இஸ்லாம்: விவாத நேர்மை

விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன்.

விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என கேள்வி கேட்பது முட்டாள்தனமாக இல்லையா உங்களுக்கு? குர்ஆன் என்ன உங்களுக்கு அறிவியல் பாடமா நடத்துகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதற்கான சான்றாகத்தான் இதுபோன்ற அறிவியல் சார்ந்த வசனங்களை தருகிறது. மேலும் மொழி பெயர்ப்பில் தவறு காண்கிறீர்கள். மொழிபெயர்ப்பு தவறாக இருந்தாலும் அதற்கு குர் ஆன் எப்படி பொறுப்பாக முடியும்? நீங்கள் வேண்டுமானால் அரபி இலக்கணம் படித்துவிட்டு வந்து மொழி பெயர்ப்பு செய்யுங்கள். முட்டாள்தனமாக இது போன்று உளராதீர்கள்.

நண்பர் யாஸீன்,

புதுசா நீங்க, இங்கு குரான் குறிப்பிடும் வசனங்கள் எவ்வாறு அறிவியலுக்கு மாறாக இருக்கிறது என விளக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு மத வியாபாரிகள் எவ்வாறு ஜல்லியடிக்கிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் உங்களுக்கு மாற்றுக் கருத்து உண்டா? கூறுங்கள். உங்கள் பங்குக்கு நீங்களும் சுற்ற வேண்டாம்.

ஆம் நான் புதிதுதான். இதுபோன்ற முட்டாள் தளங்களுக்கு நான் புதிதுதான். என்னுடைய பதிவிற்கு தகுந்த பதிலை நீங்கள் கூறவில்லை. மத வியாபாரிகளைப் ப்ற்றி நீங்கள் ஏதேனும் குறை கூறினால், அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நீங்கள் குறை கூறுவது இறைவனின் வார்த்தைகளான குர்ஆன் பற்றி குறை கூறுகிறீர்கள். அப்படி குறை கூற வேண்டுமானால் அது அறிவுப் பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர முட்டாள்தனமாக இருக்ககூடாது. அறிவு இருந்தால் நிச்சயமாக குறையும் காண இயலாது, ஏனென்றால் அறிவியலுக்கும் அறிவியலை போதிக்கிறது குர்ஆன்.

நண்பர் யாஸீன்,

குரான் அறிவியலுக்கும் அறிவியலை போதிக்கிறது என்பது உங்களின் கருத்து, உங்களின் நம்பிக்கை. அது உங்களின் நம்பிக்கையாக மட்டுமே இருக்கும் வரை யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால், அது மட்டுமே உண்மை எனும் போதுதான் பிரச்சனை வருகிறது. குரானில் மலிந்து கிடக்கும் குழப்பங்கள் தான் மத வியாபாரிகளுக்கான அடிப்படையை உருவாக்குகிறது.

இந்த கட்டுரை குறிப்பிடும் வசனத்தையே எடுத்துக் கொள்வோம். குரான், விந்து வெளிப்படும் இடத்தைக் குறிப்பிடுகிறதா? உருவாகும் இடத்தைக் குறிப்பிடுகிறதா? உருவாகும் இடம் என்றால் அது விரைப்பை. வெளிப்படும் இடம் என்றால் அது குறி. குரானோ, முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் என்கிறது. இது என்ன இடம்? எந்த உறுப்பு? அந்த இடத்திலிருந்து உருவாகிறதா? வெளிப்படுகிறதா?

கொஞ்சம் தெளிவாக விளக்குங்கள் அதன் பிறகு கட்டுரையின் கருத்துக்கு வரலாம்.

நான் அறிவியலில் சிறந்த ஞானியும் இல்லை. அரபு இலக்கணம் தெரிந்தவனும் இல்லை. இருப்பினும் உங்களுக்காக சில வார்த்தைகள். குர்ஆனின் விந்து வெளிப்படும் இடம் என்பது விந்துப்பை ஆக இருக்கக்கூடும் ஏனெனில் விரையில் உற்பத்தி செய்யப்பட்டாலும் விந்துப்பையில் இருந்துதானே விந்து வெளிப்படுகிறது. இது கீழ் முதுகந்தண்டின் பக்கத்தில் தானே இருக்கிறது. மேலும் மொழி பெயர்ப்பாளர்கள் தவறிழைப்பது தவிர்க்க முடியாதவை. ஏனெனில் அரபு மொழி என்பது நம்முடைய தாய் மொழி அல்ல. ஒரு மொழியிலிருந்து அடுத்த மொழிக்கு மாற்றம் செய்யும் போது மூல மொழிக்கு இணையான வர்த்தைகள் மற்ற மொழிகளில் சில சமயம் கிடைக்காது. எனவே அறிஞர்களின் அறிவுக்கு தகுந்தார் போல மொழி மாற்றம் செய்வார்கள். நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள், நீங்களும் அதே தவறை செய்வீர்கள். இது மொழிகளுக்கு இடையிலான தவறேயன்றி, மொழி பெயர்ப்பாளர்களின் தவறாக கொள்ள இயலாது. குர்ஆன் தவறு என நீங்கள் நிறுவ விரும்பினால் முதலில் அரபு மூல மொழியை கற்று பின்பு முடிந்தால் அதில் தவறுகளை கண்டுபிடித்து பின்பு தமிழில் நீங்கள் வெளியிடலாம். அதுவே சாலச் சிறந்தது. உங்களை போன்று குர்ஆன் தவறு என நிரூபிக்க அரபு மூல மொழி கற்ற போது அதன் உண்மைத் தன்மையை அறிந்து முஸ்லிமாக மாறியவர்கள் ஏராளம். எனவே மொழி பெயர்ப்பாளர்களை குறை கூறுவதை விடுத்து அறிவுப்பூர்வமாக செயல்படுங்கள். அறிவுப் பூர்வமான செயல்பாடே மக்களிடம் சென்றடையும். இது போன்ற ஈனச் செயலை செய்ய வேண்டாமென தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் யாஸீன்,

உங்கள் விளக்கத்திற்கு(!) நன்றி. நீங்கள் அறிவியலில் சிறந்தவரும் இல்லை, அரபு மொழியில் புலமை பெற்றவரும் இல்லை. ஆனாலும், குரானுக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது எனும் ஒரே காரணத்திற்காக மாற்றுக் கருத்து கூற வந்திருக்கிறீர்கள். அப்படித்தானே, பரவாயில்லை.

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான்? குதித்து வெளிப்படும் ஒரு துளி நீரினால் படைக்கப்பட்டான். முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

இவை தான் அந்த வசனங்கள். இதைத்தான் விதைப் பையில் தொடங்கி விந்துப் பையின் வழியாக முதுகந்தண்டு வரை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வசனம் குறிப்பிடுவது மனிதனை உருவாக்கப் பயன்படும் ஒரு துளி. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “யக்குறுஞ்” எனும் சொல்லுக்கான பொருள் என்ன? வெளிப்படுகிறது என்பது தான். எங்கிருந்து என்பதற்கு தொடர்பே இல்லாத ஓர் இடத்தை குறிப்பிடுகிறது குரான். உருவாகும் இடமான விதைப்பையோ, வெளிப்படும் இடமான குறியோ சொல்லப்படாமல் முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் என்று சொல்லப்படுகிறது. இது ஏன் என்றால் அந்த நேரத்தில் உலகில் புழக்கத்தில் இருந்த (கிரேக்க) கருத்து அது தான். அதனால் தான் அந்த வசனம் வெளிப்படும் போது அரபிகள் யாரும் அதற்கு எதிராக கேள்விகள் எதையும் எழுப்பவில்லை. ஆனால் அந்தக் கருத்து பின்னர் அறிவியலால் நிராகரிக்கப்பட்டு விட்டது. அறிவியலால் நிராகரிக்கப்பட்ட ஒரு கருத்து குரானில் இருக்கிறது என்றால் குரானின் கற்புக்கு இழுக்கு வந்து விடுமே. அதனால் தான் இப்போது தமிழில் மொழி பெயர்ப்பவர்கள் ஏதேதோ சொல்லி, அதற்கு அறிவியல் சட்டையெல்லாம் மாட்டி அழகு பார்க்கிறார்கள்.

