
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 7
மனிதச் சமூகங்களைப் பற்றி முடிவுகள் எடுப்பதில் மிருகச் சமூகங்களுக்கும் சிறிதளவு மதிப்பு இருக்கிறது, ஆனால் அது எதிர்மறைப் பொருளில் இருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நாம் தெரிந்து கொண்டுள்ள வரைக்கும் முதுகெலும்புள்ள மிருக இனத்தைச் சேர்ந்த உயர்தரப் பிராணிகளிடையே பலதார மணம், இணை மணம் ஆகிய இரண்டு குடும்ப வடிவங்கள் மட்டுமே இருந்து வருகின்றன. இவ்விரண்டு வடிவங்களிலும் ஒரே வயது வந்த ஆண்தான், ஒரே கணவர் தான் அனுமதிக்கப்பட முடியும். ஆணின் பொறாமை குடும்பத்தின் பந்தத்தையும் வரம்புகளையும் குறிக்கிறது; அது மிருகக் குடும்பத்தை மந்தையுடன் சச்சரவிட்டுக் கொள்ளும் படி செய்கிறது. மந்தை என்னும் உயர்தரச் சமூக வடிவம் சில சமயங்களில் சாத்தியமில்லாததாக ஆக்கப்படுகிறது, வேறு சில சந்தர்ப்பங்களில் தளர்த்தப்படுகிறது அல்லது புணர்ச்சி வேட்கைக் காலத்தில் அறவே கலைக்கப்பட்டு விடுகிறது; அல்லது, அதிகபட்சம் பார்த்தால், ஆணின் பொறாமை மந்தை தொடர்ச்சியாக வளர்வதைத் தடுக்கிறது. மிருகக் குடும்பமும் ஆதி காலத்திய மனிதச் சமூகமும் ஒன்றுக் கொன்று பொருந்தாதவை என்று நிரூபிக்க இது ஒன்றே போதும்; மிருக நிலையிலிருந்து படிப்படியாக மேலே வந்து கொண்டிருந்த ஆதிகால மனிதனுக்குக் குடும்பம் என்பதே தெரியாது, அல்லது அதிகபட்சமாக சொன்னால், மிருகங்களிடையே இருந்திராத குடும்பம் ஒன்றைப் பற்றி மட்டுமே தெரியும் என்று நிரூபிக்க இது ஒன்றே போதும். மனிதனாக மாறிக் கொண்டுவந்த மிருகம் – எந்த ஆயுதமும் இல்லாத மிருகம் – தனிமையில், சிறிய எண்ணிக்கையில், மந்தை வாழ்க்கையின் உச்ச வடிவமாகிய தனித் தம்பதி வடிவத்தில் உயிர் தப்பி வாழ முடிந்தது. கொரில்லா, சிம்பன்சி என்னும் குரங்குகள் இப்படி வாழ்வதாக வேடர்களின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வெஸ்டர்மார்க் கூறுகிறார். மிருக நிலையிலிருந்து வெளிப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைவதற்கு, இயற்கை கண்ட மாபெரும் முன்னேற்றத்தைச் சாதிப்பதற்கு மற்றொரு அம்சமும் கூடுதலாகத் தேவைப்பட்டது; தனி மனிதனுடைய தற்காப்புத் திறன் போதாது என்பதால் அதற்கு பதிலாக மனிதக் கூட்டத்தின் ஒன்றுபட்ட பலமும் கூட்டு முயற்சியும் அவசியமாயிற்று. இந்நாளில் மனிதக் குரங்குகள் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற நிலைமைகளிலிருந்து மனிதக் கட்டத்துக்கு மாறிச் செல்வதை விளக்குவது முற்றிலும் இயலாததே இந்த மனிதக் குரங்குகள் படிப்படியாக அழிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றவையாக, எப்படியும் சீரழிந்துக் கொண்டிருக்கின்றவையாக, ஓரத்தில் ஒதுங்கிப் போனவை போல் தோன்றுகின்றன. அவற்றின் குடும்ப வடிவங்களுக்கும் ஆதிகால மனிதனுடைய குடும்ப வடிவங்களுக்கும் இடையில் ஒப்புமை காட்டி