Interstellar: திரைப்படத்தை முன்வைத்து

இண்டர்ஸ்டெல்லர் என்றால் விண்மீன்களுக்கு இடையேயான பயணம் என்று பொருளாம். அறிவியல் புனைகதைகள் ஈர்ப்பு மிக்கவைகள். அவைகளின் கதைக் களம் மூன்றாம் தர மசாலை நெடியுடன் இருந்தாலும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் புனைவு நம் கற்பனைகளை விரிக்கும் என்பதால், அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் என்பதால் அவைகளின் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. அந்த வகையில் இண்டர்ஸ்டெல்லர் மிகச் சிறந்த படமாக கொள்ளலாம்.

இது 2014ல் வெளிவந்த படம். ஆங்கிலப் படங்களை பார்த்து தோராயமாக புரிந்து கொள்ள மட்டும் தான் என்னை என் ஆங்கிலப் புலமை அனுமதிக்கும். என்றாலும், அவ்வப்போது ஆங்கிலப் படங்கள் பார்ப்பதுண்டு. இந்த ஊரடங்கு காலத்தில் ஏதாவது ஆங்கிலப் படம் பார்க்கலாமே என்று முகநூலில் துளவினால் இண்டர்ஸ்டெல்லர் குறித்து பலரும் தூண்டும் விதத்தில் எழுதியிருந்தனர். பார்த்ததும், இது குறித்து எழுதியே ஆக வேண்டும் எனும் உந்துதல் ஏற்பட்டது.

வயது முதிர்ந்து மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மகளை இளைஞனாக இருக்கும் ஒரு தகப்பன் சந்தித்து உரையாட முடியுமா?

ஒருவன், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பௌத்தர்கள் சமூகத் தோல்வி அடையாமல் இருக்க உதவிவிட்டு, அடுத்த நொடி ராஜராஜ சோழன் பார்ப்பனர்களை சோழ நாட்டுக்கு அழைத்து வருவதை தடுத்து விட்டு, அடுத்த நொடி, மன்னன் சிவாஜி தனக்கு முடிசூட்ட காகபட்டரை அழைக்கும் முயற்சியை தடுத்து, எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் நீங்கள் மன்னர் தான் என்று சிவாஜிக்கு உணர்த்தி விட்டு, அடுத்த நொடியில், முதல் சுதந்திரப் போரில் திப்பு சுல்தான் கூட்டணிக்கு உதவி கிழக்கிந்திய கம்பனியை முறியடித்து விட்டு, அடுத்த நொடி நிகழ்காலத்தில் சங்கிகளை இணையத்தில் வேட்டையாடினால் எப்படி இருக்கும்?

புழுத்துளைகளுக்குள்ளும், கருந்துளைகளுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு பேரண்டத்தின் புதிர்களை விளக்கி வாய்ப்புள்ள கோள்களில் மனிதர்களை ஒத்த உயிரினங்கள் வாழ்கின்றனவா? என தேட முடியுமா?

இவை கற்பனை தான். என்றாலும், அறிவியல் புனைவின் துணையால் சாத்தியம் தான் என கண்முன்னே படம் காட்டி இருக்கிறார் இயக்குனர் கிருஸ்டோபர் நோலன்.

