இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?

தேசபக்தி – அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன.

தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் தள்ளியிருக்கிறது. நாடு முழுவதிலும், ஏறக் குறைய எல்லா மாநிலங்களுமே அந்த நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. தேசிய குற்றப் பதிவு ஆணைய அறிக்கையின்படி, 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டில் மத வன்முறைகள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. 2016க்கான அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. ஆனால் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி 2016ம் ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 278 மத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 38 பேர் உயிரிழந்ததாகவும், 903 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்த அறிவிக்கை தெரிவிக்கிறது. இந்தக் கணக்கு, நேரடியாக மதங்களுக்கு மட்டும் உரியது தான். சாதிய வன் கொடுமைகள், மத அடிப்படைவாதக் கருத்து சார்ந்த பெண்கள் மீதான தாக்குதல்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இவை எல்லாவற்றையும் சேர்த்தால், நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகும்.

2016-ம் ஆண்டைவிடவும் 2017-ம் ஆண்டின் நிலைமை மிக மோசமாக இருக்கப்போகிறது. குறிப்பாக, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக முடிந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சி என்ற ஒன்றைத் துடைத்தழிக்கப்பட்டிருக்கும் சூழலில், நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டியதுதான். கடந்த வாரம்கூட குஜராத்தின் வட்வாளி கிராமத்தில் இந்து-முஸ்லிம் மாணவர் களுக்கிடையில் நடந்த சண்டை, மதக்கலவரமாக முடிந்தது. முஸ்லிம்களின் வீடுகளை இந்துக்கள் சூறையாடி, தீ வைத்துத் தாக்குதல் நடத்தியதில், 25 வயது இளைஞர் ஒருவர் உயிர் இழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வட மாநிலங்களில் இந்து அமைப்பினர் மதம் மற்றும் கலாசாரத்தின் பெயரால், நாள்தோறும் வன்முறைகளைக் கட்டவிழ்ப்பது சாதாரணமாக நடந்தேறுகிறது.

இந்தியா, இந்து நாடு அல்ல; இந்துக்களும் வாழும் ஜனநாயக நாடு. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பெளத்தம், சீக்கியம் எனப் பல்வேறு மதங்கள் வேரூன்றியிருக்கும் இந்தியாவில், அவரவர் அவரவர் மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமையை நமது அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. அதுமட்டும் அல்ல, யாரும் எந்தத் தருணத்திலும் எந்த மதத்துக்கும் மாறலாம்.

மதம் மாறுவது நமது தார்மிக உரிமை; சுதந்திரம். இந்தியாவில் பெரும் அளவில் நிகழ்ந்த மத மாற்றங்களுக்குச் சாதியப் பொருளாதாரப் பாகுபாடுகளைத் தகர்த்தெறியும் நோக்கம் இருந்ததை மறுக்க முடியாது. சாதி ஒடுக்கு முறையைத் தாங்க முடியாத தலித்கள் மற்றும் பழங்குடியினரே பெரும் அளவில் இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் பெளத்தத்துக்கும் மதம் மாறினார்கள்; மாறிக்கொண்டிருக்கிறார்கள். சாதி எனும் பிறவி இழிவை அழித்தொழிக்கும் ஆயுதமாகவே மதமாற்றம் கையாளப்படுவதால், இந்தியாவில் அது ஆன்மிகச் செயல்பாடாக அன்றி சமூகப் புரட்சியாகவே கருதப்படுகிறது. அம்பேத்கர்கூட 10 லட்சம் பேரோடு இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தம் தழுவியது அந்த அடிப்படையில்தானே! சாதி அமைப்பால் பிழைத்துக்கொண்டிருக்கும் இந்து மதத்தை விட்டு தலித்கள் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த, இந்து அமைப்புகள் முனைப்புகொண்டன.