அதன் அடிப்படையில் செய்கின்ற முடிவுகள் அனைத்தையும் நிராகரிப்பதற்கு இது ஒன்றே போதிய காரணமாகும். எனினும் வயது வந்த ஆண்களிடையே பரஸ்பர சகிப்புத் தன்மையும் பொறாமை இல்லாத மனநிலையும் பெரிதான, நிரந்தரமான குழுக்களை நிறுவுவதற்கு முதல் நிபந்தனையாக இருந்தன; இக் குழுக்களிடையிலிருந்து தான் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு முன்னேறுகின்ற மாற்றத்தைச் சாதிக்க முடிந்தது. வரலாற்றின் மறுக்க முடியாத சான்றுகளைக் கொண்ட, இக்காலத்தில் கூட இங்குமங்கும் கண்டு ஆராயப்படக் கூடியாதாக உள்ள மிகவும் தொன்மையான, மிகவும் ஆதியான குடும்ப வடிவமாக நாம் எதைப் பார்க்கிறோம்? அது குழு மணமே. இந்த வடிவத்தில் முழுக் குழுக்களாக ஆண்களும் முழுக் குழுக்களாக பெண்களும் ஒருவருகொருவர் சொந்தமாயுள்ளனர். இந்த வடிவத்தில் பொறாமைக்கு அவ்வளவு அதிக இடம் கிடையாது. மேலும், பின்னால் வந்த வளர்ச்சிக் கட்டத்தில் பல கணவர் மணம் எனப்படுகின்ற, மற்றவற்றிலிருந்து வேறுபட்ட வடிவத்தையும் பார்க்கிறோம். இது எல்லாவிதமான பொறாமை உணர்ச்சிகளுக்கும் இன்னும் பாதகமானது. ஆகவே இது மிருகங்கள் மத்தியில் சிறிதும் இல்லை. எனினும் நமக்குத் தெரிந்த குழுமண வடிவங்களைத் தொடர்ந்து அதற்கேயுரிய சிக்கலான நிலைமைகள் வருவதால் அவை அதற்கு முந்திய, இன்னும் எளிமையான பாலியல் உறவுகள் சம்பந்தப்பட்ட வடிவங்களைக் கட்டாயமாகச் சுட்டிக் காட்டுகின்றன; ஆகவே கடைசியாகப் பார்க்கும் பொழுது, மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு மாறிய கட்டத்துக்கும் பொருத்தமான, வரைமுறையற்ற புணர்ச்சி நிலவிய காலகட்டத்தையும் அவை சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே, மிருகங்களிடையே உள்ள மண வடிவங்களைக் குறித்துப் பேசுவது, அவை எங்கிருந்து நம்மை நிரந்தரமாக இட்டுச் சென்றதாகக் கருதப்பட்டதோ, அதே இடத்துக்கு நம்மைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
அப்படியானால் வரைமுறையற்ற புணர்ச்சி என்பதற்கு அர்த்தமென்ன? இக் காலத்தில் அல்லது முந்திய காலங்களில் அமுலிலிருந்த கட்டுப்பாடுகள் இருக்கவில்லை என்பது தான் அதற்கு அர்த்தம். பொறாமை என்னும் தடுப்பு தர்ந்து விட்டதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். நிச்சயமானது என்று எதையாவது சொல்வதென்றால், பொறாமை என்பது ஒப்புநோக்கில் பிற்காலத்தில் தோன்றிய ஒர் உணர்ச்சி என்பதுதான். இது முறைகோடான புணர்ச்சி பற்றிய கருத்தோட்டத்திற்கும் பொருந்தும். ஆதியில் சகோதரனும் சகோதரியும் கணவன், மனைவியாக வாழ்ந்தது மட்டுமல்ல, பொற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் உறவுகள் இருப்பது பல மக்களினங்களில் இன்று கூட அனுமதிக்கப்பட்டு வருகிறது. பேரிங் ஜலசந்தியைச் சேர்ந்த கவியாட்டுகள் மத்தியிலும் அலாஸ்காவுக்கு அருகேயுள்ள கடியாக் தீவிலும் உள்ள மக்கள் மத்தியிலும் பிரிட்டிஷ் வட