ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாசாரக் கட்டங்கள்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 5

மனித குலத்தின் ஏடறியா வரலாற்றுத் துறையில் திட்ட வட்டமான ஒழுங்குமுறையை நுட்பமான அறிவுடன் புகுத்த முயன்றவர்களில் மார்கனே முதல்வராவார். முக்கியமான ஆதாரங்கள் இனிமேல் கிடைத்து, திருத்தங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலொழிய அவருடைய பகுப்புமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று எதிர் பார்க்கலாம்.

காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்னும் மூன்று பிரதான சகாப்தங்களில் அவர் முதல் இரண்டு நிலைகளைப் பற்றியும் மூன்றாவது நிலைக்கு மாறிச் செல்வதைப் பற்றியும் மட்டுமே அக்கறை கொண்டிருந்தார் என்பது இயல்பே. அவர் உயிர் வாழ்வதற்குரிய பொருட் சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெற்ற முன்னேற்றத்துக்குத் தக்கபடி இவ்விரண்டு சகாப்தங்களையும் ஒவ்வொன்றையும் கடைக்கட்டம், இடைக் கட்டம், தலைக்கட்டம் என்று மூன்று உட்கட்டங்களாகப் பிரித்தார். ஏனென்றால், அவர் கூறியபடி, “புவியில் மனிதகுலம் தலையான நிலை அடையும் பிரச்சனை முழுவதும் இத்துறையில் அவர்கள் அடைந்துள்ள திறனை பொருத்ததாக இருந்தது; ஜீவராசிகளில் மனிதன் மட்டும்தான் உணவு உற்பத்தியில் தனி முதலான அதிகாரம் பெற்றிருந்தான் என்று கூறலாம். உயிர் வாழ்வதற்குரிய மூலாதாரங்களின் பெருக்கத்தை வைத்தே மனிதகுல முன்னேற்றத்தின் மகத்தான சகாப்தங்கள் அநேகமாக நேரடியாக அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கின்றன” குடும்பத்தின் பரிணாமம் இதனுடன் சேர்ந்தே வளர்ச்சியடைகிறது. ஆனால் இப்பரிணாமத்தின் கட்டங்களை வரம்பிட்டுக் காட்டுவதற்கு மேற்கூறிய நிர்ணயகரமான ஆதாரக் கோள்களை அது அளிக்கவில்லை.

காட்டுமிராண்டி நிலை

அ) கடைக்கட்டம், இது மனிதகுலத்தின் குழந்தைப் பருவம், மனிதன் தனது முதல் இருப்பிடமான வெப்பமண்டல அல்லது அரை வெப்ப மண்டலக் காடுகளில் தான் இன்னும் வசித்து வந்தான்; குறைந்தபட்சம் பகுதியளவாவது மரங்களில்தான் குடியிருந்து வந்தான். கொன்று தின்னும் பெரிய மிருகங்களுக்கு நடுவில் அவன் தொடர்ந்து வசிக்க முடிந்ததை இது ஒன்றுதான் விளக்குகிறது. பழங்கள், கொட்டைகள், கிழங்குகள் அவனுடைய உணவாகப் பயன்பட்டன. ஓசைச் சீருள்ள பேச்சு அமைந்ததே இந்தக் கட்டத்தின் பிரதான சாதனையாகும். வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிய வந்திருக்கின்ற மக்களினங்கள் எதுவுமே இந்த ஆதிமனித நிலையில் இருக்கவில்லை. இந்தக் காலப் பகுதி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடித்திருக்கக் கூடும் என்றாலும் அது இருந்ததைப் பற்றி நேரடியான சான்று எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. என்பதை ஏற்றுக் கொண்டால் இந்த மாற்றக் காலகட்டத்தை ஒத்துக் கொள்வதைத் தவிர்க்க முடியாது.