தொன்னூறுகளில் அவை மதமாற்றத்துக்கு எதிரான தமது பணியைக் கூர்மைப்படுத்தின. 2000-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து குஜராத், சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் மூலம் மத மாற்றங்களைத் தடுத்து நிறுத்தும் வேலையை பா.ஜ.க தொடங்கியது. `இந்தச் சட்டம் நாடு முழுக்க அமல்படுத்தப்படும்’ என்ற பா.ஜ.க-வின் 2014 -ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி, மேலவையில் பெரும்பான்மை கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்தக் கட்சியின் சமீபத்திய தேர்தல் வெற்றிகள்(!) அதைச் சாத்தியப்படுத்தக் கூடும். அவ்வாறு நடந்தால், மதம் மாற விரும்புவோர் கடுமையான நெருக்கடிகளையும் வதைகளையும் எதிர்கொள்வர். அதுமட்டும் அல்ல, தாய் மதத்துக்குத் திரும்பும் `கர்வாப்ஸி’ முறை, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் பலவகை சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்போகிறது. மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ள குஜராத்தில், ஆயிரக்கணக்கானோர் மதம் மாறுவதற்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பங்களை அளித்துவிட்டுக் காத்திருக் கின்றனர். ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை. `மதம் மாற விரும்புவோர் நாட்டைவிட்டு வெளியேறட்டும்’ என இந்து அமைப்பினர் விஷத்தைக் கக்குகின்றனர்.

மதவாதம் , உணவு உரிமை தொடங்கி உறவு உரிமை வரை நல்லிணக்கத்தின் அத்தனை கூறுகளையும் சிதைக்கிறது. இந்தியாவில் தலித்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சி. மாட்டின் மீது இந்துத்துவவாதிகள் புனிதத்தை ஏற்றுவதற்கு முன்பு வரை, பயன்பாடு முடிந்த மாடுகளைக் கறிக்கு அனுப்புவது இயல்பான விஷயம்தான். `பசு, தெய்வம்!’ என்ற பிரசாரம் வலுவடையத் தொடங்கிய பிறகு, மாட்டிறைச்சி உண்ணாத பெரும்பான்மை இந்துக்கள், அதை உண்பவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கத் தொடங்கினர். மாட்டிறைச்சி உண்பவர்களைத் தாழ்வாகக் கருதும் அவர்களின் சாதிய மனநிலை வலுபெற்றது. இஸ்லாமியர்களும் தலித்களும் பலவகையான வன்முறைகளை மாட்டிறைச்சியின் பெயரால் அனுபவிக்க நேர்ந்தது. விரும்பிய உணவின் பெயரால் மனிதரை வெட்டிச் சாய்க்கும் கொடூரம் உலகில் வேறு எங்கும் நிகழ்வதில்லை.

இந்தக் கட்டுப்பாடு, இப்போது பிற அசைவ உணவுகளை நோக்கியும் நகர்ந்திருக்கிறது. சைவ தீவிரவாதத்துக்கான விதைகள் மூர்க்கமாகத் தூவப்படுகின்றன. இந்தியாவில் சைவர்களைக் கணக்கெடுத்தால், மொத்த மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம்கூட தேறாது. ஆனால், அந்த மூன்று சதவிகிதத்தினர்தான் இந்தியாவின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகின்றனர். அந்த மூன்று சதவிகிதத்தினருக்காக எஞ்சிய 97 சதவிகிதத்தினரும் சைவர்களாக வேண்டுமாம்.விரும்பிய உணவை உண்ண மக்களுக்கு உரிமை இருக்கிறது என ஆட்சியாளர்களோ, நீதிமன்றங்களோ இந்தத் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால், இவர்களில் பெரும்பாலானோர் சட்டத்தை விடவும், சனாதனத் தர்மத்தின்படி இயங்குவதே இந்த அநீதி பரவ காரணமாக அமைந்தது.

