலா ராஜேஷ் போன்ற மேல் நிலை அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை? காவல் துறையினர் மீது மருத்துவமனையின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இவைகள் அவர்களின் திட்டங்களில் உள்ளவையே.

இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியில் தான் மக்கள் ‘எப்போது கொரோனா ஒழியும்’ எனும் பதைப்புடம் தங்களை வீடுகளுக்குள் புதைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் தொடர்ந்து வரும் அறிவிப்புகளின் உட்கிடைகள் மக்கள் எப்போது கொதித்தெழுவார்கள் என்று நினைக்கும் வண்ணமே இருக்கின்றன. ஓரிரு எடுத்துக்கட்டுகளைப் பார்ப்போம்.

வங்கிக் கடன் காப்பீடு உள்ளிட்டவைகளின் மாதத் தவணைகளை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கிறோம், பின்னர் கட்டிக் கொள்ளலாம் என அறிவிக்கிறார்கள். அப்படியென்றால் அவைகளின் வட்டி .. .. ? அது குறித்து யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதாவது மூன்று மாதத்துக்கு நீங்கள் தவணை கட்ட வேண்டாம், கொரோனா நெருக்கடி கடந்த பின்னர் கட்டிக் கொள்ளலாம், ஆனால் வட்டி தொடர்ந்து அதிகரிக்கும். கூடுதலாக வட்டி கட்ட வேண்டும். இது சலுகையா? சுமையா?

இதே போல் தான் மின்சார கட்டணமும் தாமதமாக கட்டிக் கொள்ளலாம் அல்லது வாய்ப்பிருப்பவர்கள் கடந்த மாத தொகையை கட்டிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள மின் கட்டண முறைகள் எப்படி இருக்கின்றன? முதல் 100 யூனிட் இலவசம், அதன் பிறகு வரும் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப கட்டணம் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதாவது முதல் நிலை 100 யூனிட்டுக்குள் பயன்படுத்துவோர்கள் இவர்களுக்கு கட்டணம் இல்லை. அதன் பிறகு இரண்டாம் நிலையில் 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் இவர்களுக்கு 200 யூனிட் வரை ஒவ்வொரு யூனிட்டுக்கும் கட்டணமாக ரூபாய் 1.50 வசூலிக்கப்படும். 200 யூனிட்டுக்கு மேல் போனால் ஒரு யூனிட்டுக்கு 3.00 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். மூன்றாம் நிலை 500 யூனிட் வரை பயன்படுத்துவோர். இவர்களுக்கு 200 யூனிட் வரை ஒவ்வொரு யூனிட்டுக்கும் கட்டணமாக ரூபாய் 2.00 வசூலிக்கப்படும். 200 யூனிட்டுக்கு மேல் போனால் ஒரு யூனிட்டுக்கு 3.00 ரூபாய். நான்காம் நிலை 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோர். இவர்களுக்கு 200 யூனிட் வரை ஒவ்வொரு யூனிட்டுக்கும் கட்டணமாக ரூபாய் 3.00ம், 200 யூனிட்டுக்கு மேல் போனால் ஒரு யூனிட்டுக்கு 4.00 ரூபாயும் 500 யூனிட்டுக்கு மேல் போனால் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 5.75ம் வசூலிக்கப்படும். இப்போது பிரச்சனை என்னவென்றால் – ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தான் மின் அளவு கணக்கிடப்படுகிறது – மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு மின் அளவு கணக்கிடப்பட இருப்பதால் மின்சார பயன்பாட்டு அளவு யூனிட் அதிகரித்திருக்கும். அதிகரித்திருக்கும் யூனிட் படி கட்டணம் வசூலித்தால் வழக்கமாக அவர்கள் கட்ட வேண்டிய கட்டணத்தை விட அதிகமாக கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது சலுகையா? சுமையா?

பொதுப் போக்குவரத்தே இன்னும் தொடங்கப்படவில்லை. எப்போது தொடங்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும் சாலைப் போக்குவரத்து சுங்கச் சாவடிகள் திற்ந்து கொள்ள அனுமதி. மட்டுமின்றி, ஐந்து முதல் பன்னிரண்டு விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவைகள் எதில் எதிரொலிக்கும்? அன்றாடம் மக்கள் வாங்கி உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளில் எதிரொலிக்காதா? விலை இன்னும் அதிகரிக்காதா?

இது போல் ஒவ்வொன்றையும் கணக்கிட்டுப் பார்த்தால் அரசுகள் கொரோனாவை சாக்கிட்டு மக்களை கசக்கிப் பிழியப் போகின்றனவே தவிர சலுகை என்று எதுவுமில்லை. இதனிடையே கோவை பஞ்சாலை சிறுமுதலாளிகளின் அறிக்கை ஊரடங்கு நீக்கப்பட்டது உடனடியாக ஆலைகளை திறக்க வேண்டாம், புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். நிலமை எப்படி செல்கிறது என்று பார்த்து விட்டு ஒரு மாதம் கழித்து ஆலையை திறக்கலாம் என்று கூறுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளைத் தவிர ஏனைய முதலாளிகள் அனைவரும் கலங்கித் தான் இருக்கிறார்கள். பழைய வேட்புகள்(ஆர்டர்கள்) அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதால், உற்பத்தி செய்யப்பட்ட அனைத்தும் தேங்கி நிற்பதால், நிலமை சீராகி பழைய வேட்புகளை அனுப்பி பணம் வந்த பிறகு தான் புதிய உற்பத்தி எனும் தவிர்க்க முடியாத விழிம்பில் அவர்கள் நிற்கிறார்கள்.

யதார்த்தம் இவ்வளவு கொடுமையாகத் தான் இருக்கிறது என்றால் அரசு என்ன செய்யப் போகிறது? மோடி தொடங்கி எடப்பாடி வரை யாராவது எதாவது தெரிவித்திருக்கிறார்களா? அன்றாட உழைக்கும் மக்கள் இன்னும் எத்தனை காலம் இவர்களை நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்? இன்னும் எதற்காகவெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

One thought on “ஊரடங்கின் பின் மக்களின் பாடு

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s