ஆ) இடைக்கட்டம், இக்கட்டம் உணவுக்கான மீன்களை (இந்த இனத்தில் நண்டுகள், சிப்பிகள் மற்றும் நீரில் வாழும் இதர உயிரினங்களையும் நாம் சேர்த்துக் கொள்கிறோம்) பயன்படுத்தல், நெருப்பை உபயோகித்தல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இவ்விரண்டும் ஒன்றைப் யொன்று சார்ந்துள்ளன. ஏனெனில் நெருப்பை உபயோகிப்பதால் மட்டுமே மீன் உணவை முழுமையாக பெற இயலும். எனினும் இந்த புதிய உணவு மனிதனைத் தட்பவெப்ப நிலையிலிருந்தும் வட்டாரத்திலிருந்தும் சதந்திரமடையச் செய்தது. மனிதன் ஆறுகளையும் கடற்கரையோரங்களையும் பின்பற்றிச் செல்வதன் மூலம் காட்டுமிராண்டி நிலையிலும் கூட உலக நிலப்பரப்பின் பெரும் பகுதியில் பரவிப் படர முடிந்தது. ஆரம்பக் கற்காலததைச் சேர்ந்த கரடுமுரடான, பட்டை தீட்டப்படாத கற்கருவிகள் முழுமையாகவோ அல்லது அதிகப் பெரும்பான்மையாகவோ இந்தக் கட்டத்துக்குத்தான் உரியவை. அத்தகைய கற்கருவிகள் எல்லாக் கண்டங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. மனிதர்கள் இடப்பெயர்ச்சிக்கு இவை சான்றுகளாகும். மனிதர்கள் புதிதாகக் குடியேறிய பிரதேசங்களும் கண்டுபிடித்தலில் அவர்கள் காட்டியு இடைவிடாத செயல் வேட்கையும் அதனுடன் இணைந்த உரசல் மூலம் தீயுண்டாக்கும் கலையில் திறமையும் புதிய உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்தன. மாவு தரத்தக்க கிழங்கு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் வெப்பமுள்ள எருவில் அல்லது குழி அடுப்புகளில் வேகவைக்கப்பட்டன. குண்டாந்தடி, ஈட்டி ஆகிய முதல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட பிறகு கிடைத்த இறைச்சியும் அவ்வப்பொழுது உணவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. வேட்டைத் தொழில் ஒன்றை மட்டும் கொண்டு உயிர்வாழ்கின்ற மக்களினங்கள் என்று புத்தகங்களில் குறிக்கப்படுகின்றவை ஒருபோதும் இருக்கவில்லை. வேட்டையின் மூலம் கிடைக்கின்ற பலன்கள் மிகவும் நிச்சயமில்லாதபடியால் அது சாத்தியமில்லை. உணவுப் பொருட்களுக்குரிய மூலாதாரங்கள் தொடர்ச்சியாக நிச்சயமில்லாதிருந்ததன் விளைவாக இந்தக் கட்டத்தில் மனித இறைச்சியைத் தின்னும் முறை உண்டாகி அது நெடுங்காலம் வரை நீடித்ததாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியர்களும் போலினீஸியர்களில் பலரும் இந்நாளிலும் கூடக் காட்டுமிராண்டி நிலையின் இந்த இடைக்கட்டத்திலேயே இருந்து வருகின்றனர்.

