மக்களியம்

உலகம் முழுவதிலும் உள்ள மக்களை கொரோனா எனும் நுண்ணுயிரி கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. முன் காலங்களிலும் பலமுறை இது போல கொள்ளை நோய் உருவாகி மக்களை வதைத்திருக்கிறது. ஆனாலும், கொரோனா போல முன் எப்போதும் அரசே மக்களை முடக்கும் நடவடிக்கைகள் எடுத்ததில்லை. கொரோனா அச்சம் அந்த அளவுக்கு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது அல்லது, ஆட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தொற்று நோயினால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது இந்த நோயினால் ஏற்பட்ட நேரடியான பாதிப்பு. மறுபக்கம், இந்த நோய்க்கு எதிரான நடவடிக்கைகளாக உலக நாடுகள் எடுத்திருக்கும் ஊரடங்கு எனும் பொது மக்களை முடக்கும் நடவடிக்கைகள் அடித்தட்டு மக்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கின்றன. குறிப்பாக வளரும் நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா போன்ற ஆசிய நாடுகள் மிகமிகக் கடுமையாக பாதித்துள்ளன. வேலைக்குச் செல்ல வழியில்லாமல் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் அத்தனை வழிகளும் கொரோனாவை காரணம் காட்டி முடக்கப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கானோர் உண்ண உணவின்றி பட்டினி எனும் கொடுஞ் சிறைக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதற்கு அரசுகள் செய்யும் இழப்பீடுகள் ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ எனும் பழமொழியின் எல்லைக்கு கூட வரவில்லை.

தினமும் கொரோனாவால் இத்தனை பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், இத்தனை பேர் மரணமடைந்துள்ளனர் என்று புள்ளி விவரக் கணக்குகள் அறிவிக்கப்படுவது போல், இந்த பட்டினிக் கணக்குகளும் அறிவிக்கப்பட்டால் அது கொரோனா மரணங்களுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ கூட இருக்கக் கூடும்.

ஆக இந்த நோய், – நோய்த் தொற்று, அதனால் ஏற்படும் மரணங்கள் என்று ஒரு வகையிலும், அதை தடுக்கும் வழியிலான முடக்கம், பட்டினி அதனால் ஏற்படும் மரணங்கள், தற்கொலைகள் என இன்னொரு வகையிலும் – இரட்டை வகைகளில் மக்களை வதைக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கேனும் இவை இதே கோட்டில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வளவு பெரிய பாதிப்பிலிருந்து மக்கள் பெற்றுள்ள படிப்பினை என்ன?

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது, நோயின் தாக்கம், அதனால் ஏற்படும் மரணங்கள் என்ற வகையில். இந்தியா போன்ற நாடுகள் இந்த நோயின் மறு பக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது, வாழ்வாதாரம் முடக்கப்பட்டிருப்பதால் உணவுக்கு வழியில்லாமல் பட்டினி, மரணங்கள், தற்கொலைகள் என்ற வகையில். வளர்ந்த நாடுகளில் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளாதாக கூறப்படும் நிலையில் அங்கு ஏன் இந்த அளவு மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன? வளரும் நாடுகளில் எண்ணிக்கையில் அதிகமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஏன் இந்த அளவுக்கு பட்டினியும் மரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன?