அமெரிக்காவின் உள் பிரதேசங்களில் வாழும் டின்னேக்கள் மத்தியிலும் இது நிலவுவதாக பான்கிராஃப்ட் சாட்சியமளிக்கிறார் (வட அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய மாநிலங்களைச் சேர்ந்த சுதேச இனக்குழுக்கள், 1875, முதல் தொகுதி). சிப்பேவா செவ்விந்தியர்களிடையிலும் சிலி நாட்டிலுள்ள கூகூக்கள் இடையிலும் கரிபியர்கள் மற்றும் இந்தோ சீனாவைச் சேர்ந்த கரேன்களிடையிலும் இதே விஷயத்தைப் பற்றி லெதூர்னோ அறிக்கைகளைத் திரட்டியிருக்கிறார். பார்தியர்கள், பாரசீகர்கள், ஸ்கிதியர்கள், ஹூணர்கள் ஆகியோரைப் பற்றி பண்டைக்கால கிரேக்கர்களும் ரோமானியர்களும் தந்துள்ள செய்திகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. முறைக்கேடான புணர்ச்சி என்ற புதுப் புனைவு (அது நிச்சயமாக ஒரு புதுப் புனைவு தான்; மதிப்பு மிகுந்த புதுப் புனைவு) ஏற்படுவதற்கு முன்னால், பெற்றோர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இடையில் நிகழும் புணர்ச்சி வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களிடையே நிகழும் புணர்ச்சியை விட – மிகவும் அற்பவாத நாடுகளில் கூட அதிகமான பீதியை உண்டாக்காமலே இது இன்றைக்கும் நிலவுகிறது – அதிக அருவருப்பாக இருக்க முடியாது. உண்மையில், அறுபதுக்கு மேல் வயதாகி மணமாகாதிருந்த பெண்கள் போதிய செல்வம் படைத்திருந்தால் சுமார் முப்பது வயதுள்ள வாலிபர்களை மணந்து கொள்வது அவ்வப்பொழுது நடைபெறுகிறது. எனினும் நமக்குத் தெரிந்துள்ள குடும்பத்தின் புராதன வடிவங்களுடன் சேர்த்துச் சொல்லப்படும் முறைக்கேடான புணர்ச்சி பற்றிய கருத்தோட்டங்களை – அவை நமது கருத்தோட்டங்களுக்கு முற்றிலும் வேறாக இருப்பது மட்டுமன்றி, பெரும்பாலும் நேர்முரணாகவும் இருக்கின்றன – நீக்கி விடுவோமானால், மிஞ்சுகின்ற பாலியல் உறவை வரைமுறையற்ற புணர்ச்சி என்று மட்டுமே வர்ணிக்க முடியும். பிற்காலத்தில் வழக்கத்தால் நிறுவப்பட்ட கட்டுப்பாடுகள் இன்னும் ஏற்படவில்லை என்னும் அளவில் அது வரைமுறையற்றது. இதைக் கொண்டு விதரணையற்ற, வரைமுறையற்ற புணர்ச்சி அன்றாட நடைமுறையாக இருந்தது என்று முடிவு செய்வது அவசியமல்ல. குறிப்பிட்ட காலத்துக்கு தனித்தனி ஜோடிகள் அமைவது விலக்கப்படவில்லை. உண்மையைச் சொல்வதென்றால், குழு மண முறையில் கூட அவை தான் பெரும்பான்மையாக உள்ளன. இந்த ஆதி நிலையை மறுப்பவர்களில் கடைசியாக வந்திருப்பவர் வெஸ்டர்மார்க். குழந்தை பிறக்கின்றவரை ஆணும் பெண்ணும் கூடி வாழ்ந்திருக்கும் நிலை ஒவ்வொன்றையும் திருமணம் என்று அவர் வரையறுத்தால், அப்பொழுது இப்படிப்பட்ட திருமணம் வரைமுறையற்ற புணர்ச்சி நிகழ்கின்ற நிலைமைகளிலும் தாராளமாக ஏற்பட முடியும்; அது வரைமுறையற்ற புணர்ச்சிக்கு, அதாவது பழக்க வழக்கங்களால் புணர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லாத நிலைக்கு முரணாகவும் இருக்காது என்று குறிப்பிட வேண்டும்.