இ) தலைக்கட்டம், இக்கட்டம் வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. இதனால் காட்டு விலங்கின் இறைச்சி வாடிக்கையான உணவுப் பொருளாயிற்று, வேட்டையாடுதலும் சகஜமான தொழிலாயிற்று. வில், நாண், அம்பு ஆகியவை மிகவும் கூட்டாயமைந்த கருவி ஆகும். அதை உருவாக்குவதற்கு நெடுங்காலமாகச் சேகரிக்கப்பட்ட அனுபவமும் கூர்மையான மதிநுட்பமும் இருந்திருக்க வேண்டும், அதன் விளைவாக, இதர பல புதுப் படைப்புகளையும் அதே சமயத்தில் அறிந்திருக்க வேண்டும். வில், அம்புகளை உபயோகித்த போதிலும் மண் பாண்டங்களைச் செய்யும் கலையை (இந்தக் கலை, அநாகரிக நிலைக்கு மாறிச் செல்வதின் ஆரம்பத்தைக் குறிக்கிறது என்று மார்கன் கருதுகிறார்) இன்னும் அறியாத மக்களினங்களை ஒப்புநோக்கினால், இந்த ஆரம்பக் கட்டத்தில் கூட கிராமங்களில் குடியமைத்துத் தங்குவதின் ஆரம்ப நிலைகளைப் பார்க்கிறோம். மரத்தால் செய்த கலயங்கள், சாமான்கள், நாரிலிருந்து (தறியில்லாமல்) கைவிரல்களால் துணி நெய்தல், நார் அல்லது நாணல் பல்லைக் கொண்டு கூடைகளை முடைதல், பட்டை தீட்டபட்ட (புதிய கற்காலத்தைச் சேர்ந்த) கற்கருவிகள் ஆகிய வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்வதில் ஓரளவுக்குத் தேர்ச்சி அடைந்திருப்பதயும் பார்க்கிறோம். மேலும் , பெரும்பாலான இடங்களில் நெருப்பும் கற்கோடரியும் கொண்டு மரத்தைக் குடைந்து ஓடம் செய்யப்பட்டு விட்டது; சில இடங்களில் வீடு கட்டுவதற்கு மரக் கட்டைகளும் பலகைகளும் செய்யப்பட்டு விட்டன. உதாரணமாக, இந்த முன்னேற்றங்கள் எல்லாவற்றையும் வட மேற்கு அமெரிக்க செவ்விந்தியர்களிடையே காணலாம். அவர்களுக்கு வில்லும் அம்பும் பழக்கமானவை என்றாலும் மண் பாண்டக் கலையைப் பற்றித் தெரியாது. இரும்பு வாள் அநாகரிக நிலைக்கும் துப்பாக்கி நாகரிக நிலைக்கும் நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதைப்போல காட்டுமிராண்டி நிலைக்கு வில்லும் அம்பும் நிர்ணயமான ஆயுதங்களாக விளங்கின.

அநாகரிக நிலை

அ) கடைக்கட்டம், மண் பாண்டங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இது தொடங்குகிறது. கூடைகளும் மரப் பாத்திரங்களும் நெருப்பினால் எரிந்து விடாமல் இருப்பதற்காக அவற்றின் மீது களிமண்ணைப் பூசியதிலிருந்து இந்தக் கலை தோன்றியது என்பதைப் பல இடங்களில் கண்கூடாகக் காட்டலாம்; அநேகமாக எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும். அப்படிக் களி மண்ணைப் பூசப் போய் உள்ளே பாத்திதிரம் இல்லாமல் உருவமைந்த களிமண்ணே பாத்திரமாகப் பயன்படக்கூடும் என்பது சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

