உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1870ல் இதே நாளில் (ஏப்ரல் 22) ரஷ்யாவில் ஓடும் வால்கா ஆற்றின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யானவ் – மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விளாடிமிர் இலீச் உல்யானவ் என்று பெயரிட்டனர் பெற்றோர். பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து தனக்குத் தானே ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. உலகத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற தலைவனும், மார்க்சிய கோட்பாடுகளை செழுமைப்படுத்தியதோடு மட்டுமன்றி, சோவியத் புரட்சி மூலம் அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியும் காட்டியவரான மாமேதை லெனின் எனும் அந்தப் பெயர், இன்று உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நிலவின் இருட்டுப் பக்கங்களில் அழிவாயுதங்களை அடுக்கி வைத்து, தனக்கு பணிய மறுக்கும் நாடுகளின் மீது அவைகளை பொழிய வைத்து பொசுக்க முடியும் என விதந்தோதப்படும் தொழில்நுட்ப திறனும், பொருளாதார வளமும், இராணுவ பலமும் கொண்டதான அமெரிக்காவே வீட்டு வாசலை விட்டு வெளியிறங்க முடியாமல் அலறிக் கிடக்கிறது, கொரோனா எனும் நுண்ணுயிரியால். ஆனால், உலகின் அனைத்து பாட்டாளிகளும் வறுமை, வளமின்மை, வாய்ப்பின்மை போன்ற வைரஸ்களால் தாக்கப்பட்டு கொடூரமான இன்னல்களை அனுபவித்து வந்த போதினில் மார்க்சியம் எனும் தடுப்பூசியை, அது ஒன்று தான் முதலாளியியம் எனும் கொடுநோய்க்கு எதிரான ஒரே மருந்து என 1917ல் நிரூபித்துக் காட்டியவர் லெனின்.

அந்த மாமேதை லெனின் பிறந்த இந்த நாளில் முதன்மையானதும், இன்றியமையாததுமான ஒரு கேள்வி நம்முன்னே பேருருவெடுத்து நிற்கிறது. இந்தியாவிலும் அவ்வாறான புரட்சியை சாதித்துக் காட்ட முடியுமா? முடியாதா?

இந்தியாவின் ஒடுக்கப்பட்டுவரும் வர்க்கங்களான தொழிலாளிகள் விவசாயிகள் முதலானோர் இன்று வாழ முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் முதல் ஒரு விழுக்காட்டினரின் சொத்து மதிப்பு மறுபக்கமிருக்கும் 70 விழுக்காட்டினரின் சொத்து மதிப்புக்கு சமம் என்பது எவ்வளவு பெரிய இடைவெளி. நாளின் வேலை நேரத்தை மீண்டும் 12 மணி நேரமாக மாற்றலாமா? என அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் மார்க்சியத்தின் மீது முழு நம்பிக்கையுடன் திரள வேண்டிய உழைக்கும் மக்கள், அவ்வாறன்றி மத, இன, மொழி, சாதி பேதங்களில் மூழ்கி, கருந்துளையின் ஈர்ப்பு எல்லையில் இருக்கும் பொருளைப் போல் வலதுசாரிகளாலும், அவர்களை ஊட்டி வளர்க்கும் ஏகாதிபத்தியவாதிகளாலும் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருப்பது ஏன்?

ரஷ்யாவில் 1917 ல் சோசலிச அரசு தொடங்கியது என்றாலும் அதற்கான தொடக்கம் 1890களின் முற்பகுதியில் நடந்தது. நூற்றுக் கணக்கான மார்க்சிய சிறிய, பெரிய குழுக்களை தோழர் லெனின் ஒருங்கிணைத்தார். நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் அதை உறுதிப்படுத்தினார்.

1) சோசலிசம் மட்டுமே ஒரே லட்சியமாக இருக்க வேண்டும்.

2) தொழிலாளி வர்க்கமே தலைமைப் பாத்திரம் ஏற்க வேண்டும்.

3) தொழிலாளிகள் – விவசாயிகள் வர்க்க ஒற்றுமையே அதை சாதிக்கும்.

4) கட்சி உறுப்பினர்கள் கறாராக கட்சி வழிகாட்டும் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.

இந்த அடிப்படையிலான ஒன்றுபட்ட கட்சிக்குள் பிறழ்தலும், சறுக்கலும், விலகலும் ஏற்பட்ட போதெல்லாம் அவைகளைக் களைந்து சரியான பாதையில் திருப்ப எல்லா வகையிலும் தன்னை ஒப்புக் கொடுத்தார் தோழர் லெனின். அதன் தடங்கள் அவர் எழுத்துகளில் விதைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தியாவிலோ 1920ல் ஒரு கட்சியாக தொடங்கியது இன்று பல பத்து கட்சிகளாக, உழக்குக்குள் திசை பிரித்து ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்திய சமூக உற்பத்தி முறை குறித்த ஆய்வுகளை நேர்மையாக செய்யப்பட்டு, அதன் அடிப்படையிலான கோரிக்கைகளோடு அனைத்து கட்சிகளையும் ஒருமுகப்படுத்தி ஒன்றிணைக்க வேண்டிய பெரும் பணி இன்று மார்க்சியர்களின் கைகளில் இருக்கிறது. இந்தியாவின் புரட்சியை இங்கிருந்து தான் தொடங்க வேண்டும். இந்த வழியில் எட்டு வைப்பது தான் அந்த மாமேதைக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s