மதவாதிகள், அடிப்படையில் ஆணாதிக்கவாதிகள். இந்துமதப் பிரமுகர்கள் பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் ஆணாதிக்கக் கருத்துகளை வெளிப்படையாக உதிர்க்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் மனதில் பெண்ணடிமைக் கருத்தியலை வளர்த்தெடுக்கத் தீவிரமாக வேலை செய்கின்றனர். சமூக வலைதளங்களில் பெண் வெறுப்பு பரப்பப்படுகிறது. காதலின் பெயராலோ திருமணத்தின் பெயராலோ சாதி – மதரீதியிலான கலப்பு நிகழக் கூடாது என்பதற்காகவே ரோமியோ எதிர்ப்புப் படை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் ஒழுக்கத்தின் பெயரால் இளைஞர்களைக் கண்காணிக்கின்றனர். `ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்துகொண்டு ஓர் ஆணுடன் தனியாக ஏன் வெளியே வருகிறாள், அதுவும் இரவு நேரத்தில்?’ – தலைநகரில் நிர்பயாவைக் குதறிக் கொன்றவர்கள் சொன்ன அதே விதிமுறைகளை இவர்களும் விதிக்கிறார்கள் எனில், இவர்கள் யார்? ஆண்-பெண் உறவைத் தடுத்து நிறுத்துவதைவிட ஓர் அரசுக்கு வேறு வேலை இல்லையா? வீடு எனும் பெரும் சிறையைக் கடந்து கல்வியின் பலனால் இந்தத் தலைமுறை பெண்கள்தான் வெளியுலகில் சிறகு விரிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குள் அவர்களது சிறகுகளைக் கத்தரிக்க பண்பாட்டுக் காவலர்கள் வீச்சரிவாளைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் ஓடிவருகின்றனர். மதவாதிகளின் பெண் வெறுப்பு நடவடிக்கைகள் இத்துடன் முடியப்போவதில்லை. பேராபத்தின் சிறு தொடக்கம் இது.

சமீபத்திய மாநிலத் தேர்தல் முடிவுகள், பெருகி நிற்கும் மதவாதத்தைப் புரிந்துகொள்வதற்கான ஆதாரம் எனலாம். 20 கோடி பேர் மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் சுமார் 20 சதவிகிதம் இருக்கின்றனர். ஆனால், பெருவாரியாக வெற்றிபெற்ற (!) பா.ஜ.க., முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைக்கூட நிறுத்தவில்லை. பா.ஜ.க., இதன்மூலம் மக்களுக்குச் சொல்லவருவது என்ன? உத்தரப்பிரதேசத்தில் 2012-ம் ஆண்டு தேர்தலில் 68 இடங்களைப் பிடித்த முஸ்லிம்களில் தற்போது 24 பேர் மட்டுமே உள்ளனர். அதுவும் எதிர் அணியில். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் படுபாதாளத்தில் இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாததும் 2014-ம் ஆண்டு தேர்தலில்தான். இந்த நிலைக்குக் காரணம், இந்து மதவாதமே என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2010-15 வரையிலான காலகட்டத்தில் மதக் கலவரங்கள் அய்ந்து மடங்கு பெருகியுள்ளன.

இது ஆழப்பட்ட முஸ்லிம் வெறுப்புணர்வின் வெளிப்பாடு என அவை சுட்டிக்காட்டுகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சாத்தியப்பட்டிருக்கும் சிறுபான்மையினர், தலித்கள்/பழங்குடியினர், பெண்களின் ஓரளவு பிரதிநிதித்துவத்தையும் மதவாதம் துடைத்து அழிக்கப்போகிறது என்பதை இன்றைய சூழல் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. சக மனிதர் மீதான தாக்குதலை, மூட நம்பிக்கைகளை, வெறுப்பு அரசியலை, உரிமை மீறல்களை, ஒடுக்குமுறைகளை, வரலாற்றுத் திரிபுகளைக் கேள்விகேட்பவர்களுக்கு `தேசத் துரோகி’ பட்டம்! அதோடு, ஆண்களாக இருந்தால் கொலை அல்லது காணாமல் ஆக்கப்படுவது. பெண்களாக இருந்தால் கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை மிரட்டல்கள்.

