
முன்னுரை
இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும், வீரியத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு என்பது மிகையான கூற்றல்ல. அவைகளில் குறிப்பிடத் தகுந்த போராட்டங்களில் ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 22 மே 2018 அன்று நடத்திய வீரஞ்செரிந்த போராட்டம். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மட்டுமல்லாது உற்பத்தியையே நடத்த முடியாத அளவுக்கு மக்களால் தடுத்து நிறுத்த முடியும் என நிரூபித்த போராட்டம். இதற்கு மக்கள் கொடுத்த விலை கொஞ்சமல்ல 14 உயிர்கள்,
- ஸ்னோலின் வெனிஸ்டா
- ஜான்ஸி ராணி
- காளியப்பன்
- கந்தையா
- ஜெயராமன்
- தமிழரசன்
- அந்தோனி செல்வராஜ்
- மணிராஜ்
- செல்வசேகர்
- கிளாஸ்டன்
- ஜஸ்டின்
- சண்முகம்
- கார்த்திக்
- ரஞ்சித் குமார்
இன்றுவரை அந்த ஆலை திறக்கப்படவில்லை, திறக்க முடியவில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு அந்தப் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் வேறு வடிவங்களில் அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது, மக்களும் உறுதியுடன் இருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் 22 மே 2018 அன்று தொடங்கியதல்ல, ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் தொடங்கப்பட்டதிலிருந்து அதற்கான எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்கள் போராட்டம், நீதிமன்ற தீர்ப்பு, தண்டத் தொகை உள்ளிட்ட பல தடைகள் இருந்தாலும் ஆலை தொடர்ந்து பல ஆண்டுகள் இயங்கியபடியே இருந்தது. தொடர்ந்ததோடு மட்டுமன்றி விரிவாக்கத்துக்கான முயற்சிகளும் நடந்தன. அதற்கு அரசுகளின் ஆசியும் இருந்தது. மீண்டும் மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அந்தந்த கிராமங்களில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசுகள் செவி சாய்க்கவே இல்லை. இதனால் தங்கள் தொடர் போராட்டங்களின் நூறாவது நாளான மே 22 ஒட்டுமொத்தமாக திரண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, ஆலையை அடைக்கக் கோரும் கோரிக்கையை தெரிவிக்கச் சென்றனர். அதன் முடிவில் தான் துப்பாக்கிச் சூடும், 13+1 பேர் கொல்லப்பட்டதும் நடந்தது.
அரசுகளின் முடிவுகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலும் திட்டமிட்ட சதிகளாலேயே முடித்து வைக்கப்படுகின்றன. மெரீனா எழுச்சி அதற்கு மிகமிகப் பொருத்தமான ஓர் எடுத்துக்காட்டு. அன்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது என்றும், சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றும் அரசாலும், ஊடகங்களாலும் பரப்புரை செய்யப்பட்டன. அமைதியான, ஜனநாயக உரிமையுடன், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்த ஒரு மக்கள் திரள் போராட்டத்தில் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை ஏற்படுத்தப்பட்டது. இது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஒன்று முகிலன் என்பவரால் வெளியிடப்பட்டது. துப்பாகிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்பது தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துத் தான் எனக்கே தெரிந்தது என்று மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் வேறொரு மாவட்டத்துக்கு விருந்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார். என்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு ஏற்பு அளித்தது யார் எனும் கேள்வி வெகுவாக எழுந்தது.
அன்றைய துப்பாகிச் சூட்டின் பிறகு ஆயிரக் கணக்கானோர் காவல் துறை துப்பாக்கிச் சூட்டினாலும், தடியடியாலும் படுகாயமடைந்தனர். நூற்றுக் கணக்கானோருக்கு கை கால்கள் முறிக்கப்பட்டன. பலநூறு பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதில் ஆறு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) பாய்ந்தது.
அன்றைய பெரும் போராட்டமும், அதற்குப் பிறகான மக்களின் ஆதரவும் வேறு வழியின்றி ஆலையை மூட வைத்தது. அதற்கான மக்களின் போராட்டமும், உழைப்பும், ஈகையும் கொஞ்சமல்ல. பலநூறு பேர் சிறைப்பட்டு தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். என்றாலும், மக்களுக்கான போராட்டத்தில், மக்களுக்காக சிறைப்பட்டிருக்கிறோம் எனும் பெருமை உணர்வு சிறைப்பட்டிருந்த அனைவரிடமும் குடி கொண்டிருந்தது. சிறைப்பட்டிருந்த நாட்களில் அங்கு கிடைத்த நிகழ்வுகள், உணர்வுகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தத் தொடர். வெறுமனே நான் உணர்ந்து கொண்டதை பகிர்வதோடு மட்டுமல்லாமல், உணர வேண்டியவைகளையும் பகிரந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்.
வாருங்கள் சிறைக் கூடத்தின் இடுக்குகளினூடே விரியும் சிந்தனைச் சிறகுகளின் இறகை பற்றிக் கொண்டு
பயணிப்போம் .. .. ..