பரிணாம வளர்ச்சியில் இந்த முனைவரை ஒரு திட்டவட்டமான காலப் பகுதிக்குப் பிரதேச வித்தியாசம் எதுவுமின்றி எல்லா மக்களினங்களுக்கும் பொதுவாக செல்லத்தக்கது என்று நாம் கருத முடியும். ஆனால் அநாகரிக நிலை தொடங்கிய பிறகு, நாம் ஒரு கட்டத்தை எட்டுகிறோம். அந்தக் கட்டத்தில் இரண்டு மாபெரும் கண்டங்களுக்கு இடையில் இருக்கின்ற இயற்கை வேறுபாடுகள் செயல்படத் தொடங்குகின்றன. மிருகங்களைப் பழக்குதல், வளர்த்தல், பயிரிடுதல் ஆகியவை அநாகரிக நிலையின் விசேஷமான குணாம்சமாகும். பழைய உலகம் என்று சொல்லப்படுகின்ற கிழக்கு கண்டத்தில் வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற அநேகமான எல்லா விலங்குகளும் சாகுபடி செய்யத்தக்க எல்லா தானிய வகைகளும் (ஒரு தானியத்தைத் தவிர) இருந்தன. ஆனால் மேற்குக் கண்டமாகிய அமெரிக்காவில் லாமா என்னும் ஒரு மிருகம்தான் வீட்டில் வளர்க்கக் கூடியதாக இருந்தது. அதுவும் கூட அக்கண்டத்தின் தெற்கிலுள்ள ஒரு பகுதியில்தான் இருந்தது. மேலும், அக்கண்டத்தில் சாகுபடி செய்வதற்கு மக்காச்சோளம் என்னும் ஒரேயொரு தானியம்தான் இருந்தது; ஆனால் அது எல்லாத் தானியங்களிலும் தலைசிறந்ததாகும். அன்று முதல் ஒவ்வொரு கோளார்த்தத்தைத் சேர்ந்த மக்கள்தொகையும் தனக்குரிய விசேஷமான பாதையில் முன்னேறியது அவற்றின் இயற்கை நிலைமைகளில் நிலவிய வேறுபாடுகளின் விளைவு எனலாம். மேலும், பல்வேறு கட்டங்களில் எல்லைகளில் அமைந்துள்ள ஸ்தல அடையாளக் குறிகளும் இரண்டு கோளார்த்தங்கள் சம்பந்தமாக ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டிருக்கின்றன.

ஆ) இடைக்கட்டம், கிழக்குக் கண்டத்தில் மிருகங்களைப் பழக்குவதிலிருந்து இது தொடங்குகிறது. மேற்குக் கண்டத்தில் உணவுக்குரிய பயிர்களை நீர்ப்பாசனத்தின் மூலம் சாகுபடி செய்தல், அடோபுகளையும் (சூரிய வெப்பத்தில் காய்ந்த செங்கற்கள்) கல்லையும் உபயோகித்துக் கட்டிடங்கள் கட்டுதல் ஆகியவற்றிலிருந்து இது தொடங்குகிறது.

