

வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்ப முயன்று வருகிறார்கள். கோவிட்-19 நோய்த்தொற்றால் இதுவரை இறந்தோரின் எண்ணிக்கைக்கு ஏறத்தாழ நிகராக, இந்த மனிதத்தன்மையற்ற பயணத்தால் பலர் இறந்துள்ளனர். இவர்களுக்கெல்லாம் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்? சுதந்திர இந்தியாவில் மனிதர்களால் தூண்டப்பட்ட மிகப்பெரும் துயரமான இடப்பெயர்வு இது. இவ்விவகாரத்தை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்க முடியுமெனினும், துன்பகரமாக நடந்துவிட்டிருக்கிறது.
திட்டமிடாமல் எடுக்கப்பட்ட முடிவு
முன்னெச்சரிக்கையோடு வந்த ஒரு பேரழிவுதான் கோவிட்-19. எனவே, தன்னிச்சையான, திட்டமிடாத மற்றும் மோசமான தயாரிப்புடன் கூடிய இந்த முடிவு எவ்வகையிலும் நியாயமானதல்ல. மேலிருந்து திணிக்கப்பட்ட பிரதமரின் இரவு 8 மணி ஊரடங்கு அறிவிப்பு நடைமுறை சாத்தியமான மற்றும் அத்தியாவசிய நிவாரண நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக அமையவில்லை. இதற்குத் தயார் நிலையில், இல்லாத மக்களிடம் குழப்பத்தையும் நிச்சயமற்ற, பாதுகாப்பற்ற நிலையையும் இது ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, மிகத் துரிதமாகவும், மறுபடியும் எவ்வித முன்னறிவிப்புமின்றியும் அனைத்துப் பொதுப் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டன. இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வை முடக்கிப் போட்ட இந்த ஒருதரப்பான ஊரடங்கு உத்தரவு தோல்வியில்தான் முடியும். வேலை இல்லை; அரசிடமிருந்து எந்த உத்தரவாதமும் இல்லை, எதிர் காலம் குறித்த அச்சம் எல்லாமும் சேர்ந்து, நம்மைப் போலவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் தர்க்கரீதியாகத் தொலை தூரத்திலுள்ள தமது வீடுகளில் தமது பாதுகாப்பைத் தேடி ஓடினர். அதனால்தான், ஏதாவது ஒரு வகையில், நடந்தேனும்கூட தம் வீடுகளுக்குச் செல்ல முடிவெடுத்தனர். கொள்கை வகுப்பாளர்களுக்கும், ஆளும் மேட்டுக்குடி வர்க்கத்துக்கும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றி எந்த்வொரு புரிதலும் இல்லை.
அதிவேகமாக அடுத்தடுத்து விடுக்கப்பட்ட முரண்பாடான மற்றும் ஒருங்கிணைக்கப்படாத அரசு உத்தரவுகள், குழப்பத்தை அதிகரித்தன. முதலில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கையில், மார்ச்-29 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களைத் தடுத்து நிறுத்தி 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது. பிரச்சாரகர்களோ சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தைத் திரும்பத் திரும்பக் கூறிக் கந்தலாகிப் போன அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். ஒரே அறையில் 10 பேர் நெருக்கியடித்து வாழ்ந்துவரும் இத் தொழிலாளர்களின் வாழ்க்கயைப் பற்றி அறியாதவர்களா இவர்கள்! இப்போலி அறியாமை இத்தகைய அறிக்கைகளைப் பொருளற்றதாக்கி விடுகிறது. நகர்ப்புற சேரிப் பகுதிகளில் சமூக இடைவெளி என்பது எதார்த்தமற்ற கருத்தாக்கமாகும். முறைசாரா தொழிலாளர்கள் என்று அழைக்கப்படும் இப்பிரிவினரின் மோசமான சூழ்நிலைகளை அரசு உணர்ந்து, அங்கீகரித்து அதனைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் எந்த உத்தரவும் வேலைக்காகாது. பெருமளவிலான உணவுப் பொருட்களை வைத்துக்கொண்டு தனித்த அறைகள் கொண்ட விசாலமான வீடுகளில் பாதுகாப்பாக வசிப்பவர்கள் இந்தப் பிரச்சனையைப் புறந்தள்ளிவிடலாமென விரும்ப முடியாது.
வைரஸ் தாக்குதலுக்குப் பலியாகிவிடுவோம் எனத் திகிலடைந்துள்ள மேட்டுக்குடியினரின் அச்ச உணர்வுக்கு மிகவிரைவாக எதிர்வினையாற்றும் வகையில் இந்த ஊரடங்கு தானே உருவமெடுக்கிறது. களநிலைமைகளைப் புரிந்து கொண்டும், அந்நிலைமைகளின் மீது பரிவு கொண்டும் ஒரு செயல்திட்டத்தைத் தயாரிப்பதற்கான குறைந்தபட்ச சிந்தனைத் திறனும் நடைமுறையும் (அரசிடம்) மிகச் சிறிதளவே காணக் கிடைக்கிறது.