இவைகளை விளக்க வேண்டும் என்றால் தனித்தனி தலைப்புகளாக விரிந்து செல்லும். ஆயின், முடிவுகள் என்ன? அவை தான் கொரோனாவின் படிப்பினைகள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொள்வோம் அங்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. ஆனாலும், அவை அனைத்தும் தனியார் மருத்துவமனைகளாக இருக்கின்றன. மருத்துவத் துறை முழுவதுமே அங்கு தனியார்மயமாக இருக்கிறது. அவர்களுக்கு லாபம் தவிர வேறு பார்வைகளே கிடையாது. அங்கு மரணித்தவர்களில் பெரும்பாலானோர் பணம் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் மரணித்தவர்களே. ஆக, கொரோனாவுக்கு சிகிச்சையளித்து மக்களை காப்பதற்கு தனியார்மயம் தடையாக இருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளை எடுத்துக் கொள்வோம். மக்களில் பெரும் எண்ணிக்கையில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களிடம் சேமிப்பு என்று எதுவுமே இல்லை. கடன்கள் மட்டும் தான் இருக்கின்றன. இடுபொருள் வியாபாரிகளும், இடைத் தரகர்களுமே கொழுக்கிறார்கள். கடும் உழைப்பை செலவு செய்யும் விவசாயிகளுக்கு கால் வயிற்றுக் கஞ்சியே வரவாக இருக்கிறது. நாட்டின் களஞ்சியங்களில் எழுபது லட்சம் டன் தானியங்கள் இருப்பு இருக்கின்றன. ஆனால் அவைகளை முறைப்படுத்தி முடக்கப்பட்டுள்ளோருக்கு வழங்க அரசின் கொள்கைகள் தடையாக இருக்கிறது.

அதேநேரம் சீனா, வட கொரியா, வியட்நாம், கியூபா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மருத்துவ முறைமைகள் வழியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சையளிப்பதிலும், மக்களுக்கு இழப்பீடுகள், உணவு தானியங்கள் வழங்கி பட்டினியில் இருந்து காப்பதிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், முதலாளித்துவ நாடுகள் இதில் தோல்வியடைந்திருப்பதையும், சோசலிசத்தை திசையாக கொண்டிருக்கும் நாடுகள் (இதில் பிழைகளும், முரண்களும், தவறுகளும் இருந்தாலும்) வெற்றியடைந்திருப்பதையும் காணலாம்.

கொரோனாவுக்கு முன்பு உலகின் நிலை என்ன? பொருளாதார நெருக்கடி. 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக தீரவில்லை என்று முதலாளித்துவ அறிஞர்களே ஒப்புக் கொள்கிறார்கள். கொரோனாவுக்கு முன்பே பல நிறுவனங்கள் லே ஆப் (ஊதியமில்லாத விடுப்பு) அறிவித்திருந்தன. ஆட்குறைப்பு தொடங்கி ஊதியக் குறைப்பு வரை பல்வேறு உத்திகளுடன் முதலாளித்துவ நிறுவனங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தன. ஏற்கனவே பல நெருக்கடிகள் இது போல் முதலாளித்துவ உலகை ஆட்டிப் படைத்திருக்கிறது. ஒவ்வொறு முறையும் அவர்கள் மக்களை சுரண்டுவதன் மூலமும், அரசின் பொதுநிதியை சூறையாடுவதன் மூலமுமே நீடித்திருக்கிறார்கள். ஆனாலும் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதும், புதிய நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதும் அவர்களால் இயலாமலேயே இருக்கிறது. இதனால் ஒவ்வொறு முறையும் கோடிகோடியாய் மக்கள் வறுமையின் கோரப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மறுபக்கம், பூமியின் கனிம வளங்களும், இயற்கை ஆற்றலும் வகைதொகையில்லாமல் ஒட்டக் கறக்கப்படுவதால் பூமி மக்கள் வாழும் தகுதியை இழந்து கொண்டிருக்கிறது.

இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் சோசலிச திசை வழியே தீர்வைக் கொண்டிருக்கிறது. இதையும் முதலாளித்துவ பொருளியல் அறிஞர்கள் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அல்லது குறைந்தளவு, முதலாளித்துவத்தில் தீர்வு இல்லை என்றேனும் ஒப்புக் கொள்கிறார்கள்.

சுட்டிக் காட்டப்பட்டுள்ள இரண்டு பிரச்சனைகள் மட்டுமல்ல, மக்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனையை எடுத்தாலும் அதில் முதலாளித்துவம் தீர்வு இல்லாமல் நிற்பதும் அதாவது பெரும்பான்மை மக்கள் கைவிடப்படுவதை தவிர முதலாளித்துவம் வீழ்ந்து விடாதிருப்பதற்கு வேறு வழியில்லை என்ற நிலையில் இருப்பதும்; அதேநேரம் சோசலிசம் எல்லா வகையிலும் மக்களை காக்கும் உறுதியுடன் இருப்பதையும் கண்ணுள்ளவர்கள் காணாமல் இருக்க முடியாது.