மதவாதத்தைக் கண்டித்துப் பேசிய பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, சாதியவாதத்தை விமர்சித்த பேராசிரியர் கல்புர்கி, சாதியப் பாகுபாட்டை எதிர்த்த ரோஹித் வெமுலா மற்றும் மதவாத மாணவப் பிரிவான ஏபிவிபி-யோடு மோதிய ஜே.என்.யு மாணவர் நஜீம் அகமது ஆகியோருக்கு நடந்ததை நாடு அறியும். முதல் மூவரும் முகத்துக்கு நேராகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான ரோஹித் வெமுலா மர்ம மரணமடைந்தார். கடந்த அக்டோபரில் தொலைந்துபோன நஜீம் அகமதுவை, இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. தேசப்பற்றின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளை விமர்சித்ததுக்காக, `பாலியல் வல்லுறவு செய்யப்படுவாய்’ என மிரட்டப்பட்டார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி குர்மெஹர் கவுர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பெங்காலி கவிஞர் மந்தகிராந்தா சென், மத அத்துமீறலைக் கேள்வி கேட்டதற்காகக் `கூட்டு வல்லுறவு’ மிரட்டலுக்கு ஆளானார். இவை எல்லாம் நகரங்களில், அறிவுத்தளத்தில் நடந்த மதவாதத் தாக்குதல்கள். அதாவது ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் ஆகும் தகுதி பெற்றிருந்தன.

ஆனால், கிராமப்புறங்களில் எந்தப் பின்புலமும் அற்ற சாமானியர்கள் மீது நிகழ்த்தப்படும் மத/சாதி ஒடுக்குமுறைகள் கேட்பார் இன்றி நடந்துகொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் தினமும் ஒரு வன்முறை வீடியோ ரிலீஸ் ஆகிறது. ராஜஸ்தானில் வளர்ப்புக்காகக் கன்றுக்குட்டியை வாங்கிச் சென்ற இஸ்லாமிய பால் வியாபாரி, ஒரே அடியில் வீழ்த்திச் சாகடிப்படுகிறார். உத்தரப்பிரேதசத்தில், சாலையில் `மிக நாகரிகமாக’ நடந்துசெல்லும் ஒரு ஜோடியை வழிமறித்து தடியால் தாக்குகிறான் காவித் துணியால் முகத்தை மூடிய ஒருவன். ரோமியோ எதிர்ப்புப் படையினர் உத்தரப்பிரதேசம் முழுக்க இருசக்கர வாகனங்களில் சுற்றுகின்றனர். ஆண்களோடு பேசும் பெண்களை, மேற்கத்திய உடை அணிந்திருப்போரை அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் அவ்வளவு ஏன் காவலர்கள் முன்னிலையிலேயே கடுமையாகத் தண்டிக்கின்றனர். இந்தப் பண்பாட்டுக் காவலர்கள் எந்தச் சட்டத்துக்குக் கட்டுப் பட்டவர்கள்? எல்லோரையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இவர்களே போதுமென்றால் காவல் நிலையங்களோ நீதிமன்றங்களோ, அரசமைப்புச் சட்டமோ நமக்கு எதற்கு? இத்தகைய வீடியோக்களை அந்தக் குற்றவாளிகளே பரப்புகின்றனர். அதன்மூலம் தங்கள் மதம் குறித்த அச்ச உணர்வைக் கட்டியெழுப்ப அவர்கள் முனைகின்றனர்.

