
கடந்த இரண்டு நாட்களாக, ரேபிட் கிட் எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் நாளிதழ்களிலோ, காட்சி ஊடகங்களிலோ இவை குறித்து பெரிதாக எந்தவிதமான செய்திகளோ விவாதங்களோ நடைபெறவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டு நாளிதழ்கள் அனைத்தும் ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளன. மாறாக தலையங்கமாகவோ, கட்டுரையாகவோ, பொதுச் செய்தியாகவோ இதை வெளியிடவில்லை. இதன் பொருள் என்னவென்றால், எதிர்கட்ட்சிகள் தான் இதில் முறைகேடுகள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால், யதார்த்தத்தில் அப்படி ஒன்றும் இல்லை என்பது தான். இது தான் நாளிதழ்கள் கூற வரும் செய்தி.
சீனாவில் கொரோனா கண்டறியப்பட்ட நாள் முதல் சமூகத்தின் மீது, மக்கள் மீது அக்கரை கொண்டவர்கள் தொடர்ந்து தொற்று குறித்து விரைந்த நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். மத்திய அரசோ, மாநில அரசுகளோ இது குறித்த எந்த அக்கரையும் இன்றி மிக மிதப்பாகவே நடந்து கொண்டன. மக்களை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை விட பாஜக அரசாங்கத்துக்கு டரம்பை கொண்டு வந்து கூட்டம் காட்டுவது, ம.பி மாநில அரசாங்கத்தை கலைத்து குறுக்கு வழியில் பாஜகவை அமர வைப்பது போன்ற மிகவும் இன்றியமையாத வேலைகள் இருந்தன. அதனால் மிக மெதுவாக மார்ச் 20ம் தேதிக்குப் பிறகே ஊராடங்கு என்று வாய் மலர்ந்தார்கள். இதன் விளைவுதான் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது. இது கொடூரத் தன்மை அடைந்து மக்களை கொத்துக் கொத்தாக காவு வாங்குவதை தடுக்க வேண்டும் என்றால், விரைவாக எவ்வளவு அதிகமான பேருக்கு சோதனை செய்து அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு சோதனை செய்வதற்கான கருவிகளை வாங்குவதில் தான் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
முதலில் இது குறித்து தமிழ்நாட்டு, மத்திய அரசுகள் கூறிக் கொண்டிருந்த செய்திகளை நினைவுபடுத்திக் கொள்வோம். இந்த ரேபிட் கிட் மூலம் கொரோனா வைரஸ் மனித உடலில் புகுந்திருக்கிறதா எனக் கண்டறிய முடியாது. மாறாக, ஏதேனும் புகுந்திருந்தால் உடல் எதிர்ப்பு ஆற்றலை உண்டாக்குமல்லவா? அந்த எதிர்ப்பு ஆற்றல் இரத்தத்தில் இருக்கிறதா எனக் கண்டறியும் சோதனை தான் ரேபிட் கிட் சோதனை என்பது. கொரோனா கண்டறியும் சோதனையை விட இதை செய்து விரைந்து முடிவை கண்டறிய முடியும் என்பதால் இந்த ரேபிட் கிட் முதன்மை பெறுகிறது. வழங்கு ஆணை கொடுத்து விட்டோம், சீனாவில் கப்பலில் ஏற்றி விட்டார்கள், வந்து கொண்டிருக்கிறது, இன்று வந்து விடும், நாளை வந்து விடும் என்று கிரிக்கெட் விளையாட்டைப் போல் நிமிடக் கணக்காக வர்ணணை செய்து கொண்டிருந்தார்கள். தொடர்ந்து மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்யக் கூடாது, மத்திய அரசு மூலமே செய்ய வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு வாங்கிய ரேபிட் கிட்களை மைய அரசு எடுத்துக் கொண்டது என்று பின்னர் செய்தி வந்தது. பிறகு முதல் கட்டமாக தமிழ்நாட்டுக்கு 24,000 கிட்கள் வந்தன. இதற்கிடையில் சத்திஸ்கர் மாநிலத்தில் 337 ரூபாய்க்கு வாங்கியதை தமிழ்நாடு 600 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாயின. இதற்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையில் தான் நாங்கள் வாங்கி இருக்கிறோம் என்று விளக்கம் வந்தது. இப்போது நீதி மன்ற ஆணையின் மூலம் கூடுதல் விலைக்கு வாங்கி இருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.
