உடல் எனும் பொதுவுடமை சமூகம்

கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கின்றன. அதேநேரம் அது முழுமை பெறுவதற்கு ஓராண்டுக்கும் அதிகமான காலம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க, மரபு மருத்துவம் அல்லது மாற்று மருத்துவம் சார்ந்து இதற்கு மருந்து இருக்கிறது என்று கூறுவோர், மட்டுப்படுத்த முடியும் என்று கூறுவோர் ஒன்று அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள், அல்லது நடவடிக்கை எடுத்து முடக்கப்படுகிறார்கள். இது மக்களின் மீதான அரசின் அக்கரையாக காட்டப்படுகிறது. அதாவது, அது அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும், உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டதன் பின் தான் அவைகளை புழக்கத்துக்கு விடுவது குறித்து ஆராய முடியும் என்று தெரிவிக்கிறது அரசு, அதேநேரம் கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளை மக்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கவும் செய்கிறது. இந்த கபசுர குடிநீர் அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளுக்கு உட்படுத்தி நிருவப்பட்டது தானா என்பது குறித்து எந்தச் செய்தியும் இல்லை.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பொதுவாக நாம் மருத்துவம், மருத்துவர் என்று சொன்னதும் அது அலோபதி மருத்துவத்தையும், அலோபதி மருத்துவரையுமே குறிப்பதாய் இன்று இருக்கிறது. ஆனால் உலகில் 104 மருத்துவ முறைகள் உள்ளன. இந்த 104 மருத்துவ முறைகளும் அந்தந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சித்த மருத்துவம் தமிழ்நாட்டில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அலோபதிக்கு இருக்கும் மதிப்பும், மகத்துவமும் சித்த மருத்துவத்திற்கு இல்லை. அலோபதி அளவுக்கு பிற மருத்துவங்கள் வளரவில்லை என்பது இதில் முதன்மையான காரணியாக இருந்தாலும், இதன் பின்னுள்ள அரசியலும், ஆதிக்கமும் அறிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத ஒன்றாகும்.

மருத்துவம் என்பது மக்கள் தங்கள் தேவைகளை ஒட்டி தாங்களே தங்கள் உடல் சார்ந்த குறைகளை, வலி, வேதனைகளை தீர்த்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது. இப்படி மக்கள் மருத்துவமாக அனுபவங்களின் வழியே கடத்தப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட சேவைகளாக அலோபதி அல்லாத பிற மருத்துவ முறைகள் இயங்கி வருகின்றன. இந்த அலோபதி அல்லாத பிற மருத்துவ முறைகளைத் தான் மாற்று மருத்துவம் எனும் பெயரில் அழைக்கிறார்கள். அறிவுத் துறையினர் கூட அலோபதி விடுத்த ஏனைய மருத்துவ முறைகளை மாற்று மருத்துவம் என்ற பெயரால் தான் அழைக்கிறார்கள். அனைத்தும் மருத்துவ முறைகள் தான் எனும் நிலை மாறி மருத்துவம் என்றால் அது அலோபதி தான் எனையவை மருத்துவ முறைகளல்ல, அலோபதிக்கு மாற்றானவை எனும் புரிதல் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த மாற்று மருத்துவம் எனும் சொல்லே மாற்றுக் குறைவானது சமத்துவம் இல்லாதது. ஓர் எடுத்துக்காட்டோடு இணைத்து இதைப் பார்க்கலாம். பிராமணர்கள் எனும் சொல்லை அறிவு சார்ந்து சிந்திக்கும் யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் அந்தச் சொல்லின் பொருள் மனிதர்கள் ஏற்றத் தாழ்வானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வைக்கும் உறுதி மொழி போன்று தொழிற்படுகிறது. ஏனைய மனிதர்களிலிருந்து உயர்ந்தவர்கள் எனும் பொருளில் ஒருவரை அல்லது ஒரு பிரிவினரை அழைத்தால், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம் என்பது இயல்பான ஏற்பு ஆகிறது. அதனால் பார்ப்பனர்கள் எனும் சொல்லே அறிவுடையவர்களின் சொல்லாக இருக்கிறது. இதே போன்று, மருத்துவம் என்றாலே அது அலோபதி தான் ஏனைய மருத்துவ முறைகள் அனைத்தும் அலோபதிக்கு ஈடான மருத்துவ முறைகள் அல்ல எனும் பொருள் மாற்று மருத்துவம் எனும் சொல்லினுள் ஒழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு மாறாக மரபு மருத்துவம் எனும் சொல்லை பயன்படுத்தலாம். அலோபதியும் தொடக்கத்தில் ஒரு மரபு மருத்துவம் தான். ஆனால் இன்று அது மரபு மருத்துவமாக இல்லை என்பது வேறு விதயம்.

