கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?

கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஊரடங்கு அறிவித்து 40 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், இப்போதுதான் சோதனைகளை அதிகரித்திருக்கிறது தமிழக அரசு. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும். இதனால்தான் சென்னையில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் உண்மை வெளியாகி வருகிறது. சமூகப் பரவல் என்ற கட்டத்தை தமிழகம் எட்டி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் பலரும் மீடியாக்களில் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல பிற மாவட்டப் பகுதிகளில் தீவிர பரிசோதனைகள் இன்னமும் தொடங்கப்படவே இல்லை. அதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பது போன்ற தோற்றத்தை அரசு கட்டமைத்து வருகிறது.

எவ்வித முன்தயாரிப்பும் இல்லாத ஊரடங்கு, சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனம், காலதாமதமான நடவடிக்கைகள், தாமதமான, தரமற்ற ரேபிட் கிட் கொள்முதல், மக்கள் நலன் மீதுள்ள அரசின் அலட்சியம் – இவைதான் தொற்றுப் பரவலுக்கு முக்கிய காரணம். இதை லாவகமாக மறைத்துக் கொண்டு, “மக்கள் வீட்டுக்குள் இருப்பதில்லை. நோய் பயமில்லாமல் ஊர் சுற்றுகிறார்கள். அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பொது இடங்களில் கூடுகிறார்கள்” என்று மக்கள் மீது பழி போடுகிறது அரசு.

அரசின் விருப்பப்படியே மக்கள் வீட்டைவிட்டு அறவே வெளியேறக் கூடாது என்றால், அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகளை வீடு தேடிக் கொண்டுபோய் சேர்ப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு என்ன செய்தது? கடைகளைத் திறந்துவிட்டு அதற்கு நேர வரையறை செய்கிறது. இரவு ஒன்பது மணிவரை வாங்கிப் பழகிய மக்களை, திடீரென ‘மதியம் ஒரு மணிக்குள் வாங்கிக் கொள்’ என்று ஒரு நெருக்கடிக்குள் தள்ளி விட்டால், மக்கள் பதட்டமடைந்து கடைகளை நோக்கி படையெடுக்காமல் என்ன செய்வார்கள்?

கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமலாவது கிடைக்கிறதா என்றால் அதுவுமில்லை. ஊரடங்கின் முதல் பத்து நாட்களிலேயே அனைத்துக் கடைகளிலும் பெரும்பாலான இருப்பு சரக்குகள் விற்றுத் தீர்ந்து விட்டது. அதன்பிறகு சோப்புக்கு ஒரு கடை, துவரம் பருப்புக்கு ஒரு கடை, உளுந்துக்கு ஒரு கடை என்று கடை கடையாக மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். இவர்களைத்தான் “தேவையில்லாமல் ஊர் சுற்றுகிறார்கள்” என்று போலீசு பிடித்து தோப்புக் கரணம் போட வைத்துக் கொண்டிருந்தது. அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, 4.5 கோடி ரூபாய் அபராதமும் வசூலித்தது.

செயற்கைத் தட்டுப்பாடும், விலை உயர்வும்:

மாநிலத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் பிற மாநிலங்களுடனான மாநில எல்லைகளும் மூடப்பட்டு விட்டது. பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டு விட்டது. எனவே மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் பரிவர்த்தனைகள் முற்றிலும் தடைபட்டுப் போனது. இதனால் சில்லறை வியாபாரிகள் தங்களின் கையிருப்பு சரக்கை மட்டுமே விற்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். இந்த நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மொத்த வியாபாரிகள், செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்கி, விலையை உயர்த்தி கொள்ளையடித்து வருகின்றனர்.

மசால் சாமான்கள், பருப்பு வகைகள், எண்ணெய் என அனைத்திலும் 30-40% விலை அதிகரித்திருக்கிறது. 25 கிலோ பை அரிசி 50-75 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. பெட்டிக் கடைகளில் அதிக விற்பனையாகும் பீடி, சிகரெட்கள், வாழைப்பழம் ஆகியவை 100% அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. (இதற்கேற்ப அதிகரிக்கும் முதலீட்டுக்கு வழியில்லாமல் பல கிராமப்புற பெட்டிக்கடைகள் மூடிக் கிடக்கிறது!) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் மக்களால், தற்போதைய திடீர் விலை உயர்வை எதிர்கொள்ள முடியுமா என்று அரசு துளியளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவில்லை.

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை ‘ட்ரோன் கேமரா’வால் விரட்டத் தெரிந்த அரசுக்கு, இந்தப் பதுக்கல் பேர்வழிகளையும், திடீர் விலை உயர்வையும் தடுக்க வழி தெரியாமல் போனது எப்படி? இதற்கென உள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகள் என்ன செய்தார்கள்? மக்களின் அத்தியாவசியப் பொருள்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் தனது கடமையைச் செய்ய முடியாத அரசுக்கு, “வீட்டை விட்டு வெளியேறாதே” என்று மக்களுக்கு உத்தரவிட என்ன தகுதி இருக்கிறது?   