“வரைமுறையற்ற புணர்ச்சியில் தனிநபர்களின் விருப்புவெருப்புகள் நசுக்கப்படுகின்றன”, ஆகவே “விபசாரம்தான் அதன் மிகவும் உண்மையான வடிவமாகும்” என்ற கருத்திலிருந்து வெஸ்டர்மார்க் தொடங்குகிறார் என்பது உறுதி. ஆதிகால நிலைமைகளை விபசாரம் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்கும் வரை அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. குழுமண முறையை விவாதிக்கின்ற பொழுது இந்த விஷயத்துக்கு மீண்டும் வருவோம். இந்த வரைமுறையற்ற புணர்ச்சி என்ற ஆதிநிலையிலிருந்து அநேகமாக மிகவும் முந்திய ஒரு கட்டத்திலேயே பின்சொல்லப்படுபவை வளர்ந்தன என்று மார்கன் கருதுகிறார்:
1. இரத்த உறவுக் குடும்பம். இது குடும்பத்தின் முதல் கட்டமாகும். இங்கே திருமணம் புரிகின்ற குழுக்கள் தலைமுறை வரிசையிலே வைக்கப்பட்டுள்ளன. குடும்பம் என்ற வரம்புக்குள் அடங்கிய எல்லா தாத்தாக்களும் பாட்டிகளும் பரஸ்பரம் கணவன், மனைவியர் ஆவார்கள். அவர்களின் குழந்தைகளும் – தந்தையர்களும் தாயார்களும் – அதே போல் பரஸ்பரம் கணவன் மனைவியர் ஆவார்கள். இவர்களுடைய குழந்தைகள் ஒருவருக்கொருவர் கணவன், மனைவியராகவுள்ள மூன்றாம் வட்டமாக அமைவார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் – அதாவது முதலில் சொல்லப்பட்டவர்களின் கொள்ளுப் பேரர்கள், கொள்ளுப்பேத்திகள் – தம் முறைக்கு நான்காம் வட்டமாக அமைவார்கள். ஆக, இந்தக் குடும்ப வடிவத்தில், முன்னோர்களும் வழிவந்தோரும், பெற்றோரும் குழந்தைகளும் மட்டுமே (இன்றைய முறையில் எடுத்துக் கூறுவதென்றால்) ஒருவருக்கொருவர் திருமண உரிமைகள், கடமைகள்லிருந்து விலக்கப்பட்டுள்ளனர். சகோதரர்களும் சகோதரிகளும், ஒன்றுவிட்ட, இரண்டு விட்ட, மூன்று விட்ட, மற்ற சகோதரர்கள், சகோதரிகள் எல்லாரும் பரஸ்பரம் சகோதரர், சகோதரிகள் ஆவார்கள். அந்த ஒரே காரணத்தினால் தான் அவர்கள் பரஸ்பரம் கணவன், மனைவியரும் ஆவார்கள். இந்தக் கட்டத்தில் சகோதரன், சகோதரி என்ற உறவில் உடலுறவு கொள்வதும் சகஜமாக அடங்கியிருந்தது.