எங்கோ உத்தரப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் மட்டுமே இந்தக் கொடுமைகள் நடப்பதாக நாம் நினைக்கிறோம். உத்தரப்பிரதேசமும் ராஜஸ்தானும் இந்தியாவில்தானே இருக்கின்றன?! அங்கே நடப்பது இங்கே நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்துத்துவ அமைப்புகளின் மதவாதப் பருப்பு தமிழகத்தில் வேகாது எனப் பலரும் வாதிடுகின்றனர். சரிதான், நமது திராவிடப் பாரம்பர்யம் அந்தச் செருக்கை நமக்கு வழங்கியுள்ளது. ஆனால் மதவாதம், இடத்துக்குத்தக்க வெவ்வேறு முகமூடிகளை அணிந்து இயங்குகிறது. நாடு முழுக்க மாட்டிறைச்சிக்கு எதிராகக் கடுமையாகப் பிரசாரம் செய்யும் பா.ஜ.க., மாட்டிறைச்சியை மாநில உணவாகக்கொண்ட கேரளாவில், `ஜெயித்தால் மாட்டிறைச்சியைப் பரவலாகக் கிடைக்கச் செய்வேன்’ என ஓட்டுக்காக அற்பப் பிரசாரம் செய்ததே அது போல.

பெரியாரின் இந்து மத எதிர்ப்புக் கருத்தியல்கள், தமிழகம் கட்டிக்காக்கும் சகோதரத்துவத்துக்கு உரமாக இருப்பது உண்மைதான். ஆனால், ஆணவக்கொலைகள், செப்டிக் டேங்க் மரணங்கள், தீண்டாமை மற்றும் சாதிய வன்கொடுமைகள் இங்கே அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனவே, அது மதவாதம் இல்லையா? அண்மையில், திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஃபாரூக், இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் கொலைசெய்யப்பட்டார். அது மதவாதம் என பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், மதத்தின் பெயரால் இன்னோர் இஸ்லாமியரைக் கொல்வது, தாக்குவது, வதைப்பது மதவாதம் எனில், இந்து ஆதிக்கச் சாதிகள், சக இந்துக்களான தலித் மக்கள் மீது மதத்தின் பெயரால் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் பாகுபாடுகள், நிகழ்த்தும் வன்கொடுமைகள் மதவாதம் அன்றி வேறு என்ன? சாதியின் பெயராலேயே தமிழகத்தில் மதவாதம் நிலைநிறுத்தப்படுகிறது.

அதுமட்டும் அல்ல, கோவைக் கலவரத்தைப்போல மற்றொரு வன்முறையைக் கட்டமைத்துவிட, பல வழிகளிலும் முயற்சிகள் நடக்கின்றன. இந்து அமைப்பினர் கொல்லப்படும்போது எல்லாம் அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது வீசியெறிய கடும் பிரயத்தனங்கள் நடக்கின்றன. இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார். இந்த நிகழ்வைக் கண்டித்து இந்து முன்னணியினர் அறிவிக்கப் படாத பந்த்தை நிகழ்த்தி, கடையடைப்புக்குக் கட்டாயப்படுத்தினர். பொது மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உண்டானது. இந்த அத்துமீறல்களின் உச்சமாக இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரன் சுப்ரமணியன், `தமிழகம், குஜராத்தாக மாறும்!’ என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது, சசிக்குமாரின் மரணத்துக்கு முஸ்லிம்களே காரணம் என்பதை, குஜராத் என்ற குறியீட்டின் மூலம் அவர் அறிவிக்க முனைந்தார். இந்து அமைப்பினர் கொல்லப்படும் ஒவ்வொரு முறையும் பழியை முஸ்லிம்கள் மீது போட பொன்.ராதாகிருஷ்ணன்களும், வானதி சீனிவாசன்களும் படாதபாடுபடுகின்றனர். ஆனால், அவர்களுக்கான உண்மை மிகக் கசப்பானதாக அமைந்துவிடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அரவிந்த் ரெட்டியைக் கொலை செய்தது இந்துக்களே! பெண் விவகாரமே அரவிந்தின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த புகழேந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில், தேவாலயப் பின்னணி இருப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். ஆனால், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்ற தகாத வேலைகளில் ஈடுபட்டுவந்த புகழேந்தி, இந்தக் காரணங் களுக்காகவே முனீசுவரன் என்கிற இந்துவால் கொல்லப்பட்டார். இதையும் மதரீதியான பழிவாங்கல் என்றே இந்து அமைப்புகள் கோரின. நிலத் தகராறில் கவுன்சிலர் முருகனைக் கொன்றதும் இந்துக்களே! இப்படியாக, துப்பறியப்பட்ட பல வழக்குகளில் இந்து அமைப்பினர் மதக் காரணங்களுக்காகவோ வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களாலோ கொல்லப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இஸ்லாமியர்களைக் கைகாட்டுவதை இவர்கள் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றனர்.