இந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மரபு மருத்துவமாக மக்களிடம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. பன்னெடுங் காலமாகவே இங்கே தமிழ் மருத்துவ முறை செழித்திருந்தது என்பதற்கு இலக்கியங்களில் சான்றுகள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன.

திருக்குறளில் மருத்துவத்திற்கென தனி அதிகாரமே ஒதுக்கப்பட்டிருப்பது அதன் முதன்மைத் தனத்தை கூறுவதோடு மட்டுமல்லாமல், முறைப்படுத்தப்பட்ட ஒன்றாக இங்கே நிலவி வந்திருக்கிறது என்பதற்குமான சாட்சியாக,

“நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

எனும் குறள் சான்றாக இருக்கிறது.

சிந்துச் சமவெளி நாகரீகம் தொடங்கி, தொல் காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை’ பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள் என அனைத்திலும் மருத்துவம் குறித்த செய்திகள் விரவிக் கிடக்கின்றன. வெறும் செய்திகளாக மட்டுமின்றி மருத்துவ முறைகளாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ”

எனும் பதிற்றுப்பத்து பாடல் ஆழமான காயங்களை தைத்து குணப்படுத்தியது குறித்து குறிப்பிடுகிறது.

“நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்

புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்

முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு

இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்

பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி

நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே”

எனும் சீவக சிந்தாமணியின் பாடல் உடலில் புகுந்த இரும்புத் துணுக்குகளை அகற்றி எலியின் மயிரால் செய்யப்பட்ட ஆடையால் கட்டுவது குறித்து விளக்குகிறது.

பழம் பெருமைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைய காலகட்டத்தில் நோய்களை தீர்ப்பதற்கான முழு விவரணைகளோடு, அறிவியலோடு இயைந்த வழிமுறைகளை எந்த மருத்துவம் கொண்டிருக்கிறது என்றால் அது அலோபதி மருத்துவம் மட்டும் தான் என்பது மறுக்க முடியாத விடை. ஆனால் இது அந்த மருத்துவ முறையின் சிறப்பு மட்டுமல்ல அரசியலும் கலந்தது என்பதும் மறுக்க முடியாத ஒன்று தான். ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதையும் தங்கள் காலணி நாடுகளாக வைத்திருந்து சுரண்டினார்கள் என்பது வரலாறு. அவர்கள் தங்கள் மருத்துவ முறையான அலோபதியை தாங்கள் சுரண்டும் அத்தனை நாடுகளிலும் திணித்தார்கள் என்பதும் வரலாறு. அதேநேரம் எல்லாத் தளங்களிலும், எல்லாத் துறைகளிலும் தன் சுரண்டலை தீவிரப்படுத்திய முதலாளித்துவமும் அதன் உச்சமான ஏகாதிபத்தியமும் தங்கள் சுரண்டலுக்கான மீப்பெரும் வாய்ப்பாக அலோபதி மருத்துவ முறையை மாற்றுருவாக்கம் செய்தன. புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு, கருவிகளோடு அதனை வளர்த்தெடுத்தன. ஏனைய மரபு வழி மருத்துவங்களுக்கு அந்த வாய்ப்புகளை இல்லாமலாக்கின, இருட்டடிப்பு செய்தன. இதற்கு தமிழ்நாட்டின் சித்த மருத்துவமும் இலக்கானது. ஆங்கிலேய ஆட்சியில் சித்த மருத்துவத்தை ஒரு மருத்துவ முறையாக ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக நடந்த போராட்டங்களின் வரலாற்றை படிப்பவர்களுக்கு அது புரியும்.