[மார்க்ஸ் 1882 இன் வசத காலத்தில் தாம் எழுதிய ஒரு கடிதத்தில் (மார்க்ஸ் எழுதிய இந்தக் கடிதம் தற்பொழுது கிடைக்கவிலை) வாக்னரின் நிபலுங் இசை நாடகத்தில் ஆதிகாலத்தைப் பற்றிய முழுப் புரட்டுகளை மிகவும் வன்மையாக எதிர்த்தார். “தன் சகோதரியைத் தன் மனைவி என்று கூறிக் கொண்டு ஒரு சகோதரன் தழுவிக் கொள்வதைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா?” (ரீகர்ட் வாக்னர் எழுதிய “நிபலுங் வளையம்” என்னும் இசை நாடத்திலிருந்து இந்த மேற்கோள் தரப்படுகிறது. “எட்டா” என்னும் ஸ்காண்டிநேவிய மகாகாவியத்திலிருந்தும் “நிபலுங்குகளைப் பற்றிய பாடல்” என்னும் ஜெர்மானிய மகாகாவியத்திலிருந்தும் இந்தக் கதை வந்தது) வாக்னர் படைத்த “காமப் பித்தேறிய கடவுளர்கள்” இவர்கள். வாக்னர் இந்தக் கடவுளர்களின் காதல் லீலைகளுடன் நவீன கால பாணியில் முறைக்கேடான புணர்ச்சி என்னும் மாசாலவையும் சேர்த்துக் கொருத்தார். அதற்கு மார்கஸ் பின்வருமாறு பதிலளித்தார்: “ஆதி காலத்தில் சகோதரி தான் மனைவியாக இருந்தாள்; அது தான் ஒழுக்கமாகவும் இருந்தது.” (1884ஆம் ஆண்டுப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.]
வாக்னரின் நண்பரும் அவருடைய ரசிகருமான ஒரு பிரஞ்சுக்காரர் (போன்னியே) இந்தக் குறிப்பை ஏற்கவில்லை. வாக்னர் தனக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட, காலத்தால் முற்பட்ட எட்டாவில், ஓகிஸ்ட்ரெக்காவிலேயே [எட்டா மற்றும் ஓகிஸ்ட்ரெக்கா – ஸ்காண்டிநேவிய மக்களின் தொல்கதைகளும் வீர யுகப் பாடல்களும் அடங்கிய தொகுப்பு.} பிரேயாவை லோகி பின்வருமாறு கடிந்து கொள்வதை அவர் சுட்டிக்காட்டுகிறார்: “நீ கடவுளர்களுக்கு முன்பாக உன் சொந்தச் சகோதரனயே தழுவினாய்”. அந்தக் காலத்துக்கு முன்பே சகோதரன், சகோதரிக்கு இடையில் திருமணம் தடை செய்யப்பட்டிருந்ததென்று அவர் வாதிடுகிறார். பண்டைக் காலப் புராணங்களில் நம்பிக்கை முற்றிலும் அழிந்திருந்த ஒரு காலத்தின் வெளியீடு தான் ஓகிஸ்ட்ரெக்கா ஆகும். அது கடவுளர்களை லூஸியனின் வகையில் நையாண்டி செய்கின்றது. மெஃபிஸ்டோபிலசைப் போன்ற லோகி, பிரேயாவை இவ்வாறு கடிந்து கொள்கிறான் என்றால் அது வாக்னருக்கும் பாதகமானதே. சில பாடல்களுக்கு அப்பால் லோகி நியோர்டிடம் கூறுகிறார்: “உனது சகோதரி மூலம் நீ (இந்த) மகனைப் பெற்றாய்” இங்கே நியோர்ட் ஒரு அசா அல்ல, அவர் ஒரு வானா; வானா நாட்டில் சகோதரர், சகோதரிகளுக்கு இடையில் திருமணம் நடைபெறும் வழக்கம் நிலவுகிறது, ஆனால் அது அசாக்களிடையில் வழக்கமல்ல என்று