நாம் மேற்குக் கண்டத்திலிருந்து தொடங்குவோம்; ஏனென்றால் அங்கே ஐரோப்பியர் ஆட்சி வரும் வரை இந்தக் கட்டம் எங்கேயும் எல்லை மீறி வளரவில்லை. செவ்விந்தியர்களைக் கண்டுபிடித்த காலத்தில் அவர்கள் அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் இருந்தார்கள் (மிஸிஸிப்பி நதிக்கு கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மக்கள்அனைவரும் இக்கட்டத்தைச் சேர்ந்தவர்கள்). அவர்கள் ஏற்கெனவே ஓரளவுக்கு மக்காச் சோளத்தைத் தோட்டச் சாகுபடி செய்து கொண்டும் ஒருவேளை பூசணிக்காய், முலாம்பழம் முதலிய தோட்டக் காய்கறிகளைப் பயிர் செய்து கொண்டும் இருந்தார்கள். அவர்களுடைய உணவின் மிகவும் கணிசமான பகுதியை இவை அளித்தன. அவர்கள் மரப் பலகைகளால் அரண் செய்யப்பட்ட கிராமங்களில் மரத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளில் வசித்தார்கள். வட மேற்கில்லிருந்த இனக்குழுக்கள், குறிப்பாக கொலம்பியா நதிப் பிரதேசத்தில் வசித்தவர்கள் இன்னும் காட்டுமிராண்டி நிலையின் தலைக்கட்டத்திலேயே இருந்தார்கள். அவர்களுக்கு மண் பாண்டக் கலையோ, எவ்விதமான பயிர்சாகுபடியோ தெரியாது. மறு புறத்தில், நியூ மெக்சிகோவைச் சேர்ந்த புயேப்ளோ செவ்விந்தியர்கள். எனப்பட்டவர்களும் மெக்சிகர்களும் மத்திய அமெரிக்கர்களும் பெருவியர்களும் ஐரோப்பியர்களுடைய ஆட்சி தொடங்கிய காலத்தில் அநாகரிக நிலையின் இடைக்கட்டத்திலே இருந்தார்கள். அவர்கள் அடோபுகள் அல்லது கற்களைக் கொண்டு கோட்டை போல் கட்டபட்ட வீடுகளில் வசித்தார்கள். அவர்கள் செயற்கையான பாசனமுள்ள தோட்டங்களில் மக்காச்சோளத்தையும் தட்பவெப்ப நிலைக்கும் இடத்துக்கும் தக்கபடி உண்ணத் தக்க வெவ்வேறு பயிர் வகைகளையும் விவசாயம் செய்தார்கள்; அவை அவர்களுக்குப் பிரதான உணவுத் தோற்றுவாயாக இருந்தன. மேலும், அவர்கள் ஒரு சில மிருகங்களையும் பழக்கி வைத்திருந்தனர். மெக்சிகர்கள் வான்கோழியையும் இதர பறவைகளையும் பழக்கி வைத்திருந்தார்கள். பெருவியர்கள் லாமா என்ற மிருகத்தைப் பழக்கி வைத்திருந்தார்கள். அது மட்டுமன்றி அவர்கள் உலோகத்தைப் பண்படுத்தவும் அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இரும்பைப் பற்றித் தெரியாது. அவர்கள் கல் ஆயுதங்களையும் கற்கருவிகளையும் இன்னும் கைவிடாதிருந்ததற்கு இது ஒரு காரணமாகும். அங்கே ஸ்பெயின் நாட்டாரின் ஆட்சி ஏற்பட்டு அவர்கள் மேற்கொண்டு சுதந்தரமாக வளர்ச்சியடைவது நிறுத்தப்பட்டது.

கிழக்குக் கோளார்த்தத்தில் பாலும் இறைச்சியும்தரக் கூடிய மிருகங்களை பழக்குவதிலிருந்து அநாகரிக நிலையின் இடைக்கட்டம் ஆரம்பமாயிற்று. இந்தக் கட்டத்தில் மிகவும் பிந்திய காலம் வரை பயிர் சாகுபடி யாருக்கும் தெரியவில்லை என்று தோன்றுகிறது. கால்நடைகளைப் பழக்கி வளர்த்தல், பெரிய மந்தைகளைத் திரட்டியமைத்தல் ஆகியவை ஆரியர்களையும் செமைட்டுகளையும் எஞ்சிய அநாகரிக மக்கள் திரளிலிருந்து வேறு படுத்திக் காட்டுகின்ற காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கால்நடைகளின் பெயர்கள் ஐரோப்பிய ஆரியர்களுக்கும் ஆசிய ஆரியர்களுக்கும் இன்னும் பொதுவாகவே இருந்து வருகின்றன; ஆனால் சாகுபடி செய்யத் தக்க பயிர்களின் பெயர்கள் பொதுவாக இருப்பது மிகவும் அரிதாகும்.