அறிவியல் அடிப்படையில் அந்த வசனத்தின் கருத்து அல்லது பொருள் தவறானது. இதை ஏற்றுக் கொள்கிறீர்களா மறுக்கிறீர்களா என்பது தான் பிரச்சனை. மற்றப்படி அந்த இடமாக இருக்கக் கூடும், இந்த இடமாக இருக்கக் கூடும் என்றெல்லாம் பலரும் தங்களின் சொந்தக் கருத்தை குரானுக்குள் திணிக்கிறார்கள். நீங்கள் உட்பட. தங்கள் சொந்தக் கருத்தை குரானில் திணிக்க வேண்டாம் என்று தான் நான் கூறுகிறேன். நியாயமாக இதற்கு நீங்கள் என்னை பாராட்ட வேண்டும். ஆனால் திட்டுகிறீர்கள். குரானுக்கு எதிரான கருத்தா ஆதரவான கருத்தா என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. சரியான கருத்தா தவறான கருத்தா என்று மட்டும் தான் நான் பார்க்கிறேன்.. அவ்வளவு தான். இதற்கு மேலும் உங்களால் ஏதாவது கூற முடிந்தால் பின்னர் நான் வருகிறேன்.

விந்துப்பை எங்கே இருக்கிறது? அதன் செயல்பாடு என்ன? பொதுவாக விரையிலிருந்து விந்து உருவாகிறது என்று கூறினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில் அறிவியல் சார்ந்த அறிவு இல்லை என்றாலும்கூட இவ்வாறு கூறமுடியும். விரை என்பது ஆண்மையுடன் தொடர்புடையது என்பதை படிப்பறிவே இல்லாதவர்கூட சொல்ல முடியும். விரையில் விந்து சுரந்தாலும் அது முழுமை பெறுவது விந்துப் பையில்தான். விந்துப்பையில் இருந்து வெளிப்படுகிறது எனக் கூறுவதே ஆச்சரியமூட்டும் செய்தியாக இருக்கும். ஏனெனில் விந்துப்பை பற்றிய அறிவு, அறிவியல் பற்றிய புரிதல் இல்லாமல் சாத்தியமில்லை. எனவே அறிவியல் இல்லாத காலகட்டத்திலும் விந்துப்பை பற்றி கூறுவதில்தான் அத்தாட்சி இருக்கிறது. விந்துப்பையில் இருந்து விந்து வெளிப்படுகிறது என்பதில் உங்களுக்கு ஏதும் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன். இப்போது விந்துப்பை எங்கே இருக்கிறது என குர்ஆன் சரியாக கூறுகிறதா? என்பதில்தான் உங்களுக்கு குழப்பம் வருகிறது இல்லையா. அரபு மூலத்தில் இரண்டு உறுப்புகளுக்கு இடையில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது இல்லையா, அந்த இரண்டு உறுப்புகளுக்கான அரபு மூல வார்த்தை என்ன பயன்படுதப்பட்டிருக்கிறது? அதற்கான சரியான தமிழாக்கம் என்ன? என்று கூறுங்கள். அதில் ஒரு உறுப்பு முதுகந்தண்டு. முதுகந்தண்டின் அருகில்தான் விந்துப்பை இருக்கிறது. எனவே முதுகந்தண்டு என்பதில் முரண்பாடு ஒன்றும் இல்லை. மற்றொரு உறுப்பு எது என்பதில் மொழியாகத்தில் தவறு செய்கிறார்கள். சில அறிஞர்கள் மற்றொரு உறுப்பு விலா எலும்பு என்றும் வேறு சிலர் முன்பகுதி என்றும் கூறுகிறார்கள். முன்பகுதி என்று கூறினால் அதிலும் முரண்பாடு இல்லை. ஏனெனில் முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிதான் விந்துப்பை உள்ளது. எனவே இரண்டு உறுப்புகளுக்கான அரபு மூல வார்த்தையையும் சரியான மொழியாக்கத்தையும் நீங்களே விளக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் யாஸீன்,

நீங்கள் காலத்தைக் குழப்புகிறீர்கள். குறிப்பிட்ட அந்த வசனத்தில் அறிவியல் முன்னறிவிப்பு என்று எதுவும் இல்லை. மாறாக அறிவியலுக்கு முரணான செய்தியாக அது இருக்கிறது. உங்கள் வாதத்தின் படியே பார்ப்போம். அந்த வசனம் அந்தக் காலத்தில் இருந்த தவறான புரிதலை மறுத்து அறிவியல் ரீதியான சரியான செய்தியை கூறியிருக்கிறது. விந்து குறித்த அறிவியல் அந்த அளவுக்கு வளராத அந்தக் காலத்தில் இந்தக் காலத்துக்கும் பொருந்தும் சரியான செய்தியை கூறியிருப்பதன் மூலம் குரான் இறைவனின் ஆக்கம் என உறுதியாகிறது. சரிதானே இதில் மறுப்பு ஒன்றும் இல்லையே.

முகம்மதின் சம காலத்தில் இருந்த விந்து குறித்த புரிதல் என்ன? விந்து தான் குழந்தை பிறப்புக்கு காரணம் அது ஆணின் அடிவயிற்றின் பின்னிலிருந்து அதாவது முதுகந்தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து உருவாகி கலவியின் போது, குறி வழியே பெண்ணுடலை அடைகிறது. இதுவே குழந்தையாக மாறுகிறது. இதற்கு மேல் அந்தக் காலத்தில் புரிதல் எதுவும் இல்லை. விதைப்பை குறித்து எந்தத் தகவலும் அக்கால மக்களுக்கு இல்லை. குறியின் துணை உறுப்பு என்பதைத் தாண்டி விதைப்பை ஏன் இருக்கிறது என்பது கூட அந்தக் கால மக்களுக்கு தெரியாது. முகம்மதின் காலத்துக்கு சற்று முன்பிருந்து கிரேக்க அறிஞர்களின் இந்த புரிதல் தான் பொதுவில் இருந்தது. இதைத்தான் குரானும் சொல்லி இருக்கிறது. ஒரு வேளை அந்த நேரத்தில் இருந்த புரிதலுக்கு மாற்றான ஒன்றை குரானோ முகம்மதோ சொல்லி இருந்தால் அது குறித்த விளக்கம் கேட்கப்பட்டிருக்கும், அதற்கு முகம்மது ஏதாவது விளக்கம் அளித்து அது ஹதீஸ்களில் பதிவாகி இருக்கும். அப்படி எந்தப் பதிவும் இல்லை என்பதே குரான் அந்தக் கால புரிதலுக்கு மாற்றாக எதையும் சொல்லவில்லை என்பதற்கான ஆதாரம்.

மொழிபெயர்ப்புகள் எல்லாம் பின்னால் வந்தவை. தமிழைப் பொருந்தவரை 50 அல்லது 60 ஆண்டுகள் தாம் ஆகின்றன. இந்தக் காலத்தில் விந்து குறித்த புரிதல் என்ன? விந்து விதைப் பையிலிருந்து உருவாகிறது. இப்போது மொழிபெயர்ப்பவர்களுக்கு ஒரு சிக்கல் வந்து விடுகிறது. ஏனென்றால் இப்போதைய அறிவியல் புரிதலுக்கு மாற்றமாக குரான் வசனங்கள் இருக்கின்றன. அதனால் தான் மொழிபெயர்ப்பில் இத்தனை குழப்பங்கள்.

between the backbone and the ribs: யூசுப் அலி

between the loins and ribs: பிக்தல்

between the loins and the breast-bones: அல் பெர்ரி

between the loins [of man] and the pelvic arch [of woman]: ஆஸாத்

முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து: ஜான் டிரஸ்ட்

முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து: பிஜே

நீங்கள் நினைப்பது போல் 1. இது மொழி சார்ந்த குழப்பம் இல்லை. மாறாக அறிவியலுக்கு மாற்றமில்லாமல் குரானை எப்படி மொழிபெயர்ப்பது எனும் குழப்பம். அதனால் தான் அந்த ஏரியாவை சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார்கள். 2. குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு எலும்புகளில் ஒன்று சரியாகவும் இன்னொன்று குழப்பமாகவும் இருக்கிறது என்பதில்லை. இரண்டு எலும்புகளுமே குழப்பம் தான். இதை மேற்கண்ட சில மொழிபெயர்ப்புகள் காட்டுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமே இன்னும் ஏராளம் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. எனவே, இது மொழிபெயர்ப்பில் இருக்கும் பிரச்சனை அல்ல மாறாக, மூலத்தில் அதாவது குரானில் இருக்கும் பிரச்சனை.