காய்கறிகள், பழங்கள் விற்பனையிலும் இதே கதைதான். ‘கைகளில் விலங்கை மாட்டிவிட்டு சாப்பிடச் சொல்லும்’ போலீசைப் போல, ஊரடங்கில் விவசாயத்திற்குத் தடையில்லை என அறிவித்துவிட்டு, உற்பத்திப் பொருளை விற்பதற்கான எல்லா வழிமுறைகளுக்கும் தடை விதித்து விட்டது அரசு. இதனால் தோட்டங்களில் காய்கறிகள் அழுகிக் கொண்டிருக்கும்போது, மக்கள் காய்கறிகளை அதிக விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தனர். முதல்வரின் மே-1 அறிவிப்புக்குப் பிறகுதான் விவசாய விளைபொருள்களைக் கொண்டு செல்லும் வாகனப் போக்குவரத்து ஓரளவு சீரடைந்திருக்கிறது.

ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும், ஒவ்வொரு பருவத்திலும் என்னென்ன பயிர்கள், எத்தனை ஏக்கரில் பயிராகிறது என்ற விவரங்கள் அடங்கிய ஆவணம் பராமரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் மாவட்ட அளவில், மாநில அளவில் மொத்தம் எத்தனை டன் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியாகிறது என்று அரசு மதிப்பிடுகிறது.

இவ்வளவு துல்லியமான விவரங்களைக் கையில் வைத்திருக்கும் அரசு, வேளாண் பொருள்களின் விற்பனைக்கான சந்தை வாய்ப்பை ஒழுங்குபடுத்த முடியாதா? ஊரடங்கு நிலைமையில் இதனை எப்படி திறம்பட நடைமுறைப் படுத்துவது என்று திட்டமிடுவதைவிட வேளாண்துறை அதிகாரிகளுக்கு என்ன வேலை?

ஹாட்-ஸ்பாட் உரிமையாளர் யார்?

“ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பதில்லை. தொற்றுப் பயமின்றி வெளியில் சுற்றுகிறார்கள்” என்று தினமும் கூப்பாடு போடுகிறார் எடப்பாடி.

திடீர் ஊரடங்கு முடக்கம், போலீசின் அத்துமீறல், வேலையின்மை, வருமான இழப்பு ஆகியவற்றை எதிர்த்து மக்கள் எங்குமே போராட்டத்திலோ, கலவரத்திலோ இறங்கவில்லை. (இவ்விசயத்தில் எதிர்க்கட்சிகள்கூட அரசுக்கு ஆதரவாக மவுனமாகவே இருந்து வருகின்றன) உயிர் பயத்தால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மக்கள் அமைதியாகவே உள்ளனர். ஆனால் அரசு தனது கடமையை முறையாகச் செய்ததா? செய்கிறதா?

“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று மக்களை நோய்பரப்பும் கொடியவர்களாக வசைபாடும் தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகள் அரசிடம் ஏன் இக்கேள்வியை எழுப்புவதில்லை.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவே ஊரடங்கு என்றது அரசு. “வெறும் ஊரடங்கினால் பயனில்லை. பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தினர். மத்திய – மாநில அரசுகள் என்ன செய்தன? PCR-கிட்டில் முடிவு தெரிய தாமதமாகிறது, 30-நிமிடத்தில் முடிவு தெரியும் ‘ராபிட் கிட்’-ஐ இறக்குமதி செய்கிறோம் என்றார்கள். கடைசியில் தாமதமாக வந்து சேர்ந்த ராபிட் கிட்-டும் தரமற்றுப் போனது. (அதன் ஊழல் முறைகேடுகள் தனிக்கதை) தற்போது மீண்டும் PCR-கிட் சோதனையே தொடர்கிறது. அதிசயம் என்னவென்றால் தாமதமான முடிவு தருவதாகக் கூறிய PCR-கிட்-டில்தான் தற்போது தினசரி 10,000 பரிசோதனைகள் நடக்கிறது. இதை முன்பே செய்திருந்தால் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தி இருக்கலாமே!

சென்னையில் “4 நாள் முழு உள் ஊரடங்கு” என்று அறிவித்து அரசே மக்களை கோயம்பேடுக்கு படையெடுக்க வைத்தது. அரசின் துக்ளக்தனமான முடிவால் இன்று கோயம்பேடு தொற்றுப் பரவலின் ‘ஹாட்-ஸ்பாட்’ ஆகிவிட்டது! இங்கு கூலி வேலை செய்து வந்த பிற மாவட்டத் தொழிலாளிகள், வியாபாரிகள், ஓட்டுனர்கள் அனைவரும் தொற்றுக்கு ஆளாகி இன்று மருத்துவமனையில் முடங்கி உள்ளனர். மேலும் தற்போது கோயம்பேடு மார்க்கட்டும் மூடப்பட்டதால் சென்னையில் காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்து வருகிறது. அரசின் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையால் பொதுமக்கள் வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள்?

சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசு. அடுத்த நாளே ஆயிரக்கணக்கானவர்கள் சென்னை வீதிகளில் திரண்டு விட்டார்கள். அவர்களின் இருப்பிடத்திற்கே அதிகாரிகளை அனுப்பி பதிவு செய்திருந்தால் இந்த கூட்டத்தைத் தவிர்த்திருக்கலாம்.

இறுதிக் காட்சியாக எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் எதிர்ப்புகளையும் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு, மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளையும் திறந்திருக்கிறது தமிழக அரசு. சைடீசும், சிக்கனும் இல்லாமல் சரக்கு தொண்டைக்குள் எப்படி இறங்கும்? எனவே ‘சமூக இடைவெளியுடன்’ பார்களும் விரைவில் திறக்கப்படலாம். அம்மாவின் தொண்டர்கள் மிட்நைட்டிலும் சரக்கு விற்கும் ‘மக்கள் சேவையில்’ ஈடுபடுவார்கள். இனி வீதிகளில் மக்கள் கூடுவதை எடப்பாடியின் போலீசே நினைத்தாலும் தடுக்க முடியாது. இவ்வாறு தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கான சூழலை, வாய்ப்புகளை அரசே உருவாக்குகிறது. இதில் மக்களின் நேரடித் தலையீடு எங்கே இருக்கிறது? அனைத்திலும் அரசுதான் இங்கு முதல் குற்றவாளியாக பல்லிளித்து நிற்கிறது.

கொரோனா… என்ன எல்லை தாண்டிய தீவிரவாதியா?

“எனது மனைவிக்கு காது கேட்கவில்லை. இதை நேரடியாக அவளிடம் சொன்னால் சண்டை பிடிப்பாள்.. என்ன செய்யலாம்” என்று ஒரு டாக்டரிடம் ஆலோசனை கேட்டார் கணவர். மனைவியின் கேட்புத் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிய டாக்டர் ஆலோசனை கூறினார். அதன்படி, முதலில் வீட்டு வாசலில் நின்று, “இன்னைக்கு என்ன சமையல்?” என்று மனைவியிடம் சத்தமாகக் கேட்டான். அடுத்து ஹாலில் நின்று அதே கேள்வியைக் கேட்டான். பிறகு சமையலறை வாயிலில் நின்று கேட்டான். எதற்கும் மனைவியிடமிருந்து பதில் வரவில்லை. கடைசியாக மனைவியின் காதருகில் சென்று உரக்கக் கேட்டான். வேகமாகத் திரும்பிய மனைவி, “எதுக்கு காட்டு கத்து கத்துறீங்க..? அதான் சாம்பார் சாதம் செய்றேனு பத்து தடவை சொல்றேன்ல. காதுல விழலயா” என்று கோபமாகக் கேட்டாளாம்!

அந்த செவிட்டுக் கணவனைப் போல, பிரச்சனையை தன்னிடம் வைத்துக் கொண்டு மக்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது மத்திய – மாநில அரசுகள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் ஒரு தாலுக்காவில் கிராமம் தோறும் விழிப்புணர்வுக் குழுக்களை அமைத்து, வீடு வீடாகச் சென்று மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். நோய் அறிகுறி உள்ளவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். இன்றுவரை அங்கு கொரோனா தொற்று என்பதே வெளிப்படவில்லை. கீழ்க் கோர்ட் நீதிபதி ஒருவர்தான் இதனைத் தலைமையேற்று செயல்படுத்தி வருகிறார்.

கேரளாவில் மாநிலம் முழுக்க 2 லட்சம் தன்னார்வ இளைஞர்களைத் திரட்டி, பயிற்சியளித்து, களப்பணியில் ஈடுபடுத்தி வருகிறது அம்மாநில அரசு. இன்றுவரை நாட்டிலேயே இங்குதான் தொற்று மிகக் குறைவாக உள்ளது.

நார்வே நாடு ஊரடங்கே இல்லாமல் நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

இவ்வாறு ஆக்கப்பூர்வமான பல முன்னுதாரணங்கள் கண்முன்னே இருக்கும்போது, நமது ஆட்சியாளர்களோ காஷ்மீரில் பின்பற்றப்படும் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையைப் போல, ஊரடங்கு உத்தரவையும், போலீசின் அடக்குமுறைகளையும் ஏவிவிட்டு கொரோனாவை விரட்டிவிட நினைக்கிறார்கள். சுட்டுப் பிடிப்பதற்கு கொரோனா என்ன எல்லை தாண்டிய தீவிரவாதியா?

மக்களின் நேரடிப் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவற்ற முடியாது என்பது வெற்றியாளர்கள் பின்பற்றி வரும் பொதுவான கொள்கை. இது நம் ‘துக்ளக் விற்பன்னர்களுக்கு’ எப்படி புரியும்?

– தேனி மாறன்

முதற்பதிவு: கீற்று

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s