
கொரோனாவை முன்வைத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது வேறு வழி தெரியாமல் மக்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே இந்த ஊரங்கு நேரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கைதட்டு, விளக்கணை, தீவட்டி ஏற்று, பூத்தூவு என்று மக்களை கேலி செய்வதை விடுத்து அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏற்கனவே கொரோனா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வதை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது அரசு.
முன் திட்டமிடாமல் உள் ஊரங்குகளை அறிவிப்பது, அன்றாடத் தேவைக்கான கடைகளை திறக்கும் நேரத்தை மாற்றியமைப்பது, வெளியூர் செல்ல ஏற்பாடு செய்வது அல்லது ஏற்பாடு செய்ய மறுப்பது, சாராயக் கடைகளை திறப்பது என்பன போன்ற காரணங்களால் மக்கள் ஒரே இடத்தில் கூடி நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பை உருவாக்குவதை மட்டும் இங்கு எண்ணெய் ஊற்றுவது என்று குறிப்பிடவில்லை. அதனிலும் மிகக் கொடுமையான திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது என்பதே இங்கு சுட்டப்படுகிறது. மின்வாரிய சட்டத் திருத்தத்திற்கான அரசாணை பிறப்பித்திருப்பது, கனிம வளங்களை கொள்ளையிட சுரங்கம் தோண்டுவதற்கு தனியாருக்கு ஒப்புதல் அளித்திருப்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு துறையின் கீழ் கொண்டு வந்திருப்பது, பங்கு நிதிய நிறுவனங்களுக்கு (Mutual Fund) நிதி ஒதுக்கீடு அளித்திருப்பது, பண முதலைகளின் கடனை தள்ளுபடி செய்திருப்பது என சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுப்பதாக காட்டிக் கொள்ளும் மோடி அரசாங்கம், ஏழை எளிய உளைக்கும் மக்கள் பட்டினியின் கொடுஞ் சிறைக்குள் அடைப்பட்டு, மரணத்தின் பிடியில் இருப்பதை கண்டும் காணமல் முகம்திருப்பிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், மக்களை மேலும் வதைக்கும் முதலாளித்துவ பொருளாதார திட்டங்களுக்காக தனியாருக்கு மட்டற்ற ஒப்புதல் அளிப்பது என இரண்டு பக்கத்திலும் மக்களின் மீது ஈவு இரக்கமற்ற தன்மையை அப்பட்டமாக காட்டிக் கொண்டிருக்கிறது மோடி கும்பல். வகை மாதிரிக்கு மின்வாரிய சட்டத் திருத்தத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போதைய கொரோனா ஊரடங்கு சூழலில் மின்சாரம் என்றது முதலில் நினைவுக்கு வருவது ஊரடங்கு முடிந்ததும் மக்களின் கழுத்தில் சுருக்குக் கயிறாக இறுக்கப் போகும் மின் கட்டணம் தான். மத்திய மாநில அரசுகள் இதைக் குறித்து விளக்கமளிக்க கட்டாயமாக மறுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் அளவுகள் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. மின் பயன்பாட்டு அளவு அதிகரிக்க அதிகரிக்க மின் அலகுக்கான (யூனிட்) கட்டணமும் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக 200 அலகு வரை பயன்படுத்தும் ஒரு குடும்பத்துக்கு கணக்கிடப்படும் அலகு(யூனிட்) கட்டணத்தை விட 500 அலகு பயன்படுத்தும் குடுபத்துக்கு கணக்கிடப்படும் அலகு கட்டணம் இரண்டு மடங்கு இருக்கும். ஊரடங்கை முன்னிட்டு மின் அளவு கணக்கிடப்படாததால் நான்கு மாதத்துக்கும் சேர்த்து மொத்தமாக கணக்கிடும் போது, வழக்கமாக 200 அலகு மின்சாரம் பயன்படுத்தும் குடும்பம் தவிர்க்கவே முடியாமல் 500 அலகு பயன்படுத்தும் குடும்பமாக மாறி இருக்கும். இதனால் ஏழை எளிய மக்கள் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த கணக்கீட்டு முறை குழப்பம் குறித்து எதுவும் கூறாமல் நாட்களை மட்டும் தள்ளிப் போட்டு அதையே மக்களுக்கான சலுகையாக காட்டிக் கொண்டிருக்கின்றன அரசுகள்.
இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மின்வாரிய சட்டத் திருத்தம் மக்களுக்கு இதை விட கொடுமையானதாக இருக்கப் போகிறது. இந்த திருத்தத்தின்படி மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் ஒன்று உருவாக்கப்படும். இந்த ஆணையம் மட்டும் தான் இனிமேல் மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட முடியும். அதாவது இனிமேல் மாநிலங்களுக்கு மின் வழங்கும் நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு முறிக்கப்பட்டு மைய அரசு மட்டுமே ஒப்பந்தம் போட்டு மின்சாரம் வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும். தெளிவாகச் சொன்னால் இனி மாநில மின் வாரியங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எப்படி கல்வியை பொது அட்டவணையிலிருந்து மைய அட்டவணைக்கு எடுத்துக் கொண்டார்களோ அது போல மின்சாரம் மாநில அட்டவணையிலிருந்து மைய அட்டவணைக்குச் செல்கிறது. இனிமேல் மாநிலங்களுக்கு மின்சாரம் தொடர்பான எந்த உரிமையும் இல்லை.
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான பாதுகாப்புக் கட்டண முறை நடைமுறைபடுத்தப்படும். அதாவது ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடுகிறோம் என்றால், வாங்கும் அளவைப் பொறுத்து உற்பத்தி நிறுவனம் முடிவு செய்யும் குறிப்பிட்ட பாதுகாப்புக் கட்டணத்தை அரசு அல்லது நுகர்பவர் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத போது அல்லது செலுத்த முடியாத போது மின்சாரம் வழங்குவது உற்பத்தி நிறுவனத்தின் கடமை அல்ல. அதாவது, மின்சார பயன்பாடு என்பது அடிப்படைத் தேவை என்பதிலிருந்து நீக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் நீங்கள் பாதுகப்புக் கட்டன வரம்பை கடந்து விட்டீர்கள் என்றோ, அல்லது வேறு காரணங்களைக் கூறியோ உங்கள் மின் இணைப்பை துண்டிக்க முடியும். அவ்வாறு துண்டிக்கப்பட்டு விட்டால் மின்சாரம் அடிப்படைத் தேவை, அதை வழங்க வேண்டும் என்றெல்லாம் நீங்கள் கோர முடியாது. பணம் மட்டுமே அளவுகோல். இப்போது அரசு வழங்கிக் கொண்டிருக்கும் சலுகைகளை கோரும் உரிமை மக்களுக்கு இல்லை.
மரபு சாரா ஆற்றல் வளங்களை ஊக்குவித்தல் என்றொரு திருத்தம். இத்திருத்தம் கூறுவது என்னவென்றால் எல்லா வகையான மின்சாரத்தையும் மாநிலங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். நீர் மின்சாரம், நிலக்கரி மின்சாரம், காற்று மின்சாரம், அணு மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் என்று பல ஆற்றல் வளங்கள் இருக்கின்றன. ஒரு மாநிலத்துக்கு தேவையான மின் அளவுக்கு நீர் மின்சாரம் எவ்வளவு, காற்று மின்சாரம் எவ்வளவு, சூரிய ஒளி மின்சாரம் எவ்வலவு என்பதை மைய அரசு அதாவது மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் முடிவு செய்யும். இந்த அளவீட்டின் படி வாங்கவில்லை என்றால் அதற்கான தண்டத் தொகையை கட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக மைய அரசு ஒதுக்கி இருக்கும் நீர் மின்சார அளவை விட பாதி அளவே போதும் என்றால் மீதி அளவுக்கும் சேர்த்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இனி மின்சார கட்டணத்தை மைய அரசே தீர்மானிக்கும், மாநில அரசு கொடுக்கும் மானியங்களோ சலுகைகளோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. நுகர்வோர் வரை மின்சாரத்தை கொண்டு சேர்க்கும் அத்தனை செலவும் மின் கட்டனத்தில் அடக்கப்படும். இதில் பிரச்சனை என்னவென்றால் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள மின் கட்டமைப்பை விட உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் மின் கட்டமைப்பு மிகவும் குறைபாடுகள் உடையது. அதாவது, ஒப்பீட்டளவில் நுகர்வோருக்கு மிசாரத்தை கடத்தும் செலவு தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் குறைவாகவும், பீகார், உ.பி, போன்ற மாநிலங்களில் அதிகமாகவும் இருக்கும். இவ்வாறான வேறுபாடுகளுக்கிடையில் ஒரே கட்டணத்தை எப்படி முடிவு செய்ய முடியும்? அல்லது ஓவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு அளவு என்றால் அதை ஏன் மைய அரசு செய்ய வேண்டும் மாநிலங்களே ஏன் முடிவு செய்யக் கூடாது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் எந்த விளக்கமும் இல்லை. மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் கட்டணத்தை முடிவு செய்யும் அவ்வளவு தான்.