ஆனால் பிற திரவங்களோடு இணைந்து விந்துப்பையிலிருந்து வெளியேறுகிறது எனும் தற்போதைய கண்டுபிடிப்பு மொழிபெயர்ப்பு குழப்பங்களில் இருந்து மத வியாபாரிகளை கொஞ்சம் மூச்சுவிட வைத்திருக்கிறது. அதனால் தான் இந்த வசனத்தை மட்டுமே உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விந்து குறித்த குரானின் கருத்து என்ன? என்பதை கண்டறிய வேண்டுமென்றால் பிற வசனங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும். கலப்பான இந்திரியத் துளி – குரான் 76:2, பெண்களுக்கு வெளிப்படும் திரவம் – புஹாரி 130 ஆகியவற்றையும் இணைத்துப் பாருங்கள். குரானின் அல்லது முகம்மதின் கருத்து வெகு சாதாரணமான அந்தக் கால மக்களின் அறிவியலுக்கு மாற்றமான கருத்து என்பது உறுதிப்படும்.

நீங்கள் உண்மையிலேயே முட்டாளா? அல்லது முட்டாளாக நடிக்கிறீர்களா? என்பது தெரியவில்லை. விந்துப்பையிலிருந்துதான் விந்து வெளியேறுகிறது என குர்ஆன் கூறுகிறது அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கும் படசத்தில் குர்ஆன் 86:7. என்ற வசனத்திற்கான தமிழ் மொழியாக்கத்தை நீங்கள் சுயமாக கூறுங்கள் என கேட்டால் அந்த குரானில் தமிழ் மொழி பெயர்ப்பு அப்படி இருக்கிறது இந்த குரானில் தமிழ் மொழி பெயர்ப்பு இப்படி இருக்கிறது என்று வியாக்கியானப்படுத்துகிறீர்கள். இதுவா அறிவுக்கு அழகு? தவறு என நிரூபிக்க வேண்டுமானால் நீங்கள் சுயமாக குர்ஆன் 86:7. வசனத்திற்கான மொழிபெயர்ப்பை சுயமாக கூறி வாதிடுங்கள் அதுவே உங்களுக்கு அழகு. அதை விடுத்து பித்து பிடித்ததுபோல் உளராதீர்கள்.

நண்பர் யாஸீன்,

விந்துப்பையிலிருந்து தான் விந்து வெளியேறுகிறது என குரான் கூறவில்லை.

இதை அரபு மொழியில் புலவராகி குரானை மொழிபெயத்த பின்னர் தான் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் தேவை இல்லை. இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை நாடுகிறேன். இதில் எதுவும் தவறு இருக்கிறதா? அல்லது ஏற்றுக் கொள்கிறவர்கள் மட்டும் தான் இருக்கும் மொழிபெயர்ப்புகளை நாடவேண்டும் ஏனைய அனைவரும் சொந்தமாக அரபிலிருந்து மொழிபெயர்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குரானில் ஏதும் வசனம் இறக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒன்றும் இறக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பை நான் நாடுகிறேன்.

மொழிபெயர்ப்புகள் வழியாக (இஸ்லாமியர்கள் எப்படி குரனை அறிந்து கொள்கிறார்களோ அது போலவே) குரானை அறியும் நான், குரானில் தவறுகள் பிழைகள் இருப்பதாக கருதும் இடங்களை முன்வைத்திருக்கிறேன். அதில் ஒன்று தான் விந்து குறித்த இந்தக் கட்டுரை. இதில் என்னுடைய கருத்தை மறுத்து வாதிட வந்திருக்கும் நீங்கள் நீங்கள் சொந்தமாக மொழிபெயர்க்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டுகிறீர்கள். மன்னிக்கவும் என்னுடைய வேலை அதுவல்ல. குரானில் மலிந்து கிடக்கும் தவறுகளையும் இன்னபிறவைகளையும் சுட்டிக்காட்டுவதன் வழியாக மக்களை ஒன்றிணைக்க விரும்புவது தான் என்னுடைய வேலை. அதைத்தான் நான் செய்ய முடியும்.

விதயத்துக்கு வருவோம். விந்துப்பையிலிருந்து தான் விந்து வெளியேறுகிறது என குரான் கூறவில்லை. விந்துப்பை என்ற ஒன்று இருக்கிறதா என்பதே குரானுக்கோ அல்லது அதைச் சொன்ன முகம்மதுவுக்கோ தெரியாது. அவர் சொன்னதெல்லாம், அன்றைய காலகட்டத்தின் புரிதலின் படி முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து (அல்லது அந்தப் பகுதியில் ஏதோ ஓர் இடத்திலிருந்து) வெளிவருகிறது என்பது தான். இதில் அறிவியலுக்கோ வேறு எதுவுக்கோ இடம் ஒன்றும் இல்லை.

அந்த வசனத்தின் மூலம் மட்டுமல்ல குரானுக்கோ, அதைச் சொன்ன முகம்மதுவுக்கோ அந்தக் காலகட்டத்து அறிவைத் தாண்டி வேறொன்றும் தெரியாது என்பதை மற்றொரு குரான் வசனத்தையும், ஹதீஸையும் சுட்டிக் காட்டி விளக்கியுள்ளேன். உங்களால் முடிந்தால் இதை தவறு என்று நிரூபியுங்கள். இறுதியில் என்னுடைய கருத்து தவறாக இருந்தால் அதிலிருந்து நான் மாறி சரியான கருத்தின் பக்கம் வந்து விடுகிறேன். ஒருவேளை உங்களுடைய கருத்தில் தவறு இருந்தால் அதிலிருந்து மாறி சரியான கருத்தின் பக்கம் வந்து விடுகிறேன் என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? இயன்றால் அதைச் செய்யுங்கள். மாறாக, அரபு மொழியில் இருந்து நானே மொழிபெயர்த்துத் தான் எதையும் சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.

பின்குறிப்பு: முட்டாள், முட்டாள்தனம், ஈனச் செயல், பித்துப்பிடித்தவன், உளரல் .. .. .. போன்ற சொல்லாடல்கள் இன்றி நாகரீகமாக உங்களால் உரையாட முடியாதா?

மொழியாக்கம் என்பது புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை மட்டுமே. ஆனால் அது 100% நிவர்த்தி செய்யுமா என்றால் இல்லை என்றே கூறலாம், மேலும் குர்ஆன் என்பது சாதாரண வசன நடையில் இல்லை. அது செய்யுள் நடையில் இருக்கிறது அதாவது கவிதையைப் போன்ற நடையில் இருக்கிறது. அதுவும் அரேபியர்களை வியப்பில் ஆழ்த்திய மிக உயர்ந்த நடையில், மனிதர்களால் இயற்ற இயலாத வகையில் உயர் இலக்கணக்கணங்களை கொண்டு இருக்கிறது. அதானல்தான் குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் குர்ஆன் தங்கள் காதுகளில் விழுந்தால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விடுவோமோ என அஞ்சி அரபுகள் தங்களது காதுகளை பொத்திக்கொண்டனர். மற்றவர்கள் கேட்டுவிடாமல் இருக்கும்படியும் மக்களை தடுத்தனர். குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என நிரூபிக்க அது பல சான்றுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் இந்த இலக்கண வகையும் ஒன்று. அதேபோல் பலவித முன்னறிவிப்புகளும் ஒன்று. அதேபோல் அறிவியல் சான்றுகளும் ஒன்று. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல அறிவியல் சான்றுகளையும் தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது. அதனால்தான் உலகின் பல விஞ்ஞானிகள்கூட இஸ்லாத்தை ஆய்வுசெய்து இஸ்லாத்தை ஏற்கின்றனர். குரானில் முரண்பாடுகள் இல்லாத காரணத்தால்தான் உலகம் முழுவதும். அனைவரும் ஒத்த குரலில் ஆதரிக்கின்றனர். அப்படி முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் யாரும் இஸ்லாத்தை தழுவவும் மாட்டார்கள். இந்து மதத்தை இந்துக்களே விமர்சிப்பது போல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களே விமர்சித்திருப்பார்கள். ஆனால் உலகில் மற்ற மதத்தினராலும் விரும்பி ஏற்கப்படும் மதமாக இஸ்லாம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலகில் எதிரிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகும் மார்க்கமும் இஸ்லாம்தான் அதிக வளர்ச்சி கானும் மார்க்கமும் இஸ்லாம்தான். இஸ்லாம் உண்மை என்பதே இதற்கு காரணம்!. ஆகவே ஒன்றை குறை கூறுவதற்கு முன்னதாக அதுபற்றி முடிந்தவரை முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் செயல்படுவதே நன்று!

