
கொரோனாவின் கோரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் காவி பாசிசங்களும் அவர்களின் காலாட்படையான சங்கிகளும் தங்களின் வன்மத்தை கைவிடவில்லை, கைவிட மாட்டார்கள் என்பதை தப்லீக் மாநாடு விதயத்தில் பார்த்தோம். வரலாறு நெடுகிலும் அவர்களின் நோக்கம் திட்டம் எல்லாம், சாதியக் கொடுங்கோன்மையை மீண்டும் பழைய விதத்தில் அட்டியின்றி நடப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டும் தான். இந்து என்றொரு மதமே இல்லை என்பதும், பார்ப்பன மதத்தின் மீது போர்த்தப்பட்டிருக்கும் போர்வை தான் அது என்பதும் இன்று பலர் உணர்ந்திருந்தாலும், தொடர்ந்து அது பரவலாக்கப்பட வேண்டிய தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
அந்த தேவையை நிறைவேற்றும் விதத்திற்கு பேராசிரியர் தொ.பரமசிவம் ஐயா அவர்கள் தொகுத்துள்ள இச் சிறுநூல் ஒரு துரும்பாக இருக்கும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.
நூலின் முன்னுரை:
உலகமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதன் அடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த, நகர்ப்புரம் சார்ந்த, வறுமைக் கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் ‘இந்து’ என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிருஸ்தவர் என்பது போல இஸ்லாமியர் என்பது போல இந்து என்பதும் ஓர் அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால், பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாளம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத் தான். இந்து அடையாளம் குறித்து சில பேராசிரியர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் தந்த விளக்கம் தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.
படியுங்கள், பரப்புங்கள்.
மிகவும் சிறப்பான நூல்களைத் தொகுத்து வழங்கிக் கொண்டே இருக்கிறீர்கள் உங்களின் இந்த சேவையை தொடர்ந்து மென்மையாக்கும் சிறப்பாகவும் நடைபெற என்னுடைய வாழ்த்துக்கள்