245 ரூபாய் பெறுமானமுள்ள ரேபிட் கிட் 600 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அவ்வாறு வாங்கியிருப்பது ஊழலா? இல்லையா? என்பது தள்ள முடியாத கேள்வியாகிறது. இந்திய நாட்டின் தூண்களில் ஒன்று என்று தங்களைத் தாங்களே பீற்றிக் கொள்ளும் எந்த செய்தி நிறுவனமும் இதை புலனாய்வு செய்து சொல்லி விடவில்லை. இரண்டு நிறுவனங்களிடையே நடந்த சண்டை தான் இதை வெளியே கொண்டு வந்திருக்கிறது. அதாவது, நாடெங்கும் உள்ள மக்கள் ஒருபக்கம் உண்ண உணவில்லாமல், வேலை செய்ய வழியில்லாமல் பட்டினியால் மாண்டு கொண்டிருக்கும் போது, மறுபக்கம் நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களில் சிலர் மரணமடைந்து கொண்டிருக்கும் போது, அந்த மரணங்களை காரணமாக வைத்து வாங்கப்படும் மருத்துவக் கருவிகளின் மூலம் கிடைத்த கொள்ளை லாபத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட சண்டையினால் இது வெளிவந்திருக்கிறது என்பது எவ்வளவு கேவலமானது? இது மட்டுமல்ல அண்மையில் வெளிவந்து நாம் அறிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஊழலும் இப்படி நாய்ச் சண்டையின் மூலம் வெளிவந்தவை தான். நாய்ச் சண்டை ஏற்படாமல் அமைதியாக பிரித்துக் கொண்ட எதுவும் ஊழலாக வெளியில் வரவே வராது. என்றால் நாம் எந்த அளவுக்கு கண்களை மூடிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்போது மத்திய மாநில அரசுகளிடமிருந்து இதற்கான மறுப்பு அறிக்கை வெளி வந்திருக்கிறது. மத்திய அறிக்கையை எடுத்துக் கொண்டால், அதில் ஏராளமான கேள்விகள் எழுகின்றன.
1) முதலில், மத்திய அரசாங்கத்தின், அல்லது அரசின் சார்பாக இந்த அறிக்கையை வெளியிட்டது யார்? பிரதமரா? நிதியமைச்சரா? அல்லது செயலர்களா? யார் வெளியிட்டது என்ற எந்தக் குறிப்பும் இல்லாமல் மத்திய அரசு என்று மட்டும் குறிப்பிட்டிருப்பது ஏன்?
2) ஏன் மத்திய அரசோ மாநில அரசுகளோ நேரடியாக கொள்முதல் செய்யாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்ய முடிவெடுக்கின்றன? அப்படி முடிவெடுத்தது யார்? ஏன்? தனியார்மயம் எனும் அரசு கொள்கை குறித்தான கேள்வியல்ல இது. அரசு எதை செய்தாலும் அதை தனியார் மூலமே செய்ய வேண்டும் அதன் மூலம் அவர்களுக்கு கொள்ளை லாபம் சென்றடைய வேண்டும் இதனால் எத்தனை கோடி ஏழைகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்பது அரசின் கொள்கை. இப்போது அதை விட்டுவிடலாம். கொரோனா தொற்று சமூக விலகல் மரணம் என்று உலகமே பெரும் நெடுக்கடிக்குள் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில் ஏன் நேரடியாக கொள்முதல் செய்யக் கூடாது? என்பது தான் கேள்வி.