மொழி பெயர்ப்புகள்:

between the backbone and the ribs: யூசுப் அலி

between the loins and ribs: பிக்தல்

between the loins and the breast-bones: அல் பெர்ரி

between the loins [of man] and the pelvic arch [of woman]: ஆஸாத்

முதுகந்தண்டுக்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து: ஜான் டிரஸ்ட்

முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து: பிஜே

குர்ஆன் மொழிபெயர்ப்பில் ஏன் இத்தனை குளறுபடிகள் என்றால் இவை அனைத்திற்கும் இணையான ஒரு சொல்லாடல் குர்ஆனில் கவிதை நடையில் கையாளப்பட்டிருக்கிறது என புரிந்துகொள்வதே சரியான விளக்கம். எனவே இந்த மொழிபெயர்ப்புகள் தவறானவை அல்ல!

விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என்பதை 1400 வருடங்களுக்கு முன்பு கூற வேண்டுமானால் எப்படி கூறுவது? விந்துப் பையிலிந்து விந்து வெளியேறுகிறது என்று நேரடியாக கூற முடியுமா? அப்படி கூறினால் விந்துப்பை என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கு எப்படி புரியும்?. சொல்கின்ற வார்த்தை அந்த மக்களுக்கும் புரிய வேண்டும், பிற்கால மக்களுக்கும் புரிய வேண்டும் என்றால், இந்த விதத்தில்தான் சொல்ல முடியும். ஏனெனில் குர்ஆன் என்பது முக்காலத்துக்கும் பொருத்தமானது.

விந்துப்பையில் இருந்து விந்து வெளியேறுகிறது என கூறுவதுதான் அறிவுப்பூர்வமானது. ஆனால் உங்களுடைய கட்டுரைப்படி ஆண்குறியிலிருந்து விந்து வெளியேறுகிறது என்று கூறுவதற்கு எந்த விதமான அறிவு தேவை என்று தெரியவில்லை.

மறைவான அறிவுப் பூர்வமான விஷயங்களை இரத்தினச் சுருக்கமாக கூறுவதே குர்ஆனின் அழகு.

உங்களுடைய கருத்து தவறாக இருந்தால் அதிலிருந்து மாறி சரியான கருத்தின் பக்கம் வந்து விடுவதாக கூறியிருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ். இது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நேர்மையான சிந்தனை உண்மையாக இருந்தால் உங்களை நேர்வழி நடத்த அல்லாஹ் போதுமானவன். அவனே உள்ளங்களை புரட்டுபவன். உங்களுக்கும் அருள்புரிந்து நேர்வழி காட்டுவானாக! ஆமீன்.

என்னையும் அதேபோல் சரியான கருத்தின்பால் வருவீர்களா? என வினவியுள்ளீர்கள். நான் சரியான கருத்தை ஏற்ற காரணத்தினால்தான் இந்து மதத்தில் ஓர் உயர் குலத்தில் பிறந்தும்! பிறந்த ஊரிலிருந்தும் வெளியேற்றப்பட்டு தனியொருவனாக வாழ்க்கையின் அனைத்து துயர்களையும் எதிர்கொண்டு இன்றைய நிலையில் ஒரு குடும்ப தலைவனாக உங்களுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் நான் குர்ஆனை விளங்கி இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை ஏற்றவன். சரியான கருத்தை ஏற்பதில் நான் உங்களுக்கு முன்னோடி.

சரியான புரிதலுள்ள மனிதர்களுக்கு இந்த விளக்கம் போதுமென்றே தோன்றுகிறது. அல்லாஹ் போதுமானவன்.

அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர் ஆன்: 14:4.)

நண்பர் யாஸீன்,

உங்கள் பதிலின் முதல் பத்தி மொழிபெயர்ப்பில் தொடங்கி, குரானின் விதந்தோதல்களை இறுப்பூறெய்தலாக விவரிக்கிறது. அதில் ஓர் எளிய இஸ்லாமியனுடைய மத நம்பிக்கையின் புளகத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பதால் கடந்து செல்கிறேன். தவிரவும் அந்த விதந்தோதல்கள் எல்லாம் தவறானவை என்று ஏற்கனவே இந்த தளத்தின் பல கட்டுரைகளில் ஆங்காங்கே விளக்கப்பட்டிருக்கிறது. எனவே, நேரடியாக விந்து குறித்த குரானின் வசனம் தொடர்பான விவாதத்துக்கு வந்து விடுகிறேன்.

குரானின் குறிப்பிட்ட அந்த வசனத்தின் மொழிபெயர்ப்பில் இருக்கும் பல்வேறு முரண்பாடுகளுக்கு குரானின் செறிவு மிக்க, திறன் மிக்க சொல்லாடல் தான் காரணமா? இல்லை. அந்த குரான் வசனத்தில் சொற்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. “யக்குறுஞ் மின் பாய்னி வுல் சுல்ஃபி வத் தரைபி” சுல்பி எனும் சொல்லுக்கு (மூலச் சொல் சலபு என்பது பொருள் சிலுவை. சிலுவை போன்ற வடிவத்தில் இருப்பதால் தண்டுவடத்தொடருக்கு சுல்பி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது) தண்டுவடம் என்பதும் தரைபி எனும் சொல்லுக்கு (மூலச் சொல் துறாப் என்பது பொருள் மண். ஹவ்வாவை உருவாக்க ஆதமின் விலா எலும்பை மண்ணாக பயன்படுத்தியதால் விலா எலும்பைக் குறிக்க தரைபி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது) விலா எலும்பு என்பதும் தன் பொருள். இதில் மீப்பெரும் அறிவியல் தரவுகளைக் கொண்ட திறன்மிகு செறிவான கவிதை நயம் கொண்ட சொற்கள் என்று எதுவும் இல்லை. இயல்பான நடைமுறைச் சொற்கள் தாம். இந்தச் சொற்களை மொழிபெயர்ப்பதற்கு குழப்பமோ, முரணோ ஏற்பட வேண்டிய தேவை எதும் இல்லை. தேவை எங்கு இருக்கிறது என்றால், குரானின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பத்தின் மீது தான். அது தவறே இல்லாதது, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது என்பன போன்ற புனித பிம்பங்கள் தாம். அந்த புனித பிம்பத்தை உடைத்து விடக் கூடாது என்பதனால் தான் குழப்பமும் முரண்களும் ஏற்படுகின்றன.

விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என்று கூறுவது அந்த நேரத்தில் கூறவே கூடாத, கூறவே இயலாத, கூறினால் முகம்மதின் திட்டங்களை குலைத்துப் போடும் அளவிலான சொற்களா? அப்படி ஒன்றும் இல்லையே. உடலில் விந்துப்பை என்று ஒன்று இருக்கிறது அதிலிருந்து தான் விந்து வெளியேறுகிறது என்று கூறினால் அந்த காலத்தில் பெரும் சச்சரவுகள் ஏற்பட்டு விடும் அளவுக்கான சூழல் இருந்ததா? ஒன்றும் இல்லையே. பின் அந்த சொல்லைக் கூறுவதிலிருந்து தடுக்கும் அளவுக்கு என்ன பிரச்சனை முகம்மதுவுக்கு இருந்தது? இன்ன காரணத்தினால் தான் நேரடியாக கூறுவதிலிருந்து தவிர்த்து மறைமுகமாக கூறினார் என்று எதேனும் ஒரு காரணம் கூற முடியுமா?