முஸ்லீம்கள் மற்றும் தலித் மக்கள் குறித்த பொதுச் சமூகத்தின் பார்வையும் கருத்தும் என்ன? சக குடிமக்களான அவர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்து எந்தக் கவலையாவது பெரும்பான்மைச் சமூகத்துக்கு இருக்கிறதா? தீவிரவாத முத்திரையுடன் இஸ்லாமியர்களும், தீண்டத்தகாத முத்திரையுடன் தலித்களும் படுகுழிக்குள் வீழ்த்தப்பட்டுக் கிடக்கின்றனர். அந்த உண்மையை உயிர்ப்போடு வைத்துக்கொண்டே இங்கே இந்து மதம் புத்தெழுச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ் என்ற அமைப்பின் ஆய்வு, படித்த இந்தியர்களிடையே மத உணர்வு அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது. இவர்கள் உயர்ரக செல்போன், வாகனங்கள் வைத்திருந்தாலும், அல்ட்ரா மாடர்ன் உடைகள் உடுத்திக்கொண்டாலும், அவர்களது மூளை பிற்போக்குத்தனத்திலும் பழைமைவாதத்திலும் ஆதிக்கவாதத்திலும் ஊறிப்போயுள்ளது. சாதி, மதம் மற்றும் ஆணாதிக்கம் ஆகியவற்றின் பெயரால் எத்தகைய அட்டூழியம் நிகழ்த்தப்பட்டாலும், அதற்கான மானசீகமான பேராதரவை அளிப்பது இவர்கள்தான். சமூக வலைதளங்கள் வெறுப்பு அரசியலைப் பரப்புவதற்கான முக்கியமான கருவியாக மாறியதற்கு `மத உணர்வு’கொண்ட படித்த இந்தியர்களே காரணம். சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பப்பட்ட மதச்சார்பின்மையை ஒரே சாத்தில் அடித்து வீழ்த்திவிடும் வெறியை இவர்களிடம் பரவலாகப் பார்க்க முடிகிறது. எனில், இந்த நவீனம், முன்னேற்றம், தொழில்நுட்பப் புரட்சி, வல்லரசு இவற்றுக்கெல்லாம் என்னதான் அர்த்தம்?

விளையாட்டு அல்ல.. .. .. இந்தியாவின் இன்றைய பன்முகத்தன்மை நீண்டகால வரலாற்றால் கட்டமைக்கப்பட்டது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமும் கிறிஸ்தவமும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தமும் சமணமும் என இந்தியா பல்வேறு மதங்களின் தோற்றத்தையும் வருகையையும் தாங்கி நிற்கிறது. அந்தக் கலப்புதான் இந்தியாவின் கம்பீரம்! ஆனால், அதைச் சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்றைய நாட்டுநடப்பைப் பார்த்து வளரும் நமது குழந்தைகள், தேசப்பற்றை என்னவென்று விளங்கிக்கொள்வார்கள்? சிறுபான்மையினரை அழிப்பது என்றா… தலித் மக்களையும் பெண்களையும் ஒடுக்குவது என்றா? தேசப்பற்றுக்கு நிறைய விளக்கங்கள் உள்ளன. பல அறிஞர்கள் பல வகையிலும் தேசப்பற்றை வரையறுத்துள்ளனர். பிரிட்டிஷ் எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன், `தேசபக்தி என்பது பொறுக்கிகளின் கடைசி அடைக்கலம்’ என்கிறார். நடப்பவை அனைத்தும் அதை நிரூபிக்கின்றன.