3) சீனாவின் இரண்டு நிறுவனங்கள் (Biomedemics and Wondfo) பன்னாட்டு அளவிலான சான்றிதழ்களை கொண்டிருந்தன என்று அறிக்கை கூறுகிறது. என்றால் இதில் ஒரு நிறுவனமான Wondfo நிறுவனம் மட்டும் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது?
4) Wondfo நிறுவனம் இந்திய அரசுக்கு கொடுத்த குறைந்தபட்ச விலையே 600 ரூபாய் என அறிக்கை கூறுகிறது. என்றால், இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனமான Matrix Labs நிறுவனத்துக்கு மட்டும் Wondfo 225 ரூபாய்க்கு (மூன்று டாலர்) கொடுத்தது எப்படி? (Matrix Labs நிறுவனம் Rare Metabolics என்ற நிறுவனத்துக்கு கொடுக்கும் Rare Metabolics மிடமிருந்து இந்திய அரசு வாங்கிக் கொள்ளும். அதாவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல. தற்போது Matrix Labs, Rare Metabolics ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையிலான சண்டையில் தான் இந்த முறைகேடு வெளியில் வந்திருக்கிறது)
5) மத்திய அரசின் அறிக்கையில் இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனங்களான மேற்கண்ட இரண்டு நிறுவனங்களின் Matrix Labs, Rare Metabolics பெயர்களும் ஏன் குறிப்பிடப்படவில்லை?
6) நடந்த முறைகேடு என்பது i) விலை அதிகம் என்பதும், ii) ஏன் நேரடியாக கொள்முதல் செய்யப்படவில்லை என்பதும் தான். ஆனால் மத்திய அரசின் அறிக்கையோ விலை அதிகம் என்பதில் நாங்கள் கேட்டோம் முறையாக பதில் அளிக்கவில்லை, அவர்கள் சொன்ன குறைந்தபட்ச விலையே ரூபாய் 600 தான் என்று கூறியிருக்கிறது. ஆனால் அதே வொண்ட்ஃபோ நிறுவனத்திடமிருந்து மாட்ரிக்ஸ் லேப் எனும் நிறுவனம் 225 ரூபாய்க்குத்தான் வாங்கியிருக்கிறது என்பது உண்மை. என்றால் இதில் யார் சொல்வது பொய்? நேரடியாக கொள்முதல் செய்யும் விதயத்தில் வொண்ட்ஃபோ நிறுவனத்தின் விலை மற்றும் அனுப்புதல் குறித்த விவரங்களில் குழப்பம் இருந்தது என்று மத்திய அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது. என்றால் மாட்ரிக்ஸ் லேப் நிறுவனத்திடம் இந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைத்ததா? அது குறித்து அறிக்கையில் எந்த விவரமும் இல்லையே ஏன்?
7) ரேபிட் கிட் பெற்ற நிகழ்வில் பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை, எனவே, இழப்பு எதுவும் இந்திய அரசுக்கு இல்லை என்று பொதுவாக கூறப்பட்டிருக்கிறது. என்றால் மாட்ரிக்ஸ் லேப் நிறுவனத்துக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் எதுவும் போடப்பட வில்லையா? ஒப்பந்தம் போட்டிருந்தால் ஒப்பந்தப்படி விலையை கொடுத்துத்தானே ஆகவேண்டும். அப்படியில்லை பணம் கொடுக்க வேண்டாம் என்றால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் அல்லவா. (ஓர் அரசுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் போடப்படும் ஒப்பந்தம் என்பது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதமாகவும், நிறுவனத்துக்கு லாபத்தை உத்திரவாதப்படுத்தும் விதமாகவுமே இருக்கும் என்பது வரலாறு. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் அவ்வாறன்றி தனியார் நிறுவனத்துக்கு இழப்பும் அரசுக்கு லாபமும் வரும் விதத்தில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்றால் அது வரலாற்றுச் சிறப்பு மிக்கது தானே!) இந்திய அரசுக்கும் மாட்ரிக்ஸ் லேப் நிறுவனத்துக்கும் இடையிலான அந்த ஒப்பந்தம் வெளியிடப்படுமா?