மாறாக, அந்தக் காலத்தில் பெரும் சச்சரவை ஏற்படுத்திய, மக்களின் நம்பிக்கைகளை புரட்டிப் போட்ட, பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திய, சமூகத்தில் பிளவை ஏற்படுத்திய, மக்களுக்கு புரியாமல் மீண்டும் மீண்டும் ஹதீஸ்களில் விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய பல சொல்லாடல்களை, வசனங்களை, கருத்துகளை முகம்மது குரானில் கூறியிருக்கிறார். பெரிய பெரிய விசயங்களையெல்லாம், பெரிய பெரிய ஆபத்து நேர்ந்து விடக்கூடும் என பகை சூழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் வெகு சாதாரணமாக குரானில் கூறியிருக்கிறார் முகம்மது. அப்படியிருக்க விந்துப்பை என்று ஒன்று உடலில் இருக்கிறது, அதிலிருந்து தான் விந்து வெளியேறுகிறது என்று சொல்வதில் முகம்மதுவுக்கு என்ன முடை இருந்திருக்க முடியும்? ஒரே ஒரு முடையைத் தவிர. விந்துப்பை எனும் சொல் அந்தக் காலத்தில் எந்தவித சச்சரவையும் ஏற்படுத்தி இருக்காது, மக்களின் நம்பிக்கைகளை புரட்டிப் போட்டிருக்காது, பழக்க வழக்கங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காது, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி இருக்காது, மக்களுக்கு புரியாமலும் போயிருக்காது. என்றால் என்ன தயக்கம் முகம்மதுவுக்கு? அவருக்கு அந்த விசயம் தெரியாது என்பதைத் தவிர. நீங்கள் நேர்மையாளராக இருந்தால் இது குறித்து மீளாய்வு செய்யுங்கள். மாறாக, உங்கள் மத அறிஞர்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததை அப்படியே இங்கே வந்து ஒப்பிக்காதீர்கள்.

முத்தாய்ப்பாக ஒரு வாக்கியத்தைக் கூறியிருக்கிறீர்கள், \\ மறைவான அறிவுப் பூர்வமான விஷயங்களை இரத்தினச் சுருக்கமாக கூறுவதே குர்ஆனின் அழகு // என்று. குரானின் ஆறாயிரத்துச் சொச்சம் வசனங்களில் கூறியது கூறலாக மீண்டும் மீண்டும் வரும் வசனங்கள் இல்லையா? முன்னொட்டுகளாக, பின்னொட்டுகளாக திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப வரும் வாழ்துக்களும் வசைகளும் இல்லையா? புரியாத, புழக்கத்தில் இல்லாத, பொருள் இல்லாத வீண் சொற்கள் பல இடங்களில் இடம்பெற்றிருக்க வில்லையா? அறிவியலுக்கு மாற்றான, அறிவியலுக்கு எதிரான விசயங்கள் இல்லையா? சிந்தித்துப் பாருங்கள். விரிவஞ்சி நான் தவிர்க்கிறேன்.

நண்பரே, உங்கள் பழைய வாழ்வைக் கூறியிருந்தீர்கள் வாழ்த்துக்கள். நான் ஓர் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்து குரான் ஹதீஸை உணர்ந்து கற்றதினால் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவன். எப்போதுமே நான் சரியானதின் பக்கம் நிற்க வேண்டும் என்பதில் உறுதியானவன். நீங்களும் அவ்வாறு இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறாயின், குரான் 76:2, புஹாரி 130 ஆகியவற்றோடு இணைத்து இந்த வசனத்தின் பொருளைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று உங்களைக் கோருகிறேன்.

குர்ஆனில் கவிநயம் இல்லை என்று கூறும் நீங்களே குரான் 86:7 வசனத்தை விவரித்திருக்கும் விதத்தை பாருங்கள்.

“அந்த குரான் வசனத்தில் சொற்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. “யக்குறுஞ் மின் பாய்னி வுல் சுல்ஃபி வத் தரைபி” சுல்பி எனும் சொல்லுக்கு (மூலச் சொல் சலபு என்பது பொருள் சிலுவை. சிலுவை போன்ற வடிவத்தில் இருப்பதால் தண்டுவடத்தொடருக்கு சுல்பி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது) தண்டுவடம் என்பதும் தரைபி எனும் சொல்லுக்கு (மூலச் சொல் துறாப் என்பது பொருள் மண். ஹவ்வாவை உருவாக்க ஆதமின் விலா எலும்பை மண்ணாக பயன்படுத்தியதால் விலா எலும்பைக் குறிக்க தரைபி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது) விலா எலும்பு என்பதும் தன் பொருள்.”

நீங்கள் விவரித்திருக்கும் விதத்திலிருந்தே இதில் கவிநயம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. மேலும் கவிநயம் என்பது இயற்றப்பட்ட மொழியில் மட்டுமே விளங்க முடியுமே அன்றி மொழிமாற்றம் செய்து இதில் கவிநயம் இல்லை என்பது முட்டாள்தனம். இருப்பினும் இது நமது விவாதத்திற்கான பொருள் இல்லை எனவே இதை நாம் தவிர்ப்போம்.

குர்ஆன் என்பது முகமது நபி (ஸல்) அவர்களின் வார்த்தை என குறிப்பிடுகிறீர்கள். இது நபியின் வார்த்தை அல்ல!. இறைவனின் வார்த்தை!. எனவே நபி ஏன் இப்படி கூறவில்லை என கேட்பதைவிட இறைவன் ஏன் இப்படி கூறவில்லை என கேளுங்கள்.

மேலும் “விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என்று கூறுவது அந்த நேரத்தில் கூறவே கூடாத, கூறவே இயலாத, கூறினால் முகம்மதின் திட்டங்களை குலைத்துப் போடும் அளவிலான சொற்களா?” என கேட்கிறீர்கள்.

விந்துப்பை என்றால் என்னவென்றே தெரியாத மக்களிடம் விந்துப்பை என்று ஒரு உறுப்பு இருக்கிறது. அது எவ்விதம் செயல்படுகிறது என அறிவியல் பாடம் ஏன் நடத்தவில்லை, அப்படி ஒரு பாடம் நடத்தினால் அதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி கேடபது எப்படி அறிவுடைமை ஆகும் என தெரியவில்லை. அதை உங்களை படைத்த இறைவனிடம்தான் நீங்கள் கேட்க வேண்டுமே தவிர எங்களிடம் அல்ல! புரிந்து கொள்ளுங்கள் இது அறிவியல் பாடம் நடத்த வந்த புத்தகம் அல்ல!. அறிவியல் சார்ந்த சொருகல்கள் இருப்பது இது மனிதனின் வார்த்தையல்ல என்பதை விளக்கவே!. அன்றி வேறில்லை!

இருக்கின்ற அறிவியல் சார்ந்த வசனங்கள் அறிவியலுக்கு முரண்படாத வகையில் இருக்கின்றதா? என பார்க்க வேண்டுமே தவிர, அது அப்படி இருந்திருக்கலாமே இது இப்படி இருந்திருக்கலாமே என்பது அறிவுடைமை ஆகாது.

விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என தெரிந்துகொண்டே, விந்துப்பை பற்றி ஒரு வார்த்தைகூட உங்களது கட்டுரையில் எழுதாமல் அதை முழுமையாக மறைத்து, ஆண்குறியிலிருந்து விந்து வெளியேறுகிறது என எழுதி மடமையை விதைப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்படேயன்றி வேறில்லை!. உங்களது கட்டுரையிலேயே உண்மை இல்லாத போது உங்களது விவாதத்தில் எப்படி உண்மை இருக்கமுடியும். நீங்கள் என்னதான் மடமையை கையில் பிடித்துக்கொண்டு ஓலமிட்டாலும் கடைந்தெடுத்த மடையர்களைத்தவிர வேறெவரையும் அது எட்டாது.

நண்பர் யாஸீன்,

நான் கேட்டிருப்பதற்கான பதில் உங்கள் பதிவில் இல்லை எனக் கருதுகிறேன். கடந்த பதிவில் உள்ளவற்றை சுருக்கமாக கூறுகிறேன். 1. குறிப்பிட்ட அந்த வசனம் எளிமையான நடைமுறைச் சொற்களைக் கொண்டதாகவே இருக்கின்றன என்பதை அருஞ்சொற்பொருளுடன் விளக்கியிருக்கிறேன். 2. மொழிபெயர்ப்பின் குழப்பங்களுக்கு சொற்செறிவு காரணமல்ல, புனிதம் உடைந்து விடாமல் காப்பற்றுவது தான் காரணம் என்பதை விளக்கி இருக்கிறேன். 3. மறைபொருளாக கூறவேண்டிய தேவை முகம்மதுவுக்கு இல்லை என்றும், இதைவிட மறைபொருளாக தேவை அதிகம் கொண்ட வேளைகளில் கூட முகம்மது நேரடியாகவே கூறியிருக்கிறார் என்று எடுத்துக் காட்டியுள்ளேன். இவை எதற்கும் உங்களது பதிவில் பதில் இல்லை.