கால்நடை மந்தைகளை அமைத்தல் வசதியுள்ள இடங்களில் மேய்ச்சல் வாழ்க்கைக்கு இட்டுச் சென்றது செமைட்டுகள் மத்தியில் இவ்வாழ்க்கை யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளின் புல்வளமிக்க சமவெளிப் பிரேதசங்களில் ஏற்பட்டது. ஆரியர்களிடையில் இது இந்தியா, ஆக்ஸஸ் நதி, ஜக்ஸார்தஸ் நதி, டான் நதி, நீப்பர் நதி ஆகியவற்றின் புல்வளமிக்க சமவெளிப் பிரதேசங்களிலும் ஏற்பட்டது. மிருகங்களைப் பழக்குதல் இப்படிப்பட்ட மேய்ச்சல் நிலங்களின் எல்லைகளில்தான் முதன் முதலாக நடைபெற்றிருக்க வேண்டும். ஆகவேதான் மேய்ச்சல் வாழ்க்கையைக் கடைப்பிடித்த மக்களினங்கள், உண்மையில் மனிதகுலத்தின் தொட்டிலாக இருந்திருக்க முடியாத பிரதேசங்களிலிருந்து தோன்றின, மேலும், அவர்களுடைய காட்டுமிராண்டி முன்னோர்களும் அநாகரிக நிலையின் கடைக்கட்டத்திலிருந்த மக்களும் கூட அநேகமாக வாழ்வதற்குத் தகுதியற்ற பிர தேசங்களிலிருந்து வந்தன என்று பிற்காலத் தலைமுறையினர் கருதினார்கள். இதையே மாற்றிச் சொல்வதென்றால், அநாகரிக நிலையின் இடைக்கட்டத்தைச் சேர்ந்தவர்கள் மேய்ச்சல் வாழ்க்கையில் ஈடுபட்ட பிறகு புல்லும் நீரும் நிறைந்த சமவெளிப் பிரதேசங்களைத் தாமாகவே கைவிட்டுத் தமது முன்னோர்கள் வசித்த காட்டுப் பிரதேசங்களுக்கு திரும்பிச் சென்று விட வேண்டுமென்று என்றைக்குமே கருதியிருக்கமாட்டர்கள். ஆரியர்களும் செமைட்டுகளும் மேலும் வடக்கிலும் மேற்கிலும் துரத்தப்பட்ட பொழுது கூட மேற்கு ஆசிய, ஐரோப்பியக் காட்டுப் பிரதேசங்களில் அவர்கள் நிலையாகக் குடியேற முடியாது; தானியங்களைச் சாகுபடி செய்து தமது கால்நடைகளுக்கு அந்த சாதகக் குறைவான மண்ணில் தீவனம் அளிக்க முடிந்த பிறகு, குறிப்பாக அங்கே குளிர் காலத்தைக் கழிக்க முடிந்த பிறகு தான் அவர்கள் அந்தப் பிரதேசங்களில் நிலையாக குடியேற முடிந்தது. முக்கியமாக கால்நடைகளுக்குத் தீவனம் அளிக்க வேண்டிய அவசியத்தை முன்னிட்டுதான் தானியச் சாகுபடி இங்கே கொண்டுவரப்பட்டது, சிறிது காலத்துக்குப் பிறகுதான் அது மனித ஊட்டத்துக்கு முக்கியமாயிற்று என்பதே அநேகமாக உண்மையாக இருக்கும்.

ஆரியர்களும் செமைட்டுகளும் தம்முடைய உணவில் இறைச்சி, பால் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொண்டதும் குழந்தைகள் வளர்ப்பில் இந்த உணவு ஏற்படுத்திய அனுகூலமான விளைவுகளும் இந்த இரண்டு இனங்களின் உயர்ந்த வளர்ச்சியை ஒருவேளை விளக்கக்கூடும். உண்மையாகப் பார்த்தால், அநேகமாகத் தாவர உணவை மட்டும் உட்கொள்கிற நிலைக்கு வந்து விட்ட நியூ மெக்சிகோவைச் சேர்ந்த புயேப்ளோ செவ்விந்தியர்களுடைய மூளை அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் இருக்கின்ற, இறைச்சியையும் மீனையும் அதிகமாகச் சாப்பிடுகின்ற, இறைச்சியையும் மீனையும் அதிகமாகச் சாப்பிடுகின்ற செவ்விந்தியர்களுடைய மூளையை விடச் சிறியதாகும். இது எப்படி இருந்தாலும் இந்தக் கட்டத்தில் மனித இறைச்சியைத் தின்னும் பழக்கம் படிப்படியாக மறைந்து விடுகிறது; அது ஒரு மதச் சடங்காக அல்லது அநேகமாக அதைப் போலிருக்கின்ற மாந்திரீகமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.