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசியலமைப்புச் சட்டம். நாட்டின் பேரறிஞர்கள் பலரும் பல நாள்கள் ஆய்வுசெய்து, உலக அரசியலமைப்பு முறைகளை எல்லாம் அலசி விவாதம்செய்து பின்னரே, இந்த ஜனநாயகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொரு வருக்குமான அடிப்படை உரிமைகள் உறுதிசெய்யப்பட்டன. நன்மக்களாக அதை மதித்து, சகோதரத்துவத்துடன் நடப்பதைத் தவிர உண்மையான தேசப்பற்று வேறு என்னவாக இருக்க முடியும்?

1928-ம் ஆண்டு சைமன் கமிஷன் முன் சமர்ப்பித்த அறிக்கையில், `இம்மக்களுக்கு தாம் ஒரு தேசம் என்ற உணர்வை (sense of nationality) உருவாக்கவேண்டியதுதான் இந்தத் தருணத்தின் முக்கியமான தேவை’ எனக் குறிப்பிட்டார் அம்பேத்கர். இதோ ஒரு நூற்றாண்டு காலம் நெருங்கிவிட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், பார்ப்பனர், மிஷ்ரா, பாண்டே, பானர்ஜி, கள்ளர், செட்டியார், முதலியார் என முறையே மதமாகவும் சாதியாகவுமே ஒவ்வோர் இந்தியரும் இன்றும் தம்மை உணர்கின்றனர்; அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

தேசபக்தி என்றால் நாட்டை நேசிப்பது என நாம் புரிந்துகொள்கிறோம். நாடு என்பது என்ன… அதன் புவியியல் எல்லைகளா? இல்லவே இல்லை. எல்லைகள் மாறக்கூடியவை. நாடு என்பது அதன் மக்களே! மக்களை அழித்து விட்டாலோ அப்புறப்படுத்திவிட்டாலோ அது நாடு அல்ல. அந்த இடம் காடாகவோ வெற்றிடமாகவோ அறியப்படும். பெரும்பான்மை என்பதற்காக, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அழிக்கத் தொடங்கினால், பூமியின் கடைசி இரண்டு மனித உயிர்களும் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டு செத்துப்போவதைத் தவிர வேறு மாற்று இல்லை.

ஒரு நல்ல நாடு, குடிமக்களுக்கு அந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தையும் பிடிப்பையும் பெருமிதத்தையும் அளிக்கும். இப்படியா, எங்கேயாவது கடல் கடந்து ஓடிவிட மாட்டோமா என்ற அச்சத்தையும் பதற்றத்தையும் தருவது? ஆணாதிக்கத்தையும் சாதியவாதத்தையும் உள்ளடக்கிய மதவாதம் தலைவிரித்தாடும் தேசம் மனிதர்கள் வாழவே தகுதியற்றது. சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் இந்தியா எங்கோ கட்டக்கடைசியில் இருப்பதன் காரணம் அதுதான். உயிருக்கும் உரிமைக்கும் போராடிக் கொண்டிருந்தால், நாம் எப்போதுதான் வாழத் தொடங்குவது?

மதவாதம் மட்டும் அல்ல, எல்லா வகையான வாதங்களுக்குமான ஒற்றை மருந்து, சகோதரத்துவம். இதை வளர்த்தெடுப்பதால் மட்டுமே இந்த நாட்டை ஜனநாயகப்படுத்த முடியும். நாம் கற்கவேண்டியதும், பின்பற்ற வேண்டியதும், தலைமுறைகளுக்குக் கடத்தவேண்டியதும் அதைத்தான். இது நம் எல்லோருக்குமான இந்தியா. அப்படியானதாக அதைக் கட்டியெழுப்பவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

பத்திரிக்கையாளர் ஜெயராணி அவர்கள் எழுதி எதிர் வெளியீடாக வந்திருக்கும் உங்கள் மனிதம் ஜாதியற்றதா? எனும் நூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு கட்டுரை.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

One thought on “இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s