குரானில் அறிவியல் வாசம் கொஞ்சமும் இல்லை என்று தான் நான் கூறிக் கொண்டிருக்கிறேன். அதை மறுத்து அறிவியல் இருக்கிறது என்று கூற வந்த நீங்கள், இப்போது அது அறிவியல் புத்தகமல்ல என்றும், வியாக்கியானங்களை நீங்கள் இறைவனிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள். இந்தக் கட்டுரையில் விவாதம் செய்ய வந்தது நீங்கள், நான் கேள்விகளை உங்களிடம் கேட்காமல் இறைவனிடம் கேட்கவேண்டுமா? நண்பரே, நான் இறைவன் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விட வேண்டாம். தவிரவும் என்னுடைய பல கட்டுரைகள் வழியாக குரான் இறைவனின் வார்த்தைகள் இல்லை, அவை முகம்மதின் வார்த்தைகளே என்பதை நிரூபித்துள்ளேன். தேவை ஏற்படின் படித்துப் பாருங்கள்.

என்னுடைய கட்டுரையில் விந்துப்பையிலிருந்து விந்து வெளியேறுகிறது என்று தெரிந்து கொண்டே அதைக் கூறாமல் மறைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளீர்கள். தவறான புரிதல் அல்லது திட்டமிட்டு திசைதிருப்பும் போக்கு. உங்களைப் போன்றோர் தாம் அந்த வசனத்திலிருந்து விந்துப்பை எனும் பொருளை கற்பிதமாக உருவாக்கிக் கொள்கிறார்களேயன்றி நானில்லை. எனவே விந்துப் பை என்று கற்பனையாக கூறும் தேவை எனக்கு இல்லை. கற்பனையாக கூறுவோர் உங்களைப் போன்றோர் என்பதால் அதை நிரூபிக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

உங்களுக்கு நான் நன்றி கூறியாக வேண்டும். உங்கள் வசைச் சொற்கள் நான் சரியான கேள்விகளைக் கேட்டிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திகிறது. உங்களிடமிருந்து பாராட்டுதல்கள் வந்திருந்தால் தான் நான் கூச்சப்பட்டிருக்க வேண்டும். போகட்டும். ஒரு விதயம் உறுதிப்படுகிறது. தவறு என நிரூபித்தால் சரியானதின் பக்கம் வந்து விடுகிறேன் என உறுதியளித்து, அது போல உங்களையும் உறுதியளிக்க கேட்டிருந்தேன். நீங்களோ உங்கள் நிகழ்வு ஒன்றைக் கூறி உறுயளிப்பது போலக் கூறியிருந்தீர்கள். ஆனால் நான் கூறியதை எந்த அளவுக்கு மீளாய்வு செய்தீர்கள்? என்பது கேள்விக்குறி. ஆனால் விவாதத்தில் இது ஓர் இன்றியமையாத பண்பு. நீங்கள் கூறுவதை நானும், நான் கூறுவதை நீங்களும் மீளாய்வுக்கு எடுத்துக் கொண்டே ஆகவேண்டும். இப்படியான மீளாய்வுக்கு எந்த மதவாதியும் ஆயத்தமாக இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களிடம் புனிதம் இருக்குமே தவிர, உண்மை இருப்பதில்லை. நீங்கள் மட்டுமல்ல, தமிழில் மதப்பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்கள் சிலரிடம் நான் சவாலே விட்டிருக்கிறேன். விவாத நேர்மையுடன் இருப்பீர்கள் என உறுதியளித்தால் உங்களை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன் என்று. அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, உங்களால் ஏற்றுக் கொள்ள முடியமா?

பின்குறிப்பு: கடைந்தெடுத்த மடையர்களைத் தவிர வேறெவரையும் என்னுடைய பதிவு எட்டாது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பதிவு உங்களை எட்டியதால் தான் நீங்கள் மறுப்பு எழுத முன்வந்திருக்கிறீர்கள் என்பது உங்கள் கவனத்திற்கு. அதற்காக நான் உங்களை அப்படிக் கூறுகிறேன் என நீங்கள் எண்ணிவிடலாகாது.

நான் அனைத்திற்கும் பதிலளித்திருந்தேன். ஆயினும் உங்களை அது திருப்திபடுத்தவில்லை என்பதால் பதில் இல்லை என்று கூறிவிட்டீர்கள்.

மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள். முதல் இரண்டு கேள்விகளும் அராபிய இலக்கண தொடர்புடையது. உங்களுக்கும் அரபு மொழி புலமை இல்லை (நீங்கள் கூறியதுதான்), எனக்கும் இல்லை. ஆகவே அதை தவிர்க்கிறேன். மூன்றாவது கேள்வியை பார்ப்போம்.

ஏன் நேரடியாக விந்துப்பை என்று பெயர் கூறவில்லை என்பதே உங்களது ஆதங்கமாக இருக்கிறது. என்ன அறிவுப்பூர்வமான பதில் கூறினாலும் உங்களை திருப்திபடுத்த இயலவில்லை. எனவே உங்களது கண்னோட்டத்திலேயே இப்போது பார்ப்போம்.

விந்துப்பை என்று நேரடியாக குர்ஆன் பெயர் கூறியிருந்தால் (அது மக்களுக்கு புரியாவிட்டாலும் பரவாயில்லை) அந்த வார்த்தையைக் கொண்டே எளிமையாக குர்ஆனை பொய்ப்படுத்தி விடலாம் என்பதை கவனிக்கவும்.

விந்துப்பையை கண்டுபிடித்து அதை உலகுக்கு அறிமுகம் செய்யும் அறிவியல் கண்டுபிடிப்பாளர் அதற்கு இடும் பெயரும் குர்ஆனில் ஏற்கனவே விந்துப்பைக்காக கூறியிருக்கின்ற பெயரும் ஒத்துப்போகாது. வேண்டுமென்றே குர்ஆன் வைத்த பெயருக்கு மாற்றமாகக்கூட பெயர் வைக்க முடியும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களை போன்றோர் என்ன செய்வீர்கள்? குர்ஆன் விந்துப்பை குறித்து கூறவில்லை. அது தவறாக எதையோ சம்பந்தமில்லாத ஒரு பொருள் பற்றி கூறுகிறது. எனவே குர்ஆன் கூறுவது தவறு. மேலும் உங்களின் மனோ இச்சைக்கு தகுந்த வசை பாடுவீர்கள் இல்லையா?

எனவேதான் விந்துப்பை என்ற பொருளின் பெயர் அறியப்படாத நேரத்தில், விந்துப்பை என்று பெயர் கூறுவதைவிட விந்துப்பை இருக்கும் இடம்பற்றி கூறுவதே உசிதமானது. எவராலும் பொய்பிக்க இயலாதது.

அறிவு சிறுத்தவர்களுக்கே இதுபோன்ற விளக்கங்கள் தேவைப்படுகிறது. என்னசெய்வது!!!

ஒருவேளை இதிலும் நீங்கள் திருப்தியடையாமல், எல்லோரும் எளிதில் ஏற்கும் விதமாக இன்னும் நன்றாக விளக்கமாக குர்ஆன் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கி இருக்கலாமே, அப்படி விளக்கி இருந்தால் நாங்களும் ஏற்றுக்கொண்டுவிடுவோமே என்று நீங்கள் புலம்பக்கூடும்.

இதுபோன்ற புலம்பல்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இருந்தது. “இவரது இறைவனிடமிருந்து இவருக்கு தக்க சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி உண்டு. (இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது. நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன. எனினும் அவற்றைக் கொண்ட (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு. எனினும் அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு. எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக கேடுகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர். (7:179)

பின்குறிப்பு: கடவுள் இல்லை என்கிறீர்கள், ஆனால் குர்ஆன் கடவுள் இருக்கும் இடம்பற்றி தெளிவாக கூறுகிறது. எனவே உங்களால் முடிந்தால் மேலும் நீங்கள் உண்மையான நாத்திகவாதி என்றால் அங்கு சென்று பார்த்துவிட்டு வந்து உறுதி செய்யவும்.