இந்த இடத்தில் அலோபதி மருத்துவமுறை மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றது எவ்வாறு என புரிந்து கொள்வது இன்றியமையாததாக இருக்கிறது. இன்று மருத்துவம் என்றாலே அது அலோபதி தான் என்றாகி விட்டது. தொடக்கத்தில் மக்களுக்கு உடல்நலம் பேணுவது என்பது மருத்துவமனை என்றும் மருத்துவர் என்றும் பிரித்துப் பார்த்து நடப்பதில்லை. அவர்களின் பொருளாதார நிலை மருத்துவத்திற்கென்று தனியாக செலவு செய்யும் நிலையில் இருக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாது, அவர்களின் உழைப்பு முறை தனியாக மருத்துவம் தேவையில்லை என்பதாகவும் இருந்தது. இந்த நிலையில் தான் அலோபதி அவர்களுக்கு அறிமுகமாகிறது.

அலோபதி மக்களிடம் அறிமுகப்படுத்தப்படும் போது, மருத்துவ ஆலோசனைக்கு தனிக் கட்டணம், மருந்துகளுக்கு தனிக் கட்டணம் என தனித்தனியாக செலவு செய்யும் வாய்ப்பு மக்களிடம் இல்லாததால்  இலவசமாகவே அறிமுகமாகிறது. அது மட்டுமின்றி நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பதோடு பால், முட்டை, ரொட்டி போன்ற உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. அன்றைய காலகட்டம் காலனிய உணவுக் கொள்கையினால் மக்கள் மோசமான பசி பஞ்சத்தினுள் தள்ளப்பட்டிருந்தார்கள். இதனால் பால் ரொட்டி வாங்குவதற்காகவே அலோபதி மருத்துவமனைக்கு மக்கள் வந்தார்கள். பல இடங்களில் மருத்துவமனைகளை பாலாஸ்பத்திரி என்றே மக்கள் அழைத்தார்கள்.  எடுத்துக்காட்டாக, திருநெல்வேலி பாளையங்கோட்டை நகராட்சி தாய்சேய் நல மருத்துவமனை இன்றும் கூட பாலாஸ்பத்திரி என்றும், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் அருகிலுள்ள பேருந்து நிருத்தம் பாலாஸ்பத்திரி நிருத்தம் என்றும் தான் அழைக்கப்படுகிறது. இப்படி உணவும் சேர்த்து கொடுக்கப்பட்டது தான் அலோபதி மீது மக்களிடம் நன்மதிப்பை உருவாக்கியது. பின்னர் கருவிகள் மூலம் பிரமிப்பை ஏற்படுத்தி அந்த நன்மதிப்பு உறுதியாக்கப்பட்டது.

இவைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நோய் என்றால் என்ன? அதற்கான மருத்துவம் என்பது எப்படி இருந்தால் அது உடல்நலத்தை அதிகரிக்கும்? நாம் உட்கொள்ளும் மருந்து உடலினுள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன? நம் உடல் எப்படி இயங்குகிறது? நாம் உட்கொள்ளும் மருந்துகள் உடலின் இயக்கத்துக்கு தூணை செய்கிறதா? ஊறு விளைவிக்கிறதா? அறிவியலும் மருத்துவமும் வளர வளர ஏன் நோய்களும் கூடிக் கொண்டே செல்கின்றன? மருத்துவத்திற்காக மக்கள் செலவிடும் பெரும் உழைப்பு ஆற்றலை வேறு பிறவற்றுக்காக திருப்பிவிட முடியாதா? மக்களால் நோய்நொடி இல்லாமல் வாழவே முடியாதா? என்பன போன்ற பல கேள்விகள் மக்களுக்கு இருக்கின்றன.

மக்கள் முன்னிருக்கும் பல வாய்ப்புகளை அழித்து விட்டு ஒற்றை வழியை மட்டும், அது கூறும் விளக்கங்களை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பது என்பது, எபோதுமே சரியானதாக இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. உடல்நலம் என்பதை அலோபதியை மட்டும் வைத்துக் கொண்டு அளக்க முடியாது, அளக்கவும் கூடாது. மாற்றுகள் வேண்டும். மட்டுமல்லாது அனைத்தும் உடலை, அதன் இயக்கத்தை அளவுகோலாகக் கொண்டு அளக்கப்பட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக நாம் உடலை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்வதற்கான பாட்டையில் நாம் பயணிப்போம்.

தொடரும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

2 thoughts on “உடல் எனும் பொதுவுடமை சமூகம்

  1. காலத்துக்குப் பொருத்தமான கட்டுரைகளை ப்திவேற்றும் உங்கள் பணி தொடரட்டும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s