தொடக்கத்திலேயே பூமி குறித்த மிகை யதார்த்தம் முகத்தில் மோதுகிறது. மக்காச் சோளம் மட்டுமே விதைக்க முடியும் அளவுக்கு விவசாயம் மிகவும் சீர்கேடு அடைந்திருக்கும் சூழல், புழுதிப் புயல் அடிக்கடி சூழ்ந்து மனித குலத்தை அடுத்த தலைமுறை வரை கடத்துமா என ஐயுறும் வகையில் மாசடைந்திருக்கும் சுற்றுச் சூழல் என்று தான் கதை தொடங்குகிறது. ஆனால் ஏன் அவ்வாறு புவி சீர் கெட்டுப் போனது என்று படத்தில் எங்கும் விளக்கவில்லை. படத்தின் கருவுக்கு அது தேவைப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது இது படைப்பாளனின் சுதந்திரம் எனக் கொள்ளலாம். ஆனால் அந்தப் படத்தைப் பார்க்கும் நாம் உண்மையானவர்கள். அவ்வாறான சீர்கேட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் புவியில் மெய்யாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். காடுகளை அழித்து, நீர்நிலைகளை பாழ்படுத்தி, கனிம வளங்களை ஒட்டச் சுரண்டி, அனைத்து உயரிகளையும் அதன் இயல்பிலிருந்து மாற்றி, அனைத்தும், அனைத்தும் .. .. .. அனைத்தும் தன்னுடைய தனியுரிமைக்கு உட்பட்டது என இறுமாந்திருக்கும் ஏகதிபத்தியங்களின் லாபவெறியினால் அல்லவா, புவி தன்னுடைய வனப்பை இழந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை தலைமுறைக்கு பூமி தாக்குப் பிடிக்கும்? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. ஏன் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற கோள்கள் இருக்கிறதா என்று தேடி அலைய வேண்டும்? எனும் படத்தின் மையக் கேள்விக்கான பதிலல்லவா, பூமி மனிதன் வாழத் தகுதியற்றதாக ஆகியிருக்கிறது என்பது. அதற்கான காரணத்தை கூறாமல் அமைதியாய் கடந்து செல்வது தான் படத்தின் அரசியல்.

படம் முழுக்க விண்வெளி குறித்த அறிவியலே புனைவாக பேசப் பட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றிருக்கும் மூன்று முதன்மையான விதயங்கள், 1) வார்ம்ஹோல் எனப்படும் புழுத்துளை. 2) ப்ளாக்ஹோல் எனப்படும் கருந்துளை. 3) ஃபிப்து டைமென்ஷன் எனப்படும் ஐந்தாவது பரிமாணம். இந்த மூன்றில் புழுத்துளை என்பதும், ஐந்தாவது பரிமாணம் என்பதும் கற்பனை. புழுத்துளை இருக்கும் சாத்தியம் உண்டு என கருதப்படுகிறது. ஆனாலும், அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. கருந்துளை மட்டுமே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவைகளை மிக அருமையாக திரைக்கதைக்குள் நுழைத்து, அதில் மனித உணர்வுகளையும், பாசப் போராட்டங்களையும் கலந்து ஒரு விருந்தாக நம்முன்னே படையலிடப்பட்டிருக்கிறது இண்டர்ஸ்டெல்லர்.

நாயகன் விண்வெளி ஆய்வகத்தின் கோரிக்கையை ஏற்று விண்வெளிக்குச் செல்கிறான். மனிதன் வாழ்வதற்கு ஏற்ற கோளை கண்டுபிடிப்பது, அது முடியாது போனால் மனித உயிரணுக்களை விண்வெளியில் விதைப்பது, கூடவே, ஏற்கனவே சென்று விண்வெளியில் இருக்கும் குழு என்னவானது என ஆராய்வது ஆகிய நோக்கங்களுக்காக விண்வெளிக்கு செல்கிறான்.  நாயகன் புழுத்துளை வழியாக பயணம் செய்து வேறொரு பால்வீதியில் இருக்கும் கோள்களை ஆராய்கிறான். கருந்துளைக்கு நெருக்கமாக இருக்கும் கோள் என்பதால் அங்கு நேர விகிதம் மிகவும் கூடுதலாக இருக்கிறது. அதாவது அந்தக் கோளில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பூமியில் ஏழு ஆண்டுகள் கடந்துவிடும். அந்த நீர்கோளில் இறங்கியதும் ஓங்கலை(சுனாமி) வந்து விடுவதால் அங்கிருந்து கிளம்ப சில மணி நேரம் ஆகி விட பூமியிலோ இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விடுகின்றன. இதன் பிறகே மனித உயிரணுக்களை விண்வெளியில் விதைப்பது மட்டுமே முதன்மையான நோக்கம் என்பதும், விண்வெளிக்குச் சென்றால் திரும்ப முடியாது என்பதும் அவனிடம் கூறாமல் மறைக்கப்பட்டிருக்கிறது எனும் உண்மை தெரிய வருகிறது. மகள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும், ஏற்கனவே மனைவியை இழந்திருக்கும் நாயகன் எப்படியாவது பூமி திரும்பி மீண்டும் மகளோடு வாழ வேண்டும் என விரும்புகிறான். அதற்காக ஆபத்து என்றாலும் கருந்துளைக்குள் புகுந்து புறப்படவும் ஆயத்தமாகிறான். கருந்துளைக்குள் புகுந்ததும், பொருளின் ஐந்தாவது பரிமாணம் நாயகனுக்கு கைவருகிறது.