இ) தலைக்கட்டம், இது இரும்புக் கனியம் உருக்கப்படுவதிலிருந்து தொடங்குகிறது. எழுத்துகளைக் கண்டுபிடித்தல், இலக்கிய ஆவணங்களுக்கு அதைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தக் கட்டம் நாகரிக நிலைக்கு முன்னேறுகிறது. நாம் முன்னர் பார்த்தபடி, இக்கட்டம் கிழக்கு கோளார்த்தம் ஒன்றில் மட்டுமே சுயேச்சயாகக் கடக்கப்பட்டது. இக்கட்டத்தில் உற்பத்தியின் முன்னேற்றம் முந்திய கட்டங்கள் அனைத்தின் மொத்த உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும். வீர யுகத்தை சேர்ந்த கிரேக்கர்களும் ரோமாபுரி நிறுவப்படுவதற்குச் சற்று முன்பிருந்த இத்தாலிய இனக்குழுக்களும் டாசிட்டஸ் காலத்திய ஜெர்மானியர்களும் வைக்கிங்குகளின் காலத்திய நார்மன்களும் இந்தக் கட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மாடுகள் இழுத்துச் செல்கின்ற இரும்புக் கலப்பைக் கொழுவை நாம் இங்குதான் முதலில் சந்திக்கிறோம். இது பரந்த அளவில் நிலத்தை உழுது பண்படுத்துவதைச் சாத்தியமாக்கிற்று. மேலும், அன்றைய நிலைமைகளில், உயிர் வாழ்வதற்குரிய சாதனங்கள் நடைமுறையில் வரம்பற்ற விதத்தில் அதிகரிப்பதையும் சாத்தியமாக்கிறது. இது சம்பந்தமாக, காடுகள் வெட்டித் திருத்தப்பட்டு வயல்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் மாற்றப்படுவதையும் நாம் பார்க்கிறோம். இரும்புக் கோடாரியும் மண்வெட்டியும் இல்லாமல் இதுவும் விரிந்த அளவில் சாத்தியமில்லை. இத்துடன் மக்கள் தொகையும் வேகமாக அதிகரித்தது; சிறு பிரதேசங்களில் அடர்த்தியான மக்கள்தொகைப் பெருக்கமும் ஏற்பட்டது. நிலத்தை உழுது பயிரிடுகின்ற காலத்துக்கு முன்னால் மிகவும் அசாதாரணமான சந்தர்ப்பங்கள்தான் ஒரே மத்தியத் தலைமையின் கீழ் ஐந்து லட்சம் மக்களைத் திரட்டியிருக்க முடியும். அநேகமாக ஒருபோதும் இப்படி நடைபெறவில்லை.