இப்படி எல்லா விதயங்களிலும் சரியான, பொருத்தமான தீர்வைக் கொண்டிருப்பதும், எல்லாச் சூழலிலும் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களின் பக்கமே நிற்பதுமான சோசலிசத்தை, கம்யூனிசத்தை பெரும்பான்மை மக்கள் கைக் கொண்டிருக்கிறார்களா? தங்களுடையதாக வரித்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையே ஏன்?

ரஷ்யா, சீனாவில் கம்யூனிச இயக்கம் தொடங்கி மிக விரைவிலேயே புரட்சியை சாதித்து சோசலிச அரசை ஏற்படுத்தி இருக்கும் போது இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ஏன் அது முடியாமல் போனது? இந்தக் கேள்விக்கு இணையாகவே, ரஷ்யாவிலும் சீனாவிலும் ஏன் மிக விரைவிலேயே சோசலிசம் வீழ்ந்து போனது? எனும் கேள்வியும் இன்றியமையாததாக இருக்கிறது.

இந்தியாவில் எல்லா மட்டங்களிலும் விரிந்து புரையோடிப் போயிருக்கும் சாதியக் கொடுமைகளுக்கு கம்யூனிசம் தீர்வைக் கொண்டிருகிறதா? சாதியச் சிக்கல்களை தீர்த்த பின்னர் புரட்சியா? புரட்சி வெற்றி பெற்ற பின்னர் சாதியச் சிக்கல்கள் தீருமா? இந்தக் கேள்வி, கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா? எனும் கேள்வியை விட குழப்பமாகிப் போனது ஏன்?

மார்க்சியம் அது மக்களியம். மக்கள் என்பது அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லல்ல, மனிதர் அல்லது மனிதர்கள் என்பது தான் பொதுச் சொல். மக்கள் என்பது குறிப்பான சொல். எந்த மக்கள் எனும் கேள்வி அந்தச் சொல்லிலுடன் பிறந்த உறுப்பு. உழைப்போடு இணைந்து, இயற்கையோடு இயைந்து, எல்லாவற்றையும் தன்னுயிரைப் போலவே மதிக்கும் தன்மையுடையவர்களை மட்டுமே குறிக்கும் சொல். அந்த மக்களுடனே இருந்து, மக்களிடமே கற்று, மக்களிடையே நடைமுறைப்படுத்தி, எல்லாவற்றையும் மக்கள் அறிவியலாக வளர்த்தெடுத்து, எல்லாவற்றிலும் மக்களின் பங்களிப்பைப் பெற்று, மக்களை வளர்த்தெடுக்கும் ஒரு தத்துவத்தை மக்களியம் என்பது எவ்வளவு பொருள் பொதிந்தது.

மார்க்சியம், அதன் உள்ளும் வெளியும் கேள்விகளால் நிறைந்தது. விடைகளை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பது. சுழற்றியடித்து அதிலிருந்தே மீண்டும் கேள்விகளை உற்பத்தி செய்வது. விடைகளின் சாரத்தை விதைத்து விதைத்து கேள்விகளை அறுவடை செய்வது. கேள்விகளால் விக்கித்து நிற்பதும் இல்லை, விடைகளால் இறுமாந்திருப்பதும் இல்லை. மார்க்சியத்திடமிருந்து விலக விலக விடையில்லாக் கேள்விகள் வரிசை கட்டும். நெருங்கினால் அவைகளே ஊடும் பாவுமாய் ஆடைகளாகி அழகூட்டும்.

பள்ளிக் கல்வி வேலை வாய்ப்புக்கான திறவுகோல் என்கிறார்கள், அது அவ்வளவு பொருத்தமானது இல்லை என்றபோதிலும். ஆனால், மார்க்சியம் என்பது வாழ்க்கைக்கான திறவுகோல். வாருங்கள் வாழ்வோம்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s