ஒரு பொருளுக்கு நான்கு பரிமாணம் உண்டு என்பது இயங்கியல். நீளம், அகலம், உயரம், காலம் என்பது அந்த நான்கு பரிமாணங்கள். இதில் நான்காவது பரிமாணத்தில் இருக்கும் மனிதன் விரும்பினால் பொருட்களின் முதல் மூன்று பரிமாணங்களை மாற்றி அமைக்கலாம். அதாவது ஒரு பொருளின் நீள, அகல, உயரங்களை கூட்டிக் குறைக்கலாம், மாறுபாடு செய்யலாம். ஆனால் நான்காவது பரிமாணமாகிய காலத்தை ஒன்றும் செய்ய முடியாது. இதில் ஐந்தாவது பரிமாணம் என்றொரு கற்பனையை புகுத்தி, ஐந்தாவது பரிமாணத்தில் இருக்கும் ஒருவன் தான்  விரும்பியபடி காலம் எனும் நான்காவது பரிமாணத்தையும் மாற்றி அமைக்கலாம் என்று காட்டுகிறார்கள்.

ஐந்தாவது பரிமாணத்தில் இருக்கும் நாயகன், தான் விண்வெளி பயணத்துக்கு கிளம்பிய போது சிறுமியாக இருந்த மகள் தன்னிடம் கோபித்துக் கொண்ட காலத்துக்குத் திரும்பி, மகளின் படுக்கை அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்களை தள்ளி விட்டு பயணத்தை தடுத்து நிறுத்த முயல்கிறான். (இதே காட்சி படத்தின் தொடக்கத்தில் வேறு விளக்கத்தோடு இடம் பெற்றிருக்கும்) பயணத்தை தடுக்க முடியவில்லை. ஆனால், வேறு ஒரு கோளில் வசிக்க நேர்ந்தால் அந்தக் கோளின் ஈர்ப்பு விசை சமன்பாட்டு கணக்கீடுகளை உணர்வுகல் மூலம் தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்கிறான். பின் எவ்வாறோ காப்பாற்றப்பட்டு ஒரு மருத்துவமனையில் கண் விழிக்கிறான். அது மனிதர்கள் வாழும் வேறு ஏதோ ஒரு கோளுக்கு சென்று கொண்டிருக்கும் அவனுடைய பெயரால் குறிக்கப்படும் ஒரு விண் ஓடத்தில் இருக்கும் மருத்துவமனை. அங்கு தன் மகளைப் பற்றி விசாரித்தால் அவளும் வயது முதிர்ந்த நிலையில் மரணப் படுக்கையில் கிடக்கிறாள் என்பது தெரிய வருகிறது. ஓடிச் சென்று பார்க்கிறான், விண்வெளி பயணம் சென்று ஓரிரு நாட்களே ஆன நிலையில் இருக்கும் இள வயது நாயகன். ஆனால் ஓரிரு நாட்களுக்கு முன் பூமியில் விட்டுச் சென்ற தன் பத்து வயது மகளோ எண்பது வயது பாட்டியாக மரணப் படுக்கையில் கிடக்கிறாள்.