நாம் ஹோமரின் கவிதைகளில் குறிப்பாக இலியாத் காவியத்தில் அநாகரிக நிலையின் தலைக்கட்டம் உச்சியிலிருப்பதைக் காண்கிறோம். மேம்படுத்தப்பட்ட இரும்புக் கருவிகள், துருத்திகள், மாவு அரைக்கும் திரிகை, குயவனின் சக்கரம், எண்ணெய் மற்றும் மது தயாரித்தல், உலோகத் தயாரிப்பு ஒரு கலையாக வளர்ச்சி பெறுதல், பார வண்டிகள், யுத்த ரதங்கள், மரப்பலகைகள் மற்றும் மரச் சட்டங்களைக் கொண்டு கப்பல் கட்டுதல், கட்டிடச் சிற்பம் கலையாக வளரத் தொடங்கிய நிலை, ஸ்தூபிகளும் கொத்தளங்களும் அமைந்த மதில் சுவர்கள் சூழ்ந்த நகரங்கள், ஹோமரின் காவியங்கள் மற்றும் கிரேக்கப் புராணம் முழுவதையும் இவை கிரேக்கர்கள் அநாகரிக நிலையிலிருந்து நாகரிக நிலைக்கு மாறி வந்த இடைக் காலத்தில் கொண்டுவந்த பாரம்பரியச் செலவத்தில் முக்கியமானவை ஆகும். ஹோமர் சித்தரித்த கிரேக்கர்கள் எந்தக் கலாச்சாரக் கட்டத்திலிருந்து அதை விட மேலான கட்டத்துக்கு முன்னேறுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்களோ, அந்தக் கட்டத்தின் வாயிற்படியில் கால் வைக்கத் தொடங்கியிருந்த ஜெர்மானியர்களைப் பற்றி சீஸரும் டாசிட்டசும் வர்ணித்திருக்கிறார்கள். கிரேக்கர்களின் மேற்குறிப்பிட்ட பாரம்பரியத்துடன் இந்த வர்ணனைகளை ஒப்புநோக்கினால், அநாகரிக நிலையின் தலைக்கட்டத்தில் உற்பத்தி எவ்வளவு செழிப்பாக வளர்ந்திருந்தது என்று நாம் பார்க்கக் கூடும்.

மனிதகுலம் காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை ஆகியவற்றின் வழியே நாகரிக நிலையின் ஆரம்பத்தை எட்டியுள்ள பரிணாமத்தை இங்கு நான் மார்கனைப் பின்பற்றிச் சித்தரித்திருக்கிறேன். இந்த சித்திரத்தில் புதிதான, இன்னும் முக்கியமாக, மறுக்கப்பட முடியாத கூறுகள் ஏற்கெனவே மண்டிக் கிடக்கின்றன. அவை நேரடியாக உற்பத்தியிலிருந்து பெற்றவை என்பதால் மறுக்கப்பட முடியாதவை என்கிறோம். எனினும் நமது பயணத்தின் முடிவில் காணப் போகும் சித்திரத்துடன் ஒப்புநோக்கும் பொழுது இது மங்கலாகவும் சொற்பமாகவும் தோன்றும். அநாகரிக நிலையிலிருந்து நாகரிக நிலைக்கு மாறி வந்த இடைக்கால மாற்றத்தைப் பற்றியும் அவ்விரண்டுக்கும் இடையிலுள்ள குறிப்பிடத்தக்க வேறுபாட்டைப் பற்றியும் ஒரு முழுத் தோற்றத்தைக் காட்டுவது சாத்தியப்படும். தற்சமயத்திற்கு மார்கனின் காலவரிசை முறையினை பின்வருமாறு நாம் பொதுமைப் படுத்த முடியும்; காட்டுமிராண்டி நிலை:- உபயோகிப்பதற்கு தயாராக இருந்த இயற்கைப் பொருட்களை உபயோகிப்பதே மேலோங்கியிருந்த ஒரு நிலை; மனிதன் உற்பத்தி செய்த பொருட்கள், பிரதானமாக, இப்படி உபயோகிப்பத்ற்கு வசதியாக இருந்த கருவிகளே ஆகும். அநாகரிக நிலை:- கால்நடை வளர்ப்பு, நிலத்தில் பயிரிடுதல் ஆகியவை குறித்த அறிவைப் பெற்ற கட்டம் இது; மனித நடவடிக்கைகளின் மூலமாக இயற்கையின் உற்பத்தித் திறனைப் பெருக்குகின்ற வழிமுறைகள் இக்கட்டத்தில் கற்றுக் கொள்ளப்பட்டன. நாகரிக நிலை:- இயற்கைப் பொருட்களை மேலும் பண்படுத்திக் கொள்வது பற்றி, தொழில் மற்றும் கலையைப் பற்றி அறிவைப் பெற்ற கட்டம் இது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s