தேவை ஏற்பட்டால் மைய அரசோ, மாநில அரசோ அளிக்கும் மானியங்கள் நேரடி வங்கிக் கணக்கு மாற்றம் (DBT) மூலமே வழங்கப்படும். அதாவது தற்போது எரிவாயு மானியம் அளிக்கப்படுகிறதே அந்த முறையில். ஆணையம் என்ன விலையை முடிவு செய்கிறதோ அதன்படி மின் கட்டணத்தை கட்டி விட வேண்டும், பின்னர் உங்கள் வங்கிக் கணக்குக்கு மானியம் வந்து சேரும். இந்த நேரடி வங்கிக் கணக்கில் மாற்றம் செய்யும் முறை எவ்வளவு குறைபாடுகளுடன், ஐயம் தீர்க்கும் முறைகளற்று, தன்னிச்சையாக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இதுவே மின்சாரக் கட்டணத்திலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மாநில அரசுகள், மின் பகிர்வு சிறப்பாக செயல்படுத்தப்படும் பொருட்டு விளம்பும் (வினியோக) உரிமையை உள் ஒதுக்கீடாக தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கலாம். அதாவது இப்போது அலைக்கற்றை சேவையை வழங்கும் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே அதே போல சென்னைக்கு ஒருவர் மதுரைக்கு ஒருவர் என மின் பகிர்வைக் கட்டுப்படுத்தலாம். (ஏர்டெல், ஜியோ, ஓடோபோன் போல) இதனால் என்னென்ன குழப்படிகள் நேரும் என்பதை தனியே சொல்லத் தேவையில்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாடு முழுவதும் மின்சாரத் துறையில் வேலை செய்யும் பணியாளர்களை மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தின் தேர்வுக் குழுவே தேர்ந்தெடுக்கும். இதில் மாநிலங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதற்கு மேலும் இதில் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?
இந்த மின் வாரிய சட்டத் திருத்தத்துக்கு மைய அரசு நாட்டின் அனைத்து குடிமகனுக்கும் மின்சாரத்தை எளிமையாக கொண்டு சேர்ப்பதற்காக என்று காரணம் கூறியிருக்கிறது. கொரோனாவால் இவ்வளவு பாதிப்புகளுக்கும் காரணம் ஒன்று அரசுகளின் செயல்பாடின்மை. இரண்டு, மருத்துவமைகள் தனியாரிடம் இருந்தது. என்று அரசியல் புரிதல் குறைவாக இருக்கும் எளிய மக்களுக்கு கூட தெரிந்திருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்த மின்சாரத் துறையையும் தனியாரிடம் தாரைவார்ப்பதற்கான தொடக்கத்தை இந்த திருத்தத்தின் மூலம் பச்சைக் கொடி ஆட்டி தொடங்கி வைத்திருக்கிறது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இந்த மின் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக காடுகளிலும், மலைகளிலும், சேற்றிலும், பாறைகளிலும் எத்தனை தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருப்பார்கள். அத்தனையையும் மிக எளிதாக தனியாரிடம் தாம்பளத்தில் வைத்து கொடுக்கப் போகிறது அரசு. மொத்தத்தில் மைய அரசு மக்கள் மீதும், மாநில உரிமைகள் மீதும் சிறுநீர் கழிக்கப் போகிறது.
Reblogged this on sds.