நண்பர் யாஸீன்,

குறிப்பிட்ட அந்த வசனம் மொழிபெயர்ப்புப் பிரச்சனை அல்ல எனும் என்னுடைய கூற்றை மறுத்து எதையுமே நீங்கள் கூறவில்லை. எளிமையான நடைமுறைச் சொற்களைக் கொண்ட வசனத்தின் மொழிபெயர்ப்பில் குழப்பம் ஏற்பட வேண்டிய தேவை என்ன? இதற்கு உங்கள் பதிவு எதிலாவது பதில் இருக்கிறதா? இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். இதைத் தான் நீங்கள், நம் இருவருக்குமே அரபு மொழியில் புலமை இல்லை எனவே தவிர்க்கிறேன் என்கிறீர்கள். நமக்கிடையேயான விவாதத்தின் கருவே அதில் தானே நிலை கொண்டிருக்கிறது. நான் அதை மொழிபெயர்ப்புப் பிரச்சனை இல்லை மூலத்தின் (குரானின்) பிரச்சனை என்கிறேன். நீங்களோ மொழிபெயர்ப்புப் பிரச்சனை தான் என்கிறீர்கள். இந்த நோக்கில் உங்களின் பதில்களை தொகுத்துப் பாருங்கள், அதிலிருக்கும் போதாமை உங்களுக்கே வெளிப்படும்.

முகம்மது அந்த நேரத்தில் இருந்த புரிதலை மட்டும் தான் வெளிப்படுத்தினார். அது கிரேக்க அறிவியல் புரிதல் பின்னர் அது நவீன அறிவியலால் மாற்றப்பட்டது என்றேன். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.

ஒருவேளை அது அந்த நேரத்தின் கருத்துக்கு மாற்றமாக இருந்திருந்தால் அதற்கான விளக்கம் ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கும். அப்படி எதுவும் இல்லை என்றேன். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.

இது குறித்த முகம்மதின் அல்லது குரானின் புரிதல் என்ன? என்பதற்கு வேறொரு வசனத்தையும், ஹதீஸையும் எடுத்துக் காட்டி இருந்தேன். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.

எனக்கு அரபு மொழியில் புலமை இல்லை என உங்களிடம் கூறியதாக நினைவு இல்லை. இருப்பினும், குறிப்பிட்ட அந்த வசனத்தின் சொற்களை அருஞ்சொற்பொருளுடன் விளக்கி இருந்தேன். நானே மொழிபெயர்க்க வேண்டும் என அடம் பிடித்த நீங்கள், நான் விளக்கியது சரியா தவறா என்பது குறித்து எதுவும் கூறவில்லை. கடந்து விட்டீர்கள். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.

அந்த அருஞ்சொற்பொருளின் வழியே தான் மொழிபெயர்ப்பில் குழப்பம் ஏற்படும் தேவை அந்த வசனத்தின் சொற்களில் இல்லை, அதன் கருத்தில் இருக்கிறது என்பதை விளக்கி இருக்கிறேன். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை.

நீங்கள் பதில் கூற எடுத்துக் கொண்ட ஒரே ஒரு விதயம், அது மறை பொருளாக கூற வேண்டிய தேவை ஏன் வந்தது என்பது மட்டுமே. அதுவும் என்னுடைய கருத்தின் மறுப்பாக இல்லாமல் உங்கள் கருத்தின் மறு வடிவமாகவே இருக்கிறது.

கவனிக்கவும் விவாதம் என்பது என் கருத்தை நீங்களும் உங்கள் கருத்தை நானும் மறுத்து தரவுகளுடன் முன்வைப்பது தான். உங்கள் கருத்தை மீண்டும் மீண்டும் வேறு வேறு வடிவத்தில் கூறிக் கொண்டிருப்பதல்ல. விளங்கவும். அதாவது என்னுடைய கருத்தை உறுதியுடன் மறுத்து நிருவுவதின் மூலமே உங்கள் கருத்து வைக்கப்பட வேண்டும். விளங்கவும், உங்கள் கருத்தை மறுத்துத் தான் நான் மேற்கண்ட, 1. கிரேக்கப் புரிதல், 2. ஹதீஸ்களில் இல்லை, 3. வேறொரு வசனம், ஹதீஸ், 4. அருஞ்சொற்பொருள் விளக்கம் போன்ற தரவுகளை வைத்துள்ளேன். யோசித்துப் பாருங்கள். மேற்கண்ட என்னுடைய தரவுகளை மறுத்து நீங்கள் வைத்திருக்கும் தரவு என்ன? இனியேனும் முயலுங்கள்.

இனி உங்களின் மீள் விளக்கத்துக்கு வருகிறேன். விந்துப்பை என்று பெயர் கூற வேண்டிய தேவை இல்லையே. அப்படி பெயர் கூறினால் தான் அந்த வசனத்தின் பொருள் விளங்குமா? என்ன பெயர் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். குரானை தந்ததாக நீங்கள் கற்பனையாக கருந்தும் அந்தப் பேராற்றல் முக்காலமும் உணர்ந்தது தானே. குறிப்பான இந்த இடத்தில் இருக்கும் ஒரு பையிலிருந்து (பெயரைத்தான் மாற்றி வைக்க முடியும் பெயர் இல்லாமல் பை என்று மட்டும் கூறியிருந்தால் யாராவது மறுத்திருக்க முடியுமா?) தான் நிச்சயமாக விந்து வெளியேறுகிறது என்று என்று குரான் கூறியிருந்தால், இன்று நீங்களும் நானும் விவாதிக்க வேண்டிய தேவையே நேர்ந்திருக்காதே. இதை நீங்கள் இறைவனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறாதீர்கள். என்னிடம் இறைவன் விவாதத்துக்கு வரவில்லை. இறைவனின் சார்பாக நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள். எனவே உங்களிடம் தான் நான் கேட்க முடியும். அப்படி கூற முடியாமல் அந்த முக்காலமும் உணர்ந்த பேராற்றலை தடுத்தது எது? ஆக உங்கள் மீள் விளக்கம் எல்லாம் அந்த வசனத்தில் இல்லவே இல்லாத, நீங்கள் கற்பனையாக கருதும் அறிவியல் முன்னறிவிப்பு எனும் ஒன்றை முட்டுக் கொடுப்பதாக இருக்கிறதே அன்றி தரவுகளாக இல்லை என்பதை புரிந்து கொள்ள முயலவும்.

இந்த இடத்தில் இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்க்கலாம். பெயர் கூறினால் நீங்கள் மறுத்துவிட மாட்டீர்களா என புளகமடைகிறீர்களே. குரானை முகம்மது கூறிக் கொண்டிருந்த காலத்தில் கரு உருவாகும் முறை பற்றி யாரும் எதுவும் அறிந்திருக்கவில்லை. அலக் எனும் கட்டியின் மூலம் என்று குரான் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறது. கட்டுரை குறிப்பிடும் வசனத்தில் பெயரை குறிப்பிட்டால் பின் அறியும் மக்கள் எதிரான பெயர் வைப்பதன் மூலம் மறுத்துவிட மாட்டார்களா? என வினா எழுப்பும் நீங்கள் ‘அலக்’ எனும் பெயர் குறித்து என்ன கூறுவீர்கள்? அரபு மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் அலக் என்ற பெயர்ச் சொல் இல்லை. இதனால் குரானின் அந்த வசனத்தை யாரும் பொய்ப்பித்து விட்டார்களா? (அது தவறு என்பது இந்த விவாதத்துக்கு அப்பாற்பட்ட விதயம்) என்றால் இந்த வசனத்துக்கு பெயர் கூறியதால் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் அந்த வசனத்துக்கு பெயர் கூறினால் பிரச்சனை வந்து விடும் என்று நீங்கள் கருதுவீர்களாயின், மன்னிக்கவும் அதற்குப் பெயர் சந்தர்ப்பவாதம். விளக்கம் அல்ல. மீண்டும் கூறுகிறேன். பெயர் கூறி அறிவியல் பாடம் நடத்த வேண்டும் என்று யாரும் குரானிடம் எதிர்பார்க்கவில்லை. கூறுவதை தெளிவாக கூற வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். குருட்டாம் போக்கில் மேற்கு திசையிலிருந்து உங்களுக்கு வேலை கிடைக்கும் என்று ஜோதிடர்கள் பசப்புவதை போன்று பசப்பி இருக்கும் ஒன்றை அறிவியலாக ஒப்ப முடியாது என்று தான் கூறுகிறார்கள். இவ்வளவு தான் இதன் விளக்கம். என்ன செய்வது? கொஞ்சத்திலும் கொஞ்சமேனும் சிந்திக்கும் திறன் இருந்தாலும் கூட இது விளங்கி விடும். விளங்காவிட்டால் .. .. ..! போராடத்தான் வேண்டும். அதற்காக சக மனிதனை கெட்டழி என்று விட்டுவிட முடியுமா?