அவர் இங்லிங்கா புராணத்தில் சொல்கிறார் {அசாக்களும் வானாக்களும் – ஸ்காண்டிநேவிய கதைகளில் இடம் பெற்றுள்ள கடவுள்களின் இரண்டு பிரிவுகள். மத்திய காலத்தைச் சேர்ந்த ஐஸ்லாந்துக் கவிஞரும் புராணக் கதாசிடியருமான ஸ்னோர்ரி ஸ்டுர்லுசன் பண்டைக்காலத்திலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆட்சி செய்த நார்வே அரசர்களைப்பற்றி எழுதிய புராணங்களில் முதல் கதையாக இங்லிங்கா புராணம் இடம் பெற்றிருக்கிறது}. அசாக்களை விட வானாக்கள் காலத்தால் முற்பட்ட தெய்வங்கள் இது தோன்றலாம். எப்படியிருந்தாலும் அசாக்களிடையே அவர்களுக்குச் சமமாகவே நியோர்ட் வாழ்ந்தார். என்வே குறைந்தபட்சம் தெய்வங்கள் மத்தியிலாவது சகோதரர், சகோதரிகளிடையில் திருமணம் நிகழ்வது நார்வே நாட்டு தெய்வீகப் புராணங்கள் தோன்றிய காலத்தில் வெறுப்புண்டாக்கவில்லை என்பதற்கு ஓகிஸ்ட்ரெக்கா ஒரு சான்றாகும். வக்னரை மன்னிக்க விரும்புபவர்கள் எட்டாவைக் குறிப்பிட்டு காட்டுவதை விட கேதேயை மேற்கோள் காட்டுவது மேலாகும். ஏனென்றால் கேதே கடவுளும் தேவதாசியும் பற்றிய தமது பாடலில் பெண்களுடைய மதரீதியான ஆத்ம சமர்ப்பணத்தை பற்றி அதே மாதிரியான தவறு செய்கிறார்; அவர் அதை நவீன விபச்சாரத்துடன் மிகவும் ஒத்திருப்பதாகக் கருதுகிறார். (1891ஆம் ஆண்டு நான்காம் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)]
இப்படிப்பட்ட குடும்பத்தை அதன் பிரதிநிதித்துவ வடிவத்தில் எடுத்துக் கொண்டு பார்த்தால், அதில் ஒரு ஜோடியின் சந்ததியினர் அடங்கியிருப்பார்கள். அந்தச் சந்ததியினரிடையிலும் ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த சந்ததியினரும் சகோதரர், சகோதரிகளாகவே இருக்கிறார்கள்.
இரத்த உறவுக் குடும்பம் என்பது அழிந்து விட்டது. வரலாற்றுக்குத் தெரிந்த மிகவும் வளர்ச்சியற்ற மக்களினங்கள் கூட இந்தக் குடும்ப வடிவத்துக்கு நிரூபிக்கக் கூடிய உதாரணங்களைத் தரவில்லை. எனினும் அது இருந்திருக்கத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வரும்படி ஹவாய்த் தீவுகள் வகைப்பட்ட இரத்த உறவுமுறை நம்மை நிர்பந்திக்கிறது. இம்முறை போலினீஸியா முழுவதிலும் இன்றைக்கும் நிலவியிருக்கிறது. அது வெளியிடுகின்ற இரத்த உறவுகள் இப்படிப்பட்ட குடும்ப வடிவம் ஒன்றிலிருந்துதான் தோன்ற முடியும். மேலும், குடும்பத்தின் பிந்திய வளர்ச்சி முழுவதும் நம்மை இதே முடிவுக்கு வந்து சேரும்படி நிர்பந்திக்கிறது; இந்தக் குடும்ப வடிவத்தை அவசியமான ஆரம்பக் கட்டமாக உத்தேசித்துக் கொள்ளச் செய்கிறது.