ஓர் அறிவியல் புனைவு திரைப்படம் எனும் அடிப்படையில் கருந்துளைக்குள் உட்புக முடியுமா? ஐந்தாம் பரிமாணம் அறிவியலைச் சார்ந்ததா? போன்ற கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விடலாம். என்றால் மதவாத விட்டலாச்சாரியா படங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? விட்டலாச்சார்யா படங்களை ஏற்றுக் கொள்ள முடியுமா? என்றால் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. விட்டலாச்சார்யா படங்கள் நம்மை மூடநம்பிக்கைக்குள் கட்டி வைக்கும் அறிவியலோடு எந்தத் தொடர்பும் இல்லாத மதப் புராணங்கள். இவை அறிவியலோடு ஒட்டி உறவாடும் புனை கதைகள். ஆனால், அறிவியலை முன் வைத்து வேறு சில விதயங்களை பேச வேண்டும். இந்தப் படம் அப்படியான விதயங்களை முன்தள்ளுகிறது என்பது தான் இது போன்ற திரைப்படங்களின் இன்றியமையாத தன்மையாக இருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது இதன் கதை, தந்தை மகளுக்கிடையேயான பாசம், இசை இன்னபிற எதுவும் மனதில் நிற்காது. மாறாக, விண்வெளிக் காட்சிகள், அது தொடர்பான அறிவியல் தான் மனதை நிறைத்திருக்கும். தமிழில் இது போன்ற திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை என்பது ஒரு குறை. மக்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு திரைப்படங்கள் பெரு வாய்ப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும். அறிவியலின் மேடையில் நிருப்பிக்கப்படாத எதுவும் நீடித்திருப்பதற்கு தகுதியற்றவை என்பது ஏங்கல்சின் கூற்று. கொரோனாவும் அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது, பலரிடம் கடவுளை பரிசீலனை செய்ய கொரோனா தூண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு அறிவியல் முதன்மையானது. அதேநேரம், அந்த அறிவியலையே அறிவியல் மேடையில் நிறுத்த வேண்டியிருக்கிறது.

அறிவியலின் திசை வழியை தீர்மானிப்பதில் ஏகாதிபத்தியமே முழுப் பொறுப்பையும் கொண்டிருக்கிறது. சந்திராயன், மங்கள்யான் திட்டங்கள் தொடங்கி நாசா ஆய்வுகள் வரை ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக மட்டுமே செய்யப்படுகின்றன. அடித்தட்டு மக்களுக்கான எந்தப் பயனும் இது போன்ற ஆய்வுகளால், திட்டங்களால் இல்லை. விண்வெளி ஆய்வுகள் மட்டுமல்ல மருத்துவம் சார்ந்த சேவைத் துறை குறித்த அறிவியலின் திசையையும் ஏகாதிபத்தியங்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை. இங்கே அறிவியல் ஆய்வுகள் பக்கப்பட்டை கட்டப்பட்ட குதிரையைப் போல் ஒற்றை திசையை குறிவைத்தே ஓடிக் கொண்டிருக்கின்றன. வெகு மக்கள் தேவை சார்ந்த ஆய்வுகள் எந்த அறிவியல் கூடத்திலாவது நடக்கிறதா?