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அறிக்கையை எடுத்துக் கொண்டால் அதில் போதிய விவரங்கள் இல்லை. என்றாலும் அதிலும் கேள்விகள் எழுகின்றன.
1) ஷான் பயோடெக் நிறுவனம் ரேர் மெடாபலிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனம் தான். எனவே, ஷான் பயோடெக் இடமிருந்து வாங்குவது முறைகேடோ தவறோ கிடையாது என்கிறது சுகாதாரத்துறை அமைச்சரின் அறிக்கை. ஆனால் மாட்ரிக்ஸ் லேப் நிறுவனம் ரேர் மெடாபாலிக்ஸ் நிறுவனத்தின் மீது தொடுத்த வழகே, தன்னுடைய அனுமதி இல்லாமல் ரேர் மெடாபாலிக்ஸ் நிறுவனம் பிற நிறுவனங்களுக்கு வினியோக உரிமையை வழங்கியது தவறு என்பது தான். அப்படி இருக்கும் போது இது தவறு அல்ல என்று எப்படி கூற முடியும்?
2) வாங்கியதற்கும் பணம் கொடுக்கவில்லை. திருப்பி அனுப்புவதற்கும் பணம் செலவில்லை எனவே அரசுக்கு இழப்பு எனும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது அறிக்கை. இது சிறுபிள்ளைத் தனமாக தெரியவில்லையா? ஒப்பந்தம் என்ன சொல்கிறது? அதன் எந்த விதி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தாமல் செய்யப்பட்டிருக்கிறது என்று வெளிப்படுத்துவது அல்லவா ஓர் அரசாங்கத்தின் சார்பாக அமைச்சராக நின்று அறிக்கை வெளியிடுபவர்களுக்கு அழகு? மாறாக இழப்பில்லை என்று பொதுவாக சொன்னால் ஆயிற்றா? நாளை அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் இப்படி பொதுவாக பேச முடியுமா? அல்லது மக்களுக்கு சொல்வது தானே அவர்களுக்கு ஒன்றும் தெரியாது எனும் நினைப்பா?
வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் ஊற வைத்தது போல் அரசுகள் விளக்களித்து கடந்து போவது, மக்கள் இதை ஒரு செய்தியாக கடந்து போய்விடுவார்கள் எனும் மிதப்பில் தான். எந்தவித அவகாசமும் கொடுக்காமல் சர்வாதிகாரியைப் போல் அடுத்தடுத்து ஊரடங்கை நீட்டித்துக் கொண்டு செல்வதும், மக்கள் வேலையின்றி, உணவின்றி பட்டினியால் மாண்டு கொண்டிருக்கும் போது, அது குறித்து வல்லுனர்கள் தொடங்கி அறிஞர்கள் வரை பல விதங்களில் பேசிய பின்னரும், அவர்களின் பசியைப் போக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடியை ஒதுக்கியிருப்பதில் இருந்தே அரசைப் பற்றிய புரிதலுக்கு மக்கள் வர வேண்டும். சில கோடிகளா? பல ஆயிரம் கோடிகளா என்பதல்ல பிரச்சனை. என்ன மாதிரி சூழலில் இவர்கள் என்ன மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்பதே புரிந்து கொள்ளப்பட வேண்டியது. அரசுகளின் விளக்கெண்ணெய் விளக்கங்கள் மக்களிடம் அதைத் தான் கோருகின்றன.
hi this is ram from kkia how r u
ராம், நலமா? எங்கு இருக்கிறீர்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு என்னுடைய தொலைபேசி இலக்கம் அனுப்பினேன் ஆனால் நீங்கள் அழைக்கவே இல்லை. உங்கள் தொலைபேசி இலக்கத்தை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் நான் அழைக்கிறேன்.