2. பூனலுவா குடும்பம். பெற்றோர்களும் குழந்தைகளும் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது குடும்ப அமைப்பில் முதல் முன்னேற்றமாக இருந்தால், சகோதரர், சகோதரிகள் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது இரண்டாவது முன்னேற்றமாக இருந்தது. உடலுறவில் ஈடுபடுபவர்கள் வயதில் முன்னைவிட அதிகமாக ஒத்திருப்பதைப் பார்க்கும் பொழுது இந்த முன்னேற்றம் முதல் முன்னேற்றத்தைக் காட்டிலும் மிக முக்கியமானதாகவும் கடினமாகவும் இருந்திருக்க வேண்டும். அது படிப்படியாக நடைபெற்றது. கூடப் பிறந்த – அதாவது ஒரு தாய் வயிற்றில் பிறந்த – சகோதரர், சகோதரிகள் உடலுறவு கொள்வது விலக்கப்பட்டதிலிருந்து இது அநேகமாகத் தொடங்கியிருக்க வேண்டும். முதலில் தனித்தனிச் சந்தர்ப்பங்களில் விலக்கப்பட்டு பிறகு படிப்படியாக பொது விதியாக ஆகியிருக்க வேண்டும் (ஹவாய்த் தீவுகளில் இந்த நூற்றாண்டில் இந்த விதிக்கு இன்னும் விலக்குகள் இருந்தன), கடைசியில் தூர சகோதரர், சகோதரிகளிடையே, அதாவது நாம் வழக்கமாகச் சொல்கின்ற ஒன்று விட்ட, இரண்டு விட்ட, மூன்று விட்ட சகோதரர், சகோதரிகளிடையிலும் கூடத் திருமணம் தடை செய்யப்படுவதில் வந்து முடிந்திருக்க வேண்டும். மார்கனுடைய கருத்தின்படி, அது “இயற்கைத் தேர்வு என்ற கோட்பாடு செயல்படுவதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்”. இந்த முன்னேற்றத்தின் மூலமாக, ஒரு இரத்தத்தைக் கொண்ட வம்ச விருத்தி செய்வது தடை செய்யப்பபட்ட இனக்குழுக்கள், சகோதரர், சகோதரிகளிடையே திருமணம் நடப்பது விதியாகவும் கடைமையாகவும் இருந்து வந்த இனக்குழுக்களை விட அதிக வேகமாகவும் முழுமையாகவும் நிச்சயமாக வளர்ச்சியடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முன்னேற்றத்தின் விளைவு எவ்வளவு பலமாக இருந்தது என்பதை அதிலிருந்து நேரடியாகத் தோன்றி உத்தேசித்ததற்கு மேலாகவே வளர்ச்சியடைந்த குலம் என்ற அமைப்பு நிரூபிக்கிறது. உலகத்தின் எல்லா அநாகரிக மக்களினங்களின் என்றில்லாவிட்டாலும் அவற்றில் மிகப் பெரும்பான்மையானவற்றின் சமூக அமைப்புக்கு குலம்தான் அடிப்படையாக இருந்தது; கிரீசிலும் ரோமாபுரியிலும் அதிலிருந்து நேரடியாக நாம் நாகரிகத்துக்குச் செல்கிறோம்.
