
அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தேவை என்ன? நாம் எந்த இடத்தில் நிற்கிறோம்? என்பதை உணர்வதும் உள்வாங்குவதுமே, நாம் எந்த அடிப்படையில் எங்கு செல்லப் போகிறோம்? என்பதை தீர்மானிக்கும். களம் அதைத் தான் கோருகிறது, நிகழ்களமோ மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.
14.04.2011 அன்று ஆனந்த் தெல்டும்ப்டே நிகழ்த்திய அம்பேத்கர் நினைவு சொற்பொழிவு இந்த மயக்கத்தின் மீது தண்ணீர் தெளிக்கும் என நான் எண்ணுகிறேன். அம்பேத்கரியர்கள் குறித்த மதிப்பீடு, அம்பேத்கரியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிக்கான காரணங்கள் என விரிவாக விளக்கமளிக்கும் தெளிவான, சிறந்த உரை அது. அந்த உரையின் எழுத்து வடிவமே இந்த நூல்.
படியுங்கள், உள்வாங்குங்கள், பரப்புங்கள்.