சிந்தித்துப் பாருங்கள். தேவைப்பட்டால் மீண்டும் வருகிறேன்.

இது உங்களின் முந்தைய பதிலுரை:

“அரபு மொழியில் புலவராகி குரானை மொழிபெயத்த பின்னர் தான் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் தேவை இல்லை. இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை நாடுகிறேன். இதில் எதுவும் தவறு இருக்கிறதா? அல்லது ஏற்றுக் கொள்கிறவர்கள் மட்டும் தான் இருக்கும் மொழிபெயர்ப்புகளை நாடவேண்டும் ஏனைய அனைவரும் சொந்தமாக அரபிலிருந்து மொழிபெயர்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குரானில் ஏதும் வசனம் இறக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒன்றும் இறக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பை நான் நாடுகிறேன்.

மொழிபெயர்ப்புகள் வழியாக (இஸ்லாமியர்கள் எப்படி குரனை அறிந்து கொள்கிறார்களோ அது போலவே) குரானை அறியும் நான், குரானில் தவறுகள் பிழைகள் இருப்பதாக கருதும் இடங்களை முன்வைத்திருக்கிறேன். அதில் ஒன்று தான் விந்து குறித்த இந்தக் கட்டுரை. இதில் என்னுடைய கருத்தை மறுத்து வாதிட வந்திருக்கும் நீங்கள் நீங்கள் சொந்தமாக மொழிபெயர்க்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டுகிறீர்கள். மன்னிக்கவும் என்னுடைய வேலை அதுவல்ல”.

இது உங்களின் தற்போதைய பதிலுரை:

“எனக்கு அரபு மொழியில் புலமை இல்லை என உங்களிடம் கூறியதாக நினைவு இல்லை. இருப்பினும், குறிப்பிட்ட அந்த வசனத்தின் சொற்களை அருஞ்சொற்பொருளுடன் விளக்கி இருந்தேன். நானே மொழிபெயர்க்க வேண்டும் என அடம் பிடித்த நீங்கள், நான் விளக்கியது சரியா தவறா என்பது குறித்து எதுவும் கூறவில்லை. கடந்து விட்டீர்கள். அது குறித்த உங்களின் மீளாய்வு எதுவுமில்லை”.

இதுபோன்று முன்னுக்கு பின்னாக பதிலுரைக்கிறீர்கள்.

உஙகளுடைய புரிதலிலும் தெளிவு இல்லை. உங்களுடைய மீளாக்கத்திலும் தெளிவு இல்லை. எனவே இத்துடன் முடிக்கிறேன். வஸ்ஸலாம்!

அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அர் குர்ஆன் : 25:63)

நண்பர் யாஸீன்,

உங்களின் இந்த முடிவு எனக்கு வியப்பளிக்கவில்லை. தவிரவும் எதிர்பார்த்தது தான். இது போன்ற பல நிகழ்வுகள் என்னுள் இருக்கின்றன. எங்கு பதிலளிக்க முடியாத இடம் வருகிறதோ அங்கு இது போன்ற தப்பித்தல்களைச் செய்ய மதவாதிகள் தயங்குவதே இல்லை. உங்களைப் போன்ற மதவாதிகள் எந்தவித தேடலையும் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை கணந்தோறும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலுக்கு புனுகு தடவிக் கொள்வார்கள், உள்ளில் பார்த்தால் முடை நாற்றம் தாங்க முடியாதாக இருக்கும். புனுகு வாசனையை வெளிப்படுத்துவதாக கருதிக் கொண்டு முடை நாற்றத்தை கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

மொழிபெயர்ப்பு குறித்து என்னிடம் முன்னுக்குப் பின்னான முரண் இருக்கிறதா? குரானை சொந்தமாக நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறினீர்கள். அதற்கு பதிலுரையாக என்னுடைய சொந்த மொழிபெயர்ப்புக்கு தேவை இல்லை. இஸ்லாமியர்கள் எப்படி மொழிபெயர்ப்புகள் மூலம் அறிந்து கொள்கிறார்களோ அந்தப்படியே நானும் அறிந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். காரணம் என்னுடைய இஸ்லாம் தொடர்பான கட்டுரைகள் அனைத்திலும் நான் மொழிபெயர்ப்புகளையே பயன்படுத்தி இருக்கிறேன். என்னுடைய சொந்த மொழிப்புலமையை அல்ல. காரணம், தவறு என்றாலும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கொண்டிருக்கக் கூடிய மதம் மீதான விமர்சனம் என்றால் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை பயன்படுத்துவது தான் பொருத்தமானது என்பதால். மேலதிக விளக்கம் தேவை என்றால் என்னுடைய புலமையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் என் எண்ணம். அதைத் தான் நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். (இந்த வசனத்துக்கான அருஞ்சொற்பொருளை என்னுடைய மொழிப் புலமையிலிருந்து தான் கூறியிருந்தேன்) இதைத்தான் நான் உங்களுடனான இந்த விவாதத்திலும் பயன்படுத்தினேன். அதேநேரம் எனக்கு அரபுப் புலமை இல்லை என்பதை உங்களிடம் வெளிப்படுத்தவும் இல்லை. ஆனால் நீங்களோ இருவருக்குமே அரபு மொழிப் புலமை இல்லை என்பதாக பொதுமைப் படுத்தி இருந்தீர்கள். இதை மறுப்பது எப்படி முரண்பாடு ஆகும்? உங்களைப் பொருத்தவரை விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு காரணம் தேவை. அதற்காக இதை பயன்படுத்திக் கொண்டீர்கள், அவ்வளவு தான்.

என்னிடம் இல்லாத முரண்பாட்டை கண்டுபிடித்த நீங்கள் கடைசியாகவும் ஒரு முரண்பாட்டை உங்களுக்கு நீங்களே வரித்துக் கொண்டிருக்கிறீர்களே, கவனிக்கவில்லையா? முத்தாய்ப்பாக ஒரு வசனத்தை பயன்படுத்தி இருக்கிறீர்களே அதைச் சொல்லுகிறேன்.

அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அர் குர்ஆன் : 25:63)

இந்த விவாதத்தைப் பொருத்தவரை பணிவுடன் நடந்து கொண்டது யார்? தொடக்கம் முதலே முட்டாள், உளரல், ஈனச் செயல், பித்துப் பிடித்தவன் என என் மீது தொடர்ச்சியாக வசைச் சொற்களை வீசிக் கொண்டிருந்தீர்கள். மாறாக நானோ, நண்பரே என்று பணிவுடனும் வாஞ்சையுடனும் தான் உங்களை விழித்துக் கொண்டிருந்தேன். என்றால் யார் பணிவுடன் நடந்து கொண்டது? யார் மூடத்தனமாக நடந்து கொண்டது?

இந்த விவாதத்தை முதலில் தொடங்கியது யார்? நான் உங்களை அழைத்து விவாதத்தை தொடங்கினேனா, அல்லது நீங்கள் என்னை அழைத்து விவாதத்தை தொடங்கினீர்களா?

உங்களுக்கு எதிராக நீங்களே குரான் வசனத்தை பயன்படுத்திக் கொண்டு அது எனக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக புளகமடைந்து கொள்கிறீர்கள். உங்கள் தேடலின் எல்லை இந்த மட்டில் தான் இருக்கிறது என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

உங்களின் தொடர்புக்கும் கருத்தாடலுக்கும் நன்றி.

பின்குறிப்பு: நண்பர் யாஸீன் விட்ட இடத்திலிருந்து இந்த விவாதத்தை யாரேனும் தொடங்க வேட்கை கொண்டிருந்தால் அவர்களை வரவேற்கிறேன். யாரேனும் உண்டா .. .. ..?

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s