ஆதிகாலக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் சில தலைமுறைகளில் பிளவுபட வேண்டியிருந்தது. புராதனப் பொதுவுடைமை வகைப்பட்ட பொதுக் குடும்ப நிர்வாகம் அநாகரிக நிலையின் இடைக்கட்டத்தின் கடைசிப் பகுதி வரை விலக்குகெதுவுமின்றி நிலவியது; அது குடும்பச் சமூகத்துக்கு ஒரு குறிப்பிட்ட உச்ச அளவை நிர்ணயித்தது. அந்த அளவு சூழ்நிலைமைகளுக்குத் தக்கவாறு மாறுபட்டாலும் ஒவ்வொரு ஸ்தல வட்டாரத்திலும் அநேகமாகத் திட்டமாகவே இருந்தது. ஒரு தாய் வயிற்றுக் குழந்தகைள் உடலுறவு கொள்வது முறையல்ல என்ற கருத்து தோன்றியவுடன் இத்தகைய பழைய குடும்பச் சமூகங்கள் பிரிந்து புதிய குடும்பச் சமூகங்கள் தோன்றுவதை அது தூண்டவே செய்தது (இந்தக் குடும்பச் சமூகங்கள் குடும்பக் குழுக்களுடன் பொருந்தியிருக்க வேண்டும் என்பது அவசியமல்ல). சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் குடும்பச் சமூகத்தின் மூலக்கருவாக அமைந்தன. அவர்கள் கூடப் பிறந்த சகோதரர்கள் இன்னொரு குடும்பச் சமூகத்துக்கு மூலக் கருவாக அமைந்தனர். மார்கன் பூனலுவா குடும்பம் என்று அழைக்கின்ற குடும்பத்தின் வடிவம் இந்த முறையில் அல்லது இதே மாதிரியான முறையில் இரத்த உறவுக் குடும்பத்திலிருந்து வளர்ந்தது. ஹவாய்த் தீவுகளில் சில சகோதரிகள் – அவர்கள் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாகவோ அல்லது இரத்த சம்பந்தமுள்ள பல தாய் வயிற்றுக் குழந்தைகளாகவோ (அதாவது ஒன்று விட்ட, இரண்டு விட்ட அல்லது இன்னும் தூரச் சகோதரிகளாக) இருக்கலாம் – தமது பொதுவான கணவன்மார்களுடைய பொதுவான மனைவிகளாக இருந்தனர். ஆனால் அவர்களுடைய சகோதரர்கள் இந்த உடலுறவிலுருந்து விலக்கப்பட்டனர். இந்தக் கணவன்மார்கள் ஒருவரையொருவர் சகோதரன் என்று அழைத்துக் கொள்ளாமல் – அவர்கள் இனியும் சகோதரர்களாக இருக்க வேண்டியதில்லை – “பூனலுவா” என்று, அதாவது கூட்டாளி, பங்காளி என்று அழைத்துக் கொண்டார்கள். அதைப் போலவே கூடப் பிறந்த சகோதரர்களையோ அல்லது இரத்த சம்பந்தமுள்ள பல தாய் வயிற்றின் பிள்ளைகளான சகோதரர்களையோ கொண்ட ஒரு குழுவினர் சில பெண்களைப் பொது மணம் செய்து கொண்டனர். அவர்கள் இவர்களுடைய சகோதரிகள் அல்ல. இந்தப் பெண்கள் ஒருவரையொருவர் “பூனலுவா” என்று அழைத்துக் கொண்டார்கள். இதுதான் குடும்ப அமைப்பின் மூலச்சிறப்பான வடிவமாகும். பிற்காலத்தில் இதிலிருந்து வரிசையாகச் சில திரிபுகள் தோன்றின. அதன் முக்கியமான குணாம்சம் பின்வருமாறு: ஒரு குறிப்பிட்ட குடும்ப வட்டத்திற்குள் இருக்கின்ற எல்லாக் கணவர்கள், மனைவியர்களுக்கும் இடையில் பொது உறவு. ஆனால் அதிலிருந்து அந்த மனைவியரின் சகோதரர்கள் – முதலில் கூடப் பிறந்த சகோதரர்களும் பிறகு இரத்த சம்பந்தமுள்ள பிற தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களும் – விலக்கப்பட்டனர்; மறு பக்கத்தில், அந்தக் கணவன்மார்களின் சகோதரிகளுக்கும் இந்த விலக்கு உண்டு.
இந்நூலின் முந்தைய பகுதிகள்