கொரோனா போன்ற தொற்று நோய்களை எடுத்துக் கொள்வோம். நாம் அறிவியல் என்று எதை பேசிக் கொண்டிருக்கிறோம்? ஒரு நோய் நுண்மி எதாவது வாய்ப்பில் கண்டுபிடிக்கப்படும், அதன் பரவும் வேகம், கொல்லும் தன்மையை கொண்டு உலகம் முழுவதிலும் அச்சம் பரப்பப்படும், பின்னர் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்படும், அதைக் கொண்டு பல்லாயிரம் கோடி வணிகம் நடக்கும். பின்னர் வேறு ஏதாவது ஒரு பெயரிலான நோய் நுண்மி கண்டு பிடிக்கப்படும். பிறகு பழைய கதை மீண்டும், மீண்டும் தொடரும். இது மட்டும் தான் அறிவியலா? லூயி பாஸ்டர் கண்டுபிடித்த நுண்ணியிர்கள் குறித்த அறிவிப்பு இன்றளவும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. அது தான் மேற்கண்ட வணிகத்துக்கு உறுதுணையாய் இருக்கிறது. இதை மட்டுமே அறிவியல் என்று நாமும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். லூயி பாஸ்டருக்கு எதிராக மாற்று நுண்ணுயிர் கோட்பாட்டை சொன்ன அந்தொய்னே பீச்சாம்ப் மருத்துவ அறிவியலிலிருந்தே அப்புறப்படுத்தப்பட்டார். பீச்சாம்பை தொடர்ந்து அதே வழியில் அறிவியலாளர்கள் செய்த ஆய்வுகள் எதுவும் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இத்தனைக்கும் லூயி பாஸ்டர் தன்னுடைய நுண்ணியிர் கொள்கை தவறானது என்று இறுதியில் ஒப்புக் கொண்டிருக்கிறார். என்றபோதும் கூட, இன்றளவும் அது அறிவியலாக முன்னிருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் பீச்சாம்ப் மற்றும் அவரைத் தொடர்ந்த அறிவியலாளர்கள் அனைவரும் முதலாளித்துவ வணிகத்திற்கு உதவ மாட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக குப்பைக் கூடையிலேயே கிடக்கிறார்கள். இது குறித்து பேசினால் புரட்சிகர இடதுசாரிகளாக தங்களை கருதிக் கொள்வோர் கூட அறிவியலுக்கு எதிரானது என்கிறார்கள். என்ன சொல்வது?

இது மருத்துவத் துறையில் மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலும் இது தான் நடக்கிறது. பெட்ரோலை மிக வேகமாக உற்பத்தி செய்யும் ஆற்றல் அறிவியல் முன்னேற்றமாக விதந்தோதப்பட்டது. தொழில்நுட்ப அறிவியல் முன்னேற்றம் குறித்து மகிழும் அனைவரிடமும் அது தான் பொதுப் போக்குவரத்தை ஒழித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா? இப்படி முதலாளித்துவ வணிகத்திற்கு உதவும் விதமாக மட்டுமே அறிவியல் கண்டுபிடிப்புகள் இருப்பது ஏற்புடையது தானா?

இன்றைய அறிவியல் ஆய்வுகள் அனைத்தும் பெரு நிறுவனங்களே செய்கின்றன, அல்லது பெரு நிறுவனங்களின் நிதிப் பங்களிப்புடன் செய்யப்படுகிறது. அண்மைக் காலங்களில் பெரு நிறுவனங்களுக்கு எதிராக ஏதாவது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு செய்யப்பட்டு அது அறிவியலாளர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறதா?

அறிவியல் என்பது வெகு மக்களின் தேவைகளோடு இணைய வேண்டும். இன்றுவரை ஆழ்துளைக் கிணறுகளுக்குள் தவறி விழும் குழந்தைகள் இறந்து கொண்டே இருக்கின்றன. சமூக வலைதளங்களில் தேடிப் பாருங்கள். எத்தனை ஆயிரம் யோசனைகள், இயந்திரத்திற்கான திட்ட வரைபடங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று. எதுவும் செயல் வடிவத்துக்கு வரவில்லை. எவ்வளவோ தேவைகள் இங்கு இருக்கின்றன. அந்தத் தேவைகளோடு அறிவியல் ஆய்வுகள் இணைவதே இல்லை. இணைய விடாமல் தடுத்து வைத்திருக்கிறது முதலாளித்துவம். மறுக்க முடியுமா? என்றால் எது அறிவியல்?

மக்கள் அறிவியலை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கான முன்நிபந்தனையாக அறிவியல் குறித்த புரிதல் வெகு மக்களுக்கு இருக்க வேண்டும். வாய்ப்புள்ள எல்லா வழிகளிலும் அதனை செய்தாக வேண்டும். அந்த வகையில் இண்டர்ஸ்டெல்லர் போன்ற அறிவியல் புனை கதைகளும் பயன்படும் என்ற விதத்தில் இது போன்ற திரைப்படங்களை வரவேற்போம்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s