நாம் உருவாக்கியிருக்கும் இரண்டு இந்தியாக்களுக்கு இடையிலான கூர்மையான பிளவை இந்த வைரஸ் திருப்பிப் போடுகிறது. வெளிநாடுகளிலிருந்து திரும்பிய (இந்தியர்களின்) தடித்தனத்தினால்தான் கோவிட்-19 பரவியது. அவர்களுள் பலர் வசதியானவர்கள், செல்வாக்குமிக்கவர்கள் என்பதோடு. தொற்றொதுக்கம் (Quarantine) செய்யப்பட்ட
தையும் மீறியவர்கள். இந்த ஊரடங்கு ஏழைகள் மற்றும் அமைப்புசாரா தொழில்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், சமூக – பொருளாதார நிலைமைகளுக்கு நேர் எதிர் விகிதத்தில் அமைந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தி, அவர்களின் கண்ணியத்தையோ, சுதந்திரத்தையோ பறித்துவிடவில்லை. ஆச்சரிய மூட்டும் வகையில் அவர்கள் இதுவரை தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. வீட்டுக்கு செல்ல வேண்டுமென்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது.
இந்த ஊரடங்கின் (முதல்) ஒரு வாரம், இந்தியாவின் முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்நிலை எதார்த்தத்தின் மீதான அரசின் அக்கறையின்மையையும் அலட்சியத்தையும் கொடூரமாக வெளிக்காட்டியுள்ளது. வருமானத்திற்கான உத்திரவாதம், போக்குவரத்து அல்லது உணவு ஏதுமில்லாமல் அல்லாடுவதைவிட, வீட்டிற்கு நடந்து செல்வதே இந்தத் தொழிலாளர்களின் தர்க்கரீதியான தேர்வாக அமைந்துவிட்டது. முகக்கவசம் என ஏதோவொன்றை அணிந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு மாநிலங்களினூடே பல மைல் தூரம் நடந்துசெல்லும் ஆணும், பெண்ணும், சிறு குழந்தைகளும் ஒருவேளை தாம் இறக்க நேரிட்டால்கூட அது தம் வீட்டிலேயே நடக்கட்டும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
உணவு மற்றும் போக்குவரத்தை உறுதி செய்தல்
உண்மையான ஆதரவு கிடைத்தால் மட்டுமே தாம் இருக்குமிடத்தில் மக்கள் தங்கியிருப்பார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவுப்படி இந்தத் தொழிலாளர்களை 14 நாட்கள் தொற்றொதுக்க முகாம்களில் இருத்தி வைக்க கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாதது மட்டுமல்ல, சாத்தியமில்லாததுமாகும். இந்த மனிதப் பேரவலத்திற்கு உடனடியாகச் செவிமடுத்துப் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பிறப்பிக்கப்பட்ட எதிர் உத்தரவுகள் அல்லது புலம்பெயரும் தொழிலாளர்களைச் சாலையிலேயே சிறைவைக்குமாறு மிக அலட்சியமாகக் கட்டளையிட்ட அரியானா அரசின் உத்தரவு ஆகியவைதான் மிகவும் மோசமானவை. இந்தத் தொழிலாளர்கள் குற்றவாளிகளோ, தப்பியோடுபவர்களோ கிடையாது.
வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களைக் கணிசமான தொகையைச் செலவழித்து இந்தியாவிற்குத் திரும்ப அழைத்துவர அரசால் முடியுமெனில், தொழிலாளர்கள் தமது வீடு திரும்புவதற்கு மேம்பட்ட போக்குவரத்து வசதியைச் செய்து தர முடியாமல் போனதற்கு எந்தவொரு காரணமும் இருக்க முடியாது. நடந்தே வீடு திரும்புவது என ஏற்கெனவே முடிவெடுத்து நடக்கத் தொடங்கியவர்கள், தாம் செல்லும் வழித் தடத்தில் மருத்துவப் பரிசோதனைகல், தமக்குத் தேவையான உணவு, சாத்தியமான சுகாதார வழிகாட்டுதல்கள், தமது மனிதில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஆகியை கிடைக்கப் பெற்று, பாதுகாப்பாகத் தமது வீடுகளைச் சென்றடைந் திருக்க வேண்டும். அவர்கள் தமது கிராமங்களைச் சென்றடைந்ததும், அவர்களைக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரலாம், அவர்களை மேலும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தலாம், தனிமைப்படுத்தலாம், தேவையெனில் அவர்களைத் தொற்றொதுக்கமும் செய்யலாம். அடுத்த சில மாதங்களுக்கு அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ தேவை மற்றும் வருமானத்திற்கும் குறைந்தபட்ச உத்திரவாதங்களை அரசு வழங்கியிருக்க வேண்டும். அவர்கள்தான் குடும்பத்தின் முதன்மையான வருமானமீட்டுபவர்கள் என்பதையும், ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினரின் வாழ்வு குறித்த தவிப்புதான் அவர்களை வீடுகளை நோக்கி இழுகிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கடுமையான உத்தரவுகளோ அல்லது வெற்றுரைகளோ வேலைக்காகாது. அரசாங்கங்கள், தலைமைத்துவத்தையும், தீர்வையும், பொறுப்பையும், பரிவையும் காட்ட வேண்டும். வளங்கள் திறம்படவும் உகந்த முறையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 40 இலட்சம் டன் உணவு தானியங்கள்தான் தேவைப்படும் நிலையில், தற்போது 5.8 கோடி டன் உணவுதானியங்களை சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைத்திருப்பதற்கு எவ்வித சால்ஜாப்பும் சொல்ல முடியாது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெரும் அட்டைதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச உணவுதானியங்கள் வழங்கச் சொன்ன நிதியமைச்சரின் அறிவிப்பைத் தாண்டி, பலரும் கோரிக்கை வைத்ததைப் போல், குடும்ப அட்டை இல்லாத மக்கள் பசியால் வாடுவதைத் தவிர்க்க, எவ்வித நிபந்தினையுமின்றிக் குறைந்தபட்சமாக மேலும் ஒரு மாதத்திற்குரிய பங்கை மாநிலங்களுக்கு உடனடியாக விநியோகிக்கும் விதத்தில் தனது கையிருப்பில் உள்ள வளத்தை மைய அரசு பயன்படுத்த வேண்டும். இன்று பசிப் பிணி தெருக்களில் மட்டும் நடமாடவில்லை, மொத்த நாட்டையே வேட்டை மிருகம் போலப் பின் தொடருகிறது.
பொருள் வளங்கள் போதுமான அளவில் நம் நாட்டில் உள்ளன. கரோனா தொற்று அதிகமுள்ள ராஜஸ்தானிலுள்ள பில்வாரா போன்ற மாவட்டங்கள், இந்த நெருக்கடியைக் கையாள்வதற்காக தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், கல்லூரி விடுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டுத் தமது வசம் எடுத்துள்ளன. இதுபோன்ற வளங்கள் அரசிடமோ அல்லது தனியார் கைகளிலோ யாரிடம் இருந்தாலும் அவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மிகப்பெரும் தேவையின் அடிப்படையில், அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய தருணமிது.
துப்பரவு பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகிய முன்னணி செயற்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு, தமது சேவைகளை விரிவாகச் செய்து கொண்டிருப்பதை நாடு முழுக்க சீராகவும், தொடர்ச்சியாகவும் கிடைப்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். அதனுடன் குடுமைச்சமூகம் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களைக் கண்காணித்து ஆதரவளிக்க வேண்டும். நம்முடைய அனைத்து அத்தியாவசிய சேவைகளின் அளிப்புச் சங்கலிகள் பராமரிக்கப்பட்ட வேண்டுமெனில், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா பிரிவுகளைச் சார்ந்து இந்தச் சேவைகளைச் செய்துவரும் முன்னணி செயல்பாட்டாளர்களுக்குக் கருவிகளும், விரைவான பயிற்சியும், போதுமான காப்பீடும் வழங்கப்பட வேண்டும். பாரபட்சமின்றி, அனைத்து மனித உயிர்களும் விலை மதிப்பற்றவைதான். யார் ஒருவரையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
சமூகப் பாதுகாப்பு இல்லாமல் சமூக இடைவெளி இருக்க முடியாது. ஒரு தேசமாக நாம் இந்த அபாயத்திலிருந்து மீண்டு வருவதை விமர்சன ரீதியாக அணுகினால், நம்மிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை நாம் குறைப்பதோடு, தளர்ந்து விடாமல், விடா முயற்சியுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஏற்கெனவே ஊறிப் போயுள்ள தனிநபர் மனப்பாங்கை இந்தக் கட்டாய தனிமைப்படுத்தல் மேலும் வலுப்படுத்துகிறது. கோவிட் – 19 உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் ஒருசேர பாதிக்கிறது. இந்த ஒன்றிணைக்கப்பட்ட உலகில் நாம் ஒன்றாக வாழ்வோம் அல்லது மடிவோம்.
ஆங்கில இந்து நாளிதழில் (31.03.2020) மஸ்தூர் கிஸான் சக்தி சங்கடன் எனும் அமைப்பில் பணியாற்றி வரும் சமூக செயற்பாட்டாளர்கள் அருணா ராய், நிகில் தே ஆகிய இருவரும் இணைந்து எழுதிய Locking down two different Indias என்ற கட்டுரையின் மொழியாக்கம்.
புதிய ஜனநாயகம் இதழ் மே 2020